இளைஞர் உலகம் – உறவு – 39
தூங்கு முகத்தவரின் பொதுவான பண்புகளைப் பார்த்து வருகிறோம். இதுவரை எட்டுப் பண்புகளைப் பார்த்தோம். இந்த இதழில் இன்னும் சில பண்புகளைக் காண்போம்.
- சூழ்நிலையை மாற்றும் திறன் கொண்டவர்
தூங்குமுகத்தவர் சூழ்நிலைகளால் பாதிக்கப்படமாட்டார்கள். மாறாக சூழ்நிலையை இவர்கள் விரும்பியபடி மாற்றி அமைக்கும் திறன் கொண்டவர். தனக்கு ஆத்திரமூட்டும் சூழ்நிலைகளைக் கண்டு பயமோ, பதட்டமோ கொள்ளாது செயல்படும் நபராக இருப்பார் இவர்.
நிகழ்ச்சி
1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் பெரும் கலவரங்கள் வெடித்தன. அன்றைய நாளில் இன்று நாம் பாகிஸ்தான் என அழைக்கும் நாடு இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்ததால் அது மேற்கு பாகிஸ்தான் எனவும் இன்றைய வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தான் எனவும் இருந்தது. மேற்கு பாகிஸ்தான் எல்லையில் கலவரத்தை அடக்க ஐம்பதாயிரம் படைவீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் கலவரம் ஓய்ந்த பாடில்லை.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கலவரத்தை ‘கட்டுப்படுத்த’ மகாத்மா காந்தியடிகள் கலவரம் ஏற்பட்ட பகுதியான நவகாளிக்கு பாத யாத்திரையாகச் சென்றார். வழியில் பல்வேறு தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானார். ஆனால் அதையெல்லாம் காந்தியடிகள் பொருட்படுத்தாமல் நவகாளிக்குச் சென்று அங்கு கலவரம் ஓயும் வரை உண்ணாவிரதம் இருந்தார். கலவரத்தினர் எவ்வளவோ அச்சுறுத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.
கொஞ்சம் கொஞ்சமாக கலவரத்தைத் தூண்டியவர்கள், அதனை முன்நின்று நடத்தியவர்கள், தங்கள் ஆயுதங்களை காந்தியின் பாதத்தில் கொண்டு வைத்தனர். அவரோடு உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தனர். இதனால் சில நாள்களில் கலவரம் ஓய்ந்து அமைதி உண்டானது. அதே சமயம் மேற்கு எல்லையில் கலவரம் ஓய்ந்த பாடில்லை. 50,000 படைவீரர்களால் சாதிக்க முடியாததை காந்தியடிகள் தனிமனிதனாய் அகிம்சையால் சாதிக்க முடிந்தது. இதனைக் கேள்விப்பட்ட மவுண்ட்பாட்டன் பிரபு, காந்தியடிகளை “தனியொரு மனித எல்லைப்படை” (Single man boundary force) என வியந்து பாராட்டினார். தூங்கு முகத்தவரின் இத்தகைய பண்பு பாராட்டுதற்குரியதாகும்.
- அவசரப்படாதவர்
தூங்கு முகத்தவர்களை வங்கி ஊழியர்களாகத் தேர்வு செய்வார்கள். காரணம் அது பணம் சம்பந்தமான, விலை உயர்ந்த நகை சார்ந்த வேலை என்பதால் மிகக் கவனமாக வாடிக்கையாளர்களைக் கையாள வேண்டும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. ஆத்திரம் அறிவைக் கொன்றுவிடும். எனவே பண விசயத்தில் நிதானமாகச் செயல்பட வேண்டும். தூங்குமுகத்தவர் இயல்பாகவே பொறுமை உடையவர்கள்.
ஒருமுறை ஒரு வங்கி லாக்கரில் வைத்திருந்த நகையை எடுப்பதற்காக ஒருவர் வங்கிக்குச் சென்றிருந்தார். உரிய அனுமதி பெற்று நகை சம்பந்தப்பட்ட விசயங்களை அந்த வங்கியில் கையாளும் நபரிடம் சென்றார். அந்த வங்கி ஊழியர் அவரை உட்காரச் சொன்னார். அவரது கண் முன்னே வேறு நபர்களிடமும் சீட்டை வாங்கிக் கொண்டு இருந்தார். காலை 10.30 மணிக்கெல்லாம் வங்கி சென்றவர், இதைப் பார்த்து 11.30 ஆகியும் நகைப் பொறுப்பாளர் எழுந்து லாக்கர் அறைக்குச் செல்லாததால், என்ன செய்வது எனத் தெரியாமல் நின்றார். நண்பகல் 12 மணிக்குமேல்தான் அந்த நகை பொறுப்பாளர் எழுந்து லாக்கர் அறைக்குச் சென்றார். விசாரித்த போதுதான் அந்த வங்கியின் ஒழுங்கின்படி ஒரு நாள் ஒருமுறைதான் லாக்கரைத் திறப்பார்களாம். எனவேதான் அந்த நகை பொறுப்பாளர் முதலில் வந்தவரை ‘காக்க’ வைத்திருக்கிறார். தூங்கு முகத்தவரின் இத்தகைய செயல்பாடுகளைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.
- உள்முகச் சிந்தனையாளர் (Introvert)
தூங்கு முகத்தவர்கள் உள்முகச் சிந்தனையாளர்கள் என்பதால் எப்போதும் தங்களை, தங்கள் ஆழ்மனதின் கிடக்கைகளை ஆய்பவர்களாக இருப்பார்கள். இதனால் பல சமயங்களில் இவர்கள் வெளி உலகோடு தொடர்பு இல்லாமல் இருப்பார்கள். உள்மனச் சிந்தனை உள்ளவர்களைப் பிரச்சனைகள் அடையாளம் காட்டிவிடும். ஒருவரை கீழ்க்காணும் பண்புகள் உள்முகச் சிந்தனையாளர்களாகக் காட்டிவிடும்.
i) அமைதியான சூழ்நிலை இருந்தால்தான் இவர்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த முடியும்.
ii) புறப்பொருள்கள் குறித்து ஆழ்ந்து சிந்திப்பவர்களாக இருப்பர்.
iii) சுய-விழிப்புணர்வு கொண்டவர்கள்.
iv) தீர்வுகாண, முடிவு எடுக்க அதிகநேரம் எடுத்துக் கொள்வர்.
v) தனிமையிலே இனிமை காண்பவர்கள்.
vi) எதையும் குழுவாகச் செய்வதை விரும்பமாட்டார்கள். குழுவை, கூட்டத்தைத் தவிர்க்க முயலுவார்கள்.
vii) பேசுவதைவிட எழுதுவதையே அதிகம் விரும்புவர்.
viii) ஒரு கூட்டத்தில் இருந்தால் சிறிது நேரத்தில் களைப்படைந்துவிடுவர்.
ix) நண்பர்கள் மிகவும் குறைவு; ஆனால் நண்பர்கள் சிலரே இருந்தாலும் அவர்களோடு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.
x) பகல் கனவு காண்பவர்கள். ஒரு பிரச்சனைக்கு கற்பனைத்திறன் வழியாகத் தீர்வுகாண முயலுவர்.
xi) ஏதாவது விரும்பத்தகாத ஒன்று நடந்தால் ஆமை தனது கழுத்தை ஓட்டிற்குள் கொண்டு போவது போன்று தனக்குள்ளே சென்று ஒளிந்து கொள்வர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மூன்றில் ஒரு பங்கு பேர் உள்முகச் சிந்தனையாளர்கள் என புள்ளி விபரங்கள்
கூறுகின்றன.
(தொடரும்)