முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்!
ஆளுமைச் சிற்பி ஆசிரியர்
டாக்டர் மெ.ஞானசேகர்
என் பிறப்பிற்காக என் தந்தைக்கு நான் நன்றி சொல்வேன். சிறந்த மனிதனாக நான் வளர்ந்ததற்கு என் ஆசிரியர் அரிஸ்டாட்டிலுக்குத்தான் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினார் மாவீரர் அலெக்ஸாண்டர். ‘அறிவுக்குத் தந்ைத அரிஸ்டாட்டில்’ என்று போற்றப்பட்டவர். அவரது குருவான பிளேட்டோ அவரை “அரிஸ்டாட்டிலின் உள்ளம் கல்வியின் உறைவிடம்” என்று பாராட்டினார்.
கி.மு.384-ஆம் ஆண்டில் வடகிரேக்கத்திலிருந்த ஸ்டாகிரா நகரில் பிறந்தவர் அரிஸ்டாட்டில். தந்தை நிக்கோ மச்சஸ் அரச குடும்பத்துக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர். எனவே, அரிஸ்டாட்டில் மருத்துவம் மற்றும் அறிவியலில் ஆர்வம் கொள்ள ஊக்கமூட்டினார்.
தனது பதினெட்டாவது வயதில் தத்துவஞானி பிளேட்டோவின் புகழைக் கேள்விப்பட்டு அவரது கல்வியகத்துக்குச் சென்றார். உலகின் முதல் பல்கலைக்கழகம் என்று அறியப்படும் பிளேட்டோவின் ‘அகாடமி’ என்ற கலைப் பல்கலைக்கழகத்தில் ேசர்ந்தார். எப்போதும் சிந்திப்பவராகவும், அறிவுக்கூர்மை மிக்கவராகவும் திகழ்ந்த இவரைத் தன் தலைச்சிறந்த மாணவர் என்று பிளேட்டோ புகழ்ந்தார். ‘அகாடமி’ என்றால் கிரேக்கத்தில் தோட்டம் என்று பொருள். பிளேட்டோ இதனைப் போதிக்கும் தோட்டமாக உருவாக்கிக் கல்வி கற்பித்து வந்தார்.
இருபது ஆண்டுகள் பிளேட்டோவின் கலைக்கழகத்தில் பணிசெய்த அரிஸ்டாட்டில் பிளேட்டோவையும் விடச் சிந்திப்பவராக அறியப்பட்டார். பிளேட்டோவுக்குப் பின்னால் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படாத சூழலில் மாசிடோனியா மன்னர் பிலிப்பின் அழைப்பால் மாசிடோனியா வந்தார், அரிஸ்டாட்டில். மன்னர் பிலிப்பின் மகன் அலெக்ஸாண்டருக்குக் குருவாக இருந்து ஆறு ஆண்டுகள் பல்வேறு கல்வி மற்றும் கலைகளைக் கற்றுக்கொடுத்தார். இதனால் கவரப்பட்ட அலெக்ஸாண்டர் தன் வாழ்நாள் முழுவதும் அரிஸ்டாட்டிலுக்கு உதவி செய்தார்.
லைசியம் தோன்றியது
தன்னுடைய ஆராய்ச்சிக்காக ‘லைசியம்’ என்ற கல்விக்கூடத்தை ஆரம்பித்தார் அரிஸ்டாட்டில். ‘லைசியம்’ என்பதற்கு கிரேக்க மொழியில் விரிவுரைகளைக் கேட்பதற்கான இடம் என்று ஒரு பொருள் உள்ளது. பயிற்சிப் பள்ளி, இரண்டாம் பள்ளி, நடைபயிலும் பள்ளி என்று பல அர்த்தங்களைக் கொண்டது.
அரிஸ்டாட்டில் ‘விஞ்ஞானத்தின் தந்தை’ அல்லது ‘அறிவியலின் தந்தை’ என்றும் பரவலாக அழைக்கப்படுகின்றார். காரணம், முதன்முதலில் ஒரு ஆராய்ச்சி என்பது எப்படி இருக்க வேண்டும்? அதற்கான கூறுகள் என்ன? வழிமுறைகள் என்ன? என்பதை உலகிற்குச் சொன்னவர் அரிஸ்டாட்டில் தான்.
