முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்!

– ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

அந்தச் சிறுவன் தன் தாயிடம் சொன்ன முதல் வார்த்தை ‘பென்சில்’ என்பது தான். ஆம், பிறவியிலேயே ஓவியக் கலைக்காகத் தான் படைக்கப்பட்டதை உணர்த்தித் தன் வாழ்நாளெல்லாம் சாதனை ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருந்தவர் பாப்லோ பிக்காஸோ.

1881 – ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி டான் ஜோஸ் ரூயிஸ் மற்றும் மரியா பிக்காேஸா தம்பதிகளின் புதல்வராகப் பிறந்தவர் பாப்லோ பிக்காஸோ. “பிபாஸ்ஸோ பப்லோ டியாகோ ஜோஸ் பிரான்சிஸ்கோ டி பவுலா ஜுவான் நேபூமுக்கனோ மரியா டி லாஸ் ரெமிடியஸ் சிப்ரியானோ டி லா சாண்டிஸ்மா டிரினிடாட் மார்டைர் பெட்ரிஷியோ ரூயிஸ் ய பிக்காசோ” என்பது இவரது பெயர். தங்களது உறவினர்கள் மற்றும் புனிதர்களின் பெயரைச் சேர்த்து இப்படி நீளமாகப் பெயர் வைப்பது எசுப்பானியா நாட்டவர்களின் வழக்கமாகும். இத்தனை பெயர்களும் சேர்ந்து சாதிப்பதைத் தன் எண்ணமாகக் கொண்டோ, என்னவோ தன் வாழ்நாளில் 20,000-க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகளை வழங்கிச் சென்றுள்ளார் இந்தக் கலையுலக நாயகர்.

இவரது தந்தை ரூயிஸ் ஒரு ஓவியப் பேராசிரியர். இளம் வயதிலேயே தன் மகனுக்கு ஓவியங்களின் மீதும், கலைப் படைப்புகளின் மீதும் ஆர்வம் உள்ளதைக் கண்டு கொண்டார் ரூயிஸ். எனவே மகனுக்குப் படங்களையும், பொருட்களையும் பார்த்து வரையும் ஓவிய நுட்பத்தை ஆரம்பத்தில்  அறிமுகம் செய்தார்.

1891- ஆம் ஆண்டு கொருணா என்ற பகுதியிலிருந்த கலைப்பள்ளி ரூயிஸைப் பேராசிரியராக அழைத்தது. அப்போது பிக்காஸோவின் குடும்பம் அந்த நகருக்குச் சென்றது. அங்கிருந்த நான்கு ஆண்டுகளில் தன் மகனின் ஓவியப் படைப்புகளையும், ஆர்வத்தையும் கண்டு ரூயிஸ் வியப்படைந்து போனார். தனது பதினான்கு வயதில் (Portrait of Aunt pepa) ‘அத்தை பெப்பாவின் ஓவியம்’ என்று அவர் வரைந்த ஓவியம் ஸ்பெயின் நாட்டு வரலாற்றில் முக்கியப் பதிவானது. பதினாறு வயதில் பிக்காஸோ படைத்த ‘அறிவியலும், சேவையும்’ (Science and charity) என்ற தலைப்பிலான ஓவியம் பல்வேறு பரிசுகளை அவருக்குப் பெற்றுத் தந்தது.

மகனின் தீராத, சாதிப்புகள் நிறைந்த ஓவிய ஆர்வத்துக்கும், கலைப் படைப்புகளுக்கும், வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் பிக்காஸோவின் தந்தை செயல்பட்டார். இச்சூழலில் பிக்காஸோவின் தங்கை ஏழுவயதில் டிப்தீரியா நோயால் இறந்தது மனதில் சோகத்தையும், வேதனையையும் கொண்டு வந்தது.

கலையார்வத்துக்கு ஊக்கமூட்டும் வண்ணம் 16 – வயதில், ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் என்ற இடத்திலிருந்த புகழ்பெற்ற ஓவியக் கல்வி நிறுவனமான ‘ராயல் அகாடமி ஆப் சான் பெர்னாண்டோ’ என்ற இடத்தில் கல்வி கற்க சேர்க்கப்பட்டார் பிக்காஸோ. வகுப்பறையில் இருந்து, உட்கார்ந்து கல்வி கற்பது என்பது பிக்காஸோவுக்குக் கசப்பாகவே இருந்தது. காரணம், எப்போதும் சுதந்திரமாக எதையாவது பார்த்து வரைவதிலும் அவர் பேரார்வம் கொண்டிருந்தார். அவருள் இருந்த கலையார்வம் அடங்கி, அமர மறுத்தது. எங்கு சென்றாலும், அவரது கண்கள் கலைப் படைப்பை நோக்குவதாகவும் கைகள் கலைப் படைப்பை உருவாக்குவதுமாகவுமே அமைந்திருந்தது. வாழ்க்கையின் பல்வேறு படிநிலைகளில் தான் கவனித்த, கற்றுக் கொண்ட, அனுபவித்த பல்வேறு சூழ்நிலைகளை மையமாக வைத்துப் பிக்காஸோவின் ஓவியங்கள் அமைந்தன.

