இளைஞர் உலகம்

-டாக்டர். ஜாண் பி.நாயகம் எம்.டி

கல்வி, அறிவு, ஞானம் இவை மூன்றுமே நமது மூளையின் இயங்குத்திறனின் அடிப்படையிலேயே அமைகிறது. மூளை திறம்பட இயங்க குளுகோஸ் என்கிற மாவுச் சத்தும், ஆக்சிஜென் என்கிற பிராண வாயுவும் மிக மிக அவசியம் என்பதை ஏற்கெனவே கண்டோம்.

மாவுச் சத்து உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது. அதை மேம்படுத்தும் வழிமுறைகளைக் கடந்த இதழில் கண்டோம். இந்த இதழில், உடலில் பிராணவாயுவின் அளவை அதிகப்படுத்த உதவும் சில எளிய மூச்சுப் பயிற்சிகளைக் காணலாம்.

உயிர் மூச்சு

உயிரும் மூச்சும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குபவை. உயிர் உள்ளவரைதான் சுவாசம் நடைபெறும். மூச்சு நின்றுபோனால் உயிர் இயக்கமும்
நின்றுபோகும்.

உணவின்றி மூளையால் சில நாட்கள் இயங்க முடியும். பிராணவாயு இல்லாமற் போனால் எட்டு நிமிடங்களில் மூளைச் சாவு நிகழும்.

சுவாசம் என்பதை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம் – உள் சுவாசம், வெளி சுவாசம்.

வெளியிலிருந்து காற்றை நாசிகளின் வழியே உள்ளே இழுத்து, நுரையீரலில் கொண்டு நிரப்புவது உள்சுவாசம்.

நுரையீரலில் தேங்கி நிற்கும் காற்றை நாசிகளின் வழியே வெளியேற்றுவது வெளிசுவாசம்.

இந்த இரண்டுக்கும் இடையே மூச்சை சிறிது நேரம் நுரையீரலில் அடக்கி வைத்திருந்தால் அதன் பெயர் – கும்பகம்.

ஆரம்ப நிலைகளில் கும்பகம் வேண்டாம்.

எப்போது செய்வது?

மூச்சுப் பயிற்சிகள் செய்ய மிக உகந்த நேரம் அதிகாலை நேரம்தான்.

காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்தபின்னர் ஒரு கப் வெது வெதுப்பான நீர் அருந்திவிட்டு மூச்சுப் பயிற்சிகளைத் துவங்கவும்.

பிற வேளைகளில் செய்வதாக இருந்தால் உணவு அருந்தி குறைந்த பட்சம் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரே செய்ய வேண்டும்.

இடம்

திறந்தவெளியில் அமர்ந்து செய்வது மிகவும் சிறப்பு.

முடியாதவர்கள் ஒரு காற்றோட்டமான அறையில் அமர்ந்து செய்யலாம்.

அமரும் முறை

யோகாசனங்களில் ஏற்கெனவே பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யவும்.

மற்றவர்கள் தரையில் கால்களை மடித்து அமரலாம் அல்லது ஒரு நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம்.

எதில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் நேராக இருப்பது அவசியம்.

உடை

சற்றே தளர்வான உடைகளை அணிந்து சுவாசப் பயிற்சிகளைச் செய்யவும்.

ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் சுவாசப் பயிற்சிகளுக்குத் தடையாக இருக்கும்.

வயது

ஆறு வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் இந்த எளிய பயிற்சிகளைச் செய்யலாம்.

மாணவர்கள் மட்டுமின்றி, அனைவருமே இந்த பயிற்சிகளால் பலன் பெற முடியும்.

மூச்சுப் பயிற்சி எண்- 1

அனுலோமா – விலோமா பயிற்சி

ஒரு நாசி வழியே மூச்சை உள்ளே இழுத்து, மறு நாசி வழியே வெளியே விடுவதுதான் இந்தப் பயிற்சியின் அடிப்படை.

ஒரு நாசியில் மூச்சை இழுக்கும் போது மறு நாசியை மூட வலது கை விரல்களைப் பயன்படுத்த வேண்டும்.

வலது கை ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் மடித்துக் கொள்ளுங்கள். வலது நாசியை மூட வலது பெருவிரலையும், இடது நாசியை மூட வலது மோதிர விரல், சிறு விரல் ஆகிய இரு விரல்களையும் உபயோகிக்கவும்.

செய்முறை

வலது பெருவிரலால் வலது நாசியை மூடிக்கொள்ளுங்கள்.

இடது நாசி வழியே ஆழமாக மூச்சை உள்ளே
இழுக்கவும்.

வலது மோதிர விரல், சிறு விரல் ஆகிய இரு விரல்களால் இடது நாசியை மூடவும்.

வலது பெரு விரலைத் தளர்த்தி, வலது நாசி வழியே மூச்சை வெளியே விடவும்.

அடுத்து, வலது நாசிவழியே மூச்சை ஆழமாக இழுத்து, இடது நாசி வழியே வெளியே விடவும்.

உள்மூச்சு – இடது நாசி, – வெளி மூச்சு – வலது நாசி, – உள் மூச்சு – வலது நாசி, – வெளி மூச்சு – இடது நாசி.

இவ்வாறு இடது நாசியில் துவங்கி, இடது நாசியில் முடிவது அனுலோமா-விலோமா ஒரு சுற்று,

இவ்வாறு நான்கு X நான்கு என மொத்தம் 16 சுற்றுகள் செய்ய வேண்டும்.

நான்கு சுற்றுகள் முடிந்தவுடன் தேவையென்றால் இரண்டு அல்லது மூன்று சாதாரண மூச்சுகள் விட்ட பின் அடுத்த சுற்றைத் துவங்கலாம்.

அதிக பட்சமாக ஐந்து நிமிடங்கள்
ஆகும்.

பலன்கள்

அதிகப் படியான பிராண சக்தி உடலுக்குக் கிடைக்கும்.

உடலிலுள்ள அனைத்து செல்களும், உள் உறுப்புக்களும் சுறுசுறுப்படையும். திறம்பட இயங்கும்.

சோம்பல் மறையும்.

ஆஸ்துமா போன்ற சுவாச மண்டல நோய்கள் குறையும்.

சைனஸ் நோய் கட்டுப்படும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நுரையீரல்களும் இதயமும் வலுவடையும்.

மூளைக்கும் அதிகப் படியான பிராண சக்தி கிடைப்பதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

வலது மூளையும், இடது மூளையும் இணைந்து செயல்படத் துவங்கும்.

உங்களிடம் இருக்கும் படைப்புத் திறன் வெளி வரும்.

நினைவாற்றல் பல மடங்கு பெருகும். கற்கும் திறன் பெருகும்.