சமூகப் பார்வை – 13
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
கழிப்பறையைப் பார்த்தவுடன் முகஞ்சுளிப்போம். கழிப்பறை என்ற வார்த்தை கூட நமக்குப் பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் முறையான கழிப்பறை பயன்பாட்டால் மக்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டு அதிகரிப்பதாக ஆய்வொன்று சொல்கிறது. காரணம் தூய்மையே நம் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை. அதுமட்டுமல்லாமல் சுகாதாரம், அனைத்து மனிதர்களின் அடிப்படை உரிமையும் ஆகும். “இந்தியாவுக்குச் சுதந்திரத்தை விடச் சுகாதாரம் தான் முக்கியம்” என மகாத்மா காந்தி 1925ஆம் ஆண்டு கூறினார். சுதந்திரம் கிடைத்துவிட்டது சுகாதாரம்…? சுகாதாரம் மேம்படக் கழிப்பறை அவசியம். ஏன் கழிப்பறை முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறோம் என்றால் ஒரு மனிதர் தன் வாழ்நாளில் மூன்றாண்டுகள் கழிப்பறையில் செலவிடுகிறார். கழிப்பறையைப் பயன்படுத்துதலும் கழிப்பறையின் சுகாதாரத்தையும் வசதிகளையும் பேணுதலும் இன்றைய சூழலுக்கு மிக அவசியமான
ஒன்றாகும்.
உலகில் 420 கோடி மக்கள், அதாவது உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் கழிப்பறை வசதி இல்லாத அல்லது பாதுகாப்பற்ற கழிப்பறையுடன் இருக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் உள்ள மனிதர்களில் ஏழு நபர்களில் ஒருவர் திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்தி வருவதாக யூனிசெப் கூறுகிறது.
இந்தியாவில்
“60 மாதங்களில் 60 கோடி மக்களுக்காக 11 கோடிக்கும் மேலான கழிப்பறைகளைக் கட்டியுள்ளதைப் பார்த்து உலகமே ஆச்சரியப்படுகிறது; இந்தியா இன்று திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லாத நாடாகத் திகழ்கிறது” என காந்திஜியின் 150ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார். இதற்கு அடுத்த சில நாட்களில் தேசிய புள்ளியியல் துறை அலுவலகம் (National Statistical Office – NSO) வெளியிட்ட அறிக்கையில் “இன்னும் கிராமங்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோருக்குக் கழிப்பறை வசதி இல்லை” எனக் கூறியது. “குடிநீர், சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி நிலை அறிக்கையானது, “கிராமப்புற குடும்பங்களில் 71.3 சதவிகிதம் வீடுகளில் கழிப்பறை பயன்பாடு இருக்கிறது. 28.7 சதவிகிதம் வீடுகளுக்குக் கழிப்பறை வசதி இல்லை. அவர்கள் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட 42 சதவிகித கிராமப்புற குடும்பங்களுக்குக் கழிப்பறைகள் இல்லை. இது, தமிழ்நாட்டில் 37 சதவிகிதமாகவும், ராஜஸ்தானில் 34 சதவிகிதமாகவும் உள்ளது. இதேபோல, கர்நாடகத்தில் 30 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 29 சதவிகிதம், ஆந்திராவில் 22 சதவிகிதம் மற்றும் மகாராஷ்ட்டிராவில் 22 சதவிகிதம் கிராமப்புற வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. சராசரியாக, 28.7 சதவிகித கிராமப்புற குடும்பங்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை; நகர்ப்புறக் குடும்பங்கள் மட்டுமே 96.2 சதவிகிதம் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன” என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது. போதிய கழிப்பறை இல்லாததால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம்.
“இந்தியாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கழிப்பறை வசதி இல்லை” எனக் கூறியிருக்கிறார் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், தமிழகத்தில் கழிப்பறை வசதி 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
போதிய கழிப்பறை வசதியில்லாததால், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் ஐந்து வயதுக்குட்பட்ட ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்று யுனிசெப் சுட்டிக்காட்டுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், ஏறத்தாழ இரண்டு லட்சம் இந்தியக் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கின்றனர். கழிப்பறைகள் இருந்தால் இதனை, சுலபமாகத் தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.
