முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! -10

ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

ரிட்டிஷ் அரசியல் கார்ட்டூனிஸ்டாகப் புகழ்பெற்றிருந்த டேவிட் லோ என்பவர், “லியோனார்டோ டாவின்ஸிக்குப் பிறகு இவ்வுலகில் கிராபிக் கலையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர் வால்ட் டிஸ்னி” என்று குறிப்பிட்டார். மக்களுக்கு மகிழ்ச்சியான விஷயங்களைக் கொடுக்க வேண்டும்; பாரம்பரிய மனித வாழ்க்கையையும் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற இலக்குகளோடு பயணித்த ஒரு மாபெரும் மனிதர் வால்ட் டிஸ்னி. இருபதாம் நூற்றாண்டில் கற்பனை மற்றும் கனவுகளின் மூலம் மாபெரும் தொழில் சாம்ராஜ்யத்தைப் படைத்து, வெற்றி கண்டவர் இந்த வால்ட் டிஸ்னி.

எலியாஸ் டிஸ்னி மற்றும் புளோரா கோல் டிஸ்னி தம்பதியருக்கு நான்காவது மகனாக 1906-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5-ஆம் நாள் பிறந்தார் வால்டர் எலியாஸ் டிஸ்னி; வால்ட் டிஸ்னி என்று அழைக்கப்பட்டார்.

வால்ட் டிஸ்னியின் தந்தை தச்சு, விவசாயம் மற்றும் கட்டடம் கட்டுதல் என்று பல வேலைகளைச் செய்து வந்தவர். தாய் ஒரு பொதுப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். போதுமான வருமானம் இல்லாததால், குடும்பம் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்திலிருந்த, மார்செலின் நகருக்குச் சென்றது.

வால்ட் டிஸ்னிக்குக் குழந்தைப் பருவம் முதலே படம் வரைவதில் ஆர்வம். தனது ஏழு வயதிலேயே அண்டை வீட்டாருக்குப் படம் வரைந்து கொடுத்துப் பரிசுகள் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. டிஸ்னியின் தந்தைக்குப் போதுமான பணவரவு இல்லாததால், தன்னையும் தன் சகோதரர்களையும் தினமும் செய்தித்தாள் போடும் பணியில் ஈடுபடுத்தியதாக டிஸ்னி தெரிவிக்கின்றார். எனவே, படிப்பில் அதிக ஆர்வம் ஏற்படவில்லை. பள்ளிப் படிப்புக் கடினமானதாகவும், சுகமற்றதாகவும் டிஸ்னிக்கு அமைந்தது. இருப்பினும் பள்ளியில் கார்ட்டூன் வரைவதில் அதிக ஆர்வமுடன் தன்னைப் பலமுறை வெளிப்படுத்தினார் வால்ட் டிஸ்னி. இங்கு வண்ணங்கள் மற்றும் வாட்டர் கலர் கொண்டு படம் வரைதலைப் பயின்றார்.

பிறகு வால்ட் டிஸ்னியின் குடும்பம் கன்சாஸ் நகருக்குச் சென்றது. அங்கு கன்சாஸ் சிட்டி ஆர்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் ஸ்கூல் ஆப் டிசைன் (Kansas City Art Institute and School of Design) என்ற பள்ளியில் அஞ்சல் வழியில் சேர்ந்து படித்துத் தனது வரைதிறனை வளர்த்துக் கொண்டார் வால்ட் டிஸ்னி. 1917-ஆம் ஆண்டு மெக்ஸிகோ சென்றவர், அங்கு மெக்கின்லி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் கார்ட்டூன்கள் வரைவதில் பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றார்.

தனது 16 வயதில் இராணுவத்தில் சேரச் சென்றவரைத் தகுதியில்லை என்று அனுப்பிவிட்டார்கள். பின்பு செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் சில ஆண்டுகள் வேலை செய்தார். இப்படி ஓடிக்கொண்டிருந்த வேலையும் முதல் உலகப் போரால் தடைபட்டது. 1919-இல் கன்சாஸ் நகருக்குத் திரும்பி தொழில் முைறயில் படம் வரையும் நிறுவனத்தில் தன் வேலையை வரைகலைஞராகத் தொடங்கினார், வால்ட் டிஸ்னி.

