கல்வி-அறிவு-ஞானம் – 10
டாக்டர் ஜாண் பி.நாயகம்
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கத் தடையாக உள்ள பிரச்சினைகளில் முதல் இடத்தில் உள்ளது – மறதி (Forgetfulness). இதை சரிசெய்யும் வழிமுறைகளையும், தந்திரயோக முத்திரையான ஹாக்கினி முத்திரை குறித்தும் கண்டோம்.
இனி மாணவர்கள் எதிர்கொள்ளும் அடுத்த முக்கியமான பிரச்சினையான – அதிகத் தூக்கம், அசதி (Sleepiness) – ஆகியவை குறித்துக் காணலாம்.
அதிகாலை நேரமே கற்பதற்கு மிக உகந்த நேரமாகும். மின்சார வசதி இல்லாத காலத்தில் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் உறங்கிவிடும். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே ஊர் விழித்துக் கொள்ளும். குழந்தைகளும் எழுந்து படிக்கத் துவங்கி விடுவார்கள்.
மின்சார வசதி வந்தபின்னர் இந்த வாழ்க்கை முறையில் படிப்படியாக மாற்றங்கள் நிகழத் துவங்கின. முதலில் நகர்ப்புறங்களில் துவங்கிய மாற்றங்கள் மெள்ள மெள்ள பட்டி தொட்டியெங்கும் பரவியது. தொலைக்காட்சி, கை பேசி போன்றவை வந்தபின் நள்ளிரவு தாண்டியும் தூங்காத நிலை உருவாகி உள்ளது.
சரியான தூக்கமில்லாத நிலை கல்வி கற்பதில் பல சிக்கல்களை உருவாக்கி விடுகிறது. தூக்கம் என்பது என்ன? கல்விக்கும் தூக்கத்திற்கும் என்ன தொடர்பு? சற்றே விரிவாகக் காணலாம்.
தூக்கம்
தூக்கம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. தூக்கம் என்ற ஓய்வு இல்லாமல் எந்த உயிரினமும் சரிவர இயங்க முடியாது. உடலுக்கும், அதன் உள் உறுப்புகளுக்கும் ஓய்வு வேண்டும் என்பதற்காகத்தான் இயற்கை தூக்கம் என்ற ஒன்றைப் படைத்துள்ளது.
தூக்கத்தின் போது –
உடலின் உறுப்புகள் அனைத்தும் தமது இயல்பான வேகத்தைவிட குறைந்த வேகத்தில் செயல்படுவதால் அந்த உறுப்புகளுக்கு சற்றே ஓய்வு கிடைக்கிறது.
உதாரணமாக – விழிப்பு நிலையில் நமது நுரையீரல்கள் நிமிடத்திற்கு 12 முதல் 16 தடவைகள் சுருங்கி விரிகின்றன. தூக்கத்தின் போது இது 8 முதல் 12 தடவைகளாகக் குறைகிறது. மிக ஆழ்ந்த தூக்க நிலையில் இது மேலும் குறைந்து, நிமிடத்திற்கு 6 முதல் 8 தடவைகள் என்ற அளவில் குறைகிறது.
இது போன்றே நமது இதயத் துடிப்பும் விழிப்பு நிலையில் நிமிடத்திற்கு 72 முதல் 100 தடவைகள் என்பதிலிருந்து ஆழ்ந்த தூக்க நிலையில் நிமிடத்திற்கு 60 தடவைகள் என்ற அளவில் குறைகிறது.
இது தவிர, திசுக்களில், செல்களில் நிகழும் தேய்மானங்கள், சீர்கேடுகள் அனைத்துமே தூக்கத்தின் போதுதான் சரி செய்யப்படுகின்றன.
தூக்கம் சரிவர இல்லையென்றால் இந்தச் செப்பனிடும் பணிகள் சரிவர நடைபெறாது. உறுப்புகளின் இயக்கங்களில் தொய்வு ஏற்படும்.
இவை இரண்டும் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும், திசுக்களுக்கும் பொருந்தும் பொதுவான உண்மைகள். இவை தவிர மூளையில் மட்டும் தூக்கத்தின் போது வேறு ஒரு விசேஷப் பணியும் நடைபெறுகிறது.