பராமரிக்கப்படாத கழிப்பறை
கொரோனாவின் தாக்குதல் இன்னும் முழுமையாக நம்மைவிட்டு விலகாத நிலையில் முறையாகப் பராமரிக்கப்படாத கழிப்பறைகள் நோய்களை இலவசமாகப் பரப்பும் மையங்களாக மாறும் அபாயம் அதிகம். பொதுக் கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கும் பொதுமக்களுக்கும் உண்டு. நகர்ப்புறங்களில் ரயில்நிலையம், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் பொதுக்கழிப்பறைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. அதுபோல வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் உள்ள பகுதிகளில் அமைக்கப்படும் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை போதுமானதாக இருப்பதில்லை. நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு அடிக்கடி கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. எனவே பொதுக் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதோடு கழிப்பறைக்குத் தேவைப்படும் தண்ணீர் வசதி, மின்சார வசதி, பாதுகாப்பு போன்றவற்றையும் அரசு வழங்க வேண்டும். முதியவர்களின் பயன்பாட்டுக்காக மேற்கத்திய வகை கழிப்பறைகளும் ஆங்காங்கே இருத்தல் நலம். மேலை நாடுகளில் கழிப்பறைகளை இலவசமாகப் பயன்படுத்தலாம். அங்குப் பொதுவெளிகளை கழிப்பறையாகப் பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், நம்நாட்டில் அப்படியே “உல்டா” கழிப்பறைகளைப் பயன்படுத்தக் கட்டணம், பொதுவெளி கழிப்பிடங்கள் இலவசம்.
பொருளாதார இழப்பு
போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், 2.4 லட்சம் கோடி ரூபாயை இந்தியப் பொருளாதாரம் இழந்து வருகிறது என்று, உலக வங்கியின் அங்கமான, நீர் மற்றும் சுகாதாரத்திற்கான இயக்கம் தெரிவித்து உள்ளது. சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிப்பதால், ஒவ்வொரு ஆண்டும் 1,200 கோடி ரூபாய் அளவிற்குச் சுற்றுலாத் துறையில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
நீர்நிலைகளின் அருகே மலம் கழிக்கப்படுவதால், குடிநீர் சுத்திகரிப்பதற்குச் செலவு அதிகரிக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும், 11,200 கோடி ரூபாய் இழக்கப்படுகிறது. சுகாதாரமற்ற குடிநீர், கழிப்பிடங்களால் ஏற்படும் உடல்நலக் குறைவால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் 21,700 கோடி ரூபாய் அளவிற்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. அரசுக்குக் கூடுதல் மருத்துவச் செலவாக 21,200 கோடி ரூபாய் ஏற்படுகிறது. பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததால், பாட்டில் குடிநீர் வாங்குவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 600 கோடி ரூபாய் வீண் செலவாகிறது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
தகவல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளது என்பதற்காகப் பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில், சுகாதாரம் குறித்த அடிப்படை விஷயத்தில் இன்னமும் நாம் பின்தங்கியே உள்ளோம் என்பது வேதனைதான். இந்தியாவில் உள்ள 47.2 சதவிகித வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி போய்ச் சேர்ந்துள்ளது. 63 சதவிகித வீடுகளுக்கு கைப்பேசி சென்று சேர்ந்துள்ளது. ஆனால், கழிப்பறை மட்டும் திறந்தவெளியாகவே இருக்கிறது என்றால் இதற்குக் காரணம், மக்களின் அறியாமை, அலட்சியம் ஆகியவைதான்.
