இளைஞர் உலகம்
உறவு

சிரிமுகத்தவரின் பொதுவான குணநலன்கள், பலம், பலவீனம் போன்றவை பற்றிப் பார்த்த நாம் இந்த இதழில் இவர்களது சீர்திருத்தம் பற்றி காண்போம்.

சிரிமுகத்தவர்களைப் பொறுத்தமட்டில், இவர்கள் ஆற்றல், அன்பு மற்றும் உற்சாகம், உணர்வு திறன் ஆகியவை உள்ளவர்கள். ஆனால் இந்த குணநலன்கள் நல்லவைக்காகவும் ஆரோக்கியமானவற்றிற்காகவும் பயன்பட வேண்டும்.

ஒருவர் தனக்கு வேண்டாத ஒருவர் சாகவேண்டுமென நிமிடத்திற்கொருமுறை சபித்துக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்த ஒருவர் இவரிடம், “எப்படியும் அந்த நபர் ஒருநாள் சாகத்தான் போகிறார். ஆனால் உன்னிடமுள்ள இந்த ஆர்வத்தை, ஆற்றலை அந்த நபர் நீடூழி வாழ வேண்டும் என்று மாற்றிச் சொன்னால் உன்னால் ஒருவர் வாழ்வு பெறுவாரே; அது ஆக்கபூர்வமான ஒன்றாக இருக்குமே” என்றாராம்.
தனது மகன் ேசாகத்தோடு இருப்பதைக் கண்ட தகப்பன் சோகத்தின் காரணம் கேட்டான். மகனோ, “விஷம் குடித்து சாவதா, தூக்கில் தொங்கி சாவதா, தூக்க மாத்திரை சாப்பிட்டுச் சாவதா, ரெயில் முன் விழிந்து சாவதா என சாகும் வழிகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என பதில் மொழி கூறினானாம். இதைக்கேட்ட தந்தை அவனிடம், “உயிரைப் போக்க இத்தனை வழிகளைப் பற்றி சிந்தித்த நீ, உயிர் வாழும் வழிகளை சிந்தித்தால் நீ வாழ்ந்து காட்டலாமே” எனக் கூறினாராம்.

சிரிமுகத்தவரின் ஆர்வமும் ஆற்றலும் காட்டாற்று வெள்ளம் போன்றது; அதை அணை கட்டி பாசனத்திற்குப் பயன்படுத்துவது போன்றதுதான்; அதை ஆக்கபூர்வமாகப் பயன்படச் செய்வது, அதாவது அணுமின் சக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது போன்றது.

நிகழ்ச்சி

ஒரு +2 மாணவியை ஆற்றுப்படுத்தலுக்காக அழைத்து வந்தனர் பெற்றோர். சமீபகாலமாக, இவள் பாடத்திலே கவனம் செலுத்துவதில்லை எனக் கண்ட பெற்றோர் அதன் காரணத்தை அறிந்த போது நொந்து போயினர். அடிக்கடி இவர்கள் இல்லம் வரும் உறவுக்கார பையனிடம் இவள் தீவிர காதல் கொண்டிருந்தாள். படிக்கும் பொழுது படிப்பிலே கவனம் செலுத்துமாறு பெற்றோர் கேட்டுக் கொண்டதை அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பெற்றோரின் தொல்லை தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினாள். அதாவது அவளது காதலுக்கு பெற்றோர் இடையூறாக இருந்தால் தன்னையே அவள் அழித்துக் கொள்ளப் போவதாகக் கூறினாள். ஆனால் அதற்குமுன் பெற்றோரையும் கொலை செய்யப் போவதாகச் சொன்னாள்.

மகளின் இந்த மன எழுச்சியைக் கண்டு சொல்லொண்ணா துயரமுற்ற பெற்றோர், “நீ எங்களைக் கொல்வதற்குமுன் நாங்களே விஷம் அருந்தி செத்துப் போகிறோம்” எனக் கூறியிருந்தார்கள்.

ஆற்றுப்படுத்தினரிடம், தான் அந்தப் பையனைக் காதலிக்க பெற்றோர் தான் காரணம் என வாலிப மகள் குற்றம் சாட்டினாள். அந்த உறவுக்காரப் பையனை வீட்டினுள் அனுமதித்ததால்தான், தனக்கும் அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றாள்.

