மாண்புமிகு ஆசிரியர்கள் – 1 (புதிய தொடர்)
முகில்
‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழில் ‘வெற்றிக் கதைகள்’, ‘வெளிச்ச மனிதர்கள்’ என்ற இரண்டு நீண்ட தொடர்களை வழங்கிய, எழுத்தாளர் முகில் அவர்கள் மூன்றாவது தொடரை நமக்காக வழங்குகின்றார். ‘மாண்புமிகு ஆசிரியர்கள்’ என்னும் இந்தப் புதிய தொடருக்கு நன்றிகூறி அவரை வரவேற்கின்றோம்.
எழுத்தாளர் திருமிகு. ‘முகில்’ அவர்கள் பல சிறந்த நூல்களை எழுதியுள்ளவர். உணவு சரித்திரம் – 1, 2, பயண சரித்திரம், அகம் புறம் அந்தப்புரம், சந்திரபாபு, எம்.ஆர். ராதா, செங்கிஸ்கான், துப்பாக்கி மொழி, அண்டார்டிகா, அக்பர், ஔரங்கசீப், மெகல்லன், துருவங்கள், ஹிட்லர், யூதர்கள், முகலாயர்கள், கிளியோபாட்ரா, வெளிச்சத்தின் நிறம் கருப்பு – 1, 2, நம்பர் – 1 சாதனையாளர்களின் சரித்திரம், லொள்ளு தர்பார், லொள்காப்பியம், மைசூர் மகாராஜா உட்பட இவரது அனைத்து நூல்களும் மிகவும் புகழ்பெற்றவை. ஆ… மற்றும் …ம் என்ற இரண்டு கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். ‘அதே கண்கள்’ திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர், “கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு”, ‘ஆய்வும், எழுத்தும்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்வுகள் தந்தவர். தொடர்ந்து திரையுலகிலும், எழுத்துலகிலும் சாதனை நிகழ்த்தி வருபவர்.
நமது ‘ஆளுமைச் சிற்பி’ இதழில் தனது கடும் பணிகளுக்குயிடையிலும் கட்டுரைகள் தந்து நம் வாசகர்களை மகிழ்விக்கும் எழுத்தாளர் திரு. முகில் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்.
– ஆசிரியர், ஆளுமைச் சிற்பி
கண்ணகியின் கோபத்தால் மதுரை மாநகரமே பற்றி எரிந்த சிலப்பதிகாரக் காலம் அது. மதுரை வாழ் மக்கள் பலரும் உயிர் பிழைக்கச் சகல திசைகளிலும் மூட்டை, முடிச்சுகளுடன் ஓடினர். அப்படி மேற்குத் தொடர்ச்சி மலை நோக்கி ஓடி அங்கே அடர் வனப்பகுதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள் முதுவர்கள். தங்கத்தாலான மதுரை மீனாட்சி சிலையை முதுகில் சுமந்து சென்ற காரணத்தினால் அவர்களை பாண்டிய மன்னன் ‘முதுவர்கள்’ என்று அழைத்ததாகச் சொல்கிறார்கள். பின்பு கேரளத்தின் அடர்வனப்பகுதிகளில் வாழ்பவர்கள் ‘நாட்டு முதுவன்’ என்றும், தமிழக வன எல்லையில் வாழ்பவர்கள் ‘பாண்டி முதுவன்’ என்றும் அழைக்கப்படலாயினர். இந்த மக்களின் மொழி, கலாசாரம் எல்லாம் ஒன்றுதான். இருபதாம் நூற்றாண்டில் இறுதி வரை கல்வியின் வாடையே படாமல் வாழ்ந்த பழங்குடி மக்கள் இவர்கள். 1997-ம் ஆண்டில் அந்த முதுவர்களைத் தேடி ஒரு மனிதர் கிளம்பினார்.
