முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்!

ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

ரஷ்ய எழுத்தாளர் ஐசக் பேபல் “உலகம் தன்னால் எழுத முடிந்தால் அது டால்ஸ்டாயைப் போல எழுதும்” என்று கூறினார். “டால்ஸ்டாயின் நாவல்கள் ஒரு கலைப் படைப்பு அல்ல, அவைகள் வாழ்க்கையின் ஒரு பகுதி” என்றார் பிரிட்டிஷ் கவிஞர் மாத்யூ ஆர்னால்ட். இன்னும் ஒரு படி மேலே சென்று, ஆங்கில எழுத்தாளர் வெர்ஜீனியா வுல்ப் “அனைத்து நாவலாசிரியர்களிலும் மிகவும் உயர்ந்தவர்” என்று டால்ஸ்டாயைப் புகழ்கின்றார்.

ஆம்! ரஷ்ய மண்ணின் புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர் டால்ஸ்டாய் என்பது உலகம் அறிந்ததே. ஒரு எழுத்தாளரின் நூல்கள் நூற்றி ஐம்பது ஆண்டுகள் கடந்தும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே இதற்கான சான்று.

1828-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம்  9-ஆம் தேதி வசதி மிக்க குடும்பத்தில் பிறந்தவர் லியோ டால்ஸ்டாய். தாய் மரியா நிகோலயேவ்னா, தந்தை நிகோலாய் இலிச். டால்ஸ்டாய்  பிறந்த இரண்டு ஆண்டுகளில் தாய் இறந்துவிட்டார். 1837-ஆம் ஆண்டு தந்தையும் இறந்தார். அன்போடு இவர்களை கவனித்துக் கொண்ட பாட்டியும் அடுத்த ஆண்டில் மரணமடைய, 1841-ல் தனது 13-வயதில் அத்தை அலெக்ஸாண்ட்ரா என்பவரால் டால்ஸ்டாயும், நான்கு உடன் பிறந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். இவரது அத்தை பாசமுடன் வளர்த்திருக்கின்றார். வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது.

1844-ஆம் ஆண்டில் தனது பதினாறு வயதில் கசான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி கற்றார். ஆங்கில நாவலாசிரியர்களான லாரன்ஸ் ஸ்டெர்ன் மற்றும் சார்லஸ் டிக்கன்ஸ் படைப்புகளில் அதிக ஆர்வம் டால்ஸ்டாய்க்கு இக்காலக் கட்டத்தில் உருவானது. நிறைய வாசித்தார், தன்னிடமும் ஒரு எழுத்தாளன் மறைந்துள்ளான் என்பதை உணர்ந்து கொண்டு, கல்லூரியில் வெளியான நூல்களில் எழுதினார். அடிப்படையில் கிறிஸ்தவராக இருந்தாலும், தத்துவ ஞானி ரூஸோ மீது கொண்ட அன்பால் தனது கழுத்தில் ரூஸோவின் படம் பதித்த பதக்கத்தை அணிந்து கொண்டிருந்தார். எழுத்திலும், சமூக அக்கறையிலும் இவரது தொடக்கத்தை நம்மால் இங்கு புரிந்து கொள்ள இயலும்.

வாழ்க்கைப் பயணம்

லியோ டால்ஸ்டாய் தன்னைவிட இருபது வயது குறைந்த சோபியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சோபியாவின் தந்தை ஒரு புகழ்பெற்ற மருத்துவர். டால்ஸ்டாயும், சோபியாவும் மிகவும் அன்பான தம்பதிகளாகவே வாழ்ந்தனர். இவர்களுக்குப் பதிமூன்று குழந்தைகள். குழந்தைப் பருவத்தில் பத்துக் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு விட்டனர்.

ஏறக்குறைய அறுநூறு ஏக்கர் இடம் கொண்ட, பண்ணைத் தோட்டம் பெற்ற ஒரு பிரபுக்கள் குடும்பத்தைச் சார்ந்தவர் தான் லியோ டால்ஸ்டாய். இறுதி வரை இவருக்கு வசதி வாய்ப்புகளுக்குக் குறைவு ஒன்றும் இல்லை.

