இளைஞர் உலகம்
தூங்குமுகத்தவர்களின் இயல்புகளில் (1) சோம்பேறித்தனம், (2) உணர்ச்சி சமநிலை ஆகிய 2 பண்புகளைப் பார்த்தோம். இந்த இதழிலும் தூங்குமுகத்தவரின் வேறு சில குணநலன்களைப் பற்றி பார்ப்போம்.
சேவை மனப்பான்மை
தூங்குமுகத்தவரிடம் சேவை புரிய வேண்டுமென்ற மனநிலை இயல்பாகவே காணப்படும். “என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்ற முனைப்பு இல்லாவிட்டாலும் பணி/சேவை என்று வந்தால் தங்கள் பங்களிப்பைக் கொடுக்க இவர்கள் தயங்கமாட்டார்கள். தன் காலமெல்லாம் சாக்கடையில் கிடந்து அல்லலுறும் மனிதர்களை, தொழுநோயாளிகளை, ஆதரவற்றோர், அனாதைக் குழந்தைகள் என்று சமுதாயத்தால் புறந்தள்ளப்பட்டோரை அரவணைத்து, அன்பு செய்து பராமரித்து அவர்களுக்காகவே தனது வெதுவெதுப்பான ஆசிரியப் பணியைத் துறந்து சமூகத் தொண்டாற்றி “சாக்கடையின் புனிதத்தை” (Saint of the Gutters) என அழைக்கப்படும் அகிலம் போற்றும் அன்னை தெரசா அவர்கள், பிரார்த்தனையும் சேவையும் ஒரு மனிதனின் வாழ்வில் இணைந்து போகவேண்டும் என்கிறார். காரணம் அவரது பார்வையில் செயலற்ற (கடவுள்) நம்பிக்கை உயிரற்றதாகும். பிரார்த்தனை (செபம்), சேவையில் தான் நிறைவு பெறுகிறது. அந்தச் சேவை தான் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் தருகிறது என்கிறார்.
“மவுனத்தின் கனி செபம்;
செபத்தின் கனி நம்பிக்கை;
நம்பிக்கையின் கனி அன்பு;
அன்பின் கனி சேவை;
சேவையின் கனி அமைதியும் மகிழ்ச்சியும்”
எனக் கூறுகிறார் அன்னை. தூங்குமுகத்தவர் சேவை செய்யத் தயங்கமாட்டார்கள்.
நிதானம் தவறாதவர் (Sober)
தூங்குமுகத்தவர் எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்துடன் இருப்பவராவார். மனிதன் நிதானம் தவறும் போது அவன் ஒரு விலங்கு போல நடந்து கொள்ளுவான்; வித்தியாசமாகச் செயல்படுவான். எனவே தான் மதுவைப் பொறுத்தமட்டில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றோம். பிரபல நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய சோக நாடகங்களுள் ‘ஒதல்லோ’ என்ற நாடகம் பிரதானமானது. அதில் வரும் வில்லன் இயாகோ (Iago), தனக்கு வேண்டாத ஒருவனை குடிக்க வைத்து நிதானமிழக்கச் செய்கிறான். போர் வெற்றியைக் கொண்டாட சைப்பிரஸ் தீவில் கூடி வரும்போது காசியோ
(Cassio) என்ற இந்த இராணுவ அதிகாரியை அவன் எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அளவுக்கு மீறி குடிக்க வைக்கிறான் இந்த வில்லன் இயாகோ.
போதை தலைக்கேறியதும் சுயக்கட்டுப்பாட்டை இழந்த காசியோ இன்னொருவனோடு சண்டையிடுகிறான்; இதனால் நடுநிசியில் தீவு முழுவதும் கலவர பூமியாகிறது. இதனால் இந்த இராணுவ வெற்றிக்குக் காரணமாக இருந்த ஒதல்லோ (கதாநாயகன்)வின் தூக்கம் கலைகிறது. அனைத்துக் களேபரத்திற்கும் காசியோதான் காரணம் என நினைத்த ஒதல்லோ (Othello) காசியோவை அந்த இடத்திலேயே அதிகாரி ஸ்தானத்திலிருந்து பதவி நீக்கம் செய்கிறான்.
“காசியோ! நான் உன்னை நேசிக்கிறேன்;
ஆனால் இனி நீ என் அதிகாரியாக இருக்கவே முடியாது”
Cassio! I love you
But you can never be an officer of mine
இவ்வளவும் நடைபெறக் காரணம் காசியோ ஒரு கணம் நிதானம் தவறியதுதான். எனவேதான்,
“நொடிப்பொழுதில் தவறிழைத்தால்
யுகம் யுகமாக வருந்த வேண்டியிருக்கும்” என்பார்கள்.
பொது அறிவு மிக்கவர் (Man of Common Sense)
தூங்குமுகத்தவர் எதையும் ஆய்ந்து அறிந்து செயல்படும் உளப்பாங்கு உடையவர். சிரிமுகத்தவர் போன்று முன்யோசனையின்றி எதையும் பேசவோ, எழுதவோ, செய்யவோ மாட்டார் இவர்.
ஆபிரஹாம் லிங்கன் வழக்கறிஞராக செயல்பட்ட சமயம் அது. ஒரு கொலை நடந்ததை, இரவு நேரத்தில் நடந்த அந்த சம்பவத்தை தூரத்தில் சென்ற ஒருவர் கண்ணால் பார்த்ததாக சாட்சியளித்திருந்தார். ஆனால் அது பொய்ச் சாட்சியம் என ஆபிரஹாம் லிங்கன் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார். உண்மையில் அது பொய்ச் சாட்சியம்தான் என லிங்கன் அறிந்திருந்தாலும் அதனை எப்படி வாதிடுவது, தனது கட்சிக்காரரை எப்படி விடுவிப்பது என குழம்பிக் கொண்டிருந்தார்.
இரவு வெகுநேரம் வரை அறையில் அங்கும் இங்கும் நடந்தவாறிருந்தார். திடீரென தனக்கு முன்னால் இருந்த காலண்டர் மீது அவரது கண்கள் பதிந்தன. அவரது உள்மனம் அதை உற்றுநோக்குமாறு உணர்த்தியது. அந்தோ! அவரது கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. மறுநாள் நீதிமன்றம் சென்று, அந்த சாட்சி பொய் என்று நிரூபித்தார். அப்படி என்ன தான் அந்த காலண்டரில் இருந்தது? வேறு ஒன்றுமில்லை – அது அமாவாசை நாள். அந்த கொலை நடந்த நாள் அமாவாசை என போடப்பட்டிருந்தது. அந்த அமாவாசை கும்மிருட்டில் அருகிலுள்ளவரையே அடையாளம் காண்பது கடினமாக இருக்கும் போது, “இன்னார்தான் அந்த கொலையை செய்தார்; என் கண்ணால் தெளிவாகக் கண்டேன்” என்பது சுத்தப்பொய் என ஆபிரஹாம் லிங்கன் வாதிட்டு தனது கட்சிக்காரருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததாக ஆபிரஹாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு கூறுகிறது.
எனவே தூங்குமுகத்தவர் சோம்பேறிகள் போல் தோன்றினாலும், பல துறைகளில் இவர்கள் தடம்பதிக்க இயலும்.