வாழ்த்துக் கட்டுரை
பட்டதாரி ஆசிரியர்
இலா.செங்குட்டுவன்
மதுரை.ஆர்.கணேசன்
கல்வியில் பள்ளிப் பாடங்களை படிப்பது மட்டுமே மாணவர்களின் எண்ணமாக இருக்கக் கூடாது பல்வேறு அனுபவ அறிவும் கற்க வேண்டும், கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இயங்குகிற ஆசிரியர்களில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் முதன்மையானவர் என்றால் மிகையாகாது.!
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் செங்குட்டுவன் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சுவையூட்டியதில் ருசியுணர்ந்த பலநூறு மாணவர்கள் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.
ஆசிரியர் செங்குட்டுவன் செயல்பாடுகள் வித்தியாசமானதாகவும், விரும்பத்தக்கவகையிலும் இருக்கின்றதை எவ்வளவோ சொல்லலாம். மேல்நிலை பள்ளிகளில் உள்ளதைப் போல் நடுநிலைப் பள்ளியிலும் சிறந்த அறிவியல் ஆய்வகம் அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் களம் இறங்கி தச்சுவேலை, பெயிண்டிங், ஒயரிங் போன்ற அனைத்து வேலைகளையும் தானே செய்து உருவாக்கியிருக்கிறார்.
வேளாண்மை, மூலிகை மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பள்ளி குழந்தைகள் அறிய பள்ளி வளாகத்தில் ரூபாய் 16 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்து சிறந்த மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்.
அறிவியல் மன்றம், அறிவியல் களஞ்சியம் தோற்றுவிக்கப்பட்டு தகவல் தண்டோரா, தகவல் பூங்கொத்து, விடுகதை நேரம், அறிவியல் பழமொழி, இவர்களை (விஞ்ஞானிகள்) தெரிஞ்சுக்கோ, தினம் ஒரு மூலிகை போன்ற அறிவியல் செயல்பாடுகளில் அனைத்துக் குழந்தைகளையும் மகிழ்வோடு ஈடு பட உறுதுணையாக இருந்திருக்கிறார்.
நீர்ப்பாசன முறைகளை கற்பிக்கும் பொழுது மாணவர்களை வகுப்பறைகளை விட்டு நேரடியாக விவசாய விளை நிலங்களுக்கு அழைத்துச் சென்றதுடன், பாசனமுறைகளும் வேளாண் பயிர்வகைகள் பற்றி அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடவும், சுற்றுச்சூழல் கல்வி கற்பிக்க அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்றிருக்கிறார்.
தொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்துச் செல்வது மற்றும் தாவர பகுதிகளுக்கு உலர் இலை சேகரம் செய்தல், பல்வகை வேர் மாதிரிகளை சேகரிக்க செய்தல், விலங்கியல் மற்றும் தாவரவியல் மாதிரிகளை மாணவர்களை குழுகுழுவாக பிரித்து பலவண்ண உல்லன் நூல்கள், மணிகள், பட்டன்கள், ஜமிக்கி வகைகள், வண்ணத்தாள்கள் போன்ற உபபொருட்கள் மற்றும் எளிமையான விலையில்லா பொருட்களை கொண்டு உருவாக்குவதை பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
வாசிப்புத் திறனை தொடக்கக் கல்வி நிலையிலிருந்து வழிவகை செய்வது, கிராமப்புற நூலகங்களில் மாணவர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து நூலகம் சென்று வாசிக்கும் பழக்கத்தையும் அவர்களுக்குள் உருவாக காரணமாகயிருந்திருக்கிறார்.
தேசிய அளவிலான தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடுகள் மற்றும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நிகழ்வுகளில் மாணவர்களே களஆய்வு செய்து திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் ஆய்வுத் திட்ட அறிக்கைகளை தயார் செய்து சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘குழந்தை விஞ்ஞானி’ சான்றும் பதக்கமும் கேடயமும் பெற்றிருக்கிறார்கள்.