இவரது மனைவி, இவரது எழுத்துப் பணிக்குப் பெரிதும் உதவினார். டால்ஸ்டாய் எழுதும் போது அடிக்கடி அதில் திருத்தங்கள் செய்வார், அடித்து எழுதுவார். இவற்றை முறையாகப் படியெடுத்து அவற்றைப் பதிப்பகங்களுக்கு அனுப்பி, அவர்களிடம் பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து, பிரசுரிக்கும் வரை பல உதவிகளை மேற்பார்வை செய்தவர் இவரது மனைவி தான். முதலில் டால்ஸ்டாய் தனது குழந்தைப் பருவ அனுபவங்களைப் பற்றி எழுதினார். குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம் மற்றும் பதின்மப் பருவம் என்பதே இவரது ஆரம்பகாலப் படைப்புகளாகும். இவைகள் நாவல் வடிவில் வெளிவந்தாலும், இவற்றின் சாராம்சம் தனது வாழ்வின் கடினமான, மகிழ்ச்சியான மற்றும் கரடுமுரடான பகுதிகளை வெளிப்படுத்துவதாகவே எழுதியிருந்தார். வயது அதிகரிக்கின்றது, மனதும், எண்ணங்களும் விரிகின்றது. இச்சூழலில் தன்னைச் சுற்றி வசிக்கும் விவசாயிகளின் வாழ்க்கை நிலையைக் கூர்ந்து கவனிக்கின்றார். மேலோட்டமான உணர்ச்சிகளை மையமாக வைத்து எழுதுவதை விடச் சற்று உள்ளார்ந்து எழுத வேண்டும் என்ற பக்குவம் அடைகின்றார்.

ஒரு தேர்ந்த எழுத்தாளருக்குரிய சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்த போது இவர் உருவாக்கிய இரண்டு நாவல்கள் உலகப் புகழ் பெற்றன. இன்றளவும் இந்த நாவல்கள் உலகின் தலைச் சிறந்த நாவல்கள் வரிசையில் நிற்கின்றன. ‘போரும், அமைதியும்’ (War and Peace), என்ற நாவலும், ‘அன்னா கரேனினா’ (Anna Karenina) என்ற நாவலும் இன்றும் போற்றப் படுகின்றன.

‘போரும், அமைதியும்’ என்ற நாவல் நெப்போலியனின் போர் முறைகளை நையாண்டி செய்தும், அதன் வழிமுறைகளை விமர்சித்தும் அமைந்தது. மேலும் சில கற்பனையான கதாபாத்திரங்கள் மூலம் போர்க்களங்களின் உண்மை முகத்தை வெளிக் காட்ட முனைந்தது. வரலாறுகள் சொல்லும் செய்திகள், அவற்றின் உண்மை முகங்கள் போன்றவற்றை அலசிப் பார்ப்பது என்று இந்த நாவல் அமைகின்றது. ஆர்வமுடன் இதனைப் படிப்பவர்கள் பொதுவாகச் சொல்லக் கூடிய கருத்து என்னவென்றால் “பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலவிய அரசியல், சமுதாய மற்றும் மானுட வாழ்வின் பல அம்சங்களை. ஆய்வுப் பூர்வமாக வெளிக்காட்டுவதாக இந்த நாவல் இருக்கிறது” என்பதேயாகும். இதில் பரந்த கதைக்களம் அமைத்து 580-கதாபாத்திரங்கள் மூலம் டால்ஸ்டாய் தனது எண்ணங்களை, எழுத்தாக்கி வெளியிட்டுள்ளார்.

இரண்டாவது இவரது புகழ்பெற்ற நாவலான ‘அன்னா கரேனினா’ ஒரு குடும்பச்சூழலை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும். “மகிழ்ச்சியான எல்லாக் குடும்பங்களும் ஒன்று போல இருக்கின்றன. ஆனால், துயருறும் ஒவ்வொரு குடும்பமும் தன்னளவில் தனியாகவே இருக்கின்றன” என்று கூறினார் டால்ஸ்டாய். ஒப்லோன்ஸ்கிஸ், கரேனின்ஸ் மற்றும் லெவின்ஸ் என்ற மூன்று குடும்பங்களின் கதைகளைப் பின்னிப் பிணைந்துள்ளதே இந்த நாவல். குடும்பம், பொறுப்பு, காதல், அன்பு, வெறுப்பு, மனசாட்சி, மகிழ்ச்சி, துயரம் என்று எல்லாப் பரிமாணங்களையும் அலசிச் செல்லும் இந்த நாவலும் சுவை குன்றாமல் இன்றளவும் வாசிக்கப் படுகின்றது.

