இளைஞர் உலகம்-33 – உறவு
பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
சிரிமுகத்தவரின் ஆளுமையின் பலவீனங்கள் பற்றி பார்த்து வருகிறோம். சென்ற இதழில் இவர்கள் தவறானதைச் செய்யத் தூண்டும் கவர்ச்சியால் எளிதாக ஈர்க்கப்படுபவர்கள் என்ற ஒரு பலவீனம் பற்றி எச்சரிக்கையாக இல்லாவிட்டால் சுயக்கட்டுப்பாடின்றி வாழ்வில் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என எழுதியிருந்தோம். மனநல மருத்துவர் பிராய்டுவின் கருத்துப்படி மனிதர் அனைவருக்கும் இயல்பூக்கங்கள் (Instincts) பொதுவானவைதான். ஆனால் சிரிமுகத்தவரில் இவற்றின் கிளர்ச்சியும் தாக்கமும் அதிகம் என்பதை இவர்கள் உணர வேண்டுமென கூறியிருந்தோம். இந்த இதழில் சிரிமுகத்தவரின் பலவீனங்களில் இன்னும் சில பற்றி அறிந்து
கொள்வோம்.
எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள்
“உணர்ச்சிகள் இல்லாதவன் ஒன்றில் மரக்கட்டையாக இருக்க வேண்டும். அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்” என்கிறார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில். பல உணர்ச்சியைப் பற்றி பேசும் போது அவர் இவ்வாறு கூறுகிறார். மனித ஆளுமையின் முக்கிய அம்சங்களுள் ஒன்று உணர்ச்சியாகும். ஆனால் உணர்ச்சிகள் நிலையற்றவை. நேரம், காலம், சூழ்நிலை பொறுத்து மாறக்கூடியவை. ஈ.சீ.ஜி. போன்றவை எனவும் ஒப்புமைப்படுத்தலாம்.
உணர்ச்சிகள் பற்றிய ஒரு தெளிவு
உணர்ச்சிகள் மாறக்கூடியவை என்பதால் உணர்ச்சியே இருக்கக்கூடாது, உணர்ச்சிகள் உதவாதவை என்பதல்ல. மாறாக, உணர்ச்சிகள் எப்போதும் நமது கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் நலமானது தான். காரணம், மனிதன் உணர்ச்சிகளின் தொகுப்புதான். ஆனால் பல சமயங்களில் அது கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டிவிடும். அதனால்தான் அதுபற்றி எச்சரிக்கை தேவை என்கிறோம். குறிப்பாக உணர்ச்சி மேலீட்டால் எடுக்கும் 90% தீர்மானங்கள் வெற்றி தருவது இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் உணர்ச்சிகளைத் தாண்டி எடுக்கும் தீர்மானங்கள் நீடித்த பலனைத் தருகின்றன என்றும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
நிகழ்ச்சி
ஒரு கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்துவிட்டு வகுப்பறைக்கு வெளியே கூடி நின்றார்கள். அதற்கு முந்திய வகுப்பை நடத்திய பேராசிரியர் ஒரு மாணவனை (‘எந்தத் தவறும் செய்யாதவனை’) வெளியில் போகச் சொன்னது மட்டுமல்லாமல் அவனைப் பற்றி முதல்வரிடம் புகாரும் செய்து, அந்த மாணவரை முதல்வர் கூப்பிட்டுள்ளார். அவன் திரும்பி வருவது வரை நாங்கள் வகுப்புக்குள் செல்லமாட்டோம் என அடுத்ததாகப் பாடம் நடத்தவந்த பேராசிரியரிடம் மாணவர்கள் கூச்சலிட்டுக் கொண்டே கூறினார்கள்.
மாணவர்களை கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொன்ன இந்த பேராசிரியர் நடந்த விசயத்தை விசாரித்தார்.
குறிப்பிட்ட ஆசிரியர் பாடம் நடத்திய போது கரும்பலகையின் எழுத்துக்களை அழிக்கும் துடைப்பானை (Duster) தனக்கு முன்னால் இருந்த டெஸ்க்கில் வைத்திருக்கிறார். வெளியே துரத்தப்பட்ட மாணவனின் முன்னால் இந்த துடைப்பான் இருந்துள்ளது. ஆனால் கொஞ்ச நேரம் வகுப்பு நடத்திவிட்டு துடைப்பானைப் பார்த்தால் அதைக் காணவில்லை. தேடிய போது 2-ஆவது வரிசையில் அமர்ந்திருந்த மாணவனின் கையில் துடைப்பான் இருந்தது. இதனால் கோபப்பட்ட ஆசிரியர் முதலில் துடைப்பானுக்கு அருகிலிருந்த மாணவனை எழுப்பி வகுப்பை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார். அத்தோடு நிற்காமல் கல்லூரி முதல்வரிடமும் இதுபற்றி முறையிட்டுள்ளார். விசயம் முதல்வர் கவனத்திற்குச் சென்றதும் முதல்வர் மாணவனையும் ஆசிரியரையும் தனது அறைக்கு அழைத்துள்ளார்.
