உறவு – 38
– பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தூங்கு முகத்தவரின் 5 பண்புகளை இது வரைப் பார்த்தோம். இன்று இன்னும் சில பண்புகளைப் பார்ப்போம்.
- பேச்சில் தெளிவு, ஒழுங்கு, நேர்மறை, சமநிலை காத்தல் உண்டு.
தூங்கு முகத்தவரின் பேச்சில் சிரிமுகத்தினரின் வேகமோ, அழுமுகத்தினரின் சோகமோ, கடுமுகத்தவரின் தீப்பொறியோ பார்க்க முடியாது. மாறாக இவர்களது பேச்சில் தெளிவு (Clarity) ஒழுங்கு (Order) நேர்மறை (Positive), சமநிலை தவறாமை (Measured) இருக்கும். இவர்கள் எங்கு உரையாற்றினாலும், உரையை நன்கு தயார் செய்து திட்டமிட்டு கொடுப்பார்கள். வரம்பு மீறிய பேச்சு, சர்ச்சைக்குரிய பேச்சு இவர்கள் நாவில் எழாது, வாயில் வராது கேட்போர் பயனடையும் படி தேவைக்கு ஏற்றவாறு வளர்ச்சியடையச் செய்யும் நல்ல வார்த்தைகளாக இருக்கும். அதாவது தேவையற்ற தேவைக்கு அதிகமான எந்த வார்த்தையையும் இவர்களது வாய் உதிர்க்காது. இதனால் சில வேளைகளில் இவர்களது மேடைப்பேச்சு விரும்பாதவர்களின் கவனத்தைக் கூட ஈர்க்கலாம்.
நிகழ்ச்சி
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். என அழைக்கப்படும் எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் ஒருமுறை ஓர் இரவு நேரக் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருந்தார். வழக்கமாக சிறப்பு விருந்தினர்கள் கடைசியில் நான் பேசுவார்கள். எம்.ஜி.ஆரும் மற்ற நான்கு பேச்சாளர்கள் பேசி முடிக்கக் காத்திருந்தார். நேரமாகிக் கொண்டிருந்ததால் கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தினரில் பலர் துண்டை உதறிவிட்டு எழுந்து சென்று கொண்டிருந்தனர்.
இதை மேடையிலிருந்து கவனித்த எம்.ஜி.ஆர் அவர்கள், மைக்கைப் பிடித்து “அன்பார்ந்த மக்களே, நீங்கள் ஒருவேளை என்னைப் பார்க்க வந்திருந்தால் என்னைப்பார்த்த உடனே போயிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி போகவில்லை. ஆகவே எனது பேச்சைக் கேட்கத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தீர்கள். நீங்கள் பொறுமை சாலிகள், எனது பேச்சை கேட்க ஏக்கமாய் இருக்கிறீர்கள் எனத் தெரியும். எனவே, இன்று உங்களோடு உரையாட வந்துள்ளேன். தயவு செய்து அமர்ந்து என் பேச்சைக் கேளுங்கள், என் இரத்தத்தின் இரத்தங்களே, சற்று அமர்ந்து செல்லுங்கள்” என்று பேசியதுதான் தாமதம், எழுந்த மக்கள் அப்படியே அமர்ந்து அவரது உரைமுடிவதுவரை அங்கிருந்து அகலவில்லை.
எம்.ஜி.ஆர். அவர்களின் இத்தகைய நாவன்மைதான் அவர் அரசியல் களத்தில் ஜொலிக்கவும் பின்னால் தமிழக முதல்வராக வருவதற்கும் பேருதவியாக இருந்தது. அந்தக் குறிப்பிட்ட கூட்டத்திலே எம்.ஜி.ஆர் அவர்கள் பேசிய விதத்தைப் பத்திரிகைகள் ஜூலியஸ் சீசரின் உடலை வைத்துக்கொண்டு அவரது நண்பர் மார்க் ஆன்றணி தனது பேச்சின் மூலம் எப்படி ரோமானிய மக்களை தனது பக்கம் ஈர்த்துக் கொண்டாரோ அப்படி எம்.ஜி.ஆர். செய்துவிட்டதாக எழுதின. தூங்கு முகத்தவரின் இந்த நாவன்மை அவர்களது பலமாகும். ஏற்கனவே கூறியது போல இவர்களது உரை நன்கு ஆய்வுசெய்யப்பட்ட, அறிவியல்பூர்வமான சொந்த முயற்சியில் உருவான ஒன்று என்பதில் அதில் குறை காண்பது அரிது.