மாபெரும் கலைஞர்

1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்டச் சிற்பங்கள், 12,000 திரைச் சீலை வேலைப்பாடுகள், 12,000 சாதாரண சிற்பங்கள் என்று இவரது படைப்புகள் இவரது புகழை உலகிற்குச் சொல்லுகின்றன. இந்தப் படைப்புகள் எல்லாம் பாரீஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களாகக் காட்சியளிக்கின்றன.

இவற்றில் ‘குவர்னிகா’ என்ற பிரபல ஓவியம் மிகவும் புகழ்பெற்றது. முதல் உலகப் போரில் குவர்னிகா நகரில் குண்டு வீசப்பட்டதை மையமாக வைத்து வரையப்பட்டது. இந்த ஓவியம் பல்வேறு படங்களை இணைத்து அல்லது பல்வேறு செய்திகளை ஒரே படத்தில் கொண்டு வந்து பார்ப்பவருக்கு ஒட்டுமொத்த நிகழ்வையும் கூறும் ‘Collage’ என்று சொல்லக் கூடிய ஓவியங்கள் அல்லது சித்திரங்களின் அமைப்பாகும். இந்த அமைப்பைப் பிரபலப்படுத்தியவரும் பிக்காஸோ தான். இன்று பல இடங்களில் ஓவியப் போட்டியுடன் ‘கொலாஜ்’ (Collage) என்ற போட்டிகளையும் நடத்துகின்றோம். செய்தித் தாள்களில் உள்ள பல படங்களை ஒருங்கிணைத்துக் கொடுத்து, வெட்டி, ஒட்டி ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் படங்களாலும், சில வரையப்பட்ட ஓவியங்களாலும் உணர்த்துவதே இந்தப் போட்டி. இதனை முதலில் உலகிற்குக் காட்டியவர் பிக்காஸோ.

ஓவியங்களை வெட்டியோ, ஒட்டியோ அவர் ‘கொலாஜ்‘ என்னும் பன்முகச் சித்திரத்தைத் தரவில்லை. மாறாக, முதல் உலகப்போரில் நிகழ்ந்த யுத்தத்தின் கொடுமை, தனிமை, புலம்பல்கள், மக்களின் வேதனை வெளிப்பாடுகள், தாக்குதல்கள் ஆகியவற்றை மையப் பொருளாகக் கொண்டு இந்த ‘குவர்னிகா‘ ஓவியத்தை வரைந்தார் பிக்காஸோ. மக்களின் மன ஓட்டத்தையும், வேதனைகளையும் ஒரு படத்தால், ஓவியத்தால் எளிதில் உலகிற்குக் கொண்டு செல்ல முடியும், கவனப்படுத்த முடியும் என்பதை பிக்காஸோ நிரூபித்தார். நியூயார்க் அருங்காட்சியகத்தில் இந்த அரிய ஓவியம் வைக்கப்பட்டுள்ளது.

1937-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்பெயின் நாட்டிலிருந்த குவர்னிகா என்ற மிகச்சிறிய நகரை ஹிட்லரும், முசோலினியும் தாக்கினர். வான்வழித் தாக்குதலால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர். இடதுசாரிகளின் ஆட்சியை ஒழிக்க இந்த வலதுசாரிகள் போரிட்டனர். உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த, கம்யூனிசக் கொள்கை கொண்ட குவர்னிகாவில் தாக்குதல் கொடுமையாக நடத்தப்பட்டது.

இந்தக் கொடூரத்தைச் சொல்லும் படமான ‘குவர்னிகா’ பல்வேறு செய்திகளை உலகிற்குச் சொன்னது. எருமைத் தலைகள், குரல்வளை நெரிக்கப்படும் குதிரைகள், விளக்கிலிருந்து வரும் வெளிச்சமாக வானிலிருந்து வீசப்பட்ட குண்டுகள், குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வானை நோக்கிக் கதறும் பெண், அழிவை நோக்கிய பூக்கள் என்று அந்தச் சித்திரம் உலகமெல்லாம் பேசப்பட்டது. இன்றும் கூட இந்த ஓவியம் ஒரு கொடூரத் தாக்குதலின் ஆவணமாகவே காணப்படுகின்றது.