அந்தக் காலத்தில் பேனாக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை மையைத் தொட்டு மயிலிறகால் தான் எழுத வேண்டும். இந்த ஒவ்வொரு நாவலும், இதன் பிறகு எழுதிய நாவல்களும் என்று, இருபதாயிரம் பக்கங்களை டால்ஸ்டாய் எழுதியுள்ளார். இவற்றையெல்லாம் படியெடுத்துப் பதிப்பிக்க அனுப்பிய இவரது மனைவியும், பிள்ளைகளும், உதவியவர்களும் போற்றப்படக் கூடியவர்களே. இன்று போல பேசியோ, தட்டச்சு செய்தோ, எழுதியோ அனுப்பும் வசதியில்லாத காலத்திலும் விடாப்பிடியாக எழுதியுள்ளார் டால்ஸ்டாய். ஒரு நாளுக்குப் பத்துமணி நேரம் என்பது அவருக்குச் சாதாரணமாக எழுதும் பழக்கமாக இருந்துள்ளது.

உழைப்பின் அருமையை, உழைப்பவர்களின் வேதனையை ஒரு காலத்தில் உணர்ந்து கொள்கிறார் டால்ஸ்டாய். பொதுவாக நான்கு மணி நேரங்கள் குதிரைச் சவாரி செய்பவராகவும், தனது தோட்டத்து வேலைகளை மேற்பார்வை செய்பவராகவும், நாவல்கள் எழுதுபவராகவும் இவரது நாட்கள் நகர்ந்தன. இந்தச் சூழலில், இவரது பார்வை ஏழை விவசாயிகளின் பக்கம் திரும்பியது.

ஒரு சமயம் பிரான்ஸ் சென்றிருந்த போது புகழ்பெற்ற எழுத்தாளர், விக்டர் ஹியூகோவைச் சந்தித்தார் டால்ஸ்டாய். “அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பற்றிக் கவலைப்படுவது தான் ஒரு எழுத்தாளனின் வேலை” என்று அவர் டால்ஸ்டாயிடம் சொன்ன கூற்று, டால்ஸ்டாயை மாற்றியது. தன் சொந்தப் பண்ணைக்குத் திரும்பிய அவர். கல்வி மற்றும் ஏழைகளின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் சிந்தித்தார். தனது பண்ணைத் தோட்டத்திலேயே தன்னையொத்த சிந்தனை கொண்டோரை சேர்த்துக் கொண்டு நற்காரியங்களில்  ஈடுபட்டார்.

வயலுக்குச் சென்று அன்றாடம் கடுமையாக உழைத்தார். இவரது பண்ணையிலேயே ஐநூறுக்கும் மேற்பட்டோர், வேலை செய்தாலும், இவரும் அங்கு உழைத்தார். ‘உழைப்பதே மனித வாழ்வின் மேன்மை’ என்று எடுத்துரைத்தார். அங்கிருந்த விவசாயிகளின் பிள்ளைகளுக்காக ஒரு கல்விக் கூடத்தை நிறுவினார். கல்வி எதற்காக? கல்வி எப்படித் தரப்பட வேண்டும்? என்ற கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டு சில கட்டுரைகளையும் படைத்தார். பன்னிரண்டு இதழ்களையும் கல்வி சார்ந்து வெளியிட்டார். ‘கல்வியின் முன்னேற்றம் மற்றும் வரையறை’ என்ற தலைப்பில் இவை அமைந்தன.