மூணாரிலிருந்து ஜீப்பில் கரடு முரடான பாதையில் எரவிகுளம் தேசிய பூங்கா வழியாக 18 கி.மீ. பயணம் செய்து பெட்டிமுடியை அடைந்தார். அங்கிருந்து காட்டுப்பாதையில் பல மைல்கள் நடை. யானைகள், காட்டுப்பன்றிகள், விஷப்பாம்புகள், காட்டெருமைகள் என வழியெங்கும் ஆபத்துகள். ஒழுங்கற்ற, சகதிகள் நிறைந்த பாதையில் வழுக்கி விழுந்தால் உயிருக்கும் ஆபத்து நேரலாம். மூச்சு வாங்க வாங்க பல மணி நேர நடைக்குப் பிறகு, சில பழங்குடி குடியிருப்புகளைத் தாண்டி, எடமலக்குடியை வந்தடைந்தார் முரளிதரன். எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற, மண்ணாலும் மூங்கிலாலும் உருவாக்கப்பட்ட குடில்கள் நிறைந்த முதுவர்கள் குடியிருப்பு. முற்றிலும் வேற்று மனிதர்கள். முரளிதரனுக்குள் இருந்து ஒரு குரல் எச்சரித்தது. ‘இங்கே வருவதற்கே இவ்வளவு சிரமமாக இருக்கிறதே. இங்கேயே தங்கி எப்படி பணியாற்றப் போகிறாய்? அதுவும் வெறும் 750 ரூபாய் உதவித் தொகைக்காக. யோசிக்காதே. உடனே கிளம்பிவிடு.’
பதில் குரலும் அவருக்குள் இருந்தே ஒலித்தது. ‘நானும் பழங்குடிகளுக்கான ஒரு பள்ளியில்தான் படித்தேன். மாதக்கணக்கில் ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள். வந்த புது ஆசிரியர்களும் ஓரிரு வாரங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். ஆசிரியர் கிடைக்கப் பெறாத மாணவர்களின் ஏக்கத்தை நான் அறிவேன். நான் அப்படிப்பட்ட ஆசிரியராக இருக்க விரும்பவில்லை. என்ன ஆனாலும் நான் இந்த முதுவர் இன மக்களுடன்தான் இருக்கப்போகிறேன். அவர்களது கல்விக்காக!’
Integrated Tribal Development Programme (ITDP) என்றொரு திட்டத்தை அப்போது
கேரள அரசு ஆரம்பித்திருந்தது. ஆரம்ப நிலைப் பள்ளிகள்கூட இல்லாத பழங்குடி மக்களுக்கான அடிப்படைக் கல்வியை வழங்குவதே நோக்கம். அந்த மக்கள் வாழ் பகுதிகளில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளை நிறுவ முயற்சிகள் எடுத்தனர். நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளை நோக்கிச் சென்றனர். முரளிதரன் எடமலக்குடியை
வந்தடைந்திருந்தார்.
மலையாளமும் ஆங்கிலமும் அறிந்திருந்த முரளிதரனால் முதுவர் மக்கள் பேசும் முதுவன் மொழியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அது தமிழ் – கன்னட பிரிவைச் சேர்ந்த தென் திராவிட மொழி. தமிழ் வார்த்தைகள் நிறையவே கொண்ட மொழியும்கூட. ஆகவே, அவர்களிடம் சைகை மூலமாகப் பேசத் தொடங்கினார் முரளிதரன். முதலில் இந்த மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அப்போதுதான் நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தொடங்குவார்கள் என்ற தெளிவு முரளிதரனுக்கு இருந்தது. ஆகவே முதுவன் இன மக்கள் தரும் ராகி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மர வள்ளிக்கிழங்கு, சோளம், அரிசி போன்ற உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டு அவர்களில் ஒருவராக மண் குடிலில் தங்கிக் கொண்டார். அந்தப் பிள்ளைகளுடன் மீன், நண்டு பிடிக்கச் சென்றார். காடுகளில் உலாவினார். முயல்களையும் பறவைகளையும் வேட்டையாடி அவர்களுடனேயே சுட்டுத் தின்றார். அந்தக் குழந்தைகள் அவரை நேசிக்கத் தொடங்கின.
