முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்!

டாக்டர். மெ. ஞானசேகர்

தாமஸ் லிங்கன் மற்றும் நான்சி ஹாங்ஸ் லிங்கன் தம்பதிகளுக்கு 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தவர்தான் ஆபிரகாம் லிங்கன். தச்சுத் தொழில், தோட்ட வேலை, மரம் அறுத்தல் என்று எந்த வேலை கிைடத்தாலும் அதைச் செய்து, வருமானம் பார்த்துக் குடும்பத்தை நடத்தினார் தாமஸ் லிங்கன்.

நான்சி ஒரு அன்பான மனைவி. படிப்பதில் ஆர்வம் கொண்டவர். இளம் வயதிலேயே தன் மகள் சாராவுக்கும், மகன் லிங்கனுக்கும் அடிப்படைக் கல்வியைக் கற்றுத் தந்தவர். இவர்களது குடும்பம் கென்டகி மாநிலத்திலிருந்த ஹட்சன்வில்லே என்ற ஊரில் வசித்து வந்தது.

1816-ஆம் ஆண்டு தங்களது வாழ்க்கையை இன்னும் சிறப்பாக வளப்படுத்திக் கொள்ள தாமஸ் லிங்கனின் குடும்பம் இன்டியானாவுக்குச் சென்றது. அங்கு ஒரு குறிப்பிட்ட நிலத்தை வாங்கிக் கொண்டு, தனது பிள்ளைகள், மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் குடும்பத்தோடு வாழ்ந்தார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கை சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் கால்நடைகளிலிருந்து பரவும் ‘பால் நோய்’ என்ற ஒரு வியாதி பரவியது.

கொடிய இந்த நோயால் நான்சி லிங்கனின் சகோதரர் மற்றும் அவரது மனைவியும் இறந்து போனார்கள். சில நாட்களில் நான்சி லிங்கனும் இறந்து போனார். பதினோரு வயது மகள் சாரா, ஒன்பது வயது மகன் ஆபிரகாம் லிங்கன் இருவரும் தாயையும், உறவுகளையும் இழந்து மீளாத் துயரில் மூழ்கினார்கள்.

சிறிய குழந்தைகளை வைத்துக் கொண்டு, இவர்களுக்கு உணவு தந்து கவனித்துக் கொள்ளச் சிரமங்களை அனுபவித்தார் தாமஸ் லிங்கன். ஆரம்பத்தில் மறுமணம் வேண்டாம் என்று இருந்த தாமஸ் லிங்கன், பிள்ளைகளுக்காக மறுமணம் செய்து கொண்டார். உண்மையிலேயே அந்தப் பெண் இந்தக் குழந்தைகளை மிகுந்த அன்போடும், அக்கறையோடும் கவனித்துக் கொண்டார்.

தாயை இழந்து தவித்த குழந்தைகளுக்கு இந்த இரண்டாம் தாயின் அன்பும், வழிகாட்டுதலும் பெரிதும் உதவின. குறிப்பாக ஆபிரகாம் லிங்கனை அதிகமாக நூல்கள் வாசிக்க வேண்டி ஊக்கமூட்டினார் இந்தத் தாய். குடும்பச் சூழல் காரணமாக கிடைத்த வேலைகளை எல்லாம் ஆபிரகாம் லிங்கன் செய்து கொண்டிருந்தார். ஆயினும் பலவற்றையும் தேடிப் படித்து அறிவாளியாக வேண்டும் என்று இடைவிடாது ஊக்கம் தந்தார் இவரது சிற்றன்னை.

ஆபிரகாம் லிங்கன் முறையான கல்வியை ஒரு ஆண்டு மட்டுமே பள்ளிக்குச் சென்று கற்றிருந்தார். தன்னுடைய அனைத்துப் பாடங்களையும் படிப்பையும் வீட்டிலிருந்தே கற்றுக் கொண்டவர்தான் ஆபிரகாம் லிங்கன்.

ஒரு சமயம் தன் வீட்டின் அருகில் வசித்து வந்த பண்ணையார் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அவர் நிறைய நூல்களை வைத்திருந்தார். அவரிடமிருந்து ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்று நூலை வாங்கி வந்து படித்தார். இவ்வாறு வாசித்துக் கொண்டிருந்த போது ஆபிரகாம் லிங்கனின் தந்தை ஒரு அவசர வேலையைக் கொடுத்தார்.

