முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்

ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

இந்த உலகின் மிகச் சிறந்த அழகான பொருட்களை நம்மால் காணவோ, தொட்டுப் பார்க்கவோ முடியாது. ஆனால், அவற்றை நமது இதயத்தால் உணர முடியும்” என்று கூறியவர் ஹெலன் கெல்லர். இருபதாம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்திய நபர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹெலன் கெல்லர், மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல், நம்பிக்கை இழந்து வாடும் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

அமெரிக்காவிலுள்ள அலபாமாப் பகுதியின் டஸ்கும்பியாவில் ஆர்தர் ஹென்லி கெல்லர் மற்றும் காத்ரீன் எவரெட் தம்பதியரின் மகளாக 27, சூன் 1880-இல் பிறந்தார் ஹெலன் ெகல்லர். தந்தையார் ஒரு பத்திரிகை ஆசிரியர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. ஹெலனுக்கு 19 – மாதங்கள் நிகழ்ந்த போது ஏற்பட்ட ஒரு காய்ச்சல் காரணமாக கண்பார்வையும், கேட்கும் திறனும் பறிபோயிற்று. அந்தக் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட நோய் 97% இறப்புக்கே வித்திடும் என்ற நிலையில் ஹெலன் ெகல்லர் இந்தக் குறைபாடுகளோடு காப்பாற்றப்பட்டது அபூர்வமான ஒன்றாகும். வேதனைப்பட்ட பெற்றோர்கள், தம் பிள்ளையை வளர்த்தெடுக்க, உருவாக்க மிகவும் கடினப்பட்டுள்ளார்கள்.

வளரும் பருவத்தில், நடைபயிலும் பருவத்தில் இக்குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கடந்து வளர்வது என்பது சவாலாக அமைந்தது. மருத்துவம், சிறப்புக் கல்வி என்று எப்படியாவது தம் மகளை வளர்த்துவிட வேண்டும் என்பதில் சளைக்காமல் முயன்றுள்ளார்கள் ஹெலனின் பெற்றோர்கள். இளம் வயதில் ஏற்பட்ட பாதிப்பால், இயலாமையால் இக்குழந்தைக்கு எதிலும் விருப்பமின்மையும், வெறுப்பும் உருவானது. எதையும் புரிந்து கொள்ளவும், அறிந்து ெகாள்ளவும் இக்குழந்தை கஷ்டப்பட்டது. இதனைக் கண்டு நெஞ்சம் பதறிய பெற்றோர் ஏதாவது செய்து தம் குழந்தையைக் காப்பாற்றி, அவளுக்கு நல்லதைச் செய்ய ஆசைப்பட்டார்கள்.

ஹெலனின் தாய் புகழ்பெற்ற எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தார். அமெரிக்காவில் உள்ள பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளி மூலம் சிறப்பாக அடிப்படைக் கல்வி கற்ற லாரா பிரிட்ஜ்மேன் என்ற அமெரிக்கப் பெண்மணி பற்றி எழுதியிருந்தார். ஹெலன் ெகல்லருக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பிறந்த இவர் தான் அமெரிக்காவில் கல்வி கற்ற முதல் பார்வையற்ற பெண்மணி என்ற செய்தி கெல்லரின் தாய்க்கு ஊக்கமூட்டியது.

எனவே, தன் மகளை எப்படி வழிநடத்தலாம்? என்று  அறிய பால்டிமோர் நகரில் மருத்துவர் ஜீலியன் ஷிஷோல்ம் என்பவரைச் சந்தித்தார். இவர் கிரஹாம் பெல்லைச் சந்திக்குமாறு கூற, கிரஹாம் பெல் தெற்கு பால்டனில் அமைந்திருந்த பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். அந்தப் பள்ளியின் நிர்வாகி கிரஹாம் பெல்லின் உறவினர் ஆவார். அவர் ஹெலன் கெல்லரின் நிலையைப் புரிந்து கொண்டதோடு, பார்வைக் குறைபாடுள்ள அதே சமயம் ஹெலனுக்குப் பாடம் எடுக்கத் தகுதியுள்ள ஆனி சல்லிவன் என்பவரை உடன் அனுப்பி வைத்தார்.

