உலகில் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறினால் மட்டுமே இன்பநிலை, மற்றவையெல்லாம் துன்ப நிலை என்ற நிலைப்பாடு பெருமளவில் உள்ளது. எண்ணங்களே மனித வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது என்றபோதும், அவ்வெண்ணங்களை நெறிபடுத்தும் மனதை ஆளுமைசெய்யத் தவறிவிட்டால் அனைத்தும் தனிப்பட்ட மனிதனுக்கும், அவன்சார்ந்த உலகியலுக்கும் பெருந்தீங்கை இழைத்துவிடுவதை நம்மால் உணரமுடிகிறது.
“தன்னையறிந்து ஆளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?”
என்ற மகாகவி பாரதியாரின் உயிர்ப்பான மனம்சார்ந்த வாசகத்தை நுண்ணிதின் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் உன்னதமான துறையில் உள்ள பல மனிதர்களும், பல்வேறு அசாத்திய திறமைகளைப் பெற்றிருந்த போதும் மனஒடுக்கமின்றி சுயநலப்போக்கால் மனந்திரிந்து, தடுமாறி, தவறுகளை இழைத்து தலைகுனிந்து புழுங்குவதை தற்சமயங்களில் வெளிப்படையாக அறியமுடிகிறது.
“குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்” (குறள்.965)
என்ற குறட்பாவும், எத்துனை ஆற்றல் மிக்கவரும். தன்நிலைக் குலைவதற்குரிய செயல்களைச் செய்யும் போது, தரணியில் தரம் குன்றி மதிப்பிழந்து போகிறார்கள், என்ற விழிப்புணர்வினை மானம் என்ற அதிகாரத்தில் மனம்பட வலியுறுத்துகின்றது. எனவே, செய்யத்தக்கன செயல்கள், செய்யத்தகாதன செயல்கள் எவையெல்லாம் என்பதனை சான்றோர் வழியும், நல்ல புத்தகங்கள் வழியும், தூய ஆசான்கள் வழியும் நன்குணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமும், வாழ்வியல் அவசியமும் ஆகின்றது. அறத்தின் நெறிகள் வாசிப்பதற்கு அன்று, அவைகள் உணர்ந்து வாழ்வியலில் கடைப்பிடிப்பதற்கே ஆகும்.
“கற்றபின் நிற்க அதற்குத் தக” (குறள்.391)
என்ற குறட்தொடரானது, இம்மெய்மையை அகிலத்திற்கு உரத்த சிந்தனையாகத் தந்துள்ளது. ஆன்மிக நெறிகள், தூயமனத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறதேயன்றி, ஆசிரமத்திற்கு சொத்துகளைப் பெருக்கிடவோ, சித்துவித்தைகளைச் செய்திடவோ, தன்னைக் கடவுளாக அறிவித்திடவோ, கூறுவதற்கில்லை.
“உற்றார்க்கு உடம்பும் மிகை”(குறள்.345)
துறவினில், ‘துய்ப்பவர்க்கு இருக்கும் உடம்பு கூட அதிகம்’, என்ற போக்கே முற்படவேண்டும் என்பது குறளறம். ஆனால் இன்று துறவிகளின் சொத்துப் பட்டியல் இமய அளவில் இருப்பதும், அதனை வாயாறப் புகழும் பக்தர்களின் கூட்டமும் எண்ணற்ற அளவில் உள்ளதும்தான் வருந்தத்தக்கச் செய்தியாக உள்ளது.
அதேபோன்று மக்கள் நலப்பணிகளை ஆற்றுவதற்காகத் தேர்வுகள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பெற்று உயர்பணியில் அமர்த்தப்பெறும் அரசாங்க அலுவலர்கள், உயர் அதிகாரிகள் என அனைத்து அரசுத்துறைகளிலும், சிலர் மக்கள்நல நோக்கத்திலிருந்து விலகிச்சென்று தவறானவழியல் பொருள் ஈட்டுவதைக் காண்கின்றோம். அரசாங்கத்தின் திட்டங்களை மக்களுக்கும், மக்களின் தேவைகளை அரசாங்கத்திற்கும் எடுத்துச்சென்று பாலமாக அமைந்து செயல்படவேண்டியவர்கள், மக்கள்நலத்திற்குப் பாதமாகச் செயல்படுவதை கண்டுணரமுடிகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் கையூட்டு இன்றி எந்தச் செயலும் நடைபெறாது என்பது எழுதப்படாத சட்டமாக செயல்படுவதைக் கண்டு நம் நெஞ்சங்கள் பதறுகின்றன.