இங்குதான் ஒரு நல்ல நண்பராக ஐவர்க்ஸ் என்பவரைச் சந்தித்தார். இவரும் கார்ட்டூன் மற்றும் பிற வரைகலைகளில் ஆர்வம் கொண்டவர் என்பதால் இருவரும் சேர்ந்து 1922-ஆம் ஆண்டு ஒரு சிறிய ஸ்டுடியோவை ஆரம்பித்தனர். இந்த ஸ்டுடியோ மூலம் உள்ளூரில் இருந்த திரையரங்கங்களுக்கு ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் ஓடக்கூடிய விளம்பர அனிமேஷன் படங்களை எடுத்துக் கொடுத்தனர். இவைகள் சற்று வளர்ச்சிகண்டு ஏழு நிமிடம் வரை ஓடக்கூடிய குறும்படங்களாகவும், அனிமேஷன் முறையில் செய்து வழங்கினர். இதில் சில ஏமாற்றங்களையும், பின்னடைவுகளையும் சந்தித்தனர். ஆனால், இயங்குபடம் (Animation) மூலம் சாதிக்கலாம் என்ற எண்ணம், நம்பிக்கை இச்சமயத்தில் வால்ட் டிஸ்னி மனதில் ஆழமாக வேர்விட்டது.

ஆரம்ப காலங்கள்

1922-ஆம் ஆண்டு தனக்குத் தெரிந்த சிலரிடம் முதலீடுகளை, அதாவது 15,000 டாலர் இன்று அதன் மதிப்பு இரண்டு இலட்சம் டாலருக்கு மேல் இருக்கும். இதனைப் பெற்றுக்கொண்டு சில கார்ட்டூன்களைத் தயாரித்தார். இதற்காக லாஃப் ஓ கிராம் ஸ்டுடியோ (Laugh-O-Gram-Studio) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். 1921 முதல் 1923 வரை இந்தப் படமெடுக்கும் அறை இயங்கியது. இங்குதான் பல புகழ்பெற்ற கலைஞர்கள், கார்ட்டூன் வரைகலைஞர்கள் வால்ட் டிஸ்னியுடன் இணைந்தார்கள். ஐவர்க்ஸ், ஹக் ஹார்மன், ஃடிரிஸ் பிரீலெங், கார்லமன் மேக்ஸ் பெல் மற்றும் ரூடால்ஃப் ஐசிங் போன்றோர் இருந்தனர். இந்த இடம் தான் ‘மிக்கிமவுஸ்’ உருவாக அடித்தளமானது.

இந்த நிறுவனம் மூலம் லிட்டில் ரெட் ரைடிங் ஹுட், ஜாக் அண்ட் த பீன்ஸ்டால்க், ஜாக் த ஜயன்ட் கில்லர், பஸ் இன் பூட்ஸ், சின்ட்ரெல்லா, டாம்மி டக்கர்ஸ் டூத், மார்த்தா, ஆலிஸ் வொண்டர்லேண்ட் போன்ற கார்ட்டூன் படங்கள் வெளிவந்தன. ஆனால் கடன் சுமையால் இந்நிறுவனம் திவாலானது. இந்தப் படங்களை வரைகின்ற சமயங்களில் தனது சிறிய அறையிலிருந்த ஷோபாவுக்குப் போடும் துணிகளில் தான் தூங்கியதாகவும், குறைந்த உணவு மட்டுமே கிடைத்ததாகவும், வாரம் ஒரு முறையே குளிக்க வேண்டியதாக இருந்ததாகவும் வால்ட் டிஸ்னி தெரிவித்துள்ளார்.