இந்த ஓவியத்தைக் கண்ட ஹிட்லரின் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு ஜெர்மன் அதிகாரி பிக்காஸோவிடம் “நீங்கள் தான் இந்த ஓவியத்தை வரைந்தீர்களா?” என்று கேட்டாராம். உடனே பிக்காஸோ “ஆம், இதை நீங்கள் தான் உருவாக்கினீர்கள்” என்று கூறினாராம், கேட்டவர் வாயடைத்துப் போய் விட்டாராம். ஆம், போரை நீங்கள் தான் நடத்தினீர்கள், இந்தக் காட்சிகளுக்கும், எல்லா அவலங்களுக்கும் நீங்கள் தான் காரணம், எனவே வரைந்தது பிக்காஸோ என்றாலும், உருவாக்கியவர்கள் ஹிட்லரும், முசோலினியும் என்பதை ஒரே வார்த்தையில் உணர்த்தினார் பிக்காஸோ.

ஏழுவயதில் தன் தந்தையிடமிருந்து ஓவியத்தைக் கற்றுக்கொண்ட பிக்காஸோ, தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கலைப் படைப்புகளையும் புதுமையாக உருவாக்கினார். இன்று தொலைக்காட்சிகளில் குழந்தைகளை மகிழ்விக்கும் பல்வேறு அலைவரிசைகளின் தொடர்களில் காணப்படும் உருவ அமைப்புக்கு வித்திட்டவர் பிக்காஸோ தான். முழு மனித உருவைக் காட்டாமல் ‘கியூபிசம்’ என்று சொல்லக் கூடிய முப்பரிமாணவகையில் கோடுகளாலும், சதுரங்கள் மற்றும் வெட்டுப்பட்ட ஓவியங்களாகவும் அமையும் இந்த வகை ஓவியங்களையும், சிந்தனைகளையும் உலகிற்கு வழங்கிய மாபெரும் சிந்தனையாளர் மற்றும் வடிவமைப்புச் சிற்பி பிக்காஸோ, என்பது முற்றிலும் பொருந்தும்.

1500-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு ஓவியத்துறையில் மாபெரும் கலைப் படைப்புகளும், கலைஞர்களும் தோன்றவில்லை என்ற கருத்துப் பரவலாக உலகளவில் இருந்தது. ஆனால், இந்த ஐநூறு ஆண்டுகளின் சாதனைகளை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஓவியராக பிக்காஸோ ஈடுசெய்துவிட்டார் என்பவர்களும் உண்டு.

காலமுறை ஓவியங்கள்

பாப்லோ பிக்காஸோவின் ஓவியங்கள் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைக்கு ஏற்பவும், அவசியத்தை உணர்த்தவும் வரையப்பட்டது. ஒரு சில ஓவியங்கள் புரிந்து கொள்வதற்குக் கடினமானதாகவும் அமைந்திருந்தது.

ஒரு சமயம் ஒரு பார்வையாளர் பிக்காஸோவின் ஓவியங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் பிக்காஸோவிடம் ‘உங்களது ஓவியங்களின் அர்த்தம் எனக்குப் புரியவில்லையே’ என்று கேட்டார். உடனே பிக்காஸோ, “ஆமாம், உங்கள் வீட்டின் அருகிலுள்ள மரங்களில் அமர்ந்து கொண்டு குயில்கள் கூவுகின்றதே, அதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? உங்கள் வீட்டுக் கண்ணாடிகளில் பனி படிகிறதே, அதை நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்?” என்று திருப்பிக் கேட்டார். அதாவது ஒரு ஓவியத்தை ஓவியமாக மட்டுமே பார்த்து ரசிக்க வேண்டும் என்பது பிக்காஸோவின் எதிர்பார்ப்பாகும்.