உலகின் அறிவுத் திரட்டு மிகுந்த நூல்களைப் பெறுவதில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். உலகின் பல பகுதிகளையும் வெற்றி கொண்டு வந்த சமயத்தில் தன் வெற்றிகளைப் பற்றி அலெக்சாண்டர் தன் குருவிடம் சொன்னார். அப்போது அலெக்ஸாண்டரிடம் “நீ வெற்றி பெறுவதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் நூல்களை மட்டும் எனக்குத் தந்துவிடு” என்று கேட்டாராம்.
இப்படி அறிவுத் தேடலில் திளைத்த அரிஸ்டாட்டிலுக்குப் பணிசெய்திட ஆயிரம் உதவியாளர்களை அலெக்சாண்டர் நியமித்திருந்தாராம். இவர்கள் அரிஸ்டாட்டிலின் ஆராய்ச்சிக்குத் தேவைப்பட்ட உயிரினங்கள், தாவரங்கள், புத்தகங்கள் மற்றும் பல பொருட்களைச் சேகரித்துக் கொடுத்தார்கள்.
அரிஸ்டாட்டிலின் பள்ளியில் இயற்பியல், உயிரியல், விலங்கியல், மனோதத்துவவியல், தர்க்கவியல், அழகியல், கவிதை, நாடகம், இசை, பேச்சுக்கலை, உளவியல், மொழியியல், பொருளாதாரம் மற்றும் அரசியல் என்று பல பாடங்கள் விவாதிக்கப்பட்டன மற்றும் கற்றுத்தரப்பட்டன.
அரிஸ்டாட்டிலை ‘அறிவின் மன்னர்’ என்று அழைத்தார்கள். நாற்பத்தேழு ஆண்டுகள் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்த பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிற்கால அறிவியல் வளர்ச்சிக்கும், ஆய்வுகளுக்கும் வழிகாட்டியது. நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற அறிவியல் அறிஞர்களின் வெற்றிக்கும் காரணமாகியது.
விண்கோளியல், விலங்கியல், நிலவியல், இயற்பியல், உடற்கூறு இயல், உடலியல் போன்றவை பற்றிய அவரது நூல்கள் மிகவும் பயன்தந்து கொண்டு இருப்பவை. விலங்கியல் ஆராய்ச்சிக்காக பறவைகள், மீன்கள், பூச்சிகள் மற்றும் பல்வேறு விலங்குகளைச் சேகரித்து, அவற்றைத் தரம் பிரித்து ஆய்வு செய்து நூல்களைப் படைத்தவர் அரிஸ்டாட்டில்.
‘இயற்கையைப் பற்றிய அறிவுதான் அறிவியல்’ என்று கூறினார் அரிஸ்டாட்டில். மனிதர்களின் மண்டையோடுகள், பற்கள் போன்றவற்றை ஆய்வு செய்து பல கருத்துகளையும், உண்மைகளையும் வெளியிட்டார். அவரது காலத்தில் கூர்மையான நுண்ணோக்கிகள் இல்லையென்பதால் சில கருத்துகள் தவறாக பின்னாளில் தெரிவிக்கப்பட்டாலும், இத்தகைய ஆய்வின் முன்னோடியாகத் திகழ்ந்த பெருமைக்குரியவராக விளங்குகிறார்.
அரிஸ்டாட்டில் பேசாத, எழுதாத துறையே
இல்லை என்று கூறக் கூடிய அளவில் எல்லாத் துறைகளிலும் தன் கவனத்தைச் செலுத்தினார். மனிதர்களின் மனத்தை ஆய்வு செய்வதிலும், கனவுகள் பற்றி விவாதிப்பதிலும் அவரது ஆய்வுகள் நடந்தேறின. மனோதத்துவவியலின் முன்னோடியாகவும்
திகழ்கின்றார்.
பேச்சுக்கலை பற்றிப் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். அவையில் பேசுதல், குறிப்பிட்ட ஒரு கருத்தைப் பற்றிப் பேசுதல், பிறர் செய்த குற்றங்களைச் சுட்டிக்காட்டி எப்படிப் பேச வேண்டும்? என்று பல்வேறு நெறிமுறைகளையும் தந்துள்ளார். ஒழுக்க முறைகள் பற்றியும் அரிஸ்டாட்டில் அதிகமாக எழுதியுள்ளார். எல்லாவற்றிலும் மேலானது நல்லொழுக்கம் என்பதை வலியுறுத்தி ‘நீதி நூல்’ என்ற ஒரு புத்தகத்தையும் படைத்தார் அரிஸ்டாட்டில்.