எனவே, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வீட்டின் கூரையில் சொருகி வைத்துவிட்டு, தன் தந்தை கூறிய வேலையைச் செய்ய சென்றுவிட்டார். அப்போது திடீரெனப் பெய்த கனமழையால் புத்தகம் முழுவதும் நனைந்து போய்விட்டது. வீட்டிற்கு வந்து பார்த்த போது புத்தகம் மோசமாகியிருந்தது. வெயிலில் உலர்த்திவிட்டு அதைப் புத்தக உரிமையாளரிடம் எடுத்துச் சென்றார். புத்தகம் பழுதுபட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் புத்தகத்தின் விலையைத் தந்து விடுவதாகச் சொன்னார்.

புத்தக உரிமையாளர், “நீ எனக்குப் பணம் தரவேண்டாம். அதற்கு ஈடாக மூன்று நாள் என் பண்ணையில்  வேலை செய், புத்தகத்தையும் நீயே எடுத்துக்கொள்” என்று கூறினார். புத்தகங்கள் படிப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்த லிங்கன் ‘சரி’ என்று மகிழ்ச்சியோடு இதை ஏற்றுக்கொண்டார். மூன்று நாட்கள் அவரது பண்ணையில் வேலை செய்துவிட்டு “ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கை வரலாறு” நூலைக் கொண்டு வந்து படித்தார்.

இந்த நூலை வாசிக்கும் போது பெரிதும் உத்வேகம் பெற்றார். ஜார்ஜ் வாஷிங்டன் போல உழைத்து, முன்னேறி அமெரிக்க அதிபராக வரவேண்டும் என்ற ஆசை அப்போதே அவரது உள்ளத்தில் பதிந்துவிட்டது. அச்சமயம் நண்பர் ஒருவர் ‘ஆபிரகாம் லிங்கன் எதிர்காலத்தில் என்ன ஆகப் போகின்றாய்?’ என்று கேட்ட போது, “அமெரிக்க ஜனாதிபதி ஆகப் போகின்றேன்” என்ற பதிலைக் கூறினார். கேட்ட நண்பர் சிரித்துக் கொண்டே சென்றார். இதே கேள்வியையும், பதிலையும் பலரிடம் ஆபிரகாம் லிங்கன் பகிர்ந்து கொண்டதாக அவரது வாழ்க்கைக் குறிப்புகள் கூறுகின்றன.

இளமையும் நட்பும்

பதினேழு வயது நிரம்பிய ஆபிரகாம் லிங்கன் நல்ல உடல் பலத்தோடு திகழ்ந்தார். ஆறு அடிக்கு மேற்பட்ட உயரமும், நீண்ட கைகளும், கால்களும் அவரது கடுமையான, உழைப்பால் உயர்ந்த உடலைக் காட்டின. மரங்களை வெட்டுவது, படகு ஓட்டுவது, விவசாயப் பணிகளைச் செய்வது, தானிய மூட்டைகளை எடுத்துச் சென்று விற்பது என்று பல்வேறு வேலைகளையும் செய்து வந்தார் லிங்கன். அவர் எந்த வேலையை எடுத்தாலும் அதை நேர்த்தியாகவும், நேர்மையாகவும் செய்வதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தார். இதனால் அவரது உழைப்பைக் கண்டவர்களுக்கு அவர்மீது நல்ல மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் உருவானது.

அப்பகுதியில் வசித்து வந்த வசதியான ஜென்ட்ரி என்பவரோடு லிங்கனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் இவரைத் தன் தொழிலில் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். ஜென்ட்ரியின் வியாபாரம் செழிக்க உதவினார். இப்படிச் சில காலம் சென்றது.

இந்நிலையில் தாமஸ் லிங்கன் தன் இருப்பிடத்தை இல்லினாய் என்ற ஊருக்கு மாற்றினார். அங்கு ஒரு வீட்டைக் கட்டிக் குடியேறினார்கள். ஒரு சமயத்தில் தாமஸ் லிங்கனால் வேலை செய்ய இயலவில்லை. ஆபிரகாம் லிங்கனே தன் உழைப்பால் குடும்பத்தைக் காப்பாற்றினார்.

அப்பகுதியில் வாழ்ந்த ஒரு நீதிபதியைச் சந்திக்கும் வாய்ப்பு ஆபிரகாம் லிங்கனுக்குக் கிடைத்தது. அவர் லிங்கனின் உழைப்பு மற்றும் குணநலன் பற்றி அறிந்தவர். எனவே, லிங்கனிடம், தனது வீட்டின் தோட்டத்தில் சில வேலைகள் உள்ளது; அவற்றைச் செய்திட ஆட்களை அழைத்து வந்து செய்து தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

“நிச்சயமாகச் செய்து முடிக்கின்றேன்” என்று கூறிய ஆபிரகாம் லிங்கன் மறுநாள் ஒரே ஆளாக வந்து அத்தனை வேலைகளையும் சில நாட்களில் செய்து முடித்தார். அந்த நீதிபதியிடம் பெற்ற நன்மதிப்புக் காரணமாக அவரிடம் சில சட்டப் புத்தகங்களைப் பெற்று வந்து படித்தார். இச்சம்பவம் மூலம் அவருக்கு வழக்கறிஞராக வேண்டும்; ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் உருவானது.