சல்லிவன் வருகை

தன் ஆன்மாவின் பிறந்த நாள் என்று மார்ச்-5, 1887-ஆம் தேதியை ஹெலன் ெகல்லர் குறிப்பிடுகின்றார். காரணம், அந்தத் தேதியில் தான் அவரது ஆசிரியரும், தோழமையும் ஆன ஆனி சல்லிவன் அவரை முதலில் சந்தித்தார். அன்று முதல் ஐம்பது ஆண்டுகள் ஆனி சல்லிவன் ஹெலனோடு பயணித்தார். அவரது கல்வி, சுக, துக்கங்கள், சொற்பொழிவுப் பயணங்கள் என்று எல்லாவற்றிலும் உடனிருந்து உதவினார்.

ஆம்! ஆனி சல்லிவன் வரவு ஹெலன் ெகல்லருக்குப் புதிய வாழ்வைத் தந்தது. நல்ல ஆசிரியர்கள் அமைந்தால் குழந்தைகளின் வாழ்வில் புதுப் பிறப்பையும் காணச் செய்யலாம் என்பதற்கு இந்த ஆசிரியர் – மாணவர் உறவு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகும்.

ஆனி சல்லிவன் புரிந்துகொள்ள, கற்றுக்கொள்ளக் கடினப்பட்ட ஹெலனை முதலில் நன்கு புரிந்துகொண்டார். முறையான படிப்பை வழங்கும் முன்பு தனது விரல்களால் ஹெலனின் உள்ளங்கையில் எழுதி எழுத்துகள் மற்றும் வார்த்தைகளைப் பயிற்றுவித்தார். பொருட்களைத் தொட்டுப் பார்க்கச் செய்து அவற்றின் பெயரைப் புரிந்துகொள்ளச் செய்தார். ஒரு நாள் ஹெலனின் கையில் ஒரு குவளையைக் கொடுத்து அது ‘குவளை’ என்று உணரச் சொன்ன போது ஹெலன் எரிச்சலடைந்து குவளையைக் கீழே வீசி உடைத்தாள். அதாவது, அந்த ஏழு வயது வரை ஹெலனின் மனதில், உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபட்ட பெயர்கள் உண்டு என்று உணரும் பக்குவம் வரவில்லை என்பதைச் சல்லிவன் கண்டுகொண்டார்.

பொறுமையோடும், அதேசமயம் சில சமயங்களில் கண்டிப்போடும் கூட சல்லிவன் தன் கற்பித்தலைத் தொடர்ந்துள்ளார். ஹெலனின் கையில் தண்ணீரை ஊற்றி அது ‘நீர்’ என்பதை எடுத்துரைத்தார். இப்படி பொருட்களின் தன்மைகளைத் தொடுதல், நுகர்தல் மற்றும் உணர்தல் மூலம் உணர்த்தி அவருக்குக் கற்பித்தலை வழங்கினார். அதன் பிறகு பேசுவதற்கான பயிற்சியையும், கேட்பதற்கான பயிற்சியையும் வழங்கினார்.

1888-ஆம் ஆண்டு பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் சிறப்புப் பள்ளியில் சேர்ந்து ஹெலன் ெகல்லர் தனது முறையான கல்வியைத் தொடங்கினார். 1894-இல் காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளிக்குச் சென்றார். அங்கு சாரா புல்லர் அவர்களின் துணையோடு கேட்கும் திறனில், கவனிக்கும் திறனில் தேர்ச்சி பெற்றார். 1900-ஆம் ஆண்டில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் ராடக்ளிப் கல்லூரியில் தன் கலைப் படிப்பைத் தொடங்கினார். 1904-ஆம் ஆண்டு, தனது 24-ஆம் வயதில் கல்லூரிப் பட்டம் பெற்றவரானார். இவ்வாறு உலகின் முதல் பார்வையற்ற மற்றும் காதுகேளாத பட்டதாரியாக உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் பிரெய்லி முறையையும், கேட்பதற்கு தன்னிடம் பேசுபவர்களின் தொண்டை மற்றும் உதடுகளில் விரல்களை வைத்து உணர்வதன் மூலம் பயிற்சி எடுத்துக் கொண்டார் ஹெலன் ெகல்லர். கல்லூரிப் படிப்பின் மூலம் தன் கல்வித் தகுதியையும், சிந்தனை வளத்தையும் அதிகப்படுத்திக் கொண்டார்.