விழிப்பு நிலையில் நமது ஐம்புலன்களின் வழியாக வரும் அனைத்துச் செய்திகளுமே மூளையில் குறுகிய கால நினைவுகளாகப் பதிவாகிவிடுகின்றன. விழிப்பு நிலையில் ஐம் புலன்களும் தொடர்ந்து இயங்கி வருவதால், அவற்றை இனம் பிரித்து ஆராய மூளைக்கு நேரம் இருப்பதில்லை. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என அனைத்தையுமே பதிவு செய்து கொள்ளும்.
இரவில் வேறு பணிகள் அதிகமில்லாத நிலையில் தான் மூளை தனது ‘எடிட்டிங்’ வேலையைச் செய்கிறது.
அன்று பகல் முழுவதும் மூளையில் பதிவானவற்றை வேகமாக ஓடவிட்டு, மூளை அவற்றை அலசிப் பார்க்கிறது (இந்த வேளையில் தான் தெளிவற்ற பல கனவுகள் நமக்கு வருகின்றன).
குறுகிய கால நினைவுப் பதிவுகளில் தேவையானவற்றை மட்டும் தனியே பிரித்து பாதுகாத்துக்கொள்ளும். தேவையற்றவற்றை ‘எடிட்’ செய்து ‘டெலீட்’ செய்துவிடும்.
தூங்கி எழுந்தவுடன் மூளை புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆழ்ந்த தூக்க நிலையில்தான் மூளையில் இந்த எடிட்டிங் வேலை நடைபெற முடியும்.
தூக்கம் சரியில்லை என்றால் தேவையற்ற நினைவுப் பதிவுகள் மூளையில் குப்பை போல் சேர்ந்து, மூளையின் செயல்திறன் பாதிக்கப்படும் எளிதில் மூளைச் சோர்வும் உருவாகும். சிந்தனையிலும் குழப்பங்கள் இருக்கும்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினையான – அதிகத் தூக்கம், அசதி (Sleepiness) – ஆகிய அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணமாக இருப்பது இரவில் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பதுதான். ஒரு மனிதனுக்குத் தேவையான தூக்கத்தின் அளவு என்ன? வயதைப் பொறுத்து தேவையான தூக்கத்தின் அளவு மாறுபடும். கீழே தரப்பட்டுள்ள அட்டவணையைப் பாருங்கள். இளம் வயதில் அதிகத் தூக்கம் தேவையாக உள்ளது. வயது அதிகமாக அதிகமாக இது படிப்படியாகக் குறைகிறது.
வயது | தேவையான தூக்கம் – மணிகள் |
0 – 3 மாதங்கள் | 14 – 17 |
4 – 11 மாதங்கள் | 12 – 15 |
1 – 2 வருடங்கள் | 11 – 14 |
3 – 5 வருடங்கள் | 10 – 13 |
6 – 13 வருடங்கள் | 9 – 11 |
14 – 17 வருடங்கள் | 8 – 10 |
18 – 25 வருடங்கள் | 7 – 9 |
26 – 64 வருடங்கள் | 7 – 9 |
65 வருடங்கள் | 7 – 8 |
இந்த குறைந்தபட்ச தூக்கம் இல்லாமற் போனால் காலையில் எழும் போதே அசதியும், தூக்கக் கலக்கமும் இருக்கும். குழப்பமான மனநிலை, எரிச்சல், கோபம் போன்றவையும் உருவாகும். சிலருக்கு இதனால் தலைவலி கூட ஏற்படலாம்.
மனமும் உடலும் இந்த நிலையில் இருக்கும் போது படிக்க உட்கார்ந்தால் படிக்கும் எதுவும் மனதில் தங்காது. படிப்பில் பின்னடைவு ஏற்படும்.
தூக்கத்தைப் பொறுத்தவரையில் தூங்கும் நேரம் மட்டுமின்றி தூக்கத்தின் தரமும் முக்கியம். சிலர் இரவில் ஒன்பது மணி நேரம் தூங்குவார்கள் ஆனால் காலையில் எழும் போது தூங்கி எழுந்த புத்துணர்ச்சி இராது. சோர்வும் அசதியும் எழும் போதே இருக்கும். நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமற் போனதே காரணம்.
மனம் அமைதியாக இருந்தால் நிம்மதியான, ஆழ்ந்த தூக்கம் வரும். மனதில் கவலைகள், சிந்தனைகள், பரபரப்பு ஆகியவை இருந்தால் ஆழ்ந்த தூக்கம் வராது.
நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வர என்ன செய்யலாம் என்பதை அடுத்த இதழில் காணலாம்