வாழ்வியல் திறன்கள் – 75

முனைவர் திருக்குள் பா தாமோதரன்
நிறுவனர் திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்

உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும் அனைத்தும் சாத்தியமே என்ற குருட்டு மனப்பான்மை பெரும்பான்மையாக இருப்பதை உணரமுடிகிறது. பணம் அதிக உடைமையாக இருந்தால் மகிழ்ச்சி மனநிலை நிலைத்துவிடுமா? என்றவழி மெய்யறி வினாவினை பெரும்பான்மையோர் தங்களுக்குள் எழுப்பிக்கொள்வதேயில்லை. ஆழ்ந்து நோக்கினால் பணத்தால் பெறப்படும் மகிழ்நிலை என்பது ஒருவன் தனக்குள் இயற்கையாகப் பெறும் ஒன்றாக அமையாது, வெளியிலிருந்து பெறப்படும் செயற்கையானதாக அமைந்திடும்.

பணத்தைக் கொண்டு கைப்பேசி, தொலைக்காட்சிப்பெட்டி போன்றன வாங்கலாம், ஆனால் நாம் அதற்கு அடிமையாகி அதன்மூலமாகப் பெறப்படும் மகிழச்சியில் நிரப்பப்படுவோமே அன்றி, நம்முடைய சிந்தனைக்கோ அல்லது உணர்நிலைப் பண்பாட்டிற்கோ அறவே இடமில்லை.

உண்மையான ஆத்மார்த்தமான மகிழ்ச்சியானது சுயத்திலிருந்தே ஊற்றெடுக்கவல்லது.

வெளியிலிருந்து பெறப்படும் எந்தவொன்றும் தற்காலிகமானதாகும். ஆனால் சமுதாயத்தில் பணமே அனைத்திற்கும் தீர்வு என்ற மாயையை மிக ஆழமாக ஏற்படுத்தி பெரும்பான்மையான மக்களை அந்த நம்பிக்கையில் ஊன்றச் செய்திருக்கிறோம். மேலும் பணத்தைக்கொண்டே ஒருவரின் தரத்தை உயர்த்தியும், தாழ்த்தியும் கணிக்கக்கூடிய நடுவுநிலைமையற்ற போக்கையும் கடைப்பிடித்து வந்திருக்கிறோம். ஆங்கிலத்தில் ஒரு ஆக்கமொழியுண்டு,

“It is not what you have, but it is how to use what you have which makes the
difference”

“அறிவுடையார் எல்லாம் உடையார்” (குறள்.430) அழுத்தமாக பதிவுசெய்யும் ஆன்ற கருத்தும் மேற்குறித்த கருத்தினையொட்டி அமைவதை உணர்ந்தறியலாம். எனவே பண அளவைக் கொண்டு ஒருவரின் திறத்தை, தரத்தை இறுதி செய்யாது, இருக்கின்ற பண அளவைக்கொண்டு ஒருவர் எத்துணைப் பண்பட்ட வாழ்க்கையை நடத்துகின்றார் என்பதனைக் கொண்டு மனிதத் தரங்கள் தகுதிமை செய்யப்பெற்றால், பணமே அனைத்திற்குமான வடிகால் என்ற பேதைமை வேறகன்றுவிடும். எனவே பணமொன்றே மனமகிழ்ச்சிக்கான ஆதாரம் என்ற மனித மனங்கள் தப்பிதமாக இறுதி முடிவிற்கு ஆட்படாதிருக்க பணமற்ற ஆக்கப்பூர்வ நல்ல பழக்கவழக்கங்களில் ஒருவர் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். அவ்விதமான ஆத்மார்த்த செயல்பாடுகள் உண்மையான மகிழ்ச்சியைத் தருவதோடு அமையாது , பணமே அனைத்திற்குமான தீர்வென்ற ஆதாரமற்ற திணிப்புக்கோட்பாடுகளிலிருந்து விலக்குப் பெறுவதை அறியமுடியும்.