ஆற்றுப்படுத்துனர் மாணவியிடம் அவளது வாழ்வின் இலட்சியம் பற்றிக் கேட்டார். பெரிய, மிகச்சிறந்த பொறியாளராவதே தனது இலட்சியம் எனக் கூறிய மாணவியிடம், “நீ காதலில் விழுந்த பிறகு, உனது படிப்பில் முன்னேற்றமா, பின்னடைவா?” என வினவினார். காதலர் நினைவாகவே இருப்பதால் பாடங்களில் சரிவர கவனம் செலுத்த இயலவில்லை என உண்மையை அவள் ஒத்துக் கொண்டாள். அவளது நேர்மையைப் பாராட்டிய ஆற்றுப்படுத்துனர், பெற்றோர் செய்தவற்றை அவர்களிடம் சுட்டிக்காட்டினார். பெற்றோரோ தங்கள் தவறை ஏற்றுக்கொண்டு அவளிடம் மன்னிப்பு கேட்க அருகில் சென்றார்கள்.

இதைச் சற்றும் எதிர்பாராத மகள் தான் பெற்றோரிடம் நடந்து கொண்ட விதத்திற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டாள். ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து கதறினார்கள். மகள் தன்னுணர்வு பெற்றவளாகப் படிப்பில் இனி முழு கவனமும் செலுத்தப் போவதாகக் கூறினாள்.

அரசுப் பொதுத் தேர்வில் 1140-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மகள், விரும்பிய பாடத்தில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து தேர்வு பெற்று நல்ல வேலையிலும் அமர முடிந்தது. இன்று அவள் பெற்றோர் ஏற்பாடு செய்த ஒருவரை திருமணம் செய்தாள்; நலமுடன் உள்ளாள். அன்று மட்டும் சரியான திசைமுகப்படுத்தல் (Orientation) அவளுக்கு இல்லாதிருந்தால் அந்த குடும்பமே அழிவின் பாதைக்குச் சென்றிருக்கும்.

எதிலும் சிந்தித்துச் செயல்படும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

“எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு”

எனத் திருவள்ளுவரும் கூறுகிறார். சிரிமுகத்தவர் உணர்ச்சியின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதால்தான் பிரச்சனைகளில் மாட்டிக் ெகாண்டு முழிப்பதைப் பார்க்கிறோம்.

அதுபோலவே தீர்மானங்கள் எடுத்த பின்பு அவற்றைச் செயல்படுத்த முனைப்புத் தேவை. அதாவது சரியான, நடைமுறைக்கு ஏற்ற திட்டமிடலும், அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளையும் நன்கு ஆய்ந்து தொலைநோக்குடன் திட்டமிடத் தன்னையே பயிற்றுவித்துக் கொள்ள சிரிமுகத்தவர் அழைக்கப்படுகின்றனர்.

வாழ்வு பற்றிய சரியான திட்டமிடலும், அந்த திட்டத்தை சுய ஆய்வுக்குட்படுத்தி அதை நிறைவேற்ற கண்ணும் கருத்துமாக விழிப்பாயிருத்தல் வேண்டும்; தொடங்கியதை முடிக்க வேண்டும் என்ற வைராக்கியமும் மன உறுதியும் (will power) தேவை. கடுமுகத்தவரைப் பார்த்து இவர்கள் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார்,

கண் துஞ்சார், செவ்வி அருமையும் பாரார்

அவமதிப்பும் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்”

என்ற தமிழ்க் கவிதையை நன்கு உள்வாங்கியவர்களாய் அர்ப்பணத்தோடு செயல்பட வேண்டும்.

சரியான ஆலோசகர் தேவை. அவர்கள் ஆலோசனைகளுக்கு மனமுவந்து கீழ்ப்படிதல் வேண்டும்.

நுனிப்புல் மேயும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். குறிப்பாக எதைப் பற்றியும் ஆழ்ந்து அறிந்து சிந்தித்துத் தீர்ப்புகள் வழங்கவேண்டும். மேலெழுந்த வாரியாக எதையும் கற்றுக்கொண்டு கருத்துக் கூறும் பட்சத்தில் அது அறிவுக்கொவ்வாத ஒன்றாக இருந்துவிடும். சிற்றின்பத் தோய்வு இவர்களுக்கு அதிகம் இருந்தால் அதுபற்றி விழிப்பாயிருக்க ேவண்டும். குறிப்பாக இச்சைக்குரிய பார்வை பற்றி அதிக கவனத்துடனும் கட்டுப்பாடுடனும் இல்லாவிட்டால் கண்ணியில் சிக்கிக் கொள்வர்.