சமுதாயப் பணியில்

ஹெலன் ெகல்லர் உலகளவில் புகழ்பெற்ற பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் பரிமளித்தார். அமெரிக்க ஜனாதிபதிகள் பலரும் அவருக்கு ஆதரவு தந்தனர். உலகின் பல நாடுகளுக்கும் ஆனி சல்லிவனுடன் பயணித்தார். ஆனி சல்லிவன் இறப்புக்குப் பின்பு பாலி தாம்சன் என்ற பெண்மணி இறுதி வரை உடனிருந்தார். ஜப்பான் நாடு பலமுறை அவரை வரவேற்று உபசரித்தது. ஹெலன் ெகல்லர் பொதுவுடைமைக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். தொழிலாளர்கள் நலம் பேணும் இயக்கங்களுடன் அதிகத் தொடர்பும் கொண்டிருந்தார். தொழிலாளர்களை வதைக்கும் பணக்காரர்களைச் சாடினார். இவரது பல கட்டுரைகள் புரட்சிகரமாக அமைந்ததால் ராக்பெல்லர் போன்ற பணக்காரர்களால் புறக்கணிக்கப்பட்டார். ஆயினும் இறுதி வரை தனது கருத்துகள் மற்றும் செயல்பாடுகளில் நிலைத்து நின்றார்.

அரசியல் ரீதியிலான இவரது கருத்துகள் மற்றும் எழுத்துகள் பல பத்திரிகைகளில் விமர்சிக்கப்பட்டாலும் உலகமெங்கும் தன்னம்பிக்கையூட்டும் ஒரு சிறந்த பெண்மணியாக அறியப்பட்டார்.

இவரது நூல்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியதோடு நல்ல சிந்தனைகளையும், தூண்டுதல்களையும் கொடுத்தது.

22 வயதில் அவர் எழுதிய “The Story of my Life” – “எனது வாழ்க்கைக் கதை” என்ற நூல் மிகப் புகழ் பெற்றது.

1988-ஆம் ஆண்டு “நான் வாழும் உலகம்” என்ற பொருள்படும் “The World I Live” என்ற நூலை எழுதினார்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட ஹெலன் ெகல்லர் “எனது மதம்” என்ற பொருள்படும் “My Religion” என்ற நூலும், இதன் திருத்திய மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பான “Light in My Darkness” அதாவது “என் இருளில் காணும் ஒளி” என்ற நூலும் புகழ்பெற்றதாக விளங்கியது.

இப்படி பனிரெண்டு நூல்களை ஹெலன் ெகல்லர் எழுதினார். 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் பல்வேறு நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களிலும் எழுதியுள்ளார்.

தன்னுடைய நுகரும் தன்மையாலும், காலடி ஓசையைக் கேட்கும் திறனாலும், சப்தங்களைக் கூர்ந்து கவனிப்பதாலும், என்ன பொருள்? எங்கே இருக்கிறோம்? யார் வருகின்றார்கள்? என்பதை ஹெலன் ெகல்லர் எளிதில் கண்டுபிடித்துவிடுவாராம். இவரது இவ்வளவு நுண்ணறிவைக் கண்ட பல மக்கள் உண்மையில் இவர் பார்வையற்றவர்தானா? காது கேட்காதவர் தானா? என்றுகூட சந்தேகப்பட்டதுண்டு. பல சமயங்களில் இவரது அபார நினைவாற்றலும், மனிதர்களை நினைவில் வைத்துக் கொள்வதில் காட்டிய தெளிவும், குரலை வைத்து எளிதில் கண்டறியும் திறனும் அதிசயிக்க வைத்ததாகக் கூறப்படுகின்றது.