நியூ ஆர்லியன்ஸ் சென்று ஒரு வியாபாரியிடம் வேலையில் அமர்ந்தார். அங்கே ஒரு சந்தையில் அவர் கண்ட காட்சி அவரை உலுக்கியது. அதாவது அங்கிருந்த மேடையில் ஆப்பிரிக்க தேசத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல மனிதர்கள் அடிமைகளாக நின்று கொண்டிருந்தார்கள்.

கறுப்பர்களான இவர்களை ஆடு, மாடுகளை விலைபேசி வாங்குவது போல வாங்கினார்கள்; விலை பேசினார்கள். அந்த மனிதர்களை அடித்தும், துன்புறுத்தியும் உடல் வலிமையைப் பரிசோதனை செய்தார்கள். இப்படி மனிதர்களை அடிமைகளாக விற்பதா? என்று மனதில் வேதனைப்பட்டார் லிங்கன். இச்சூழலில் ஒரு ெபண் கைக்குழந்தையுடன் நின்றாள். அவளது கணவனை மட்டும் ஒருவர் விலைக்கு வாங்கினார். அந்தப் பெண் கைக்குழந்தையோடு வேறு ஒரு நபருக்கு விற்கப்பட்டாள். மிகுந்த வேதனையோடு தன்னையும், தன் கணவனையும் பிரித்துவிட்ட சோகத்தில் அப்பெண் கதறி அழுதாள். அதைக் கவனிக்கவோ, பரிசீலிக்கவோ அங்கு யாருமில்லை. இதைக்கண்ட லிங்கன் மிகுந்த வருத்தம் அடைந்தார்.

அன்று இரவு அவருக்குத் தூக்கம் வரவில்லை. மறுநாள் காலையில் எழுந்ததும் தன் நண்பரிடம் “இதற்கு விடிவு இல்லையா?” என்று புலம்பினார். நண்பர், “இது பல ஆண்டுகளாக நடப்பதுதான். எனவே இதைப் பெரிதுபடுத்திக் கவலைப்படாதே” என்று ஆறுதல் சொன்னார்.

ஆபிரகாம் லிங்கன் அவரிடம், “நிச்சயமாகச் சொல்லுகின்றேன், ஒரு காலம் வரும், நானே இதை மாற்றிக் காட்டுவேன். இம்மக்களுக்கு விடுதலை தருவேன்” என்று கூறினார். இதைக்கேட்ட அந்த நண்பர் தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

இதற்கிடையில் ஒரு வாய்ப்பு வர அஞ்சலகம் ஒன்றில் வேலை செய்தார் ஆபிரகாம் லிங்கன். இவரது நேர்மை, அன்பான பேச்சைக் கண்டு பலரும் நண்பர்களாக இருந்தனர். எனவே, இல்லினாய்ஸ் நாட்டுச் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட இவரை வேண்டினர், இவ்வாறு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1834-இல் சட்டமன்ற உறுப்பினராகினார். அதேசமயம், நில அளவை செய்யும் பணியையும் தனது வாழ்க்கைக்காகச் செய்து வந்தார். சட்ட நுணுக்கங்களில் ஆர்வம் கொண்டிருந்த லிங்கன், சட்டத்தை முறையாகப் பயின்று வழக்கறிஞராகவும் தன்னை உயர்த்திக் கொண்டார்.

ஏழை, எளியவர்களுக்காக வாதாடி வெற்றியை அவர்களுக்குப் பெற்றுத்தந்தார். சில வழக்குகள் வரும் போது இருதரப்பினரையும் அழைத்துப் பேசித் தீர்த்து வைத்தார். இதனால் இருவருக்கும் ஏற்படக்கூடிய தேவையற்ற செலவுகளைக் குறைக்க உதவினார். ஒரு சமயம் ஒரு பெரிய பணக்காரர் தன் நண்பர் ஒருவர் வாங்கிய பணத்தை தரவில்லை என்று வழக்குத் தொடுக்க வந்தார். நண்பர் பெற்ற ெதாகையைவிட வழக்கு மன்றச் செலவு அதிகமாக வருமே! என்று கேட்ட போது, ‘அதுபற்றிக் கவலையில்லை’ என்று கூறி, அதற்கான பணத்தைக் கொடுத்தார். பணத்தைப் பெற்ற ஆபிரகாம் லிங்கன், பணக்காரனிடம் பணம் பெற்றவரை அழைத்து விசாரித்தார். அவரோ மிகுந்த வறுமையில் இருந்தார். எனவே, பெற்ற பணத்தில் பாதியைக் கொடுத்து பணக்காரரிடம் ஒப்படைக்கச் சொன்னார். காரணம், பணக்காரரிடம் அந்த மனிதர் பெற்றிருந்த பணமும் அவ்வளவுதான். பணத்தைப் பெற்றுக்கொண்ட பணக்காரர் வழக்கிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். இதுபோன்ற பல்வேறு சூழல்களில் லிங்கன் வழக்கறிஞராக உதவியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் நிர்வாகி