கழிப்பறைக்கு வரவேற்பு
உத்தரப்பிரதேச மாநிலம் பாஹ்பத் அருகில் உள்ள பிஜ்வாடா என்னும் கிராமத்தில் கழிப்பறை இல்லாத வீட்டில் திருமணம் நடக்காது என ஊர் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். திருமணத்துக்காகக் காத்திருக்கும் ஆண், பெண் என இரு பாலருக்கும் இது பொருந்தும். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டியான குன்வர்பாய், தான் வளர்த்து வந்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டியுள்ளார். கழிப்பறை கட்டிய குன்வர்பாய்க்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ‘சுவாச் பாரத் அபியான்’ விருதை மத்திய அரசு வழங்கியது. பிரதமரும் பாராட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் ‘ஹார்பிக் உலக கழிப்பறை கல்லூரி’ செயல்பட்டு வருகிறது. இங்குத் துப்புரவுப் பணியாளர்களின் பணியை மேம்படுத்தும் வகையில், நவீன கருவிகளைக் கையாளுதல், பணித்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தக் கல்லூரியில் கடந்த ஆண்டு 3,200 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன செய்யவேண்டும்
ஒவ்வொரு ஆண்டும் கழிப்பறை தினம் ஒரு மையக் கருத்தினை முன்னிறுத்தி அனுசரிக்கப்படும். இந்தாண்டுக்கான (2021) கருப்பொருள் “கழிப்பறைகளை மதிப்பிடுதல்” என்பதாகும். திறந்த வெளியில் மக்கள் மலம் கழிப்பதை ஒழித்து, அனைத்து வீடுகளிலும், பொது இடங்களிலும் சுகாதாரமான நவீன கழிப்பறைகளை அமைப்பதே நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் நோக்கம். 2014ஆம் ஆண்டு முதல் இந்திய நடுவண் அரசு, மாநில அரசுகளின் உதவியுடன் இந்தியா முழுவதிலும், கழிப்பறைகளைக் கட்ட ஊக்குவிக்கிறது. மத்திய மாநில அரசுகள் கழிப்பறை குறித்து விழிப்புணர்வு பிரசாரம், நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இன்னும் அவை தீவிரப்படுத்தவேண்டும். பள்ளிகளில் மாணவர் மத்தியில் இதன் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போது தான் உருவாகும் தலைமுறைக்கு கழிப்பறைப் பயன்பாடு குறித்து அதிகமாகத் தெரியவரும்.
சுகாதாரக் குறைவால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. அந்தப்பணத்தைக் கழிப்பறைகளைக் கட்டுவது போன்ற ஆக்கப்பூர்வமான அம்சங்களில் செலவழித்தால் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். பொதுக்கழிப்பறைகளுக்கு தேவையான துப்புரவு சாதனங்களும், கிருமிநாசினிப் பொருட்களும் கிடைக்க உள்ளாட்சி நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும். கழிப்பறையைப் பயன்படுத்துவோர் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும். உள்ளாட்சிக் கூட்டங்களில் கழிப்பறை வசதிகள் குறித்தும் மக்கள் பிரதிநிதிகள் பேசவேண்டும். கழிப்பறைகளில் உள்ளாட்சி அமைப்பு சார்பில் புகார் பெட்டி வைக்கலாம். பத்து நாட்களுக்கு ஒருமுறை இந்த புகார்களை அதிகாரிகள் பரிசீலிக்கலாம். கழிப்பறைகள் பராமரிப்பை எளிமைப்படுத்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். குறைந்த தண்ணீர் தேவைப்படும் கழிப்பறை அமைப்புகள் தேவைப்படுகின்றன. இதன் மூலம், கழிப்பறைகள் நீண்ட நாள்களுக்குப் பயன்படுபவையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் இருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால் நோய் தோன்றும் இடமாகக் கழிப்பறைகள் மாறிவிடாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உரிய கழிப்பறை வசதி இல்லாது போனால் தனிமனித ஆரோக்கியம் கெடும். அது தேசத்தின் ஆரோக்கியத்தைப் பலவீனப்படுத்தும். ஆரோக்கியமற்ற குடிமக்கள் பொருளாதார இழப்புக்கு வழி வகுக்கின்றனர். மக்களின் ஆரோக்கியம், நாட்டின் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டாவது கழிப்பறைகள் மீது கவனம் செலுத்துங்கள்.. முகம் சுளிக்காதீர்கள். =