உண்மையில் அந்த மாணவன் அந்த துடைப்பானை அவன் அருகிலிருந்து அகற்றியது, அவனுக்கு தூசி அலர்ஜி இருந்ததால்தான். அவனுக்கு ஆஸ்துமா நோய் இருந்ததால் இந்தத் துடைப்பானிலுள்ள தூசி அவனது நாசி வழியாக நுரையீரலுக்குள் சென்றால் அவன் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும் என நினைத்துத்தான் துடைப்பானை பின்னால் கொடுத்திருக்கிறான். இதை ஆசிரியர் விசாரிக்காமல் அவன்மீது நடவடிக்கை எடுத்தது அநியாயம் என மாணவர்கள் கொதித்தெழுந்து கொண்டிருந்தனர்.
விசயத்தை விசாரித்த இந்த ஆசிரியர், அந்த மாணவர்களின் உணர்வுகளைத் தான் பகிர்ந்து கொள்வதாக, அதாவது அவர்களோடு ஒத்துணர்வு (empathy) கொண்டிருப்பதாகக் கூறி கொஞ்சம் பொறுமை காக்க வேண்டுகோள் விடுத்தார்.
“நீங்கள் சொல்வதில் நியாயம் உள்ளது. ஆனாலும் இப்படியே நீங்கள் கோஷம் போட்டு முதல்வர் அறைக்கு விரைந்தால் காரியம் விபரீதத்தில் போய் முடியலாம். தற்சமயம் முதல்வர் இருவரையும் அழைத்திருக்கிறார். எனவே ஒருதலைப்பட்சமாக முடிவு இராது என நம்புங்கள். அவன்மீது முதல்வர் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அடுத்து என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். அதுவரை எனது பாடத்தை நடத்த வகுப்புக்குள் வாருங்கள்” எனக் கூறிய போது, சூழ்நிலைக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மாணவர்கள் வகுப்புக்குள் நுழைந்தனர்.
சிறிது நேரத்தில் வெளியே துரத்தப்பட்ட மாணவன் திரும்பி வந்தான். முதல்வர் இருவர் கூறியதையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, இவனிடம் “நீர் ஆசிரியரிடம் சொல்லிவிட்டு துடைப்பானை அடுத்த வரிசைக்கு அனுப்பி இருக்கலாம். அதுபோல ஆசிரியரும் ‘ஏன் இப்படி செய்தாய்?’ எனக் கேட்டிருந்தால் மாணவனின் நிலைமை புரிந்திருக்கும். எனவே இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறி எங்களை அனுப்பிவிட்டார் என்றான்.
இதைக்கேட்ட மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். தாங்கள் வன்முறையில் இறங்கியிருந்தால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதை உணர்ந்தனர். உணர்ச்சி வசப்பட்டு தீர்மானம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என உணர்ந்துகொண்டனர். துரத்தப்பட்ட மாணவனுக்கும் இது ஒரு நல்ல பாடமாக அமைந்தது. அதன் பிறகு மிகவும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்ட மாணவனாக அவன் மாறியது மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு பேரவைத் தலைவராக (Chairman) தேர்வு செய்யப்பட்டான். வெளியில் துரத்தப்பட்ட அன்று எல்லாம் சுமூகமாக நடந்திருக்காதிருந்தால் அவனும் பல மாணவர்களும் கல்லூரிப் படிப்பைத் தொடரமுடியாத நிலை தொடர்ந்திருக்கலாம். உணர்ச்சி அடிப்படையில் தீர்மானம் எடுப்பதை சிரிமுகத்தவர் மட்டுமல்ல, நாம் அனைவரும் தவிர்ப்பது நல்லது.
உணர்ச்சி சார்ந்த நுண்ணறிவு
இன்று நிர்வாகத்திலிருப்பவர்கள் உணர்ச்சி சார்ந்த நுண்ணறிவு (Emotional Intelligence) பற்றி பேசுகிறார்கள். சமீபத்தில் ஒருவர் தனது நெருங்கிய உறவினர் சாவுக்கு வரவேண்டுமெனத் தீர்மானத்து விமானத்தில் டிக்கெட்டும் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அவர் வேலை பார்த்த கம்பெனியில் அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவருக்குக் கொரோனா அடையாளங்கள் இருந்ததாகக் கேள்விப்பட்டார். எனவே, தனக்கும் ஒருவேளை நோய் தொற்று இருந்தால் மரண வீட்டில் பலர் பாதிப்புக்கு உள்ளாகிவிடுவார்கள் என உணர்ந்து முன்பதிவை ரத்து செய்தார்.
நல்ல வேளையாக தனக்கு அடுத்திருந்தவருக்கு வைரஸ் காய்ச்சல்தான் என 2 நாளுக்குப் பிறகு மருத்துவ அறிக்கை அறியது. அதற்குள் அடக்கம் முடிந்துவிட்டது. ஆனால் பின்னால் தனது முடிவைப் பற்றி அதாவது உணர்ச்சி சார்ந்த நுண்ணறிவுடன் தான் எடுத்த முடிவு பற்றி பேசும் போது வாழ்வின் முக்கிய காலக்கட்டங்களில் உணர்ச்சிகள் நம்மை ஆட்டிப்படைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென
கூறினார்.