சமூகப் பார்வை – 8

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

அரசியல் கட்சிகள் வீசிச் சென்ற தேர்தல் வாக்குறுதிகளின் பிரமிப்பிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை. திகைத்துப் போய் நிற்கிறோம். ஆனால், சமூகத்துக்குத் தேவையான இரண்டு வாக்குறுதிகளுக்கு, பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுக்கவில்லை என்பது நம் வருத்தம். அது என்ன இரண்டு வாக்குறுதிகள் என்கிறீர்களா?

மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான சூழல் இப்போது நிலவுகிறதா என யோசித்துப் பாருங்கள். நலத்தினையும் வாழ்வாதாரத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது மது. அடுத்து உள்ளாட்சித் தேர்தல். உங்கள் தெருவிளக்கு எரியவில்லை, சாக்கடை அடைப்பு உடனடியாக நிவர்த்தி செய்யப்படவில்லை, குடிநீர் வரவில்லை என்று உங்களால் யாரிடமாவது உரிமையோடு புகார் சொல்ல முடிகிறதா? இதற்குக் காரணம் உள்ளாட்சித் தேர்தல்களை முறையாக, உரிய காலத்தில் நடத்தாததே. பூரண மதுவிலக்கு மற்றும் ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின்போது பேசவில்லை. உள்ளாட்சித் தேர்தல் என்பது அடித்தட்டு ஜனநாயகம்.

ஏன் உள்ளாட்சித் தேர்தல்?

சுமார் 5 லட்சம் பேரின் (வாக்காளர்கள்) பிரதிநிதியாக ஒரு எம்.பி.; சுமார் ஒரு லட்சம் பேருக்கான பிரதிநிதியாக ஒரு எம்.எல்.ஏ.; ஆனால் 500 பேரின் பிரதிநிதியாக ஒரு கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர். இதில் நீங்கள் யாரை எளிதில் நெருங்கமுடியும்? சிந்தித்துப் பாருங்கள். அதனால்தான் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் நடக்கவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். கிராமப் பஞ்சாயத்துக்களின் அருமையினை நம்மில் பலர் உணர்ந்திருக்கவில்லை. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாகச் செயல்படமுடியும்.

இந்தியாவில்

பஞ்சாயத்து அமைப்புகள்

இந்தியச் சுதந்திரத்துக்குப்பின், அரசு நிர்வாகத்தில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கவேண்டுமென்று காந்தியடிகள் விரும்பினார். அது குறித்துத் தொடர்ந்து பேசி வந்தார். அதனடிப்படையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளின் கீழ் அமைந்த பிரிவு 40 ஆனது, “மாநில அரசுகள் கிராமப் பஞ்சாயத்துகளை அமைத்து, அவைகளை உள்ளூர் சுயாட்சி அமைப்புகளாக ஏற்படுத்தலாம்” எனப் பரிந்துரைத்தது.

1989ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி, “இந்திய மக்களுக்கு நாம் அதிக அளவு ஜனநாயகத்தையும், அதிகாரத்தையும் உறுதிப்படுத்துவோம்” எனக்கூறி, 64வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தமாக உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய சட்டக்கூறினை மக்களவையில் அறிமுகப்படுத்தினார். ஆனால் மாநிலங்களவையில் இது தோற்கடிக்கப்பட்டது. ராஜீவ்காந்தியின் மறைவுக்குப்பின், பொறுப்பேற்ற நரசிம்மராவ் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசியலமைப்பு சார்ந்த அதிகாரம் அளிப்பது குறித்த 73ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை , 1992 டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தி, 1993 ஏப்ரல் 23ஆம் தேதி நடைமுறைப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து எல்லா மாநில அரசுகளும் பஞ்சாயத்து அமைப்புகளை ஏற்படுத்துவதும் அவற்றிற்குக் குறைந்தபட்ச அதிகாரம் அளிப்பதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.