5 முதல் 15 வயது வரையிலான 35 குழந்தைகளுக்குப் பாடத்தை ஆரம்பித்தார் முரளிதரன். கல்வியின் வாசமே அறியாதவர்கள். முதலிலேயே புத்தகத்தையும் சிலேட்டையும் எழுத்துகளையும் காண்பித்தால் மிரண்டு ஓடி விடுவார்கள். ஆகவே அவர்களுக்கு முதலில் சுகாதாரம் கற்றுக் கொடுத்தார். தினமும் பல் விளக்க வேண்டும். குளிக்க வேண்டும். உடைகளைத் துவைத்து அணிய வேண்டும். முடி, நகம் வெட்ட வேண்டும். இப்படி அடிப்படை சுத்தத்தைக் கற்றுக் கொடுத்தார். அவர்களிடம் தொடர்ந்து பழகியதன் மூலம் முதுவன் மொழியும் முரளிதரனுக்குப் பிடிபடத் தொடங்கியது. குழந்தைகள், மலையாள வார்த்தைகள் சிலவற்றைப் பேசக் கற்றுக் கொண்டனர். பாடல்களைச் சொல்லிக் கொடுத்து, உற்சாகமாகப் பாடியும் ஆடியும் அவர்களைக் கற்றுக் கொள்ளத் தூண்டினார். இப்படியாகக் குழந்தைகள் மூலமாக பெரியவர்களின் நம்பிக்கையையும் பெற்றார் முரளிதரன்.
ஒருநாள். காலையில் எழுந்து பார்க்கும்போது அங்கே குடியிருப்பில் யாருமே இல்லை. ஒவ்வொரு குடிலாகப் போய்த் தேடினார். காலியாக இருந்தது. மூன்று நாள்கள் விசாரித்த பிறகு அவர்கள் எல்லோரும் வாழக்குடி என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டதாகத் தகவல் தெரிந்தது. ஏலக்காய்த் தோட்டத்தில் வேலை. அறுவடை முடிந்த பிறகே திரும்புவார்கள் என்று அறிந்ததும் முரளிதரனும் வாழக்குடி நோக்கிக் கிளம்பினார். அங்கே கூடுதலாகப் பிள்ளைகள் இருந்தனர். பாடங்கள் ஆரம்பமாயின.
கலர் கலர் அட்டைகள். அவற்றில் பூக்கள், விலங்குகள், பறவைகள், இன்ன பிற விஷயங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அவற்றைக் கொண்டு பாடம் நடத்தினார். யாரையும் நான்கு சுவருக்குள் உட்கார வைக்கவில்லை. மரத்தடி வகுப்பறைகள். முதலில் அந்தப் பிள்ளைகள் உயிரெழுத்துகளை அறிந்து கொண்டனர். பின்பு தங்கள் பெயரை எழுத, கையெழுத்தைப் போடத் தெரிந்து கொண்டனர். முதன் முதலாக கையெழுத்து ஒன்றைப் போட்ட நொடியில் ஒவ்வொருவர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. நோட்டு, பென்சில், பேனா, புத்தகங்கள், கலர் அட்டைகள், இன்ன பிற பொருள்களுக்கு எல்லாம் முரளிதரனே தன் கைக்காசில் இருந்து செலவு செய்து கொண்டார். முதலில் அரசு அதற்கு எந்தப் பணமும் ஒதுக்கவில்லை.
அடிப்படை எழுத்துகளில் இருந்து கணிதம், அறிவியல், மலையாளம் என்று பாடங்கள் நீண்டன. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பிள்ளைகளை தங்கள் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் வகுப்பு எடுக்கத் தொடங்கினர். ஆம், ‘இந்த ஆள் பிள்ளைங்களோட நேரத்தை வீணடிச்சுட்டு இருக்கான்’ என்று ஆரம்பத்தில் நினைத்த பெற்றோர், பின்பு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு அவர்களும் படிக்கத் தொடங்கினர். குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் உணவு வழங்கும் திட்டத்தைத் தானே செயல்படுத்தத் தொடங்கினார். பின்பே அதற்கு அரசாங்கம் ஒரு மாணவனுக்கு எட்டு ரூபாய் என்று தொகை ஒதுக்கியது.