மதமும், மகளும், மாற்றமும்

ஏழைகளின் வறுமை நிலை கண்டு வருந்திய டால்ஸ்டாய் ஆன்மீகம் பற்றி நிறைய வாசித்தார். கிறிஸ்தவ மதத்தின் விவிலியத்தை நேசித்தார். மதப் போதனைகளை விடச் சிறந்த பல கருத்துகள் விவிலியத்தில் குழந்தைகளுக்கு இருப்பதாகச் சொன்னார். இயேசுவை ஒரு இறைத் தூதராக மட்டுமே ஏற்றுக் கொண்டார். கடவுள் இருக்கிறார் என்றும், அவரே உலகைப் காப்பவர் என்றும் எழுதினார். அதே சமயம், மதம் மற்றும் கடவுள் சார்ந்த சரியான நிலைப்பாட்டை அவர் இறுதி வரை வெளியிடவில்லை. பல நூல்களையும் ஆன்மீகம் சார்ந்து எழுதினார்.

டால்ஸ்டாய் தன் பிள்ளைகளை நேசித்தார். அவர்களும் அவரை நேசித்தார்கள். ஆனால் அவரது மகள் மாஷா மீது அதிக அன்பு கொண்டிருந்தார். காரணம், அவள் எப்போதும் டால்ஸ்டாயுடன் இருந்து உதவி வந்தாள். சுத்தமான ஆடை அணிவதுடன், அறிவானவளாகவும், அன்பானவளாகவும் அவள் விளங்கினாள். எனவே, அவளைத் தன் அருகில் வைத்துக் கொள்ள டால்ஸ்டாய் விரும்பினார். ஆனால், அவளுக்குக் காசநோய் இருந்தது. டால்ஸ்டாயின் மனதில் தன் மகள் தனக்கு முன் இறந்துவிடக் கூடாது என்ற கவலை உள்ளத்தில் உறைந்து கிடந்தது. இதற்காக அவர் தொடர்ந்து பிரார்த்தித்து வந்தார். ஆனால், அவள் இறக்க நேரிட்டது. அவள் நோய்வாய்பட்ட சமயத்தில் நன்கு கவனித்துக் கொண்டார். இறப்புச் சடங்கில் எல்லோரும் அழுதார்கள். டால்ஸ்டாய் அழவில்லை.

ஆனால், சில நாட்கள் கழித்து ஒரு நண்பர் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்தார். ‘கடவுள் பெற்றோர்கள் முன்னிலையில் பிள்ளைகளை எடுத்துக் கொள்வது கொடுமையிலும் கொடுமை’ என்று கூறியதும் துக்கம் தாளாமல் கதறி அழுதார். தனக்கும் இக்கேள்விக்கான விடைகிடைக்கவில்லை, இந்த வாழ்க்கையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தன் வேதனைகளை டால்ஸ்டாய் பகிர்ந்து கொண்டார். இன்றும் சிலர் தாங்கள் அதிகம் நேசிப்பவர்கள் பிரிகின்ற போது அமைதிகாப்பதும், பின்பு உடைந்து அழுவதும் நடைபெறவே செய்கின்றது. இதுவும் சோகத்தின், ஆழ்ந்த வேதனையின் ஒரு வெளிப்பாடு தான்.

டுகோபார்ஸ் மக்கள் மேல் அன்பு

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் வசித்து வந்த ஒரு குழுவினரே டுகோபார்ஸ் என்னும் கூட்டத்தினர். ஏறக்குறைய 40,000  கும்பங்கள் ஆங்காங்கே சிறு சிறு கிராமங்களில் வசித்துவந்தனர். இவர்கள் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல், மனமே கோயில் என்று கூறி வாழ்ந்தவர்கள்.

இவர்களது தெருக்கள் அகலமாகவும், வீடுகள் மண்ணாலும் கட்டப்பட்டவை. இவர்கள் யாரையும் துன்புறுத்த மாட்டார்கள், யாருடனும் சண்டை போடமாட்டார்கள். மற்றவர்கள் எவ்வளவு அடித்தாலும் வாங்கிக் கொள்வார்கள். போர் செய்வதும், இராணுவமும் இவர்களுக்குப் பிடிக்காது. யாரும் ராணுவத்தில் சேர மாட்டார்கள்.