தமிழகத்தில்

தமிழகத்தைப் பொறுத்த வரை, தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் 1994ன் படி, பஞ்சாயத்து நிர்வாகம் என்பது கிராமப்புறங்களில் மூன்றடுக்கு நிர்வாக முறையாக இருக்கிறது. கிராமப் பஞ்சாயத்து, ஒன்றிய பஞ்சாயத்து, மற்றும் மாவட்டப் பஞ்சாயத்து என மூன்று நிலைகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மூன்று நிலைகளும் சேர்ந்ததே பஞ்சாயத்துகள் ஆகும்.

நம்நாட்டில் 2.4 இலட்சத்துக்கும் மேலான பஞ்சாயத்து அமைப்புகள் உள்ளன. இவற்றை 29 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பிரநிதிகள் நிர்வகித்து வருகின்றனர். நமது நாட்டின் பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையானது உலகின் 97 நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகமாகும். இதற்கெல்லாம் மேலாக, உள்ளாட்சி அமைப்புகளில், 15 இலட்சம் பெண் பிரதிநிதிகள், 5 இலட்சம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரதிநிதிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12,524 கிராம பஞ்சாயத்துகளும், 385 ஒன்றிய பஞ்சாயத்துகளும், 31 மாவட்ட பஞ்சாயத்துகளும் உள்ளன. நகர்ப்புறங்களில் 15 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள் செயல்படுகின்றன. இவை அனைத்தையும் சேர்த்தால் வார்டு உறுப்பினர் முதல் மாநகராட்சி மேயர் வரையிலான பொறுப்புகளில் சுமார் 1.20 இலட்சம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இன்றைய நிலையில், கடந்த 2019ஆம் வருடம் 27 மாவட்டங்களில் மட்டும் கிராமப்பகுதிக்கான தேர்தல் நடைபெற்றது. மேலும் 11 மாவட்டங்களில் சுமார் 3500 கிராம பஞ்சாயத்துகளுக்குத் தேர்தல் நடத்தப்படவேண்டும். இது தவிர நகர்ப்புற பஞ்சாயத்துகள் அனைத்துக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இவற்றில் 5 ஆண்டுக் காலம் தேர்தலே இல்லாமல், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் போனது மக்களாட்சியில் அவல நிலையாகும்.

விரும்பவில்லை

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் பெரும் ஆர்வம் கொள்வதில்லை. முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் திக்விஜய்சிங் ஒரு நேர்காணலின் போது “எந்தச் சட்டமன்ற உறுப்பினரும் தமது அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுடன் பங்கிட விரும்புவதில்லை. பஞ்சாயத்து அமைப்புகள் வலிமைப் படுத்தப்படாததற்குக் காரணம் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான எதிர்மறை மனமேயாகும்” எனக் கூறியதை நினைவில் கொள்வது அவசியம்.

மாற்றங்கள்

73ஆவது சட்டத்திருத்தம் ஏற்படுத்தப்பட்ட பின், ஏறக்குறைய எல்லா மாநிலங்களும் அந்தச் சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், புதிய பஞ்சாயத்துச் சட்டத்தை அந்தந்த மாநிலங்களில் இயற்றின. இதன்மூலம் எல்லா மாநிலங்களிலும் மூன்றடுக்கு அரசாங்க முறை, மாநில நிதி ஆணையம், உள்ளாட்சிகளுக்குரிய 29 துறைகள், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரின் தலைமைத்துவம், மாநில தேர்தல் ஆணையம், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் கிராமசபை அமைப்பு எனப் பல முற்போக்கான அதிகாரமளிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பெரும்பாலான மாநிலங்களில் பஞ்சாயத்து அமைச்சகம் தனியாக ஏற்படுத்தப்பட்டது. மத்திய அரசிலும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஓர் தனி அமைச்சரின் மேற்பார்வையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

கேரளம், மேற்குவங்கம், கர்நாடகம், சிக்கிம், ம.பி. எனச் சில குறிப்பிடத்தகுந்த மாநிலங்கள் பஞ்சாயத்து அமைப்புகளை ஆக்கப்பூர்வ வளர்ச்சி அமைப்புகளாக மாற்றி வந்துள்ளது பாராட்டத்தக்கது.