ஒரு காலகட்டத்தில் பிக்காஸோ, படம் அல்லது ஒரு பொருளைப் பார்த்து வரைவதை ஓவியம் என்று ஏற்க மறுத்தார். ஓவியம் என்பது தானாகச் சிந்தனையின் மூலமாகப் புனையப்பட்டு வரையப்பட வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. அதாவது ஒன்றைப் பார்த்து வரைவது என்பது போலச் செய்வது தான் இதில் அசலான படைப்புத்தன்மை இல்லை என்பது பிக்காஸோவின் கருத்தாகும். ஒரு காட்சியைக் கண்டதும், அதைக் கற்பனைப் படுத்தியோ, அல்லது தனது எண்ணங்களையோ சிற்பமாக, ஓவியமாக, பிற கலைப்படைப்பாக உருவாக்குவதே இயற்கையான ஓவியம் என்ற எண்ணத்தைப் பிக்காஸோ கொண்டிருந்தார். இப்படியே தன் ஓவியங்களையும், சித்திரப் படைப்புகளையும் சுயமாக உருவாக்கினார். இதன் மூலம் ‘தான் ஒரு சிறந்த படைப்பாளி ‘ என்பதை உலகிற்கு உணர்த்தினார் பிக்காஸோ.

நீல வண்ணக் காலம்

1901-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டுவரை தன் ஓவியங்களை நீல வண்ணத்தால் வரைந்தார் பிக்காஸோ, எனவே அவை நீல வண்ணக் காலமாகப் பேசப்படுகின்றது. தனது எசுப்பானியா நாட்டில் பிக்காஸோ மேற்கொண்ட சுற்றுப்பயணம், தனது நண்பர் ஒருவரின் இறப்பைச் சொல்லும் சோகம், கழைக்கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள் மற்றும் பல்துறைக் கலைஞர்கள் போன்றவர்களைத் தன் ஓவியங்களால் காட்சிப்படுத்தினார் பிக்காஸோ. இந்தக் கால ஓவியங்கள் உலகளவில் பரவலாகப் பேசப்பட்டன, புகழப்பட்டன, சில ஓவியங்கள் விமர்சனத்துக்கும் உள்ளாகின.

இளஞ்சிவப்பு மற்றும்
ஆப்பிரிக்க காலம்

1904 – ஆண்டு முதல் 1906 – ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் இளஞ்சிவப்பு (Pink) நிறத்தாலான சாயங்களால் ஓவியங்களை வரைந்தார் பிக்காஸோ. இளைஞர்கள், இளைஞிகள், தலைமுடியை வாரும் பெண், நீச்சல் வீரர்கள், குடும்பம் சார்ந்த சித்திரங்கள், வானர மனிதர்கள் என்று சில சிந்தனைகளைச் சொல்லும் ஓவியங்களாக இவை அமைந்தன.

1908 மற்றும் 1909- ஆம் ஆண்டுகளில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் கிடைத்த கலைப்பொருட்களின் மூலம் பெற்ற சிந்தனையடிப்படையில் பல ஓவியங்களை பிக்காஸோ வரைந்தார். தேர்ந்த சிந்தனையாளராக பிக்காஸோ திகழ்ந்ததற்கு இதுவும் ஒரு உதாரணமே.

கியூபிசம் தந்த பிக்காஸோ

இன்றைய காமிக்ஸ், குழந்தைகளின் பொம்மைப் படங்களாலான தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கு அடித்தளம் தந்தவர் பிக்காஸோ தான். கணினி மூலமாக இன்று கிராபிக்ஸ் முறையில் வரையப்படும் ஓவியங்கள் தான் திரைப்படங்களாகவும், தொடர்களாகவும் வெளிவருகின்றன. கலை உலகிற்கு இந்த மாற்றுச் சிந்தனையை வழங்கியவர் பிக்காஸோ.

பிக்காஸோவும், பிராக்கும் சேர்ந்து உருவாக்கிய இந்த ‘கியூபிச பாணி’ ஓவிய வரலாற்றில் ஒரு மாபெரும் புதுமையும், படைப்பும் ஆகும். ஒவ்வொரு பொருளையும், ஒரு கருவாக எடுத்துக் கொண்டு அதைக் கியூபிச முறையில் வெளிப்படுத்துவது, என்பது முற்றிலும் புதிய முயற்சியாகவும், வெற்றிகரமானதாகவும்
அமைந்தது.

சாதனை படைத்த பிக்காஸோ

த மிஸ்ட்ரி ஆப் பிக்காஸோ (The Mystery of Picasso), அதாவது “பிக்காஸோவின் வரலாற்றுச் சாதனை” என்று பொருள்படும் திரைப்படம் 1965-ஆம் ஆண்டு வெளிவந்தது. ஹென்றி ஜார்ஜஸ் என்பவர் இயக்கிய இப்படத்தில் பிக்காஸோவே நேரடியாகத் திரைப்படத்தில் தன் ஓவியங்களைப் படைக்கும் காட்சியினை வடிவமைத்துத் தந்தார் ஹென்றி ஜார்ஜஸ்.