இந்த லாஃப் ஓ கிராம் ஸ்டுடியோவில் இருந்த போது உதித்த ஒரு சிந்தனை தான் எலிகளை வைத்து அவர் வரைந்த படம். இங்கு வேலை செய்த போது வெகுநேரம் தனது வரைபடங்களைத் தனியாக வரைந்து கொண்டிருப்பாராம் வால்ட் டிஸ்னி. அப்போது இரவு நேரத்தில் அவரது அறையின் குப்பைத் தொட்டியில் இருக்கும் பாலாடைக் கட்டிகளைச் சாப்பிட இரு எலிகள் சண்டை போட்டுக் கொள்ளுமாம். ஒரு நாள் அவர் அவற்றைப் பிடித்து ஒரு கூண்டில் வைத்துவிட்டார். அதில் ஒரு எலி மிகவும் சுட்டி. கருஞ்சிவப்பு நிறத்திலிருந்த அதன் மூக்கில் தட்டினால், படங்கள் வரைய மேைஜயில் இருந்த கருப்பு வட்டத்துள் ஓடி விளையாடுமாம். அதனை இரசித்த வால்ட் டிஸ்னி, கன்சாஸ் நகரை விட்டுக் கிளம்பும் போது அந்த எலிகளை கொல்லைப்புறத்தில் சுதந்திரமாக விட்டுவிட்டு வந்தார்.

ஆயினும் அந்த ஒரு சுட்டி எலியின் நினைவுக்காக ஒரு படத்தை கார்ட்டூனாக வரைந்தார். அதனைத் தன் மனைவி லில்லியன் மேரியிடம் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் போது இரயிலில் காட்டி, அதற்கு ‘மார்டிமர் மவுஸ்’ என்று பெயர் வைக்க உள்ளதாகச் சொன்னார். இந்தப் பெயர் ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படும் ஒரு ஆடம்பரப் பெயராக இருந்ததால், எளிமையாக ‘மிக்கி மவுஸ்’ என்று வைக்கச் சொன்னார் அவரது மனைவி. ‘கடவுளின் கொடை’ என்பது மிக்கியின் (Mickey) அர்த்தமாகும். அப்படியே அதை வால்ட் டிஸ்னி ஏற்றுக்கொள்ள, அந்தக் கார்ட்டூன் பின் உலகப் புகழும் பெற்றது.

இவ்வாறு கான்சாஸ் நகரை விட்டுத் தன் நிறுவனம் பெற்ற தோல்வியிலிருந்து மீள லாஸ் ஏஞ்சல்ஸ் கிளம்பினார் வால்ட் டிஸ்னி. லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லப் பணம் இல்லாததால் கன்சாஸ் நகரில் சில பணக்காரர்களின் வீட்டிற்குச் சென்று, அவர்கள் குழந்தைகளை வைத்து படம் எடுப்பதாகக் கூறிப் பணம் சேர்த்தார். ‘எங்கு செல்கிறீர்கள்?’ என்று கேட்ட போது ‘ஹாலிவுட்டுக்குச் சென்று பெரிய திரைப்படங்கள் எடுக்கப் போகிறேன்’ என்று கூறினார். இதைக்கேட்டு சிலர் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பில் ஏளனமும் அடங்கியிருந்தது. காரணம் அப்போது அவரது படத்தயாரிப்பு நிறுவனம் நிதி நெருக்கடியால் மூடப்பட்டிருந்தது.

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ

1923-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் திரைப்படங்களில் பணி செய்யலாம் என்று வால்ட் டிஸ்னி சென்றார். அப்போது அங்கு அதிகமாகக் கேலிச்சித்திரங்களை வரையும் நிறுவனங்கள் இருந்ததும் ஒரு காரணமாக அமைந்தது. தனது மாமா ராபர்ட் உடன் தங்கிக்கொண்டு ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனங்களில் வாய்ப்புத் தேடினார். அலைஸ் காமெடீஸ் (Alice Comedies) என்ற தொடரைத் தயாரிக்க டிஸ்னி மற்றும் அவரது சகோதரர் ராய் என்பவருக்கும் அனுமதி கிடைத்தது. முதலில் ‘டிஸ்னி பிரதர்ஸ் ஸ்டுடியோ’ என்று இருந்த பெயரை அவரது சகோதரர் ராய் ‘வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ’வாக மாற்றினார். காரணம், தன் சகோதரர் ‘வால்ட்’ டிஸ்னியின் உழைப்பும், சிந்தனையும் அங்கீகரிக்கப்பட வேண்டியது என்று சொன்னார்.