பொது இடங்களில் பயணிக்கும் போது பல சமயம் எங்கே இருக்கிறோம்? அங்குள்ள இயற்கைச் சூழ்நிலைகள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் மிக நுணுக்கமாகக் கூறி, இவர் ஆச்சரியப்படுத்துவாராம். ஹெலன் ெகல்லரோடு பழகியவர்கள் மற்றும் பயணித்த பார்வையுள்ள பலரும் தாங்கள் பார்க்காததையும் கூட ஹெலன் கவனித்துக் கூறியுள்ளதைப் பல்வேறு சம்பவங்களில் காணமுடிகின்றது.

இதற்கு முக்கியக் காரணம், தனக்குப் பார்வையில்லை என்பதாலும், கேட்கும் திறன் இல்லை என்பதாலும், தனது உணரும் திறனை, நுகரும் திறனை, தொடு திறனைப் பல மடங்கு கூர்மையாக்கி வாழ்ந்தார் ஹெலன் ெகல்லர் என்கிறது அவரது வரலாறு. இதுவரை பயணித்துள்ள மாற்றுத் திறனாளிகளில் இன்றுவரை சிறப்பான சாதனையாளராகவே ஹெலன் ெகல்லர் பார்க்கப்படுகின்றார்.

சேவையும் நல்லெண்ணமும்

பார்வையற்றோருக்கான அமெரிக்க நிறுவனம் (American Foundation of the Blind) என்ற நிறுவனத்தைத் தொடங்கிப் பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தினார் ஹெலன் ெகல்லர். உலகம் எங்கும் பயணித்து இந்த நிறுவனத்துக்காகவும், இதுபோன்ற பல நிறுவனங்களுக்காகவும் பொருளாதார உதவிகளைப் பெற்று வந்தார்.

இவரது உலகளாவிய பயணத்தால் மாற்றுத் திறனாளிகள் உத்வேகம் பெற்றனர். தங்களாலும் சாதிக்க முடியும் என்ற எண்ணங்களில் வலுப்பெற்றனர். ஹெலன் ெகல்லரின் சொற்பொழிவுகள் மற்றும் அவரது நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட உதவிகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுக்கு உத்வேகம் அளித்தது.

1911-ஆம் ஆண்டு ஹெலன் ெகல்லர் அமெரிக்க தேசம் பற்றி எழுதிய வார்த்தைகள் இங்கு நினைவு கூறப்பட வேண்டியவையாகும்.

“அனைத்து மக்களின் வாழ்வாதாரக் கட்டமைப்பையும் சிலர் கொண்டிருப்பதால் இந்த நாடு பணக்காரர்களுக்காகவும், நிறுவனங்களுக்காகவும், வங்கியாளர்களுக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களுக்காகவும் நிர்வகிக்கப்படுகின்றது. ஆனால், மனித குலத்தில் பெரும்பாலான மக்கள் உழைக்கும் மக்களாவார்கள். இவர்களது வாழ்வாதாரமும், உரிமைகளும், கட்டுப்பாடுகளும் இவர்களுக்குப் பயனில்லாதவைகளாக இருக்கும்போது, ஆண்களின் உரிைமயோ, பெண்களின் உரிமையோ நம்மிடம் இருக்க முடியாது. மனித குலத்தின் பெரும்பாலான மக்கள் தொழில்முறை ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுமாறு சிறிய அளவிலான பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். இது வேதனையான ஒன்றாகும்” என்று கூறுகின்றார் ஹெலன் ெகல்லர்.

அதேசமயம், தனி மனித வாழ்வில் மனிதர்கள் எல்லையற்ற ஆற்றல்களைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பின்வரும் கூற்றின் மூலம் எடுத்துரைக்கின்றார்.

“ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போது, ஏராளமான ஆற்றல்களின் தொகுப்புகளோடு பிறக்கின்றார்கள். குழந்தைப் பருவத்தில் இந்த ஆற்றல்களின் வலிமையை நாம் எல்லோருமே உணர்கின்றோம், பயன்படுத்துகின்றோம். ஆனால், காலப்போக்கில் ஆற்றல்கள் பற்றிய உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நம்மில் பலரும் இழந்துவிடுகிறோம். அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.

