வெற்றித் திசை -6

ஆதவன் வை.காளிமுத்து

நூறு ஆண்டுகளுக்கு முன்பே தன் சொத்துக்கள் முழுவதையும் மக்களுக்காக எழுதி வைத்தார்.

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தன்னுடைய தொழிலுக்காக ஒதுக்கியவர். மற்ற நாட்களை முழுமையாக சமூக சேவைக்கு அர்ப்பணித்தவர்.

கோடி கோடியாக பணம் இருந்தும் தன் குடும்பத்திற்கு என்று 50,000 டாலர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பெரும்பகுதி செல்வத்தில் சுமார் 2800 இலவச நூலகங்களை நிறுவினார்.

தன்னுடைய அறுபத்தி ஆறாவது வயதில் மொத்த தொழில்களையும் 200 மில்லியன் டாலருக்கு விற்று விட்டவர்.

மரணம் தழுவிய 84வது வயதுவரையிலும் தனது நேரத்தையும், செல்வத்தையும், உலக அமைதிக்கும் நூலக வளர்ச்சிக்குமாக செலவிட்டவர்.

பணம் சேர்ப்பதற்கும் அவற்றை எப்படிச் செலவழிப்பது என்பதற்கும் அவரே மிகச் சிறந்த வழிகாட்டி.

அவர்தான் தொழிற்துறையில் முடிசூடா மன்னராக விளங்கிய ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த “ஆன்ட்ரூ கர்னகி (Andrew Carnegie)”

சிந்திக்க வேண்டும், சிந்தனையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும். காலம், நேரம், சூழ்நிலைகளுக்குத் தக்க சிந்தனைகளை மாற்ற வேண்டும். சிந்தனை மாற்றமே மகத்தான திருப்பங்களை உண்டாக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு செயலாற்றி வென்றும் காட்டியவர்
ஆன்ட்ரூ கர்னகி.

வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு ஆன்ட்ரூ கர்னகியின் நான்கு கொள்கைகள் ஊக்கசக்தியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

பணம் சம்பாதிப்பதில் திருப்தி ஏற்படக்கூடாது.

அடுத்தவர் பாதையில் பயணிக்கும் ‘ஆட்டு மந்தைப்புத்தி‘ கூடவே கூடாது.

தேவையான மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

துணிச்சல் இருந்தால் போதும், யாவரையும் வெல்லலாம் விதிகளைக்கூட வளைத்து விடலாம்.

உலகவருக்கு சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னராக, மாபெரும் தொழில் மேதையாக, உலகமகா கோடீஸ்வரர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் ஆன்ட்ரூ கா்னகி.

இத்தகைய புகழுக்குரிய ஆன்ட்ரூ கர்னகி அடிப்படையில் ஒரு ஏழை நெசவாளியின் மகன். 1835ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டின் டன் ஃபெர்ம்லின் என்ற நகரில் பிறந்தவர்.

ஜேம்ஸ்வாட் என்ற அறிஞர் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்த காலகட்டம் அது. நீராவி எந்திரத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஏராளமான விசைத்தறிகள் உருவாக்கப்பட்டன.

இதனால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

கர்னகியின் தந்தையும் வேலையிழந்து பிழைப்புக்கு வழியின்றி பிறரிடம் வேலை கேட்டுக் கெஞ்சும் நிலைக்கு ஆளானார்.

தந்தையின் நிலை கண்டு சிறுவனான ஆன்ட்ரூ கர்னகி நெஞ்சம் பதைபதைத்தது.

அப்போது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஒரு தீப்பொறி பற்றிக் கொண்டது. “நான் வளர்ந்து பெரியவனாகி வறுமைக்கு முடிவு கட்டுவேன்” என்று சபதம் ஏற்றான்.

‘துணிவே துணை’ என்ற பொன்மொழிக்கு இலக்கணமாக இளமையிலேயே எதையும் சந்திக்கும் துணிச்சல் மிக்கவனாக விளங்கினான்.

ஆன்ட்ரூவின் தந்தை வேலைக்காக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார்.

போதாத கூலிக்கு நெசவு வேலை. வயிற்றுக்கே வழியில்லை. எனவே ஆன்ட்ரூ படிப்பை கைவிட்டான்.

தனது பதின்மூன்றாவது வயதில் நெசவுப்பட்டறையில் எடுபிடி வேலைக்கு சேர்ந்தான். உடல் நோகும் அளவுக்கு கடுமையான வேலையில் கசக்கி பிழியப்பட்டான்.

பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லையே என்ற மனவலியே அதிகம் வாட்டியது. வயிற்றுப்பசியைப்பற்றி கவலைப்படாமல் தன் அறிவுப்பசிக்காக நூல் நிலையங்களைத் தேடிப்போனான்.

