வெற்றித் திசை-13
ஆதவன் வை.காளிமுத்து
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல்கள் இருக்கத் தான் செய்கின்றன. வாழ்க்கைச் சிக்கல் இல்லாத நபர்களே இல்லை. மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். அவன் சமூகத்தோடு தொடர்பு கொள்ளும்போது ஏற்படுகிற நிகழ்வுகளால் அடையும் அனுபவம் மனிதனுக்கு இன்பத்தையோ துன்பத்தையோ கொடுக்கின்றது. இந்த இரண்டில் ஒன்று கட்டாயம்
நடக்கும்.
மனம் ஒரு பூதக் கண்ணாடி
மகிழ்ச்சியான அல்லது ஒரு இன்பமான மனநிலையை நாம் எளிதாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் வருத்தமான மன நிலையை நாம் அவ்வாறு எடுத்துக் கொள்வதில்லை. அவற்றைத் தான் நாம் சிக்கல்கள் என்கிறோம். இன்பத்தை எளிதாக எடுத்துக்கொள்ளும் நம் மனம் துன்பத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. துன்பம் என்று வருகிறபோது மனம் ஒரு பூதக் கண்ணாடி ஆகிவிடுகிறது. இருக்கின்ற சிறிய சிக்கலையும் பெரிய சிக்கலாக்கிப் பார்ப்பதுதான் அதன் இயல்பான வேலை. எப்போதும் அதைப்பற்றியே புதிய புதிய கருத்துகளை உருவாக்கி சிக்கல்களுக்கு மேலும், மேலும் புதிய, புதிய வடிவங்களை கொடுத்துவிடுகிறது நம் மனம். இவ்வாறு பரிணமித்த சிக்கல்களை நாம் வாழ்க்கைப் போக்கில் கையாளும்போது நிறைய முரண்பாடுகளால் சிக்கித் திணறுகிறோம். இதில் என்ன ஒரு முரண்பாடு என்றால் நடக்கின்ற நிகழ்வுகளினால் அல்லது செய்கின்ற செயல்களினால் விளைகின்ற இன்பம் அல்லது இயல்பு உணர்வை தன்னளவில் விரைவாக உள்வாங்கி செரிமானம் ஆகி விடுகிறோம், ஆனால் வருத்தம் அல்லது துன்ப உணர்வை நம்மால் அவ்வளவு எளிதில் தன்னளவில் முடித்துக் கொள்ளவோ அல்லது அதைச் சற்று ஆறப்போட்டு பிறகு சிந்திக்கலாம் என்றோ நாம் நினைப்பதில்லை.
பிரச்சனைகளை பிறரிடம் பகிராதீர்
ஒரு சிறிய சிக்கல் என்றால் கூட அதை உடனடியாக அடுத்தவர் மனதிற்கு பரிமாறி விடுகிறோம். தன்னுடைய சிக்கல் தனக்கு மட்டுமே ஆனது என்று நாம் நினைப்பதில்லை. அதை பொதுமைப்படுத்த முயல்கின்றோம். சிக்கலை நம் மனம் பெரிதாக்கிக் காட்டுவதால் நாம் நம்மை அறியாமலேயே ஆற்றாமையில் விழுந்து விடுகின்றோம். நம்மை ஆறுதல்படுத்த ஒரு நபரைத் தேடுகின்றோம். வேறு ஒரு நபரிடம் கூறிவிட்ட பிறகும் அமைதி அடையாமல் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் கூறி அதற்கான தீர்வை எதிர்பார்க்கின்றோம். நாம் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கின்றதா? என்றால் மிஞ்சுவது ஏமாற்றமே! அந்த ஏமாற்றமே மேலும் ஒரு புதிய சிக்கலாக உருவாகி விடுகின்றது.
மேலும் ஒரு சிக்கல் வேறு ஒரு நபரிடம் செல்லும்போது அந்த நபரின் பங்களிப்பும் சேர்ந்து அந்தச் சிக்கல் வேறு ஒரு புதிய வடிவமாக உருமாற்றம் அடைகின்றது. பொதுவாக ஆழ்ந்து சிந்தித்தால் நம்முடைய சிக்கல்களுக்கான தீர்வு நம்மிடமே தான் இருக்கின்றது. அதை தீர்க்க நம்மால் மட்டுமே முடியும். அதற்கு மிகவும் ஆதாரமாக இருக்கும் ஆற்றலுக்குப் பெயர் தான் ‘பொறுமை’. பொறுமைதான் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். பொறுமையைக் கைக் கொள்ளப் பழகிக் கொண்டால் எவ்வளவு பெரிய சிக்கல்களையும், எந்த மாதிரியான சிக்கல்களையும் எளிமையாக நாமே எதிர்கொண்டு அதற்கான தீர்வை நமக்கு நாமே பெறுவதற்கு நமது பொறுமை துணை செய்யும்.