முரளிதரனின் மனைவி ராதாமணியும் அவரைப் போலவே பழங்குடி மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியைதான். அதே மலைப்பகுதியில் சில மைல்கள் தள்ளி அமைந்த இரிப்புகழ்குடியில் ராதாமணி ஆசிரியையாகப் பணியாற்றினார். கணவனும் மனைவியும் சேர்ந்து புதிய திட்டங்கள் வகுத்து பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்டனர். 2006-ம் ஆண்டு. ராதாமணிக்கு இரண்டாவது பிரசவம் நிகழ்ந்தது. அது முதலே அவருக்கு உடல்நிலை சரியில்லை. குழந்தை பிறந்த மூன்றாவது வாரம். முரளிதரனின் மடியில் ராதாமணி தன் இறுதி மூச்சை விட்டார். மனைவியை இழந்த பிறகும் முரளிதரன் தம் குழந்தைகளுக்காக ஊரிலேயே இருந்துவிடலாம் என்று யோசிக்கவே இல்லை. தனது குழந்தைகளைப் பெற்றோரிடம் விட்டுவிட்டு மீண்டும் முதுவர் மக்களிடமே வந்து சேர்ந்தார். ‘இந்தப் பழங்குடிக் குழந்தைகளுக்கு என்னை விட்டால் யாருமில்லை!’
ஆரம்பநிலைக் கல்வியை முடித்த குழந்தைகள் நடுநிலைக் கல்வியைப் பெற வேண்டுமென்றால் மூணாருக்கோ, அடிமாலிக்கோதான் செல்ல வேண்டும். நீண்ட தூரம் காட்டுப் பாதையில் பயணம் செய்து, பின்பு பேருந்து ஏறி பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை. பழங்குடி மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப யோசித்தார்கள். இருந்தாலும் அந்தக் குழந்தைகளின் பாதுகாப்புக்கும் பயணத்துக்கும் முரளிதரன் பொறுப்பெடுத்துக் கொண்டார். சில குழந்தைகள் நடுநிலைப்பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர். வெறும் கல்வியோடு நிறுத்திக் கொள்ளாமல், முதுவர் இன மக்களுக்கு ரேசன் கார்டும், வாக்காளர் அட்டையும் வாங்கிக் கொடுத்தார் முரளிதரன். அங்கே பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டது. முதுவர் இன மக்கள் விளைவிக்கும் ஏலக்காய், மிளகு போன்ற வாசனைப் பொருள்களை நேரடியாக விற்பனை செய்ய சந்தை வாய்ப்பையும் முரளிதரன் ஏற்படுத்திக் கொடுத்தார். அங்கே ‘குடும்ப’ என்ற கேரள அரசின் பெண்களுக்கான தொழில் வாய்ப்பு தரும் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதுவர் பழங்குடியினர் மேம்பட்ட வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.
முதுவர் இன மக்களின் வாழ்க்கையை, பண்பாட்டை, வரலாற்றைச் சொல்லும் எடமலக்குடி ஊரும் பொருளும், கோத்ரமானஸம் என்ற இரண்டு நூல்களையும் முரளிதரன் எழுதினார். எடமலக்குடி பஞ்சாயத்து மூலமாக 3.5 லட்சம் நிதி பள்ளியின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது. மதிய உணவோடு, காலை உணவும் மாணவர்களுக்கு வழங்க ஆரம்பித்தார் முரளிதரன். டெஸ்க், பெஞ்ச், கரும்பலகைகள், கணிணி, மைக் செட் என்று பள்ளியின் வசதிகள் மேம்படுத்தப்பட்டன. 2017-ம் ஆண்டில் எடமலக்குடியில் பழங்குடி மாணவர்களுக்கான பள்ளியில் முரளிதரனோடு மேலும் நான்கு ஆசிரியர்கள் இணைந்தார்கள். இப்போது அந்தப் பகுதியில் வாழும் பல்வேறு பழங்குடி மக்களுக்கான பிரதான பள்ளியாக அது செயல்படுகிறது. தினமும் பயணம் செய்ய இயலாத மாணவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை அந்தப் பள்ளியிலேயே தங்கி கல்வி பயில்கிறார்கள். நூலகம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. எடமலக்குடி பழங்குடியினர் பள்ளி இப்போது கேரளாவின் மற்ற அரசுப் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் செயல்படுகிறது. மற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று முதுவர் மாணவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
இந்த அற்புத மாற்றங்களுக்கு எல்லாம் காரணம் முரளிதரன் என்ற ஒற்றை ஆசிரியரின் இருபத்து நான்கு வருட விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தியாகம், தன்னலமற்ற சேவை நோக்கம். ‘முரளி மாஸ்’ என்று முதுவர் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் முரளிதரன், அந்த பழங்குடி மக்களோடு வாழும் கடவுள்! =