பிரபஞ்சம் காப்போம் – 08

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

சுற்றுச்சூழலில் ஒளி மாசுபாடு புதிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. ஒளி மாசுபாடு என்பது தேவையற்ற, பொருத்தமற்ற அல்லது அதிகப்படியான செயற்கை விளக்குகளைப் பயன்படுத்துவதால் ஏற்படுவதாகும். ஒளி மாசுபாடு என்பது வானத்தில் இரவு நேரத்தில் தெரிவதைத் தடுக்கும் அதிகப்படியான ஒளிரும் ஒளியாக வரையறுக்கப்படுகிறது.

நாளும் அதிகரித்துவரும் பெரிய அளவிலான தொழில்மயமாக்கலானது மனிதகுலத்தின் அன்றாட இயல்பான வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. ஒரு காலத்தில், இரவு நேரத்தில் வானம் மிகவும் தெளிவாக இருந்தது. நம் கண்களுக்கு ஏராளமான நட்சத்திரங்கள் தெரிந்தன. ஆனால் இன்றைக்கு இரவு நேர வானம் கருப்பாகவே உள்ளது. நட்சத்திரங்களைப் பார்க்க முடியவில்லை. உலக மக்கள் தொகையில் 83 – சதவிகிதம் பேர் ஒளி மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் சுமார் 3 – பில்லியன் மக்கள் இரவில் கூட அதிக வெளிச்சத்தில் வாழ்கின்றனர்.

அத்துமீறலும் பரவலும்..

ஒளி அதன் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்லும்போது, அது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்போது அது அத்துமீறல் எனப்படும். உதாரணமாக, தேவையற்ற வெளிச்சம் வீடு அல்லது கட்டடத்திற்குள் நுழையும் போது இந்த அத்துமீறல் ஏற்படுகிறது. தெரு விளக்குகள், கதவுகள் அல்லது ஜன்னல்கள் வழியாக வீடுகளுக்குள் நுழைந்து நமக்குத் தூக்கமின்மையைப் பரிசாகத் தருகின்றன. இதுபோலவே ஸ்கைக்ளோவும் இடையூறாகும்.

“ஸ்கைக்ளோ” என்பது, நகரங்களிலும் அதைச் சுற்றியும் இரவு வானத்தில் எங்கும் பரவியிருக்கும் ஒளி ஆகும். இது மிகவும் பிரகாசமான நட்சத்திரங்களைத் தவிர மற்ற அனைத்தையும் பார்வையில் இருந்து தடுக்கும். தெருவிளக்குகள், பாதுகாப்பு ஃப்ளட்லைட்டுகள் மற்றும் வெளிப்புற அலங்கார விளக்குகள் ஆகியவற்றின் காரணமாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் இரவு வானத்தின் பிரகாசம் ஸ்கைக்ளோவை ஏற்படுத்துகிறது. ஸ்கைக்ளோவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வானம் கருப்பு நிறத்திற்குப் பதிலாக ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். அதிகப்படியான பிரகாசம் இருக்கும்போது வெளிர் மஞ்சள் நிறமாகவும் தோன்றலாம். சர்வதேச டார்க் ஸ்கை அறிக்கையின் படி, உலகின் 23 – சதவிகித நிலப்பரப்பு ஸ்கைக்ளோவால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒளி மாசு

“வேர்ல்ட் அட் நைட்” அறிக்கையின்படி, 1870 – களில் மின்மயமாக்கல் தொடங்கியது மற்றும் பொது இடங்களில் செயற்கை விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த விளக்குகள் குறைந்த செலவில் பிரகாசமான வெள்ளை ஒளியை அளித்தன. அதனால் இந்த விளக்குகள் பிரபலமாயின. சாலைகளில் அவற்றை நிறுவியதாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து அதிகப்படியான ஒளியை உமிழ்ந்ததாலும் கண் கூசும் பிரச்சனை எழுந்தது.

19 – ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “ஒளி மாசுபாடு” என விளக்குகள் பற்றிய கவலை தொடங்கியது, 2000 – ஆம் ஆண்டிலிருந்து இரவில் வெளிச்சம் அதிகரிப்பதால் விளக்கு வெளிச்சம் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. 2007 – இல் ஸ்லோவேனியா ஒளி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உலகின் முதல் தேசியச் சட்டத்தை இயற்றிய பிறகு இந்தப் பிரச்சனை பற்றிய விவாதம் வேகம் பெற்றது. இப்போது ஒளி மாசுபாடு சுற்றுச்சூழலுக்கு ஒரு தீவிரக் கவலையாக உலகளவில் பார்க்கப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளில் சட்ட முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

காரணம்

ஒளி மாசுபாடு மனித இரவு நேர நடவடிக்கைகளால் ஏற்படுகிறது. ஒளி மாசுபாட்டிற்கான சில பொதுவான காரணங்கள் எனப் பார்த்தால் ஒளி உமிழும் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள், மின் விளம்பரப் பலகைகள், அலங்கார விளக்குகள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது என நீங்கள் கேட்கலாம். ஆனால் இது சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

ஒளி மாசுபாட்டின் விளைவுகள்:

உடல் நலன் தொலையும்: அதிகப்படியான ஆற்றல் நுகர்வானது நம் சர்க்காடியன் தாளத்தைப் (சர்க்காடியன் தாளம் என்பது, உடலின் உள் கடிகாரம் மூலம் உடல், மனம், நடத்தையில் ஏற்படும் 24 மணி நேர சுழற்சிகளாகும். இது உயிரியல் கடிகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தாளங்கள், உயிரினங்களின் உடலியல் மற்றும் நடத்தையைச் சுற்றுச்சூழலில் ஏற்படும் தினசரி மாற்றங்களுடன் ஒத்திசைக்க உதவுகின்றன) பாதிக்கிறது, நமது உயிரியல் கடிகாரம் இயற்கை ஒளி சார்ந்தது மற்றும் தன்னிச்சையானது. இந்தச் சர்க்காடியன் தாளங்கள் “சூரிய ஒளி மற்றும் இருளின் சுழற்சியுடன்” ஒத்திசைந்து இருப்பது முக்கியம். செயற்கை ஒளியானது சர்க்காடியன் தாளங்களின் நேரத்தை மாற்றும். இது நமது தூக்கம்-விழிப்பு நடத்தையையும் பாதிக்கிறது. இதனால் தூக்கக் கோளாறுகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மனச்சோர்வு, உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் வாசிக்க…ஆளுமைச்சிற்பி மாத இதழைப் படியுங்கள்.