திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

சமூகப் பார்வை – 6

நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் பல நல்ல விஷயங்களில் ஒன்று ஈரநிலம். இன்றைய நம் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு ஈரநிலம் அழிப்பும் முக்கியக் காரணம். ஈரநிலங்களின் தொடர் அழிப்பானது, நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் ஆதாரத்தை முற்றிலும் சிதைத்துவிடும்.

ஈரநிலங்களைப் பாதுகாப்பது குறித்து 1971ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூடி விவாதித்தனர். ராம்சர் நகரில் இந்தக் கூட்டம் நடந்ததால் இங்கு உருவான அமைப்பு, “ராம்சர் அமைப்பு” என்றழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா உட்பட 168 நாடுகள் உள்ளன. இன்று உலகில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஈர நிலங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இது உலக மொத்த நிலப்பரப்பில் 205,134,095 ஹெக்டேர் நிலப்பரப்பை உள்ளடக்கியது. உலகின் நிலப்பரப்பில் ஆறு சதவிகிதம் ஈர நிலங்கள். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஈர நிலங்கள் காணப்பட்டாலும் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் பிரேசில் பகுதி மற்றும் அமேசான் நதியை அடுத்துள்ள பகுதிகள் புகழ் பெற்ற ஈர நிலங்கள்.

ஈர நிலம்

நீரும் நிலமும் சேருகின்ற இடங்கள் அனைத்தும் ஈரநிலங்களே. ஊருணி, அணை, குளம், குட்டை , ஏரி, ஆறு, கண்மாய், கழிமுகம், கடலோரம், முகத்துவாரம், உப்பளம், காயல், சேறும் சகதியுமான நிலம் என அனைத்துமே ஈரநிலம் என்று அழைக்கப்படுகின்றன. மேலும், கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டருக்கு குறைவான கடல்சார் பகுதிகளில் ஓடுகின்ற அல்லது தேங்கி நிற்கும் தண்ணீர் , நன்னீர், உவர் அல்லது சவர் நீர் போன்றவற்றால், நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூழ்கியுள்ள இயற்கையான மற்றும் செயற்கையான பகுதிகள் ஈரநிலமாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஈரநிலங்கள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, 1. அருவிகள், ஆறுகள், நீர்நிறைந்து காட்சியளிக்கும் குளங்கள் ஆகியவற்றைக் கொண்டது இயற்கையான நன்னீர் ஈரநிலங்கள். 2. கடற்கரைகள், கற்பாறை கடற்கரைகள், தீவுக் கூட்டங்கள், கடல் நீரேரிகள் உள்ளிட்டவை அடங்கியது உப்புநீர் ஈரநிலங்கள். 3. உப்புப் பாத்திகளும், நெல் வயல்களும், வயல்களுக்கு நீர் தரும் நீர்த் தேக்கங்களையும் உள்ளடங்கியவை, மனிதனால் உருவான ஈரநிலங்கள்,

இலஞ்சி, ஊரணி, ஊற்று, ஏரி, ஓடை, கம்மாய், கலுங்கு, கால்வாய், குட்டம், குட்டை, குண்டம், குண்டு,  குமிழி, கூவம், கூவல், வாளி, சிறை, சேங்கை,  தடம் , தளிக்குளம், தொடுகிணறு, பிள்ளைக்கிணறு, மடை, மதகு, வலயம் எனத் தமிழ்ப் பெயர்கள் இட்டு அழைக்கப்படுபவையும் ஈரநிலங்களுக்குள் அடக்கம். இப்பெயர்கள் பரவலாய் வழக்கொழிந்து போனது போல ஈரநிலங்களும் ஆகிவிடுமோ என்ற அச்சம் கூடிக்கொண்டே போகிறது.

பயன்

ஈர நிலங்கள்தான் நமது குடிநீருக்கான ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. அதே நேரத்தில் சுனாமி, புயல், போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பினையும் அவை குறைக்கின்றன. வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தடுக்கின்றன. புயல் காலங்களில் ஏற்படும் கரையோர மண்ணரிப்பைத் தடுக்கிறது. நீரைத் தூய்மையாக்குதலிலும் ஈரநிலங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. மேற்பரப்புநீர்களில் கரைந்துவரும் கனியங்களை நீக்கும் ஒரு வடிகட்டியாக இது செயல்படுகிறது. இதனால் நிலத்தடி நீரின் தரம் காக்கப்படுகிறது. ஒரு பிரதேசத்தின் இடம்சார் காலநிலை (Topo- Climate) நுண் காலநிலை (Micro Climate) ஆகியவற்றின் தன்மைகளைப் பேணுவதிலும் ஈரநிலங்களுக்கு முக்கியப் பங்குண்டு. இதனால் மிதமான வெப்பநிலை நிலவுவதற்கு வழிவகுக்கிறது.