ஒரு கலைஞரே தன் ஓவியங்களை தன் கையால் வரையும் காட்சிகளைத் திரைப்படமாக்கியது வரலாற்றில் ஒரு பதிவானது. மக்களால் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்ட படமாக மட்டுமல்ல, ஒரு மாபெரும் கலைஞனை உலகமே காண வழிவகுத்தது.

1996-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஐவரி இயக்கத்தில் வெளியான சர்வைவிங் பிக்காஸோ (Surviving Picasso) அதாவது ‘வாழும் பிக்காஸோ’ என்ற திரைப்படமும் புகழ்பெற்றது.

பிக்காஸோ எழுதிய ‘மனிதனும் அவனது வேலைகளும்’ என்ற பொருள் படும் ‘The Man and his work ’ என்ற நூலும் இரண்டு பகுதிகளாகத் திரைப்படமாக்கப்பட்டது.

தனது தொன்னூறாவது பிறந்த நாளைப் பொது மக்களுடன் கொண்டாடினார் பிக்காஸோ. அந்த மகிழ்வான நிகழ்வில், அந்த மாதத்தில் வரைந்த எட்டு ஓவியங்களையும் பாரிஸில் அமைந்துள்ள ஜாவர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார். தொன்னூறு வயதிலும் தனது ஓவியத் திறமையும், சிந்தனைப் போக்கும் வற்றாது வலம் வருகிறது என்று உலகோர்க்கு நம்பிக்கையளித்தார் பிக்காஸோ.

பிக்காஸோ உலகப் புகழ்பெற்ற ஓவியர், அச்சுப்பொறியாளர், மேடை வடிவமைப்பாளர், திரைச்சீலை வடிவமைப்பாளர், மண்பாண்டக் கலைஞர், சிற்பக் கலைஞர், கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், புகழ்பெற்ற பல புதுமையான ஓவியங்களை உலகிற்கு அறிமுகம் செய்தவர், கியூபிசம் பாணியை வழங்கியவர், உழைப்பால் ஒப்பற்ற படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளர், ‘தூரிகை எடுத்தால் ஓவியங்கள் கொட்டும்’ என்று புகழப்பட்டவர், இருபதாம் நூற்றாண்டின் இணையில்லாத கலைஞர், நவீன பாணி ஓவியங்களின் தந்தை, தலைவர், முன்னோடி என்று போற்றப்படுபவர்…. இப்படி இவரது புகழைச் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

பிக்காஸோ உலகில் அமைதியை விரும்பினார். அந்த அமைதியையும், சமாதானத்தையும் உலகிற்கு அடையாளம் காட்ட அவர் வரைந்த ஓவியம் தான் ‘ஒற்றைப் புறா மற்றும் ஆலிவ் இலைகள்.’ உலக அமைதிக்கான சின்னமாக இந்த ஒற்றைப் புறாவும், ஆலிவ் இலைகள் படமும் இன்றும் அங்கீகரிக்கப்பட்டுப் பறந்து கொண்டிருக்கிறது. பிக்காஸோவின் ஓவியங்கள் எல்லாம் இன்னும் பல நூற்றாண்டுகள் காணக்கிடைக்கும் பொக்கிஷங்கள் என்றால் இது மிகையல்ல.

பிக்காஸோ தன் பெயரை மிகவும் விரும்பினார். இந்தப் பெயர் அவரது தாயின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டது. அவர் வாழ்ந்த ஸ்பெயின் நாட்டில் பெரும்பாலும் இரண்டு ‘SS’ உள்ள வார்த்தைகள் இருக்காது. ஆனால் இவரது பெயரில் ‘PICASSO’ இரண்டு ‘SS’ வருவதும், இவரைப் பிக்காஸோ என்று பிறர் அழைப்பதும் மகிழ்ச்சி
தந்ததாம்.

தனது இளம் பருவம் முதலே கலைவண்ணப் படைப்புகளில் கைதேர்ந்து, தனது தீராத ஆசையாலும், இடைவிடாத முயற்சியாலும், கடின உழைப்பாலும் உயர்ந்து ஜொலித்த பாப்லோ பிக்காஸோ காலமெல்லாம் நினைவுகூறப்படும் ஒப்பற்ற, ஒய்யாரக் கலைஞராகத் திகழ்கின்றார். இளம் வயதிலேயே திறமையுள்ளோர்கள் கண்டறியப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டால் பாப்லோ பிக்காஸோக்கள் நம் சமூகத்திலும் உருவாகி, உன்னதம் படைப்பார்கள் என்பது முற்றிலும் உண்மையே.