கல்வியில் சிறந்து விளங்க, இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்பதையும், நிம்மதியான தூக்கம் வர செய்யவேண்டிய ஞான முத்திரை குறித்தும் கடந்த இதழில் கண்டோம். இந்த இதழில், காலையில் எழுந்தவுடன் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்கும் எளிய தந்திர யோக வழிமுறைகள் குறித்துக் காணலாம்.
எந்த ஒரு இயக்கத்திற்கும் சக்தி அவசியம். உடலும், மூளையும் இயங்கத் தேவையான சக்தி இரு வழிகளில் கிடைக்கிறது –
= உண்ணும் உணவு
= சுவாசிக்கும் காற்று
நாம் உண்ணும் உணவு செரிமானமாகி, பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியில் குளுகோஸாக மாற்றப் படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் பல ஜீரண நீர்களின் (Digestive Enzymes) உதவியுடன் நமது வயிற்றிலும், சிறு குடலிலும் நடைபெறுகிறது.
குடலில் உருவாகும் குளுகோஸ் ரத்தத்தில் கலந்து, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டு செல்லப் படுகிறது. ஒவ்வொரு செல்லும் தனக்குத் தேவையான குளுகோஸை ரத்தத்திலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன.
செல்களின் உள்ளே இந்த குளுகோஸ் மேலும் பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு சக்தியாக உருமாறுகிறது. இந்த சக்தியே செல்களின் அனைத்து இயக்கங்களுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
செல்களின் உள்ளே குளுகோஸ் சக்தியாக மாற பிராணவாயு எனும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதையும் ரத்தத்திலிருந்தே செல்கள் பெற்றுக்கொள்கின்றன.
உடலிலுள்ள பிற செல்களோடு ஒப்பிடும்போது மூளையிலுள்ள செல்களே குளுகோஸையும், ஆக்சிஜனையும் அதிக அளவில் பயன்படுத்துகின்றன.
உடலின் எடையோடு ஒப்பிடுகையில் மூளையின் எடை சுமார் மூன்று சதவிகிதம்தான். ஆனால் இந்த மூன்று சதவிகித செல்கள் உடலில் உற்பத்தியாகும் குளுகோஸில் சுமார் 30 சதவிகிதத்தையும், ஆக்சிஜனில் 40 சதவிகிதத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றன. பிற செல்களின் இயக்கத்தைவிட மூளைச் செல்களின் இயக்கம் பல மடங்கு அதிகமாக இருப்பதால்தான் அவற்றிக்கு சக்தியும் அதிக அளவில் தேவைப்படுகிறது.
உண்ணும் உணவு சத்துள்ளதாகவும், சரிவிகித உணவாகவும் இருந்தால் மட்டுமே உடலும் மூளையும் தமது முழுத் திறனோடு இயங்க முடியும். உணவு குறித்த உண்மைகளைப் பின்னர் விரிவாகக் காணலாம். தற்போது சுவாசம் குறித்த சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.
= சுவாசிக்கும் முறை சரியாக இருந்தால் மட்டுமே தேவையான பிராண சக்தி மூளைக்குக் கிடைக்கும். மூளைச் சோர்வு ஏற்படாது.இதற்கு தந்திர யோகத்தில் சில எளிய சுவாச முறைகளும், முத்திரைகளும் உள்ளன.
= பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சியைக் கற்றுக் கொண்டால் உடலும் மூளையும் சுறுசுறுப்படையும். உடலின் அனைத்து உறுப்புகளும் வலுவடையும். மன அமைதி, சிந்தனையில் தெளிவு ஆகிய பல நன்மைகள் பிராணாயாமப் பயிற்சிகளால் கிடைக்கிறது.
= ஆனால் பிராணாயாமத்தை முறையாகக் கற்றுக்கொள்ள ஒரு நல்ல குரு வேண்டும். அதற்கென தனியாக தினமும் நேரம் ஒதுக்கவேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு பல நேரங்களில் அது சாத்தியப்படுவதில்லை.
= சில எளிய மூச்சுப் பயிற்சிகளைக் கற்றுத் தருகிறேன் – இவற்றை மட்டும் தினமும் தவறாமல் செய்யுங்கள்.
பயிற்சிக்கு முன் கவனத்தில் கொள்ளவேண்டியவை –
= மூச்சுப் பயிற்சிகளை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.
= தரையில் ஒரு பாய் அல்லது துணியை விரித்து சம்மணமிட்டு அமர்ந்து செய்யவும்.
= காலையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்.
= கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.
= முழு கவனமும் மூச்சு மீது இருக்கட்டும்.
= வலது நாசியை மூட வலது பெருவிரலை உபயோகிக்கவும்.
= இடது நாசியை வலது மோதிர விரல், சிறுவிரல் ஆகிய இரு விரல்களால் மூடவும்.
= பிற இரு விரல்களும் (நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்கள்) மடிந்து இருக்கட்டும்.
மூச்சுப் பயிற்சி –1
அனுலோமா – விலோமா பயிற்சி –
வலது பெருவிரலால் வலது நாசியை இறுக மூடிக்கொண்டு, இடது நாசி வழியே மூச்சை ஆழமாக உள்ளே இழுக்கவும்.
அடுத்து, வலது மோதிர விரல், சிறுவிரல் ஆகிய இரு விரல்களால் இடது நாசியை மூடிக்கொண்டு, வலது நாசி வழியே மூச்சை நிதானமாக வெளியே விடவும்.
அடுத்து, அதே நிலையில், வலது நாசி வழியே மூச்சை உள்ளே இழுக்கவும்.
வலது பெருவிரலால் வலது நாசியை இறுக மூடிக்கொண்டு, இடது நாசி வழியே மூச்சை நிதானமாக வெளியே விடவும்.
இது அனுலோமா – விலோமா ஒரு சுற்று. இவ்வாறு இருபது சுற்றுகள் செய்யவும்.
ஆரம்ப நிலைகளில் மூச்சை உள்ளே அடக்கும் கும்பகம் வேண்டாம். ஒரு மாதம் இந்தப் பயிற்சியை செய்தபின் அடுத்த பயிற்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மூச்சுப் பயிற்சி –2
- பிராண சுத்தி பயிற்சி –
இது அனுலோமா – விலோமாவின் தொடர் பயிற்சி.
நான்கு சுற்றுகள் அனுலோமா – விலோமா செய்தபின்னர், இரு நாசிகளின் வழியே மூச்சை ஆழமாக உள்ளே இழுக்கவும். மூச்சை வெளியே விடும் போதும் இரு நாசிகளின் வழியே விடவும். இதுவே பிராண சுத்தி.
மீண்டும் நான்கு சுற்றுகள் அனுலோமா – விலோமா ஒரு முைற, பிராண சுத்தி என மொத்தம் நான்கு முறை செய்யவும்.
4+1, 4+1, 4+1, 4+1.
- பிராணசுத்தி
= இது, அனுலோமா-விலோமாபயிற்சியின் தொடர்ச்சியான ஒருபயிற்சியாகும்.
அமரும் முறை
= அனுலோமா-விலோமாபயிற்சிக்கு உள்ளபடி.
செய்முறை:
= அனுலோமா-விலோமாபயிற்சியை 4 சுற்றுகள்செய்யவும்.
= 1, 2, 3, 4 என கவனமாக மனதில் எண்ணிக் கொண்டேவரவும்.
= நான்காவது சுற்று முடிந்த உடன், இருநாசிகளிலும் ஒரேநேரத்தில் மூச்சை உள்ளே இழுத்து, ஆஞ்சைசக்கரத்தினுள்ளே கொண்டு செல்லவும்.
= ஆஞ்சைசக்கரத்திலிருந்து ஒரே நேரத்தில் இருநாசிகளின் வழியாகவும் வெளியேவிடவும். 1 முறைமட்டும் போதும்.
= மீண்டும் அனுலோமா-விலோமா 4 சுற்றுகள் + பிராணசுத்தி 1 சுற்று.
= இவ்வாறு 4 முறைகள் செய்யவும்.
= 4+1, 4+1, 4+1, 4+1
ஒரு மாதம் இந்த பயிற்சியை செய்தபின்னர் அடுத்த பயிற்சியான கபாலபதியைச் செய்யலாம்.
- கபாலபதி
= உள்மூச்சை ஆழமாக இழுக்கவும்.
= மூச்சை வெளியே விடும்போது ஒரே மூச்சாக விடாமல் நான்கு அல்லது ஐந்து சிறு மூச்சுகளாக அழுத்தத்துடன் விடவும்.
= இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
அந்த பயிற்சி குறித்த விபரங்களையும், உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக்கும் ஒரு முத்திரை குறித்தும் அடுத்த இதழில்
காணலாம்.=
(தொடரும்)