இவர்கள் சைவ உணவு மட்டுமே உண்டார்கள். முட்டை சாப்பிடுவதைக் கூடப் பாவம் என்று எண்ணினார்கள். பாலை குடிக்க மாட்டார்கள். பால், கன்றுகளுக்கே உரியது என்று விட்டுவிட்டார்கள். இவர்கள் மிகவும் கருணை கொண்டவர்கள். தங்களது தேவைகள் யாவற்றையும் இவர்களே செய்து கொண்டார்கள்.

தங்களை நிர்வகிக்கக் குழுக்களை அமைத்துக் கொண்டார்கள். வயதானவர்களை சமுதாயமே பார்த்துக்கொள்ள வேண்டும். தங்களுக்குள்ளே சடங்குகள், வழிபாடுகள் என்று வித்தியாசமாக வாழ்ந்து வந்தார்கள். கடும் உழைப்பாளிகள், விவசாயம் செய்வதில் தேர்ந்தவர்கள் என்பதால் அரசை இவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஒரு காலக் கட்டத்தில் அரசும் இவர்களைக் கண்டு கொள்ளாததால் வரி தர மறுத்தார்கள். இராணுவத்தையும் புறக்கணித்தார்கள். இதனால் கோபம் கொண்ட ரஷ்ய அரசு இராணுவம் கொண்டு இவர்களைத் தாக்கியது. இராணுவத்தில் சேர வற்புறுத்தியது பெண்களைக்  கூட அடித்துத் துன்புறுத்தினார்கள். இவர்கள் எல்லா அடியையும் வாங்கிக் கொண்டார்கள். ஆனால், திருப்பி யாரையும் தாக்கவில்லை.

இப்படி ஒரு நாள் ஒரு ரஷ்ய வீரன் ஒரு டுகோபார்ஸ் இளைஞனைப்‌ பல மணி நேரம் அடித்தானாம். பின்பு களைத்துவிட்டானாம். அப்போது அந்த டுகோபார்ஸ் இளைஞன் இவனிடம் “நீ ரொம்ப களைத்துப் போய் விட்டாய், சென்று எங்கள் வீட்டில் உணவு சாப்பிட்டு வந்து என்னை அடி”என்றானாம். அந்த அளவிற்கு அஹிம்சையைக் கடைப்பிடித்தவர்கள் இந்த மக்கள். அதாவது, மனிதர்கள் நாம் ஒருவர் ஒருவரோடு சண்டை போடக்கூடாது என்பது இவர்களது கொள்கை.

 இப்படித்  துன்புறுத்தியும் பணியாததால் ரஷ்ய அரசு இவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது. இந்தச் சம்பவங்களையல்லாம் கேட்ட டால்ஸ்டாய் வேதனைப் பட்டார். ஆனால், இந்த மக்களின் வாழ்க்கை மற்றும் கொள்கைகளைக் கண்டு மகிழ்ந்தார், இவர்களைக் கொண்டாடினார். தான் மனதில் நினைத்ததைப் போல நல்ல மனிதர்களாக இவர்கள் வாழ்கின்றார்கள் என்று புகழ்ந்தார். இவர்களில் சிலர் அரசிடம் இருந்து தப்பித்து இவரது பண்ணையில் அடைக்கலம் புகுந்தனர்.

இவர்கள் மேல் இரக்கம் கொண்ட டால்ஸ்டாய், அரசிடம் பேசினார். இவர்களை கனடாவுக்கு அனுப்ப உதவினார். இதற்காகவே மிகவும் கஷ்டப்பட்டு ‘புத்துயிர்ப்பு’ (Resurrection) என்ற நாவலை எழுதினார். இந்த நாவல் ஒரு பெண்ணின் காதல் கதையைச் சொல்லியது. ‌ இந்த நாவலுக்காகப் பெற்ற வருமானம் மூலம் இந்த டுகோபார்ஸ் மக்களை கப்பலேற்றி கனடாவுக்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு உதவ தனது மகனையும் அவர்களோடு அனுப்பினார். இப்போதும் இந்த மக்கள் கனடாவில் உள்ளார்கள். இவர்கள் உள்ள இடத்திலெல்லாம் டால்ஸ்டாய்க்குச் சிலை வைத்துக் கொண்டாடுகின்றார்கள். அவரது ‘புத்துயிர்ப்பு’ நூலையும் தினம் தினம் படிக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது.