தமிழகத்திலேயே முதன் முறையாக நடுநிலைப் பள்ளியைப் பொருத்தமட்டில் தனி அறையில் அறிவியல் ஆய்வகம் ஏற்படுத்தியது ஆசிரியர் செங்குட்டுவனின் முழுமுயற்சியாகும்.
இந்த ஆய்வகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ளது போன்று இயற்பியல்துறை, வேதியியல்துறை, விலங்கியல்துறை, தாவரவியல்துறை என்று வகைப்படுத்தப்பட்டு செயல்படுவதுடன் அதில் சவுண்ட் சிஸ்டம் கூடிய வீடியோ தியேட்டரும் உள்ளடக்கியது என்பது முக்கியச் செய்தியாகும்.மேலும் மாணவர்களின் ஆய்வகப்பதிவேடுகள் மற்றும் அவர்களது படைப்புகள் ஆறு, ஏழு, எட்டு, வகுப்புகள் வாரியாக அடுக்கி வைக்க இரும்பு அலமாரிகள் வெளிச்சமும், காற்றோட்டமும் நிறைந்த மின் விளக்குகளும் மின் விசிறிகளும் பொருத்தப்பட்டிருக்கிறது.
கல்வி, உடற்கல்வி, சுற்றுச்சூழல், மனிதநேயம், நற்பண்புகள் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைய வழிகாட்டுதலின் பேரில் பல்வேறு சாத னைகளை இவரிடம் படிக்கும் மாணவர்கள் படைத்திருக்கிறார்கள் என்பதற்கு பட்டியல் எதை சொல்லுவது எதை விடுவது என்று நீண்டு கொண்டே போகிறது.!
ஓவியங்கள் தீட்டப்பட்ட வண்ணமயமான வெளிச்சம், காற்றோட்டம் மிகுந்த வகுப்பறைகள் மற்றும் கண்டிப்பு, கட்டளை, அதிகாரம், பயம், தண்டனை, தண்டம் அளித்தல், கற்றல் பின்தங்கிய மாணவர் வேறுபாடு, ஒழுங்கீனம் போன்றவை முற்றிலும் இல்லாத வகுப்பறை என்ற அளவில் இப்பள்ளி அமையப் பெற்றுள்ளதால் மாணவர்களின் தாமத வருகை, விடுப்பு எடுக்கும் நிலை முற்றிலும் இல்லாமல் போயிருக்கிறது.
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் சிறந்த
ஆசிரியராகத் தேர்ந்தெடுத்து அரசு முறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் சென்று ஐரோப்பிய நாடுகளின் உயரிய டிப்ளமோ பாராட்டு சான்று பெற வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநில அளவில் ஐந்து முறை ஆய்வுக்கட்டுரைகள் சமர்பித்து 25 மாணவர்களுக்கு “மத்திய அரசின் குழந்தை விஞ்ஞானி பதக்கம்” மற்றும் விருது கிடைத்திருக்கிறது.
பழங்குடியினர் குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலும் செங்கல் சூளையில் கல்லறுக்க செல்வதும், கரும்பு வெட்ட செல்வதும், புலம்பெயர் தொழிலாளர்களாகவும் இருப்பதனால் அப்பகுதி மாணவர்கள் இடை நிற்றல் அதிகரித்துக்கொண்டே சென்றது.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று தெரு முனைப்பிரச்சாரம் தானே எழுதிய பாடல்களை விழிப்புணர்வாக பாடியும், அவர்கள் வீட்டுக்குச் சென்று அவர்களோடு கலந்துரையாடி அரசு சார்ந்து குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றியும் எடுத்துக்கூறி, கலந்துரையாடலின் விளைவாக இடைநிற்றல் முற்றிலும் தவிர்க்கப்பட்டு 100% மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வமாக வருகை புரிய மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அறிவியல் மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர் இலா. செங்குட்டுவன் (54), மனம் திறந்து பேசியது..,
“..எனது 15 ஆண்டு ஆசிரியப்பணிக் காலங்களில் தொடர்ந்து 11 ஆண்டுகள் எவ்விதமான விடுப்பும் எடுக்காது சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களையும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பள்ளியிலேயே கழித்தது ஒருமனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
பெரும்பான்மையான எனது பள்ளி குழந்தைகள் எனக்கு போட்டியாக ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடியும் வரை ஒரு நாளும் விடுப்பு எடுக்காது 100% வருகையுடன் காலதாமதமின்றி வருகை புரிந்தது பெருமையளிக்கிறது.