சொந்த வாழ்க்கையில் தனக்கு துணையாக வர, அவர் ‘ரட்லஜ்’ என்ற பெண்ணைக் காதலித்தார். ஆனால், அந்தப் ெபண் வேறு ஒருவரைத் திருமணம் செய்ததோடு, சில நாட்களில் இறந்து போனார். இரண்டாவதாக ஒரு பெண்ணை விரும்பினார். அதுவும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக
ஒரு பணக்காரப் பெண்மணியான ‘மேரி டாட்’ என்பவரோடு ஆபிரகாம் லிங்கனின் திருமணம் நடந்தது.

லிங்கனுக்கும் மேரி டாட்டுக்கும் அவ்வப்போது உரசல்கள் ஏற்படும். மேரி டாட் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்ததால், சுக, போகமாகவும், நேர்த்தியான உடையணியவும், தனவந்தர்கள் கூடும் அரங்குகளில் விருந்துகளில் பங்கெடுக்கவும் ஆசைப்பட்டார். பல சமயம் அவற்றில் கலந்து கொள்வதில் முனைப்புக் காட்டினார். ஆபிரகாம் லிங்கனோ எளிமையான வாழ்க்கையை விரும்பினார். ஆடம்பர உடைகள், ஆடம்பர வாழ்க்கை மீது அவருக்கு விருப்பமில்லை. இதனால் இருவருக்கும் இறுதிவரை அவ்வப்போது மனக்கசப்புகள் தொடர்ந்தது. ஆயினும், ஆபிரகாம் லிங்கன் தன் மனைவியை அன்போடும், பொறுமையோடும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்.

ஒரு காலக்கட்டத்தில் லிங்கனின் திறமையையும் அவரைத் தேடி வரும் நண்பர்கள் கூட்டத்தையும் கண்டு லிங்கனின் மனைவி அவரை மதித்தார். ஜனாதிபதியாகலாம் என்று ஊக்கமளித்தார். இதற்காகத் தன்னாலான ஒத்துழைப்பை லிங்கனுக்குத் தந்தார்.

1860-ஆம் ஆண்டில் அப்போது விடுதலைக் கட்சி என்று அழைக்கப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஜனாதிபதி வேட்பாளராக லிங்கனைத் தேர்வு செய்தனர். லிங்கனின் எளிமையான தோற்றமும், ஆடம்பரமில்லாத எதார்த்தமான பேச்சும், நேர்மையான அணுகுமுறையும் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. ஆயினும் அமெரிக்க ஐக்கிய அரசில் ஒரு பெரிய பிரச்சனை தலைதூக்கியது. தென் பகுதியைச் சார்ந்த ஏழு மாகாணங்கள் தனியாகச் செல்ல விரும்புவதாகக் கூறியதோடு, தங்களுக்கு என்று ஒரு தலைவரையும் தேர்வு செய்து பிரகடனப்படுத்தினார்கள். 16-ஆவது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஆபிரகாம் லிங்கனுக்கு இது பெரிய தலைவலியாக அமைந்தது.

தெற்குப் பகுதியில் வாழும் மக்களும் இணைந்திருந்தால்தான் தேசம் பலமோடு விளங்கும் என்பதை உணர்ந்தார் லிங்கன். சமாதானப் பேச்சுக்குப் பலவாறு முயன்றார். இருந்தும் முன்னேற்றம் காணவில்லை. வேறு வழியின்றி போரில் ஈடுபட வேண்டியதாயிற்று. ஆங்கிலேயர்களிடமிருந்து அமெரிக்கா பெற்ற சுதந்திரம் சிதைந்து போவதை ஆபிரகாம் லிங்கன் ஏற்கவில்லை. இப்போதும் அந்த ஏழு மாகாணங்களுக்கு இங்கிலாந்து உதவி செய்வதைக் கண்டு அவர்களை எச்சரித்தார்.

