வாழ்வியல் திறன்கள்-82
உலகில் மனித வளர்ச்சியும், நீட்சியும் இயம்பப்பெறும் இன்சொற்களால் மட்டுமே செழிக்கும் என்ற மெய்மையை கூர்ந்தறிபவர்கள் எளிதின் கணிக்கமுடியும். ஆனால் நிகழ் நிலையில் நிகழும் பெரும்பான்மையானவை, எதிர்மறைகளாக இருப்பதை எளிதின் காணமுடிகின்றது. சான்றாக,
நீயெல்லாம் பிறந்ததே வீண்
உனக்கு வேலை குடுத்ததே தண்டம்
கொஞ்சமாவது மூளையைப் பயன்படுத்து
உன்னைக் கல்யாணம் பண்ணினதே என் விதி
நீ எதுக்கும் பயன்பட மாட்டே
என்பன போன்ற எதிர்மறைச் சொற்களை அன்றாடம் பயன்படுத்தும் தனிநபர்கள், குடும்பங்கள், அலுவலகங்கள் என பல தளங்களில் கண்டு உணரமுடியும். மேற்குறித்த பிறர் உள்ளங்களைத் தாக்கும்-தகர்க்கும் எதிர்மறைகளாவன உதிர்த்தவருக்கும் – ஆளானவருக்கும் கடும் எதிர்விளைவுகளையே தரும். பயனற்ற சொற்களாவன எவ்விதமான ஆக்கங்களையும் தரப்போவதில்லை என்றுணர்ந்த பின்பும் பலர் இக்கடியப் பண்புகளை பற்றிக் கொண்டிருப்பது அவர்களின் பேதைமையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது எனலாம். வாழ்க்கை வார்த்தைகளில்லை என்றபோதும், இனிய வார்த்தைகள் வாழ்க்கைக்கு உணர்வூட்டி உரமூட்டுவன என்பதில் எவ்வித அய்யமுமில்லை.
‘பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்'(குறள்.199) என்ற குறட்தொடரானது, தெளிந்த அறிவுடையவர்கள் மறந்தும் நற்பயன் விளைக்காத சொற்களைப் பயக்கமாட்டார்கள் என்றுணர்த்தும். மேலும்,
‘சொல்லுக சொல்லிற் பயனுடைய’ (குறள்.200) என்ற குறள்தொடரானது, என்றும், எப்போதும் ஆக்கம் தரக்கூடிய சொற்களையே என்றென்றும் பயக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதை அறியமுடிகின்றது. இவ்வழி,
உன் பிறப்பிற்கு ஒரு அர்த்தமுள்ளது
உன்னால் முடியாதது எவராலும் முடியாது
நீ என்றும் தனித்துவம் நிரம்பியவன்
நமக்குள் புரிதல் நம் உறவை உன்னதமாக்கும்
நீ ஆழ சிந்தித்தால் சிகரத்தைத் தொடலாம்
என்பன போன்ற ஊக்கச்சொற்களாவன, சொல்லுபவருக்கும் – கேட்பவருக்கும் ஒருவித தன்னம்பிக்கையும், எதனையும் முடிக்கும் உணர்வோடு செயல்படக்கூடிய வீறுணர்வையும் இயல்பாகத் தரும். உலக வரலாற்றில் சாதனையாளர்கள் பெரும்பான்மையானவர்கள், வீறு விளைக்கும் சொற்களால் தத்தமது துறைகளில் உச்சத்தைத் தொட்டதாக அறிவிப்பதை அறியமுடிகின்றது.
சின்ன சின்னப் பாராட்டுகள், அழகான அங்கீகரிப்புகள், தொடுதலான உணர்த்தல்கள்; என யாவும் மெச்சத்தக்க சாதனைகளைப் புரிவதற்கான பேராற்றலை வரமாகத் தந்திடும். எனவே அதிசயத்தக்க விளைவுகளைத் தரக்கூடிய பண்பட்ட பாராட்டு வார்த்தைகளை (Hearty Appreciation as an Habit) அன்றன்று பயன்படுத்துவதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
உளமாற நன்றி கூறல், (Say Thank You)
ஆழ்ந்து அக்கறையுடன் கேட்டல் (Pay attention to them)
அடுத்தவரின் ஆதங்கத்தைப் பரிவுடன் கேட்டல்(Listen emphathetically)
உரியவரைப் பாராட்டி உடனே வாழ்த்துச்செய்தி எழுதுதல் (Write an appreciation note)
நம்பகத்தன்மையுடன் நடத்தல் (Be Reliable)
எதிலும் தெளிவோடு சொல்லும் வல்லாண்மையோடு விளங்கல் (Be Specific)
வார்த்தைகளோடு நில்லாது உடனே பரிசுகளைத் தந்து மகிழ்வித்தல் (Action speaks louder than words)
மேற்குறித்த உளமார்ந்த அணுகுமுறைகளை நம்பிக்கையுடன் பயன்படுத்தும் போது, ஒரு அணுக்கச் சூழல் உருவாவதுடன், செயல் நிறைகளுக்கான வழிகளும் இயல்பாகும்.
‘இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது’ (குறள்.99)
என்ற குறள்நெறி ஆன்ற சொல்லறத்தைப் புலப்படுத்துபவன் அதன்வழி பெறக்கூடிய நெடிய இன்பங்களை அழுத்தந் திருத்தமாக அறிவிப்பதை அறியமுடிகின்றது. பாராட்டுடன் நன்றிமறவா நெறியும் கடைப்பிடிப்பவர்களுக்கு, உள்ளம் மற்றும் உடல் சார்ந்த நன்மைகள் வசமாவது உறுதிப்படும் எனலாம். மேலை நாட்டு தத்துவ அறிஞரான டேவிட் ஹூயூம் என்பவர்,
“of all crimes that human creatures are capable of committing, the most horrid and unnatural is ingratitude”
மனிதகுலம் இழைக்கின்ற அனைத்து குற்றங்களிலும் கடுமையான மற்றும் இயற்கைக்கு மாறானது நன்றிமறக்கும் வன்கொடுமையாகும்.
இதனையே நம் திருவள்ளுவர்,
‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்’ (குறள்.109)
ஒருவன் கொலைபாதக அளவுக்கு தீமைசெய்திருந்த போதும், அவன் என்றோ செய்திருந்த ஒரு நன்மையை உள்ளமதில் ஆழமாக எண்ணிப்பார்த்தால் அவன் மீதிருக்கும் கடுமைகள் கரைந்து போகும் என்பார். இதன்வழி நன்றியறி மனத்தால், மனமகிழ்ச்சி, மனஇறுக்கமின்றி இருத்தல், தன்மதிப்பு உயருதல், மனநெகிழ்திறன், நல்ல உறக்கம், உடல்நிலை செறிவு, உணர்வோங்கு நட்புநிலை என்றவழி அனைத்து ஆக்கங்களையும் ஒருசேரப் பெறமுடியும் என மேலாண்மை வல்லுநர்களும் பல செயல் முறைவழி விளக்கியுள்ளனர்.
எனவே பாராட்டும், நன்றியறிதலும் வாழ்க்கைப் பொருண்மைகளாகும் போது, தனிமனித ஆற்றல்கள் மீட்சியுற்று, உலகின் கண் சாதனைகள் நிறைவேறுவதுடன், மக்களின் மகிழ்ச்சிக் குறியீடு (Happy Quotient reaches its peak) உச்சத்தைத் தொடுவது உறுதியாகும்.