இவரது அரசியல் ஆராய்ச்சிகள் மூலம் மக்களும், மன்னரும் எப்படி இருக்க வேண்டும்? என்பதை விரிவாக எடுத்துரைத்தார். அரிஸ்டாட்டிலின் மறைவுக்குப் பின்பும் அவரது பல நூறு மாணவர்களால் உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் சார்ந்த ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டன.
இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என்று பல்வேறு மதம் மற்றும் இனத்தவர்களும் அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் மற்றும் நூல்களால் ஈர்க்கப்பட்டார்கள். உலகமெங்கும் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ அரிஸ்டாட்டிலின் கருத்துகள் காரணம் ஆகின.
உலகமெங்கும் படையெடுத்துச் சென்ற அலெக்ஸாண்டர், தன்னுடன் விஞ்ஞானிகளையும் அழைத்துச் ெசன்றாராம். ஒவ்வொரு நாட்டிலும் காணப்பட்ட அறிவியல் சார்ந்த வளர்ச்சி மற்றும் ஆய்வுகளைக் கண்டறிந்து, அவற்றைத் தொகுத்து உடனடியாக அரிஸ்டாட்டிலுக்கு இவர்கள் தந்து கொண்டேயிருந்தார்களாம். இவ்வாறு எப்போதும் தேடலில் திளைத்த ஞானியாக அரிஸ்டாட்டில் திகழ்ந்துள்ளார்.
நல்ல நாடு என்றால், அங்கு மக்களது தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். துறைமுகங்கள் மூலம் வியாபாரம் பெருக வேண்டும். மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அரிஸ்டாட்டில் எழுதினார். பொருளாதாரத்தில் நாடு மேம்பட்டு விளங்க மக்களுக்குப் போதுமான பயிற்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எப்போதும் ஒன்றைப் பற்றித் தன் கருத்தை வெளியிடுவதற்கு முன்பு பலமுறை அதைப் பற்றிச் சிந்திப்பார். ஆய்வு செய்வார். அதன் பிறகு தனக்குத் தெளிவு ஏற்பட்ட பின்பு தான் தனது கருத்தை ெவளிப்படுத்துவார். இவ்வாறு எதையுமே ஆய்ந்து நோக்கி அறிதல் வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கியதால் தான் பல்துறை வித்தகராக விளங்கினார்.
அதேசமயம் கல்வியை எல்லோருக்கும் சமமாக வழங்கக்கூடாது என்றும் அடிமைகள் மற்றும் தொழிலாளிகளுக்கு அவர்களது ெதாழில் சார்ந்து கல்வி தரவேண்டும் என்று அவர் கூறியுள்ளது, பிற்போக்குத்தனமாகவும், விமர்சனத்துக்கு உட்பட்டதாகவும் அமைந்துள்ளது. ஆனால் இவரது குரு பிேளட்டோ, எல்லோருக்கும் சமமான கல்வி என்பதை வலியுறுத்தினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அலெக்சாண்டர் இறந்த பின்பு பாதுகாப்பு அற்றவராகக் கருதிய அரிஸ்டாட்டில் ஒரு தீவிற்குச் சென்று தனிமையான இடத்தில் மரணமடைந்தார். அறிவின் வளர்ச்சியே மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவியலின் பல வார்த்தைகள் கிரேக்க மொழியிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவத் துறையில் பல வார்த்தைகளின் அமைப்புக்கும் அரிஸ்டாட்டிலின் நூல்கள் உதவியுள்ளன. சிறப்பாகச் சிந்திப்பதன் மூலம் உயர்நிலையை அடையலாம் என்ற வழிமுறையை உலகிற்கு உணர்த்தியவர் அரிஸ்டாட்டில். அறிவியல் யுகத்தைத் தொடங்கி ‘விஞ்ஞானம்’ என்ற ஒரு பாதைக்கு வழிகாட்டிய அரிஸ்டாட்டில் ஒரு முன்னோடி விஞ்ஞானி என்பதில் ஐயமில்லை.