தங்களை‌ தாக்குபவர்களைத் திருப்பித் தாக்காமல் அதை ஏற்பது, தங்கள் தேவைகளைத்  தாங்களே நிறைவேற்றிக் கொள்வது, பகிர்ந்துண்டு குழுவாக வாழ்வது என்பது டுகோபார்ஸ் மக்களின் பழக்கமாக இருந்ததை டால்ஸ்டாய் மூலம் மகாத்மா காந்தி அறிந்திருந்தார். இந்த மக்கள் மற்றும் டால்ஸ்டாயின் நட்பே காந்திஜி அஹிம்சை வழியைப் பின்பற்றக் காரணமானது. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே டால்ஸ்டாயிடம் நட்பு கொண்ட காரணத்தால் அங்கு அவர் நடத்திய பள்ளிக்கு ‘டால்ஸ்டாய் பள்ளி’ என்று பெயரிட்டு இருந்தார். சில திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தன் கடிதத்தில் டால்ஸ்டாய் காந்தியடிகளுக்கு ஒரு சமயம் அனுப்பியிருந்தார். அவற்றை வாசித்து நேசித்த காந்தியடிகள் அதன் பிறகு திறக்குறளைப் பற்றித் தெரிந்து கொண்டார். இப்படி மகாத்மா காந்தியடிகளின் வாழ்விலும் தாக்கத்தை உருவாக்கியவர் டால்ஸ்டாய்.

டால்ஸ்டாய் பின்னாளில் எழுதிய ஹட்ஜி முராத் மற்றும் இவான் ‌ இலிச்சின் மரணம் என்ற இரண்டு  நாவல்களும்  போற்றப்பட்டன. டால்ஸ்டாய் சந்தித்த விவசாயிகள் அவரிடம் அதிகத் தாக்கத்தை உருவாக்கியிருந்தார்கள். தனது புத்தகங்களை யார் வேண்டுமானாலும் பதிப்பித்துக் கொள்ளலாம் என்று டால்ஸ்டாய் கூறிவிட்டதால், புத்தகங்கள் மூலம் கிடைக்கும் லாபம் குறைந்ததை அவரது மனைவி சோபியா எண்ணி வருத்தப்பட்டார். தனது இறுதி காலத்தில் தனது சொத்துகளை எல்லாம் ஏழை விவசாயிகளுக்கு எழுதி வைத்துவிட வேண்டும் என்று டால்ஸ்டாய் திட்டமிட்டார். இதனால் தனது பிள்ளைகளுக்குப் பாரம்பரிய சொத்துகள் போய்விடுமே என்று அவரது மனைவி எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் டால்ஸ்டாயின் இறுதிநாட்களில் அவருக்கும் மனைவிக்குமிடையில் மோதல்கள் நடந்தன.

இச்சூழலில் அவர் நோய்வாய்ப்பட்டார், அவரை வீட்டில் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். ஆயினும் சில சமயம் ஞாபக மறதியால் அவதிப்பட்டார், தனது மரணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு விவசாயி “வாழ்க்கையில் எல்லாம் செய்த முடித்த பின்பு ஒரு மனிதன் ஏன் குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டு வாழ வேண்டும்”என்று கூறியதைக் கேட்டதும், வீட்டை விட்டுக் கிளம்பி எங்கோ இரயிலில் பயணித்தார். ஆனால், அவரால் வெகுதூரம் பயணிக்க முடியவில்லை. எனவே, சின்னஞ்சிறிய ‘அஸ்தபோவ்’ ரயில் நிலையத்தில் இறங்கினார்.‌ அங்கிருந்த ஒரு அறையில் தான் ஆழ்ந்த தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அங்கே பத்திரிக்கையாளர்கள், அவரது வாசகர்கள், புகைப்படக்காரர்கள் என்று பலரும் சூழ்ந்து கொண்டனர். ஆனால், அப்போதும் அவர் தன் மனைவியைச் சந்திக்க விரும்பவில்லை. தன் மனைவி சொத்துகள் பற்றித் தன்னிடம் எதுவும் கேட்பாரோ என்று எண்ணியிருக்கலாம். ஆனால், அவர் எல்லாவற்றையும், எல்லோருக்கும் தந்து விட்டுச் செல்லத் தயாரானார். தனது 82 ஆவது வயதில், இந்த அற்புதமான எழுத்தாளர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார். இப்படி மரணித்த டால்ஸ்டாயின் கடைசி நாட்கள் பற்றி ‘Departure of a Grand old Man’ என்ற மௌனப் படமும், ‘The Last Station’ என்ற திரைப்படம் அஸ்தபோவ் ரயில் நிலையத்தைச் சார்ந்தும் எடுக்கப்பட்டது.