சுற்றுச்சூழலில் முக்கியமாகப் பங்காற்றுவதில் முதன்மையானது இந்த ஈரநிலங்கள் தான். ஈர நிலங்கள் பல்லுயிரினங்களின் புகலிடமாகவும் திகழ்கின்றன. மனிதர்களின் புரதம் சார்ந்த உணவுத் தேவைகளான மீன்கள், ஓட்டு மீன்கள் இங்கிருந்து தான் பெறப்படுகின்றன. பாலூட்டிகள், ஈரூடக வாழிகள், ஊர்வன போன்ற உயிரினங்களும், பறவைகளும் ஈர நிலங்களில் அதிகம். அதனால்தான் ஈரநிலங்களை “உயிர்ப்பேரங்காடி” என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறோம்.

பாரம்பரிய நெல் மருத்துவத் தாவரங்கள் கிடைப்பதும் இங்கிருந்து தான். முதலைகள் போன்ற வனவிலங்குகளின் இருப்பிடத் தேவைகள் பூர்த்தியாவதும் இவைகளால் தான். மண்ணில் காற்று குறையும் போது அதை ஈடு செய்வதற்கான தாவரங்கள் இந்த ஈர நிலங்களில் உண்டு. ஈரநிலங்களின் பயன்பாடுகள் அனைத்துமே சூழலுக்கும் மனிதனும் இன்றியமையாதவை.

மிகை நீரைத்தக்க வைத்துக்கொள்வது, நிலத்தடி நீரை, அதன் மட்டத்தை உயர்த்துவது இதன் முக்கியமான சுற்றுச்சூழல் செயல்பாடு. ஏராளமான உயிர்களின் இருப்பிடம். காட்டு வெள்ளத்தைத் தடுத்து ஏந்திக்கொள்ளும் ஏந்தல்கள்.

ஈர நிலங்களையும் “கார்பன் தொட்டி” என்ற வரையறைக்குள் அடைத்துவிடமுடியும். காரணம் அவற்றால் கார்பனை தாவரங்களின் துணைகொண்டு தன்னகத்தே இருத்தி வைத்துக்கொள்ள இயலும். ஒரு வகையில் புவிவெப்பமடைதலை மட்டுப்படுத்துவதில் கணிசமான பங்கையும் அளிக்கிறது.

பாதிப்பு

தமிழகத்தில் மட்டும் சுமாராக 1,615.12 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஈரநிலங்கள் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. இவற்றைக் காக்கவேண்டியது நம் தார்மீகக்கடமை.

விதவிதமான புல் செடிகள், அரிய வகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், குறிப்பிட்ட விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக ஈரநிலங்கள் உள்ளன. நகரமயமாக்கலுக்காக ஈரநிலங்கள் துவம்சம் செய்யப்படுகின்றன. வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்களும், சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில் ஆகியவையும் ஈர நிலங்களின் அழிவுக்கு அடிகோலுகின்றன. கழிவுநீர் கலத்தல் மற்றும் இரசாயனக் கழிவுகள், குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுதல் போன்றவற்றால் சூழல் பாதிக்கப்படுவதோடு ஈரநிலங்களும் அழிகின்றன.

மேலும், உலகமய விரிவாக்கங்களில் திட்டமிடாத வளர்ச்சியே மேலோங்கியிருக்கிறது. அரசு ஒதுக்கித்தரும் சிறப்பு பொருளாதார மண்டல நிலங்கள் ஈரநிலங்களை சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பெரிய, பெரிய தாக்கங்களை ஈர வடிநிலங்கள் எதிர்கொண்டு வருகிறது. பாலாறு, வராகந்தி, பொன்னாறு, பரவனாறு, வெள்ளாறு போன்றவற்றின் வடிநிலங்கள் நகர விரிவாக்கம் என்ற பெயரில் விவரிக்கவொண்ணா சிக்கலுக்குள்ளாகியுள்ளது. இவ்வளவு பரப்பும் சிதைவுறும் போது, என்னவெல்லாம் நிகழும் என்ற கற்பனையே பதற வைக்கிறது.

இன்றைக்கு பறவைகள் சரணாலயம் சிலவற்றில், பெயர் பலகையை மட்டும்தான் காணமுடிகிறது. பறவைகள் இருப்பதில்லை.  அதற்குக் காரணம். ஈரநிலங்களை சுவாகா செய்வதால் தான் ஏற்பட்ட விளைவு. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பாலாற்றை நம்பித்தான் இருக்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டுப்பறவைகளின்
வாழிடம் இது.