- வெது வெதுப்பற்ற இதயம்
தூங்கு முகத்தவரின் முகம் மட்டும் தூங்கி வழிவதில்லை. மாறாக அவர்களது இதயமும்தான் தூங்கி வழியும். யாருடன் பழகினாலும் இவர்கள் அந்த நட்பில் பெரும் ஆர்வமோ உற்சாகமே காட்ட மாட்டார்கள். இதனால் இவர்கள் அதிக நண்பர்களை இழக்க நேரிடலாம். இதை, இந்த உற்சாகமின்மையை இவர்களது இயல்பு என நாம் புரியாவிட்டால் இவர்களோடு உறவு கொள்ள முடியாது.
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திலுள்ள மக்களை நான் பார்த்திருக்கின்றேன். இவர்களது இல்லத்தில் நண்பர்கள் ஏன் நெருங்கிய உறவினர்கள் வந்தால் கூட ம்… வந்திட்டியா…!” என்று கண்டும் காணாமல் இருப்பதுபோன்று நடந்து கொள்வதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களில் ஒருவர் தனது நண்பரின் உறவினரின் இல்லம் சென்றால் முதன் முதலாக “வாங்க” என்ற வார்த்தையோடு உபசரித்து உள்ளே அழைத்துச் செல்வதைப் பார்த்திருக்கின்றேன்.
- உற்சாகமின்மை
ஏறக்குறைய சற்றுமுன்பார்த்த பண்பைப் போன்றதுதான் இது. இதயத்தின் நிறைவுதானே செயலாக வெளிப்படும். இதயத்தில் வெது வெதுப்பின்மை இருப்பதால் தூங்கு முகத்தவர். எதிலும் பற்றில்லாத உற்சாகமில்லாதவர்களாய் இருப்பார்கள். திருமணத்தில் கூட இவர்களுக்கு நாட்டமிராது. அதனால் இவர்களில் பலர் காலமெல்லாம் கட்டை பிரம்மச் சாரிகளாகவே இருக்க வாய்ப்புண்டு இப்படிப்பட்டவர்கள் குடும்ப வாழ்வு சிக்கல்கள் நிறைந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.
நாங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்றபோது அங்கு. அவர்கள் முன்பின் தெரியாதவர்களைக் கூட, முதன்முதலில் பார்க்கும் போது “ஹாய் குட் மார்னிங்” எனக்கூறி வாழ்த்துவதைப் பார்த்தேன். நானே முதன் முதலில் எனது உறவினரின் வீட்டின் வெளியே காலையில் நின்றபோது, காலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வந்த பஸ் டிரைவர் என்னைப்பார்த்து ‘ஹாய்’ சொல்லி கை அசைத்த போது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து சென்றபோது இதற்கு நேர் மாறான செயல்களைப் பார்த்தேன். அங்கு நம்மை யாரும் கண்டு கொள்வதில்லை. வழியில் பார்த்தாலும் வீட்டில் கண்டாலும் நம்மை யாரும் பார்த்ததாக காட்டிக் கொள்வதில்லை. இதற்கு நமது நிறம் காரணமா? எனத் தெரியவில்லை. ஆனால், ஒருவேளை 300 வருடங்கள் நம்மை அடிமைப்படுத்திவைத் திருந்ததால் நம்மைவிட அவர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என நினைப்பதனால் இப்படி நட்பு கொள்ள தயங்குவதாக இருக்கலாம். இன்னும் அவர்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போதே உணர்ச்சிகளை வெளிக்காட்டும்போதே உணர்ச்சிகளை வெளிக்காட்டக் கூடாது என பெற்றோராலும் ஆசிரியர்களாலும் பயிற்றுவிக்கப்படுவதாலும் இவ்வாறு அவர்கள் செயல்படலாம். தூங்குமுகத்தவரின் முக்கிய பண்புகளில் ஒன்று இந்த
உற்சாகமின்மையாகும்.