ஆஸ்வேல்ட் த லக்கி ராபிட், மிக்கி மவுஸ், த்ரீ லிட்டில் பிக்ஸ் ஆகிய வெற்றிப்படங்களை இந்த நிறுவனம் உருவாக்கியது. 1933-ஆம் ஆண்டு மிகப்பெரிய படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க ஆசைப்பட்டார் வால்ட் டிஸ்னி. நீண்டநேரம் ஓடக்கூடிய கார்ட்டூன் படங்களை எடுக்கலாம் என்று கூறினார். ஆனால், அதுவரை ஏழு நிமிடங்கள் மட்டுமே கார்ட்டூன் படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. வெகுநேரம் மக்கள் கார்ட்டூன் படங்களைப் பார்க்க மாட்டார்கள்; எனவே வீண் முயற்சி செய்ய வேண்டாம் என்று பலரும் அறிவுரை சொன்னார்கள்.

1934-ஆம் ஆண்டு தனது சிறந்த இயங்குபடக் கலைஞர்கள் நாற்பது பேரை ஒரு இரவில் அழைத்தார். தான் பிரம்மாண்டமாகத் தயாரிக்க நினைக்கும் ஸ்னோ வொயிட் அன்ட் த செவன் டிவாஃப்ஸ் (Snow White and The Seven Dwarfs) என்ற கார்ட்டூன் திரைப்படக் கதையை விவரித்தார். அந்தப் படத்தில் வரும் பாத்திரங்கள் நடிப்பதையும் நடித்து, பேசிக் காட்டினார். எல்லோரும் அவரை ஆச்சர்யமாகவும், சாத்தியமா! என்ற உணர்விலும் பார்த்தார்கள்.

ஆம், இந்தப் படத்துக்கான செலவு ஐந்து இலட்சம் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டது. இன்றைய மதிப்பில் இது ஏழரை மில்லியன் பணம். இந்தத் தொகையைக் கேட்டதும் பலருக்கும் பயம். காரணம், இவ்வளவு தொகையைத் திரட்டி, செலவு செய்தும், படம் ஓடவில்லை என்றால், கம்பெனி திவாலாகிவிடுமே, வேலை போய்விடுமே என்று அஞ்சினார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் வால்ட் டிஸ்னியின் சகோதரர் மற்றும் மனைவியின் மூலமும் அவருக்கு எடுத்துச் சொன்னார்கள். வால்ட் டிஸ்னி முடிவு எடுத்தால் மாற்றிக்கொள்ளமாட்டார் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

வால்ட் டிஸ்னி தன் முடிவில் திடமாக இருந்தார். வேறுவழியின்றி படத்தயாரிப்பு ஆரம்பமானது. படத்தின் போக்கைக் கண்டபோது வரைபடக் கலைஞர்களுக்கு மகிழ்ச்சி உருவானது. காரணம், வால்ட் டிஸ்னியின் கற்பனையும், கனவும் அர்த்தமுள்ளது என்பதும், நிச்சயம் இது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உருவானது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கார்ட்டூனாக வரைந்து வெளிக்கொண்டு வரும்போது கலைஞர்களின் உள்ளத்தில் உற்சாகம் பொங்கியது.

