வாழ்வியல் திறன்கள் 81.

முனைவர். திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்

உலகில் தன்னை அனைவரும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொண்டால் அவர்களை இசைவானவர்கள் என்றும். எதிராக நடக்கும் போது உலகமே மிக மோசமானது என்றும் பழிக்கக்கூடிய மனப்பான்மை நம்மிடையே பலருக்கும் இருக்கும் எனலாம். நம்மை அனைவரும் உணர்ந்துகொண்டு அதற்கேற்றாற்போல நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற போது, நாமும் பிறரை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பதேயில்லை. அண்மையில் செய்தித்தாளில் வெளிவந்த செய்திகளில் பல தற்கொலைகள் பற்றியன,

நீட் தேர்வு குறித்த அச்சத்தில் மாணவர் மற்றும் மாணவிகள் தற்கொலை

விடுப்பு தரவில்லை என் மன உளைச்சலில் அரசுத்துறை ஊழியர்கள் தற்கொலை

காதல் கைகூடாது என்று நினைத்து காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை

நோயின் கடுமையால் தற்கொலை

நிதி நெருக்கடியால் தற்கொலை

அலைபேசியை பயன்படுத்தியதை கண்டித்ததால் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை.

செப்டம்பர் 10-னை உலக தற்கொலைத் தினம் என்றே சுட்டுகிறார்கள். இதுபோன்று பல துயரச் செய்திகளைப் படிக்கும்போது மனம் வருந்துகின்றது. “அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது” என்று ஔவைப்பாட்டி மானிடப்பிறப்பின் மகத்துவத்தை உறுதிசெய்த பின்பும், வாழும் வழிமுறைகளுக்கு விழையாது, உயிருக்கு இறுதிகாணும் பேதைமையை என்ன என்பது?. “வீழ்வதெல்லாம் எழுவதற்கே!” என்றுணரும் மேதைமை மனப்பான்மையை அல்லவா அனைவரும் உளதாக்கிக்கொள்ள வேண்டும். தற்கொலை முடிவெடுப்பவர்கள், சற்று உடன்மறையாகச் சிந்தித்தால் அவர்களால் அந்த விபரீத முடிவிலிருந்து விலகி வித்தகம் விளைப்பது எளிதாகும். ஆனால், அவர்கள் மாறாக, கழிவிரக்கத்தால் தங்களின் பெற்றற்கரிய உயிருக்கு இறுதி சேர்த்துவிடுகிறார்கள். தற்கொலை செய்துகொள்பவர்கள், வெறும் உயிரை மட்டும் மாய்த்துக்கொள்வதில்லை, அவர்களின், நம்பிக்கை, எதிர்காலம், வளர்ச்சி, சுற்றியுள்ள நல்லுறவுகள், நட்புகள், மேலும் படைப்பிற்கு எதிரான செயல்பாடு என்றவழி அனைத்து ஆக்கங்களையும் புதைத்துவிட்டுத்தான் முடிவெடுக்கிறார்கள். தற்கொலை எண்ணத்திற்கு முன்பு, சற்று பொறுமையாக அமர்ந்து ஏன்? இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம், என்று சிந்திக்கும் போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும்,

நம்புதற்குரிய நல்ல நண்பரைச் சந்தித்து மனக்குமுறல்களைக் கூறலாம்

சிறந்த உளவியலாளரை அணுகலாம்

சிறந்த தன்னூக்க நூல்களை வாசிக்கலாம்

உடல் நலிவுற்ற நிலையிலும் உரமுடைய உள்ளத்தால் உலக வரலாற்றில் தடம் பதித்தவர்களின் வரலாறுகளை அறியலாம்

மனவமைதிக்கான வழிமுறைகளைத் தொடர்ந்து செய்யலாம்

கடந்த காலத்தில் சாதித்த சிறு வெற்றிகளை நினைவுகூறலாம்

ஏதேனும் ஒரு சமுதாயப் பணியை மனம் விரும்பிச் செய்தல்

என்றாக மாற்று வழிகளில் பயணிக்கத் தொடங்கும் போது மனம் இலகுவாகிறது. மேலும் வாழ்வதற்குண்டான வழிமுறைகள் தெளிவாகின்றது. எல்லவற்றிற்கும் கூடுதலாக “தன்மதிப்பினை” உணர்ந்து செயல்படும்போது தன்னம்பிக்கை இயல்பாகவே பெருகிடும் நிலையினை உணரமுடிகின்றது. தன்மதிப்பு உணர் மனிதர்கள், பிறரின் எண்ணத் தாக்கங்களுக்கு ஆளாவதில்லை, மாறாக,

தங்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்கிறார்கள்

தங்களை வலிமைப்படுத்திக் கொள்ளும் நுட்பங்களை அறிகின்றார்கள்

விடாமுயற்சியை முதன்மையாக்கு கின்றார்கள்

பின்னடைவுகளில் சிதையாது, மாற்று வழிகளைக் காண்கின்றார்கள்

பிறரின் இகழ்ச்சிகளில் இதயமிழக்காது தொடர்ந்து பயணிக்கின்றார்கள்

சுயநலப் போக்குகளிலிருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள்

தன்னையே விரும்பும் மனப் பண்பாட்டை வளர்த்துக் கொள்கின்றார்கள்.

இவ்வாறாக தன்மதிப்பு உணரப்படும்போது, எந்தச் சூழலையும் நேர்கொள்ளும் அஞ்சாமை இயல்பாகிறது. எவ்விதச் சமுதாய, தனிமனிதத் தாக்குதல்களுக்கும் உள்ளாகாத மனச்சோர்வு நிலை என்பது
உறுதியாகின்றது.

“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

“உலகம் பிறந்தது எனக்காக”

என்ற திரைப்பாடல் வரிகளும் சோர்ந்த மனங்களுக்கு வீறுதருவதாக உள்ளதை உணரமுடிகின்றது. ஒருமுறை வாழ்க்கையில், “இறுதி” இயல்பாக நேரும் வரை “எதனையும் நேர்கொள்வோம் என்ற துணிந்த மனநிலையே” அனைத்துவகை மனப்போராட்டங்களுக்கும் நிலையான தீர்வாக அமைவதை அறியமுடிகின்றது. நமக்காக பிறர் வருந்தலாம், உதவலாம், ஆனால் நமக்கான வாழ்க்கையை நாம் தான் வாழ்ந்தாக வேண்டும். எப்படி யாரிடமும் எதனையும் எதிர்பார்க்காது, காற்றினை சுவாசிக்கிறமோ? உண்ணுகின்றோமோ? உறங்குகின்றோமோ?. அதுபோன்று, தீவிரமான எண்ணமிருந்து, எஃகனைய உறுதியுடன் செயல்பாடும் அமைந்துவிட்டால் இவ்வையத்தில் அனைத்தும் சாத்தியமாகும். எனவே அசாத்தியப் பொறுமையுடனும், அசவாத முயற்சியுடனும் வினைபுரிபவர்கள், சோகச்சூழல்களைக்கூட சொர்க்கச் சூழல்களாக மடைமாற்றமாக்கித் தனக்கும் சார்ந்த சமுதாயத்திற்கும் பயனுடைய வாழ்க்கையை இறுதிவரை வாழ்கிறார்கள்.

உள்ளம் உடைமை உடைமை” (குறள்.592) என்பார் நம் திருவள்ளுவர், எனவே உடைமையாக்கவேண்டிய உறுதிப்பொருள் திட்பமான எண்ணங்களும், உறுதியகலா செயல்பாடுகளுயேயாகும். எனவே வாழ்ந்துகாட்டுவோம்!