அவரது விருப்பப்படியே அவரது பண்ணையிலிருந்த ஆப்பிள் தோட்டத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டது. எழுத்துகள் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்த ஒரு மாபெரும் மனிதர் இவ்வுலகைக் கடந்து சென்றார். இவரது நாவல்களுக்காகவும், இவரது மனிதநேய சேவைகளுக்காகவும் 1901- ஆம் ஆண்டுமுதல் 1909-ஆம் ஆண்டு வரை நோபல் பரிசுக்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அது வழங்கப்படவில்லை. ஆயினும் பல ஆண்டுகள் அவருக்கு வழங்க வேண்டும் என்ற விண்ணப்பங்கள் உலக அளவில் பரிந்துரைக்கப்பட்டதே பெருமைக்குரியதாகும்.   

உலகின் தலைசிறந்த நாவலாசிரியர்கள் வரிசையிலும், மனித நேயமிக்க எழுத்தாளர்கள் வரிசையிலும் டால்ஸ்டாய் முன்னிலையில் நிற்கின்றார். ஆன்டன் செகாவ், தாஸ்தொவெஸ்கி மற்றும் கார்க்கி ஆகிய புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களும் இவரைப் புகழ்கிறார்கள். “இலக்கியம் டால்ஸ்டாய் கையில் உள்ளபோது அது எல்லோருக்கும் பயன்படுகின்றது” என்று செகாவ் பாராட்டுகின்றார். ஒரு நாள் ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு மனிதனும், நாயும் உணவுக்காகப் போராடுவதைக் கண்ட டால்ஸ்டாய், தன் வீட்டிற்கு வந்து இருந்த தானியங்களையெல்லாம் ஏழை மக்களுக்கு வாரி வழங்கினார். இதைக் கண்ட செகாவ் எல்லா இடங்களிலும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களைக் காத்தார்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளையும், வாழ்க்கைத் துன்பங்களையும், தங்கள் எழுத்துகள், கதைகள், நாவல்கள் மூலம் உலகிற்குக் காட்டினார்கள். பெரும் பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களின் துயரங்களை உரக்கச் சொன்ன இந்த எழுத்துகளால் தான் ஒவ்வொரு நாட்டிலும் மனிதம் துளிர்த்தது. இன்றும் கூட பேனாக்களின் வலிமையால் தான் அரசுகள் மக்களை நோக்கிச் செல்கின்றன. டால்ஸ்டாய் என்ற மாமனிதர்‌ இந்தப் பயணத்தில் மிகச்சிறந்த பங்களிப்பைத் தந்து, எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக விளங்கியுள்ளார். உலகம் உள்ளவரை அவரது எழுத்தும், சிந்தனையும், நினைவும் இருக்கும் என்பதே மகிழ்வான உண்மையாகும்.