நமக்குப் பிரச்சனை பிறர்க்கு மகிழ்ச்சி
அடிப்படைத் தவறு எதுவென்றால் நமது சிக்கல்களுக்கான தீர்வு நமக்கு வெளியிலே இருக்கிறது என்று நாம் நம்புவது தான். அது வேறு ஒரு நபரால் தீர்க்கப்படும் என்றோ, அல்லது நமது சிக்கல்களைப் பற்றிய புலம்பல்களை வேறு ஒருவரிடம் கொட்டி விட்டால் நமது மனபாரம் குறைந்து விடும் என்று நாம் நம்புகிறோம். அது ஒரு தவறான எண்ணம்தான். உண்மையிலேயே 20 சதவீத மக்கள் நம் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை. ஒப்புக்காக நாம் சொல்கிறோம் என்பதற்காக கேட்பது போல பாவனை தான் செய்வார்களே தவிர உறுதியாக நம் பிரச்சனைகளை அவர்கள் உள் வாங்குவதில்லை. ஆக, அவர்கள் அதில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் நம்மிடம்தான் தெளிவில்லை. மீதி 80 சதவீதம் பேர் நம் பிரச்சனைகளில் மகிழ்ச்சி அடைபவர்கள் என்பது தான் அப்பட்டமான உண்மை. “இடுக்கண் வருங்கால் நகுக” அதாவது துன்பம் வரும்போது அந்த துன்பத்தை கண்டு நாம் நகைக்க வேண்டும் என்கின்றார் அய்யன் திருவள்ளுவர். ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? நம்முடைய பிரச்சனையைப் பிறரிடம் சொல்லி நம்முடைய துன்பத்தைக் கண்டு அவர்கள் நகைக்கும் படிக்கு நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வு சொல்லக்கூடிய நபர் ஒருவர் கூடவா இருக்க மாட்டார்கள்? அல்லது இருக்கக் கூடாதா? என்று கேட்டால் உறுதியாக ஓரிரு நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனாலும் நிலைமையை நாமே கையாண்டு தீர்வு காண்பதுதான் மிக உயர்வான நிலை.
பிரச்சனையை ஆறப் போடுங்கள்
முதலில் நாம் நம் பிரச்சனைக்கான மூலம் எதுவெனப் பார்க்க வேண்டும். நமது பிரச்சனைக்கும், அதற்கு காரணமான பொருளுக்கும் அல்லது நபருக்குமான உறவை அல்லது தொடர்பை சிந்திக்க வேண்டும். கணவனுக்கும் மனைவிக்கும் ஆன சிக்கலாக இருக்கலாம், தந்தைக்கும் மகனுக்குமான சிக்கலாக இருக்கலாம், நமக்கும் நம் நண்பர்களுக்குமான சிக்கலாக இருக்கலாம், நமக்கும் நம் மேல் அதிகாரிக்குமான சிக்கல்களாக இருக்கலாம், நமக்கும் நமக்குக் கீழ் பணியாற்றுபவர்களுக்குமான சிக்கலாக இருக்கலாம் இப்படி எந்த சிக்கல்கள் ஆனாலும், அவற்றை சூட்டோடு சூடாக கையாளக்கூடாது.