இன்றைய நிலையில் எதிர்கால மாணவர்களை நல்லாற்றுப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். அறப்பணியான அப்பணியிலும் சில கருப்பு ஆடுகள் பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றுவது வன்கொடுமையாக உள்ளது. இன்றும் நம்முடைய அறவடிவான ஆசிரியர்களை எண்ணிப்பார்க்கின்றோம், அவர்களின் அர்ப்பணிப்பினாலேயேதான் பெரும்பாலோர் வாழ்வில் முன்னேற்றம் காணமுடிந்தது. இன்று பெண்களை அச்சமின்றி பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்புகின்றவர்கள் எண்ணிக்கை எதிர்காலத்தில் குறைந்துவிடுமோ, பெண்களின் கல்வியறிவிற்கு குறைவந்துவிடுமோ என்ற நிலை சிந்திக்க வைக்கின்றது. இதேபோன்று, விளையாட்டுத்துறை, நீதித்துறை, காவல்துறை எனப் பல துறைகளிலும் சிலபேரின் தவறான அணுகுமுறையினால் அந்தந்தத் துறை சார்ந்தவர்களுக்கும் தலைக்குனிவு ஏற்படுகின்றது. இந்தக் குறைபாடுகளை அச்சுறுத்தும் சட்டங்களாலும், தண்டனைகளாலும் மட்டுமே சரிசெய்துவிடமுடியுமா? என்று எண்ணிப்பார்க்க வேண்டியது சான்றோர்களின் கடமையாகும். எத்துனைக் கடுமையான சட்டங்கள் உள்ளபோதும் அறமற்றச் செயல்கள் புற்றீசல் போல பெருகுகின்றதேவொழிய முற்றிலும் இல்லா நிலையை அடையமுடியவில்லை. அரசும், உயர்நிலை அதிகாரிகளும், கல்வியாளர்களும், நாட்டில் உள்ள அறவோர்களையும் அரவணைத்து இதற்கு உளவியல் நிலையிலான தீர்வுகளை காண்பதே பொருத்தமானதாக அமையும். மேலும் பாட வகுப்புகளில் நீதியரசர் மாண்புமிகு. மகாதேவன் அவர்கள், 2015இல் வெளியிட்ட தீர்ப்பில் கூறியது போன்று திருக்குறளை ஒரு பாடமாகவே வைத்து, அதனை செயல்முறை வடிவாக்கத்தோடு பயிற்றுவித்தலை நெறிபடுத்தவேண்டும். (Activity based training). ஆனால் இதுவரையில் அந்தத் தீர்ப்பு அவர்கூறிய விதத்தில் நெறிமுறைப்படுத்தப்படவில்லை என்பதே கசப்பான உண்மையாகவுள்ளது.
அனைவரும் சமமானவர்களே, எல்லோரும் நம்மைப் போன்றவர்களே என்ற கருத்தாக்கத்தைப் பதிவு செய்தல்,
தேச-நேச உணர்வினைச் செழிக்கச் செய்தல்,
ஆண், பெண் சமன்மையை உணர்த்தி, எவரும் எவருக்கும் அடிமையில்லை என்ற தன்மதிப்பு நிலையை உணரச்செய்தல்(Invoking Gender Sensitization)
அன்பு, கருணை, ஈடுபாடு போன்ற பண்புநலன்களோடு பணிகளை ஆற்றிட வேண்டும் என்ற ஆன்ற பணிநிலை நுட்பத்தை புகுத்துதல்,
தவறான வழியில் பொருளீட்டுவது, திருடுவதைவிடக் கொடுமையானது என்ற அறப்பார்வையை பதிவுசெய்தல்,
வீட்டிலுள்ள பெரியவர்களிடம் சில குறைகளிருப்பினும், நன்றியுணர்வுடன் அவர்களைப் போற்றிப்பேண வேண்டிய கடமையுணர்வினை உணர்தல்,(இவ்வழி இன்று சமுதாயப் பெருங்கேடான முதியோர் இல்லங்களை இல்லாமல் செய்யமுடியும்)
பொறுமை, சகிப்புத்தன்மை, தன்மதிப்பு, தன்னம்பிக்கை போன்ற அருங்குணங்களை உடைமையாக்கினால், அதன்வழி, தங்களின் வாழ்க்கையே ஒரு செய்தி (My life is my Message) என்ற காந்தியச் சிந்தனை துலக்கம் பெறும். மேலும் மக்களின் வாழ்க்கைமுறையிலும் இயல்பான, எவ்வித மேற்பார்வையில்லாத நிலையிலும், பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு”(குறள்.974)
என்ற குறட்தொடர்வழி மெய்யான விழிப்புணர்வு கோலோச்சும் எங்கும் எதிலும் அறத்தின் ஆட்சியானது வற்புறுத்தலின்றி உயிர்ப்புடன் இயங்கிடும்.