இச்சமயத்தில் வால்ட் டிஸ்னியைச் சிலர் முட்டாள் என்றும் கூறினார்கள். ‘டிஸ்னியின் முட்டாள்தனம் இந்தப் படத்தயாரிப்பு’ என்று பலரும் அவரைக் கிண்டல் செய்தார்கள். டிஸ்னி இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

பெரும்பாலான நேரம் ஒரு சிறிய அறையிலேயே டிஸ்னி அமர்ந்து வேலை செய்தார். அந்த அறை குளிரூட்டி இல்லாத அறை. வேலை செய்யும் போது வியர்த்துக் கொட்டும். படங்களை வரையும் அத்தனை கலைஞர்களும் அந்த அறைக்கு வந்துதான் படங்களை டிஸ்னியிடம் காட்டினார்கள். அவர்களுக்கு அந்த அறை கடினமாகவே இருந்தது. ஆயினும் வால்ட் டிஸ்னி அங்கிருந்தே தன் மூன்று ஆண்டுகளையும் படத்தயாரிப்புக்குப் பயன்படுத்தினார். பின்னாளில் அந்த அறையை “என் வியர்வை அறை” என்று கூறினார். அதாவது அவரது ‘உழைப்பின் அறை’ என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

‘ஸ்னோ வொயிட்’ திரைப்படம் வளர்ந்து கொண்டிருந்தது. இது நிச்சயமாகப் பிரம்மாண்டமாக வெளிவரும் என்ற எண்ணம் வந்துவிட்ட சூழலில் அங்கு பணி செய்தவர்கள் நேரம், காலம் பார்க்காமல் உழைத்தார்கள். மாலை நேரங்களில் அதிகமாகவும், விடுமுறை நாட்களிலும் கூட வந்து வேலை செய்தார்கள். வால்ட் டிஸ்னி படம் முடியும் தருவாயில் பணத்தட்டுப்பாட்டால் சிரமப்பட்டார். அவரும், சகோதரர் ராயும் பணம் பெறுவதற்காகச் சிலரை நாடினார்கள். எடுக்கப்பட்ட படத்தின் பல காட்சிகளைக் காட்டிய போது, பார்த்தவர்கள் அதை விரும்பியதால் பணம் கிடைத்தது.

இந்தப் படத் தயாரிப்புக்காக இருபது இலட்சம் கார்்ட்டூன் படங்கள் வரையப்பட்டது. 750-க்கும்
மேற்பட்ட கலைஞர்கள் இப்படங்களை வரைந்தார்கள். இவற்றிலிருந்து இரண்டரை இலட்சம் படங்கள் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆயிரத்து ஐநூறு இருக்கைகள் கொண்ட கார்தி சர்க்கிள் திரையரங்கில், 1937-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி திரையிடப்பட்டது.

தலைச்சிறந்த ஹாலிவுட் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இத்திரைப்படம் எண்பத்து மூன்று நிமிடங்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. ஆஹா, என்று அங்கலாய்த்து, ஒரு புதிய உலகில் பிரவேசித்த உணர்வைப் பெற்றார்கள், இந்த முதல் பார்வையாளர்கள். திரைப்படப் புகழ் உலகமெங்கும் பரவியது.

ஆரம்ப வெளியீட்டில் வந்த பணமே படம் எடுத்த கடனை அடைத்தது. தொடர்ந்து இலாபம்தான். ஆண்டு இறுதியில் எண்ணூறு மில்லியன் டாலர் வரைச் சம்பாதித்துக் கொடுத்து அபார வெற்றி பெற்றது, “வால்ட் டிஸ்னியின் முட்டாள்தனம்” என்பதை அறிவாளிகள் புரிந்து கொண்டார்கள். ஆம், ஒரு மனிதனின் நம்பிக்கையும், கனவும், கற்பனையும் மாபெரும் வெற்றியைப் பெறமுடியும் என்பதைத் தன் உழைப்பால், தன் கலைஞர்களால் நிகழ்த்திக் காட்டினார் டிஸ்னி.

உல்லாச டிஸ்னிலேண்ட்

வால்ட் டிஸ்னி எல்லா மக்களும் சந்தோஷமாக இருக்க ஒரு உல்லாச உலகினை, மகிழ்ச்சி தரும் இடத்தை உருவாக்க விரும்பினார்.