சற்று அந்த சிக்கல்களை விட்டுப் பிடித்தாலே சிக்கலுக்கான பாதித் தீர்வு புலப்பட ஆரம்பித்துவிடும். முதலில் சிக்கல்களை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். சற்று அந்த சிக்கல்களை ஆறப் போட்டாலே அதைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட ஆரம்பிக்கும். சில நேரங்களில் நாம் பிரச்சனை என்று எதைப் பார்த்தோமோ, எந்த செயல்களோடு நாம் மிகவும் முரண்பட்டோமோ அதுவே காலப்போக்கில் நமக்கு அனுகூலமான விசயமாகக் கூட மாறியிருக்கும். அந்த சிக்கல்கள் அல்லது அதனால் ஏற்பட்ட அனுபவம் நமக்கு அவசியமானதாகக் கூட மாறியிருக்கும். எந்த சிக்கலையும் அதன் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காமல் அதில் நமக்கு சாதகமாக மறுபக்கம் ஏதும் இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். மொத்தத்தில் பிரச்சனைக்கு தீர்வு என்பது அதை நாம் கையாளும் விதத்தில் தான் இருக்கிறது என்பதை நாம் திட்டமாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு ஜென் கதை
ஒரு ஜென் துறவியிடம் ஒருவர் சென்று “ஐயா நாளுக்கு நாள் என் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே இருக்கிறது” என்று புலம்பினார். அதற்கு அந்த துறவி “பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது நீ தான் அதை நாளுக்கு நாள் ஊதிப் பெரிதாக்குகிறாய்” என்றார். அவர் குழம்பிப் போனார் “என்னய்யா சொல்கிறீர்! ஒன்றும் விளங்கவில்லையே!”
என்றார். அதற்கு அந்த துறவி ஒரு சிறிய கூழாங்கல் ஒன்றை எடுத்து அந்த நபரிடம் கொடுத்து” இந்தக் கல்லை நன்றாக கையை முன்னே நீட்டி பார், பிறகு மெதுவாக கையை மடக்கிக் கொண்டு வந்து கண்ணுக்கு மிக அருகாமையில் கல்லை வைத்து பார்” என்றார். அய்யா “தூரத்திலிருந்த கல் நீங்கள் தந்த அந்த அளவே இருக்கின்றது, கண்ணுக்கு அருகாமையில் வைத்தபோது அது மிகப்பெரிதாகத் தெரிகிறது. இப்போது எனக்கு முன்னால் மிகப் பெரிய பாறை ஒன்று இருந்துகொண்டு இந்த உலகத்தையே மறைக்கின்றது” என்றார். “சரி இப்போது மீண்டும் கையை முழுவதுமாக முன்னால் நீட்டிக் கொண்டு போ இப்போது அந்தக் கல்லை பார்” என்றார் துறவி. ஐயா இப்போது அந்த கூழாங்கல் நீங்கள் கொடுத்ததை விடவும் சிறியதாக தெரிகிறது, அத்தோடு எனக்கு முன்னால் உலகமும் பழைய படியே தெரிகின்றது” என்றார்.
அப்போது அந்த துறவி “பார்த்தாயா? நான் உனக்கு கொடுத்தது மிகச்சிறிய கூழாங்கல்லை அதை நீ தூரமாக வைத்துப் பார்க்கும்போது மிகச்சிறியதாகவும் கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கின்றபோது மிகப் பெரியதாகவும் தெரிந்ததை அறிந்தாய் அல்லவா? அதுபோல்தான் உன் பிரச்சனையும், பிரச்சனையை பெரிதாக்குவதும், அதையே சிறிதாக்குவதும் உன் கைகளில் தான் இருக்கிறது. எப்போதும் பிரச்சனைகளை தூரத்தில் வைத்துப் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பழகிவிட்டால் எந்த பிரச்சனையும் ஒரு சில நாள்களிலேயே சிறிதாகி பிறகு ஒன்றுமே இல்லாத புள்ளியாக மாறி பிறகு அது மறைந்தே
போய்விடும்.
எனவே வாழ்வில் சிக்கல்கள் தோன்றுவது இயல்பே. அந்த சிக்கல்களை கண்டு மிரளாமல் அதை எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். நமது சிக்கலை அல்லது பிரச்சனைகளை மற்றவரிடம் பகிர்வதை முதலில் நிறுத்திவிட வேண்டும். அடுத்து பிரச்சனைக்கான தீர்வை உடனடியாக தேடாமல் சற்று ஆறப்போட வேண்டும். ஆறப்போட்டு அமைதியாக மற்றும் பொறுமையாக சிந்தித்தால் சிக்கலுக்கான தீர்வு மிக விரைவில் நம்மிடமிருந்தே
வெளிப்படும் என்றாா்”.
திறக்க முடியாத பூட்டுகளும் இல்லை, தீர்க்கப்பட முடியாத சிக்கலும் இல்லை என்பதை உணர்வோம். சிக்கல்கள் நம்மிடமிருந்து வருகிறதென்றால் அதற்கான தீர்வும் நம்மிடமே இருப்பதை உணர்வோம். வெல்வோம்!