நான் பெற்ற விருதுகளை விட எனது வழிகாட்டலில் பள்ளி குழந்தைகள் பெற்ற விருதுகளை கூறுவதில் பெருமை அடைவேன். அவை, மாவட்டம் முதல் தேசிய அளவு மட்டுமல்ல சர்வதேச அளவிலும் தொடந்து கொண்டிருக்கிறது.
இதில் மேதகு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, தமிழக ஆளுநர், 5 தமிழக அமைச்சர்கள், இரண்டு கல்வி அமைச்சர்கள், 5 மாவட்டங்களை சேர்ந்த 17 மாவட்ட ஆட்சியர்கள் அவர்களால் 50 முறை பரிசும் பாராட்டும் பெற்றது போன்றவையால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது பணியை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொதுநல அமைப்புகள் வழங்கிய விருதுகள் நிறையச் சொல்லலாம் !
எந்த நிலையிலும் உள்ள மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து சாதனைபுரிந்து சாதிக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கை எனது ஆசிரியர் பணி எனக்கு வழங்கியுள்ளது.
நான் பணியாற்றிய காலத்தில் பள்ளிக்கு 6 விருது கிடைக்கப் பெற்றதிற்கும் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி இரா.வெற்றிச்செல்வி 16 – ஆண்டு பணி நிறைவு காலம் முன்பே குறைந்த வயதில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற பெருமைக்கும் அதில் எனக்கும் ஒரு பங்குண்டு என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் ஆண்டுதோறும் முதல் மதிப்பெண் எடுத்து (500க்கு 492, 487, 486, 485) என்ற நிலையிலேயே பெற்று வருகிறது பெருமை சேர்க்கிறது.
எனது மாணவர்கள் மருத்துவ நீட் நுழைவுத்தேர்வில் 450 மதிப்பெண் பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு (MBBS) பயின்று வருவதும் மற்றொரு மாணவர் எம்பிபிஎஸ் முடித்து மருத்துவ மேற்படிப்புக்கு பயிற்சியில் உள்ளதும், மற்றொரு மாணவர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் சேர்க்கைக்கு தேர்வாகியுள்ளதும் மேலும் விவசாய கல்லூரி, சட்டக் கல்லூரி, அரசு கலை கல்லூரிகளில் முதுகலை கல்வி முடித்தும், பயின்று வருவது எனது பணிக் காலங்களுக்குள் செய்தது நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
இதுவரையிலும் வாழ்க்கை உருண்டோடிய போதிலும் என்றைக்கும் எனது மாணவர்கள் மனதில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமுமாக இருக்கின்றது. என்றோ ஓர்நாள் என்னை இந்த உலகிற்கு எனது மாணவர்கள் அடையாளம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு “..என் கடன் பணிசெய்து கிடப்பது என்கிற எண்ணத்தில் ஆசானாக காத்திருக்கிறேன்..”
நல்ஆசானாக, அறிவியல் ஆர்வத்தை ஊட்டி வளர்க்கும் சிறந்த சேவகராகத் திகழும், விருதுகள் பலபெற்ற சாதனை மனிதர் இலா. செங்குட்டுவன் அவர்களது,மேலான நற்பணிகள் எந்நாளும் தொடர “ஆளுமைச்சிற்பி” வாழ்த்துகின்றது.