தேர்தல் இல்லாததால் பாதிப்பு

சமூக நீதி ரீதியாகப் பார்த்தோமென்றால் பஞ்சாயத்துகளில் 50 சதவிகிதம் பெண்களும், சுமார் 24 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரும் பதவிக்கு வர இட ஒதுக்கீடு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தாததால் அவர்களுக்கான தலைமைத்துவ வாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாததால் குடிநீர் விநியோகம், கழிவு நீர் மற்றும் துப்புரவு பேணுதல் போன்ற அடிப்படை சாதாரணப் பிரச்சனைகளில் ஏற்படும் இடையூறுகளைக் கூட யாரிடம் சொல்வது என்று மக்கள் குழம்பி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் கிராமங்களுக்கான மத்திய அரசின் நிதி கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பசுமை வீடுகள் கட்டுதல், கழிப்பறைகள் கட்டுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் போன்ற அரசுத் திட்டங்களைச் சரியான நபர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் பெரிய இடைவெளி காணப்படுகிறது.

பெரும்பாலான கிராமங்களில் கிராமசபைக் கூட்டம் பெயரளவில் நடைபெறுகிறது. மக்களின் தேவைகள் குறித்து விவாதிக்கவேண்டிய கிராமசபைக் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் மக்களும் ஆர்வம் காண்பிப்பதில்லை.

என்ன செய்யவேண்டும்?

“சுதந்திரம் அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் பெற்றிருக்கவேண்டும். அவை ஒவ்வொன்றும் சுயச் சார்புடனும், தனது தேவைகளைப் பூர்த்திச் செய்யும் திறனுடனும் தேவைப்பட்டால் தன்னுடைய நலத்தைப் பாதுகாக்க உலகையே எதிர்த்து நிற்கும் அளவுக்கும் மேம்பட வேண்டும்” என்றார் மகாத்மா காந்தியடிகள்.

பஞ்சாயத்து அமைப்புகள் தமது முழுத்திறனை மக்களின் முன்னேற்றத்துக்கு அர்ப்பணிக்க, அவைகளுக்குப் போதுமான சுதந்திரம், பணம், பணிகள், பணியாளர் (Freedom, Fund, Functions & Functionaries) ஆகியவை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அரசின் முடிவுகளைத் தீர்மானிக்கும் உரிமையும், அதனைச் செயல்படுத்தும் பொறுப்பும் அடித்தள அளவில் வழங்கப்படுதல் வேண்டும். இந்நிலைதான் உண்மையான அதிகாரப்பரவல் ஆகும். அதிகாரப்பரவலால் மட்டுமே அடித்தள ஜனநாயக அமைப்புகள் ஏற்றம் பெறும்.

பஞ்சாயத்து அமைப்புகள் ஆற்ற வேண்டிய பணிகளை மாநில அரசுகள் இணை அமைப்புகளை உருவாக்கி, அதிகாரிகளின் மூலம் செயல்படுத்தும் போக்கு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை மாறவேண்டும்.

உள்ளாட்சிகளுக்கு 29 துறை சார்ந்த அதிகாரங்களைத் தரவேண்டும் எனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் இதனடிப்படையிலேயே அதிகாரம் அளிக்கப்பட்டன.

ஆனால் தமிழ்நாட்டில், தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 257வது பிரிவு அரசாங்க அறிவிக்கை (Governement Notification) மூலம் தரப்படும் எனக் குறிப்பிடுவதன் மூலம் தமிழக அரசு, பஞ்சாயத்து அமைப்புகளை மாநில அரசின் கீழ் இயங்கும் ஓர் அங்கமாகக் கருதுவது தெளிவாகிறது. பெரும்பாலான மாநிலங்களில் (தமிழகம் உட்பட)  இவ்வதிகாரம் மாவட்ட        ஆட்சியர் அல்லது ஏதோ ஒரு அதிகாரியிடம் இருப்பது மக்களாட்சித் தத்துவத்திற்கே எதிரானதாகும்.

அதிகாரப்பரவல் நிகழ்வுகளில், மத்திய மாநில அரசுகளுடன், தமக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது என்பதை மக்கள் உணரவேண்டும். இதன் தேவைக்கான குரல் மக்களிடமிருந்து மிகவலிமையாக எழ வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக, நியாயமாக நடத்துவதன் மூலமே அடித்தட்டு ஜனநாயகம் வலுப்பெறும்.