 ஒருவருக்கு உண்மையான சொத்து (Assets) நிலம், வீடு, வயல், வங்கியிலிருக்கும் பெரும் வைப்புத்தொகை மட்டும்தானா? இதனைச் சற்று எண்ணிப்பார்க்கவேண்டிய கட்டாயம் இன்றுள்ளது. இதனையெல்லாம் முழுமையாக உள்ளவர்கள், உண்மையாக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்களா? உடல் பிணிகளின்றி ஆரோக்யமாக உள்ளார்களா? அடுத்தவர்களுக்குப் பயனுள்ளவர்களாக அமைந்துள்ளார்களா? என்றால், சிந்தனைக்குரியதாக
உள்ளது.

“சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்” (குறள். 524)

செல்வம் பெற்றதன் உண்மையான பயனே நல்ல அறிவார்ந்த சுற்றத்தினரால் சூழப்பட்டு வாழ்வதேயாகும் என்ற குறள் கோட்பாட்டினை ஊன்றி காணவேண்டும்.
இங்கு,

1. நல்ல அறிவார்ந்த வாழ்க்கைத் தேர்வுகள்

2. பற்றினை விடாத பண்பட்ட உறவுமுறைகள்

3. உயிரனைய இல்லாள்

4. பாசம் வேரூன்றிய பெற்றோர்கள்

5. உயிர்காக்கும் நட்புநிலைகள்

6. நெறிகாட்டும் நல்சான்றோர்கள்

7. அறிவார்ந்த மக்கட்பேறுகள்.

மேற்குறித்த அனைத்து விழுமங்களுக்கும் விலையை நிர்ணயித்து பணம்கொண்டு பெறமுடியுமா என்றால், எவராலும் பெறமுடியாது, என்ற விடை மிக எளிதாகக் கிட்டும். ஏனெனில் இவையெல்லாம் உணர்வுப்பூர்வமாக எவ்விதக் குறியெதிர்ப்புமின்றி தரக்கூடிய பெறக்கூடிய உயர்நெறித் தகைமைகளாகும். இவற்றின் மகிழ்ச்சிக்குறியீட்டிற்கு அளவுகள் கிடையாது, ஆனால் அம்மகிழ்ச்சியை உள்ளார்ந்து உணர்பவர், பெறக்கூடிய நிறைவானது எல்லைகளற்றது.

“கேடில் விழுச்செல்ம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை” (குறள். 400)

எனவே உள்ளார்ந்த ஊக்கம், நிறைவான ஆக்கமும் தரக்கூடிய புத்தக வாசிப்பை நேசித்து தொடங்கும் போது பல தெளிவுகள்
பிறப்பதோடு,

“ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல” (குறள்.337)

என்ற குறள்வழி, நல்ல புத்தக வாசிப்புப் பழக்கங்களாவன, ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் மெய்மைகளை உணர்த்துவதோடு, எவையெல்லாம் நிலையற்றன, எவையாவும் கைக்கொள்ள வேண்டியன என்ற பகுத்தறிவை இயல்பாக உண்டாக்கும். பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழும் போது, தன்னைப்பற்றியே, சுயநலமே பெருகுவதோடு பிறரை அழித்தாவது ஆக்கம் தேட வேண்டும் என்ற குன்றியப் போக்குகளும் வலுப்பெற்றிடும்.

இவ்வழி மனித உறவுகள் சிதைவுறுவதோடு, தவறான எதிர்ப்பார்ப்புகளும் செயலாக்கம் பெற்றிடும். சமீபத்தில் அதிகம் படித்த தம்பதியர் இருவர் ஆந்திராவில் வளர்ந்த தன் இருபெண் பிள்ளைகளை நரபலியாக்கினார். விசாரணையின் போது. அவர்களின் பதில் உலகையே அதிர்ச்சி கொள்ளச் செய்தது. ஏழுபிறவிகள் சுகபோகமாக வாழ்ந்திட நரபலி அவசியம் என்ற போலி குறிசொல்பவனின் முட்டாள்தனமான பேச்சை, படித்துப் பட்டம் பெற்று பெரிய பணியிலிருக்கும் இவர்கள் கேட்டு புல்லறிவுடன் நடந்துகொண்டதுதான்.. பணம் மட்டுமே அனைத்தும் என்ற பேதைமையே இவ்விருவரையும் தாங்கள் பெற்றெடுத்த மகள்களையே பலியிடச் செய்தது. சமூகம் இனியாவது விழிப்புற்று, நல்லன கற்று, கேட்டு, அதனை வாழ்வியலாக்கினால், உறவுகள் உன்னதமுறும், உலகம் தழைக்கும்.