கேமருன் சி. ெடய்லர் சொல்லுவது போல, “வால்ட் டிஸ்னி, உலகில் மகிழ்ச்சியான இடத்தை உருவாக்க விரும்பினார். மகிழ்ச்சி தரும் பொருட்களின் மூலம், மகிழ்ச்சியான சிந்தனைகளைக் கொடுப்பதன் மூலம், எல்லோரும் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்துக்குப் பறந்து செல்ல உதவும் இறக்கையைக் கொடுக்க முடியும் என்று நம்பினார். டிஸ்னிலேண்ட்டுக்கு வருபவர்கள் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் வெளியில் சென்று உலகம் முழுவதும் உள்ள மற்றவர்களுக்கும், அந்த மகிழ்ச்சியைப் பரப்புவார்கள் என்று நம்பினார்” என்ற வார்த்தைகள் மிகவும் பொருத்தமாக வால்ட் டிஸ்னியின் கனவு வெற்றியான டிஸ்னிலேண்டுக்குப் பொருந்துகிறது. பிரம்மாண்டங்களையே யோசிக்கும் ஜாம்பவானாக வால்ட் டிஸ்னி திகழ்ந்தார். ‘ஸ்னோ வொய்ட்’ திரைப்பட வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்த நேரம், இந்த இலாபப் பணத்ேதாடு, மேலும் முதலீடு செய்து ‘மகிழ்ச்சிப் பூங்கா’ ஒன்றை அதாவது ‘டிஸ்னிலேண்ட்’ ஒன்றை உருவாக்கும் திட்டத்தைச் சொன்னார்.

இந்தத் திட்டம் கற்பனைக்கு எட்டாததாகவும், பல தொழில் மன்னர்களுக்கும் கூடப் புரியாததாகவும் அமைந்தது. அவரது சகோதரர் ராய் மற்றும் ஆதரவு தந்தவர்களும் இத்திட்டத்தை ஏற்காமல் ஒதுங்கினர். எனவே, வால்ட் டிஸ்னி இன்க் (Walt Disney Inc) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். தனது அனைத்துச் சொத்துக்களையும், சேமிப்புகளையும் விற்றார். எட்டு இலட்சம் டாலர்கள் கொடுத்து 1954-ஆம் ஆண்டு ஒரு பெரிய தோட்டத்தை வாங்கினார்.

தன்மீது நம்பிக்கையுள்ளவர்கள், இணைந்துகொள்ள விரும்பியவர்களைக் கொண்டு தன் திட்டத்தைத் தொடங்கினார். முதலில் ஒரு நாள், பல பொழுதுபோக்குப் பூங்காக்களின் இயக்குனர்களையும் அழைத்துத் தன் திட்டம் பற்றிக் கூறிப் பொருளாதார மற்றும் தொழில்சார்ந்த ஆதரவைக் கோரினார். ஆனால், அவர்கள் யாரும் இதை ஏற்கவில்லை. நிச்சயமாக வால்ட் டிஸ்னியின் இந்தத் திட்டம் தோல்வியில் தான் முடியும் என்று கூறி நடையைக் கட்டினார்கள். ஆனால், அந்தக் கூட்டம் முடிந்து, இதையெல்லாம் கேட்டுவிட்டு வெளியே வந்த வால்ட் டிஸ்னி அளவற்ற மகிழ்ச்சியோடு காணப்பட்டாராம். அதாவது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ‘வால்ட் டிஸ்னியின் திட்டம் வெற்றி பெறும்’ என்று சொன்னால் டிஸ்னி எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாரோ, அதைவிட மகிழ்ச்சியாக ‘தோல்வியுறும்’ என்ற போது அவர் முகத்தில் வெளிவந்ததாக அவரது திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்ஹென்ச் கூறியதாக கேமருன் சி. டெய்லர் கூறுகின்றார்.