அதிதீவிர வெறித்தனத்தோடு புத்தகங்களை வாசித்தான். புத்தகங்கள் அவன் வாழ்க்கையின் அங்கமாக மாறிப்போனது. நூலகங்கள் வாயிலாக பொது அறிவையும் சிந்தனையையும் வளர்த்துக் கொண்டான்.

1844ஆம் ஆண்டு தந்தி மூலம் செய்திகள் அனுப்பும் முறை அறிமுகமானது. புதிதாக அறிமுகமான துறைக்கு வரப் பலரும்
அஞ்சினர்.

மாற்றங்களை விரும்பும் கர்னகி துணிச்சலோடு தந்தி நிலையத்தில் பணிக்கு சேர்ந்தான்.

மாரிஸ்கோட் என்ற சங்கேத மொழியில் முயன்று தேர்ச்சி பெற்று விரைவிலேயே தந்தி அனுப்புநராக உயர்வு பெற்றார்.

தாமஸ் ஸ்காட் என்ற இரயில்வே துறை அதிகாரி அடிக்கடி தந்தி அனுப்புவதற்காக தந்தி நிலையம் வருவார். எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆர்வத்தோடும் பணியாற்றும் ஆன்ட்ரூ கர்னகியை அவருக்கு மிகவும் பிடித்துப்
போனது.

தாமஸ் ஸ்காட் கர்னகியை தனது உதவியாளராக அமர்த்திக் கொண்டார். அந்த அதிகாரியின் தொடர்பினால் பங்கு வர்த்தகத் துறையில் நுழைந்தார்.

தாமஸ் ஸ்காட் அவர்கள் கர்னகிக்கு ஐநூறு டாலர் கடனாக தந்து பங்குகளை வாங்க ஊக்குவித்தார். பங்கு வர்த்தகம் சக்கைப்போடு போட்டது. பணம் குவியோ குவியென்று குவிந்தது.

புத்தியை மூலதனமாக்கி கோடிகளைக் குவித்தார். ஆனால் பணம் அவருக்கு திகட்டவேயில்லை .

அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தனையைத் துருவினார்.

அந்த காலகட்டத்தில் ரயில் பாலங்களைக்கடக்க மரங்கள் பயன்படுத்தப்பட்டன. மரப்பாலங்கள் நாளடைவில் பலம் குறைந்து அடிக்கடி பழுது ஏற்படும்.

இதனால் இரயில்வே நிர்வாகம் மரப்பாலத்திற்குப் பதிலாக இரும்புப் பாலங்களை பயன்படுத்த முடிவு செய்தது.

சமயத்தை சரியாகப் பயன்படுத்த எண்ணிய ஆன்ட்ரூ கர்னகி 1864ல் “கீஸ்டோன் பிரிட்ஜ் கம்பெனி” என்ற பெயரில் இரும்பு பாலங்கள் கட்டும் தொழிற்சாலையைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் இரும்பை விலைக்கு வாங்கினார். பிறகு அதிக லாபம் பார்க்க எண்ணி தாமே “யூனியன் அயான் ஒர்க்ஸ்” என்னும் இரும்பு தயாரிக்கும் கம்பெனியைத்
தொடங்கினார்.

இத்துறையில் கடும் போட்டி நிலவியது. ஆனாலும் பிறரைப் பின்பற்றும் முறையை எப்போதும் வெறுத்தார்.

தானே புதிய புதிய யுக்திகளைக் கையாண்டார். அப்போதுதான் புதிதாக உருக்கு அறிமுகமானது. வழக்கம்போல் மாற்றி யோசிக்கும் சிந்தனை மூலம் எதிர்காலத்தில் இரும்புக்கு மாற்றாக உருக்குதான் இடம் பிடிக்கும் என்பதைக் கணித்தார்.

இதற்கு பெரும் முதலீடு தேவை. தன் கையிலுள்ள அத்தனை பணத்தையும் துணிந்து முதலீடு செய்தார். இரும்பு கரி போன்ற மூலப்பொருட்களை சுரங்கங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்தார்.

உற்பத்திச் செலவைக் குறைக்கும் பொருட்டு தொழிலாளர்களை அதிக நேரம் வேலைக்கு பணித்தார். போட்டியாளர்கள் பின்வாங்கினர்.

உலக உருக்கு சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னராக உயர்ந்தார். ஆன்ட்ரூ கர்னகி.

“வாய்ப்பிற்கான கதவுகளை நாம் திறந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் அந்த கதவுகளின் வழியே செல்வதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் லிண்டன் பி ஜான்சன்.

தனது சிந்தனையை சீராக்கி வாய்ப்புகளை வசமாக்கி வரலாறு படைத்தாலும் தன் உழைப்பின் பெரும்பகுதியை சமூக நலனுக்காகச் செலவிட்டதும் தனது முழுச் செல்வத்தையும் உலக மக்களின் -நன்மைக்காக அர்ப்பணித்ததும் ஆன்ட்ரூ கர்னகியின் சிந்தனை உயர்வின் உச்சமல்லவா?