பயோ டைவர்சிட்டி எனப்படும் உயிரி பன்மியம் பெருக ஈர நிலங்களே காரணம். ஈரநிலங்கள் பாழ்படுத்தப்படுவதால் பயோ டைவர்சிட்டி (உயிரி பன்முகத்தன்மை) அழிந்து போகிறது. ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தும் முன், பயோ டைவர்சிட்டி மதிப்பீடும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதைப் பொருளாதாரரீதியில் லாபமா, நஷ்டமா என்றும் பார்ப்பது அவசியம். உதாரணத்துக்கு ஒரு ரயில் பாதை அமைக்கப்படும்போது அதனால் கிடைக்கும் பொருளாதார லாபத்தினை , பயோ டைவர்சிட்டி அழிவதால் ஏற்படும் பொருளாதார இழப்போடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இப்படி, ஒரு திட்டத்தை அணுகும்முறை நம்நாட்டில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே
இருக்கிறது.

தமிழகமெங்கும் நடைபெறும் குடி மராமத்துப் பணிகள் ஈரநிலங்களைக் காக்கும் பொருட்டுத்தான். இருந்தாலும் இதன் பரப்பு குறுகி வருகிறது. மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மணல் திருட்டுகளினாலும், மிதமிஞ்சிய களைச் செடிகளாலும், சாக்கடை நீர் கலப்பதாலும், மரங்களை வெட்டுவதன் விளைவால் ஏற்படும் பருவமழை பொய்த்துப் போவதாலும் ஈரநிலங்களைக் கெடுத்து வைத்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்புகள், மனிதத்தலையீடுகள் மற்றும் அத்துமீறல்கள் ஈரநிலங்களின் ஆரோக்கியத்தை வெகுவாய்ச் சிதைக்கின்றன.

என்ன செய்யலாம்

உலகின் மிக முக்கிய வளமையங்களில் ஒன்று ஈர நிலங்கள். உடலுக்கு சிறுநீரகம் போல உயிர் சூழலுக்கு ஈரநிலங்கள் அவசியம். உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க ஈரநிலங்கள் தேவையாக இருக்கின்றன. இயற்கையின் சமநிலையைப் பேணுவதற்கும், நாட்டின் வளத்தை மேம்படுத்துவதோடு அதிலுள்ள தாவரங்களையும் உயிரினங்களையும் பாதுகாப்பதற்கும் ஈரநிலங்களைக் காப்பது அவசியம். அதற்கு முதலில் நாம், ஈரநிலங்களை அடையாளம் காணவேண்டும். பின்னர், ஈரநிலங்களை அழிவிலிருந்தும் தரம் குறையாமல் பாதுகாக்க வேண்டும். தரம் குறைந்த, நிலங்களை மீட்டு, மீண்டும் அவற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டரீதியான நடவடிக்கை மூலம் ஈரநிலம் அழிவைத் தடுக்க வேண்டும்.

சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் வீட்டு மனைகளாகவும், குப்பை கொட்டும் இடமாகவும், தொழிற்சாலைக் கழிவுகளை கலக்கும் இடமாகவும், பேருந்து நிலையமாகவும், வணிக வளாகங்களாகவும் மாறுவற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழகத்தில் நீர், நிலப் பகுதிகள் முறைப்படுத்தப்படாமல் உள்ளன. நாமும் அதுகுறித்துக் கவலைப்படுவதில்லை . காரணம், ஈரநிலங்கள் குறித்து சரியான விழிப்புணர்வும் புரிதலும் நம்மிடம் இல்லை. இப்படி ஈரநிலங்களையெல்லாம் தொடர்ந்து அழித்து வறண்ட பூமியை உருவாக்கினால், வரும் தலைமுறையினருக்கு நீரற்ற நிலத்தைத்தான் விட்டுச் செல்வோம்.

ஒவ்வொரு ஆண்டும் (பிப்ரவரி -2) ஈரநிலம் நாள் ஒரு மையக் கருத்தினை முன்னிறுத்தி அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக “ஈரநிலங்களும் நீரும் பிரிக்க இயலாதவை – வாழ்விற்கு இன்றியமையாதது” என்று அறிவித்திருக்கிறார்கள். அதை மையப்படுத்தி ஈரநிலங்களைப் பாதுகாப்போம். அதன் தீவிரத்தை , சுற்றுச்சூழலில் அதன் பங்கையும் உணர்வோம்.