பலர் தங்கள் வாழ்க்கை முழுவதுமே, இந்த உள்ளுக்குள் இருக்கும் ஆற்றல்களைக் கண்டுகொள்ளாமல், வெளிப்புறச் சக்திக்காகப் பாடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்துவிடுகின்றார்கள். நானும், சில காலங்கள் அப்படித்தான் வாழ்ந்தேன். ஆனால், ஒரு சமயம் நான் என் உடலுக்குள் இருக்கும் அத்தனை ஆற்றல்களையும், உணர முற்பட்டேன். அந்த ஆற்றல்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளைக் கண்டறிந்தேன். தேங்கிப் போயும், சோர்ந்து போயும் கிடந்த எனது பல ஆற்றல்கள் உயிர்பெற்றன. அதன்பிறகு, நான் நினைத்த பல செயல்களையும் மிக எளிதாகச் செய்து முடித்தேன்.

மனிதர்கள் ஒவ்வொருவரும், தங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவதையே, முதல் இலக்காகக் கொண்டு உழைக்க வேண்டும். நாமே, அளவற்ற மதிப்பு மிக்க சக்தியுள்ளவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் போது மகத்தான காரியங்களை மிக எளிதாக நாம் செய்து முன்னேறுகிறோம்” என்கிறார்.

இறுதியாக, ஆனால் ஹெலன் ெகல்லரின் மனிதநேயத்தை விளக்கும் இந்தச் சொற்றொடர் அவரது சமூக உணர்வை வெளிக்காட்டுகின்றது.

“நான் ஒரு சமயம் பார்வையற்றவர்களின் நிலைமைகளை விசாரிக்க ஒரு ஆணையத்தில் நியமிக்கப்பட்டேன். பார்வையின்மை என்ற ஒன்றுதான் இந்த உலகில் மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட கொடுமை என்று நான் அதுவரை எண்ணியிருந்தேன். ஆனால் தவறாகச் செயல்படும் பார்வையற்ற நிறுவனங்களை நான் கண்டபோது, ‘‘பார்வையின்மைக் கொடுமையை விட சமூகப் பார்வையின்மைக் கொடுமையானது’’ என்று உணர்ந்தேன். முதலாளிகள் பலரின் சுயநலம் மற்றும் பேராசை காரணமாக எண்ணற்ற மக்கள் ‘வறுமை’ என்னும் கொடுமையால் உந்தப்பட்டு ஆண்களும், பெண்களும் வெட்கக்கேடான வாழ்க்கைக்கு உந்தப்படுவதைக் கண்டேன். இது பார்வையின்மை என்ற உடல் குறைபாட்டைவிடக் கொடுமையானது” என்று வெதும்புகிறார் ஹெலன் ெகல்லர்.

1915-ஆம் ஆண்டில் மனநலக் குறைபாடுகள் உள்ள குழந்தைக்கு உயிர் காக்கும் மருத்துவ நடைமுறைகளை மறுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இவர்களது வாழ்க்கை பயனற்றது அல்ல. மற்றும் இப்படி ஒதுக்கினால் அவர்கள் குற்றவாளிகளாக மாறக்கூடும் என்றும் எடுத்துரைத்தார்.

1946 முதல் 1957-ஆம் ஆண்டு வரை 35 நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1961-இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். 1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அமெரிக்காவின் மிக உயர்ந்த குடிமக்களின் கவுரவ விருதான ஜனாதிபதி பதக்கத்தை, அன்றைய ஜனாதிபதி லிண்டன். பி. ஜான்சன் வழங்கினார். 1968-ஆம் ஆண்டு சூன் மாதம் 1-ஆம் தேதி தூக்கத்தில் மறைந்தார்; இவ்வுலக வாழ்வில் விடைபெற்றார்.

தனது குறைபாடுகளை நிறைகளாக எடுத்துக்கொண்டு, ஒரு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்த ஹெலன் ெகல்லர் போற்றப்பட வேண்டியவர். ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை விதையை எல்லா மனிதர்களுக்கும் வழங்கும் முன்மாதிரியாக இவர் திகழ்கின்றார். சிறு சிறு தோல்விகளில், வேதனைகளில் துவண்டுவிடும் போது ஹெலன் ெகல்லரின் வாழ்வும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும் நமக்கும், பிறருக்கும் வாழ்வின் அர்த்தத்தைப் புரிய வைக்கட்டும்.