 

லியோ டால்ஸ்டாய் பொன்மொழிகள்

  • நான் புரிந்து கொண்ட அனைத்தும், நான் நேசிப்பதால் மட்டுமே புரிந்து கொள்கிறேன்.
  • போர் மிகவும் அநியாயமானது மற்றும் அசிங்கமானது. அதை நடத்தும் அனைவருமே மனசாட்சியின் குரலைத் தங்களுக்குள் ஆய்ந்து பார்க்க வேண்டும்.
  • எல்லா மக்களும் தங்கள் மீதுள்ள அன்பினால் மட்டுமே வாழ்கின்றார்கள், அக்கறையினால் அல்ல.
  • துன்பம் மற்றும் மரணத்தைத் தரும் அச்சுறுத்தலின் கீழ், சிலர் தாங்கள் செய்ய விரும்பாததைச் செய்யச் சொல்வதில் எல்லாவிதமான வன்முறைகளும் அடங்கியிருக்கின்றன.
  • நம்பிக்கை என்பது மனிதனை வாழவைக்கும் சக்தியாகும். இந்த நம்பிக்கை உணர்வு மூலம் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளாமல் தொடர்ந்து வாழ்கின்றான்.
  • ஒரு கலைப் படைப்பு நல்லது. ஆனால், அது பெரும்பாலான ஆண்களுக்குப் புரியாது என்று சொல்வது, ஒரு உணவு நல்லது ஆனால் அது பெரும்பாலான மக்களால் சாப்பிட முடியாதது என்று கூறுவதைப் போன்றதாகும்.
  • இரண்டு சக்திவாய்ந்த போர்வீரர்கள் இவ்வுலகில் உள்ளார்கள். ஒன்று நேரம், மற்றொன்று பொறுமை.
  • எல்லோரும் இந்த உலகை மாற்ற நினைக்கின்றார்கள். ஆனால், யாரும் தன்னை மாற்ற நினைப்பதில்லை.
  • இசை என்பது நமது உணர்ச்சிகளின் சுருக்கெழுத்தாகும்.
  • நீங்கள் எதிலும் முழுமையைத் தேடினால், ஒருபோதும் திருப்தியடைய மாட்டீர்கள்.
  • மனிதத் தலைகள் இருக்கும் அளவுக்கு இதயங்கள் இதமாக இருந்தால், இந்த உலகில் எத்தனைவிதமான அன்பு கிடைக்கும்!
  • நமக்கு எதுவுமே தெரியாது என்பதை மட்டுமே நாம் அறிந்து கொள்ள முடியும். இதுவே மனித ஞானத்தின் உயர்ந்த அளவாகும்.
  • ஒருவர் உணர்வதை முழுமையாக வேறு ஒருவரிடம் சொல்வது சாத்தியமில்லை. ஆம், ஒவ்வொருவரின் உணர்தலும் மாறுபட்டது.
  • நீங்கள் ஒருவரை நேசிக்கும் போது, அந்த நபராகவே நேசியுங்கள். நீங்கள் விரும்பும் நபராக எண்ணி நேசிக்காதீர்கள்.
  • ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நம்பிக்கைகளுக்காகப் போராடினால் போர் இருக்காது.
  • சலிப்பு, ஆசைகளினால் வரும் மேலான ஆசையாகும்.
  • மகிழ்ச்சி என்பது வெளிப்புற விஷயங்களைச் சார்ந்தது அல்ல. ஆனால், நாம் அவற்றைப் பார்க்கும் விதத்தைப் பொறுத்தது.
  • எளிமை, நன்மை மற்றும் உண்மை இல்லாத இடத்தில் மகத்துவம் இல்லை.
  • யாருக்கும் தெரியாத வகையில் நல்லது செய்வது மிகவும் நல்லது.
  • சிறிய மாற்றங்கள் நிகழும் போது தான் உண்மையான வாழ்க்கை வாழ்கிறது.
  • ஒரு எதிரியை ஒழிக்க வேண்டுமானல், அந்த எதிரியை நேசிக்க வேண்டும்.
  • மரணத்துக்கு அஞ்சும் வரை மனிதன் எதையும் தன்வசம் வைத்திருக்க முடியாது. ஆனால், பயப்படாதவனுக்கு எல்லாம் சொந்தம். துன்பம் இல்லாவிட்டால், மனிதன் தன் எல்லையை அறியமாட்டான். அவன் தன்னை அறியமாட்டான்.
  • நான் யார்? நான் ஏன் இங்கு இருக்கின்றேன், என்பது தெரியாமல் வாழ்க்கை சாத்தியமற்றது.
  • நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அன்போடு இருங்கள்.