போர்க்களம் சென்று பாதிக்கப்பட்ட இரண்டு பகுதி வீரர்களையும் சந்தித்தார். போர்க்களத்தில் தென்பகுதிப் போராட்டக்காரர்களை எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவத்தை மாற்றி, அவர்களும் நம் மக்களே என்ற உணர்வைக் கொண்டு வந்தார். இந்த அணுகுமுறை பெரிதும் கைகொடுத்தது.

தென் மாகாணத்தில் தான் ஆப்பிரிக்க அடிமைகள் அதிகம். வட மாகாணங்களில் இந்த அடிமைப் பழக்கம் ஏற்கெனவே ஒழிக்கப்பட்டுவிட்டது. தென் மாகாணத்திலும் இது ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஒலித்தது. ஆபிரகாம் லிங்கன் இதை நிச்சயம் செயல்படுத்துவார் என்ற எண்ணம் தென் பகுதி அமெரிக்கர்களிடம் காணப்பட்டதாலும், அவர்கள் லிங்கனுக்கு எதிராக நின்றார்கள்.

ஆபிரகாம் லிங்கன் முதலில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்தார். அதில் ஒரு வழியாக வெற்றியும் கண்டார். தனது தேர்ந்த நிர்வாகத் திறமையில் இதைச் செய்து காட்டினார். இந்த நிலையில் இரண்டாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
1861-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11-ஆம் தேதியன்று நிர்வாகத்தின் முக்கிய அங்கத்தினர்களைக் கொண்ட கூட்டத்தைக் கூட்டினார் ஆபிரகாம் லிங்கன். அந்தக் கூட்டத்தில் அமெரிக்க தேசமெங்கும் அடிமைகள் ஒழிப்பினைக் கொண்டு வந்தார். சிலர் அடிமைகளைப் பெறப் பணம் கொடுத்திருந்தால் அந்தப் பணம் அரசால் தரப்படும் என்றும் அறிவித்தார். அடிமைகளாக இருந்த மக்கள் சுதந்திரமாக வாழவும், குடியிருக்கவும் வழிவகை செய்யும் சட்டங்களைக் கொண்டு வந்தார். பெரும்பாலான மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள். ஆபிரகாம் லிங்கனின் இந்த முடிவுக்குத் தேசம் எங்கும் வாழ்த்துக் கிட்டியது. ஆயினும், ஒரு பகுதியினர், அதாவது தென்பகுதியைச் சார்ந்த சிலர் இதை எதிர்த்தனர். காரணம், வயல்களில் கடுமையாக உழைக்கவும், இலாபத்தைப் பெருக்குவதற்கும் அடிமைகளின் தேவை இவர்களுக்கு அதிகமாகத் தேவைப்பட்டது. 1862-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி முதல் அடிமைகள் இல்லாத அமெரிக்கா உருவானது.

தொடர்ந்து பேசிய ஆபிரகாம் லிங்கன், இந்த அடிமை மக்களுக்கு வாக்குரிமையும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இது ஆண்டாண்டு காலமாக அடிமைகளால் சுகம் கண்ட சிலருக்கு லிங்கன் மீது வெறுப்பைத் தூண்டியது.

1865-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி இரவு வாஷிங்டன் நகரில் புகழ்பெற்ற ‘போர்டு’ தியேட்டருக்கு ஒரு நாடகம் பார்க்கச் சென்றிருந்தார் ஆபிரகாம் லிங்கன். நாடக அரங்கில் நுழைந்ததும் மக்கள் தந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். ஆனால், நாடகம் ஆரம்பித்து சில மணித்துளிகளில் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார். இனவெறியர்கள் தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள்.

ஏறக்குறைய நூறு ஆண்டுகள் கழித்து அமெரிக்க மக்களிடமும், உலக மக்களிடமும் கருத்துக் கேட்கப்பட்டதில் அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதியாக ‘ஆபிரகாம் லிங்கன்’ தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார் என்பதே அவரது புகழுக்குச் சான்றாகும். அன்று ஆபிரகாம் லிங்கன் மேற்கொண்ட அடிமை ஒழிப்பே, இரண்டுமுறை அமெரிக்க அதிபராக ‘பராக் ஒபாமா’ இருப்பதற்கும் ஏதுவானது. அமெரிக்க அரசியலில் கோலோச்சும் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் தங்களது ஏகோபித்த தலைவராக, மாண்புமிக்க மனிதராக ஆபிரகாம் லிங்கனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். உலக அரங்கிலும் ஏழைகளின் தலைவராக லிங்கன் எந்நாளும் போற்றப்படுகின்றார்.