ஒரு மனிதர் தன் மீதும், தன் கற்பனை மற்றும் கனவுத் திட்டத்தின் மீதும் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை நம்மால் உணர, புரிந்துகொள்ள முடியும். உலகமே ‘முடியாது’ என்றாலும் உள்மனம் ‘உன்னால் முடியும்’ என்று சொல்லும் போது அதற்குச் செவி கொடுத்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு வால்ட் டிஸ்னியின் வாழ்க்கை ஒரு பெரிய சான்றாகும்.

பெரிய கனவுத் திட்டத்துக்காக தன் வேலையை ஒரு பழைய வீட்டில் தொடங்கினார் வால்ட் டிஸ்னி. அவரது உதவியாளர்கள் சமயலறை, சாப்பிடும் அறை, பொருட்கள் வைக்கும் அறையில் தங்கினார்கள். அவரோ தன் படுக்கை அறையை அலுவலகமாக்கிக் கொண்டு வேலை செய்தார். ஒவ்வொரு நாளும் டிஸ்னிலேண்ட் சென்று தன் கற்பனைக்கு ஏற்ப அதன் கட்டடப் பணிகளைப் பார்வையிட்டு, ஆலோசனை தந்தார்.

1954-ஆம் ஆண்டு, சூலை மாதம் 12-ஆம் தேதி தொடங்கிய இந்த டிஸ்னிலேண்ட் சரியாக ஒரு ஆண்டு கழிந்து 1955-ஆம் ஆண்டு, சூலை மாதம் 17-ஆம் தேதி திறக்கப்பட்டது. முதல் வாரத்தில் 1,70,000 நபர்களும், முதல் இரண்டு மாதத்தில் பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்களும் இந்த மகிழ்ச்சிப் பூங்காவைப் பார்வையிட்டார்கள். இன்றுவரை பலகோடி மக்கள் பார்வையிட்ட பூங்காவாக அது திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து ஃப்ளோரிடாவில் ஒரு பெரிய மகிழ்ச்சிப் பூங்காவை உருவாக்கத் திட்டமிட்டார், வேலைகள் நடந்தன. ஆனால் நுரையீரல் புற்றுநோயால் 1966-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி இவ்வுலகிலிருந்து தன் உடலுக்கு விடை கொடுத்துவிட்டார். ஆனாலும், அவரது கனவுகள், கற்பனைகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

வால்ட் டிஸ்னியின் சாதனைகள்

திரைப்படங்கள், அவற்றின் கதாபாத்திரங்களுக்கு உலகளவில் வழங்கப்படும் சிறந்த விருதான ஆஸ்கார் விருதுகளை அதிகம் பெற்ற நிறுவனமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் திகழ்கின்றது. இருபத்து ஆறு அகாடமி அதாவது ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதன் மூலம் வரலாற்றில், ஹாலிவுட்டில் அதிக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றவராகத் திகழ்கின்றார் வால்ட் டிஸ்னி. மேலும் ஐம்பத்து ஒன்பது முறை இவரது நிறுவனம் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு இருபத்து இரண்டு போட்டி அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளது. ஏராளமான கௌரவ அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார். பல விருதுகள் கேலிச் சித்திரங்கள் கொண்ட திரைப்படங்களுக்காக வழங்கப்பட்டவையாகும்.

தனது வாழ்வில் சாதிக்கும் செயல்கள் மற்றவர்களை மகிழ்விப்பதாகவும், சாத்தியமானதாகவும் அதேசமயம் சவால்கள் கொண்டதாகவும் இருக்குமாறு செய்து வரலாறு படைத்தவர் வால்ட் டிஸ்னி. உலகம் இன்னொரு வால்ட் டிஸ்னியைக் காண்பது அரிதாகும். ஆனால், இவரைப் போல புதிய கனவுகளோடும், புதிய கற்பனைகளோடும், அசாத்திய துணிச்சலோடும் செயலில் இறங்கி செயற்கரிய சாதனைகளை நிகழ்த்தலாம் என்ற நம்பிக்கைக்கு தலைச்சிறந்த முன்மாதிரியாக, முதல் மனிதராக வால்ட் டிஸ்னி திகழ்கின்றார்.