ஊடகம் பழகு 07
திரு.மனோஜ் சித்தார்த்தன்
தொடர் நேரலை
ஒரு காலத்தில் தொலைக்காட்சி நிறுவனங்கள் என்பது செய்திகளை முன்பே தயாரித்து, குறிப்பிட்ட நேரத்தில் செய்திகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதனை ஒளிபரப்புச் செய்து வந்தனர். எப்போதாவது ஒரு முக்கியச் செய்தி வரும். இப்படி வந்தால் தொலைக்காட்சி நிலையத்தில் உள்ளச் செய்தி அரங்கில் மட்டும் செய்தி வாசிப்பாளர் நேரலையாக செய்திகளை வழங்குவார், குறிப்பிட்ட செய்தியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். நேரலையில், அவ்வாறு முக்கியச் செய்தி இல்லை என்றால் செய்தி 50 – நொடிகளுக்குத் தாண்டக்கூடாது என்பது அன்றைய விதி. ஆனால், இன்று அது தலைகீழாக மாறி உள்ளது. ஆம், செய்திகளுக்கென்று இப்போது பிரத்தியேகமாக தொலைக்காட்சிகள் வந்துவிட்டன.
அவைகள் ஒவ்வொன்றும் கடும் போட்டி போடுகின்றன, செய்திகளை யார் முந்தித் தருவது என்ற நோக்கில் (அதாவது எந்தத் தொலைக்காட்சிக்கு பார்வையாளர்கள் அதிகம் உள்ளார்களோ அந்தத் தொலைக்காட்சிக்குத்தான் விளம்பரங்களை அள்ளித் தருகின்றன நிறுவனங்கள். அந்த விளம்பரங்களை வைத்துத் தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் வருவாய் பார்க்கின்றன)
TRP-க்காக தொலைக்காட்சி நிறுவனங்கள் கடும் பாடுபடுகின்றன, ஒவ்வொரு செய்திகளுக்கும் உயிரோட்டம் அளிக்கும் வகையில் ஒவ்வொரு செய்தியையும் நேரலையாக தொழில் நுட்பங்கள் உதவியுடன் உடன் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே சொன்னது போல Single Camera Live Stream மற்றொன்று Multicamera Live Stream என இரு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் முதலாவது முறையில் ஒரு கேமராவுடன் LiveU Encoder என்ற ஒன்றை கேமராவுடன் பொருத்தி கேமராவில் பதிவாகும் காட்சிகள் நேரலையாக இதற்கென உள்ள பிரத்யேக இணையம் மூலம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படும். தொலைக்காட்சி நிலையத்தில் அதற்கு தலைப்புக் கொடுத்து செய்தி வாசிப்பாளர்கள். அதனை நேரலையில் விளக்கம் அளித்து செய்தியாக வழங்குவார்கள், இன்னொரு முறை Multicamera Live Stream இதுதான் மிக முக்கியமானது.
பெரும்பாலும் செய்தித் தொலைக்காட்சிகள் இந்த முறையைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆம், Outdoor Broadcasting என சொல்லக்கூடிய இதைத்தான் அதிகம் பெரும்பாலான தொலைக்காட்சிகள் பயன்படுத்துகின்றன, ஒரு வாகனத்தில் நேரலை செய்வதற்கான ஒளிபரப்பு சாதனங்கள் (Brodcasting Setup)மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பை இணைக்கும் அதிநவீன ஆண்டனாக்கள் (Brodcasting Signal Antana) உடன் ஒரு வாகனத்தைத் தயார் படுத்தி அதனை ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்வார்கள். இந்த வாகனத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும். மின்சார வசதி தொழில்நுட்ப ஊழியர்கள் உட்கார்ந்து வேலை செய்வதற்கு இருக்கைகள் போன்றவை இருக்கும். நமக்கு எத்தனை கேமராக்களில் ஒளிபரப்பு தேவையோ அத்தனை கேமராக்களையும் இணைக்கும் வசதி இந்த வாகனத்தில் இருக்கும்.
அதன்படி பெரிய நிகழ்வு நடக்கிறது என்றால் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் என்னென்ன நடக்கின்றது என்பதைப் பல செய்தியாளர்கள் குழுவுடன் இணைந்து அவர்கள் தரும் செய்திகளை இந்த வாகனத்தில் உள்ள தொழில்நுட்பப் பணியாளர் (Brodcasting Engineer) அனைத்து கேமரா தகவல்களை ஒன்றிணைத்து அதனை தொலைக்காட்சி நிலையத்தில் உள்ள செய்தி வாசிப்பாளரிடம் நேரலையில் வழங்குவார். ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் ஒவ்வொரு நிமிடமும் அதனைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது நமக்கு நொடி பொழுதினில் உடனுக்குடன் நமது வீட்டு வரவேற்பறைக்கு கொண்டு சேர்ப்பது தான் இவர்களின் தலையாய பணி. குறிப்பாக இது போன்ற தொழில்நுட்பங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் பெரிய இசை நிகழ்ச்சிகள் போன்றவை இது போன்ற Outdoor Brodcosting மூலமே ஒளிபரப்புச் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி அரங்கமும் தொழில் நுட்பமும்
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்துத் துறைகளிலும் முன்னேறி இருப்பது போல் செய்தி வழங்குவதிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி முன்பெல்லாம் செய்தி வாசிப்பாளர்களாக இருந்தவர்கள் தற்போது செய்தி வழங்குனராக மாறிப் போய் உள்ளனர், செய்தி வழங்கினரின் உடை அலங்காரம்(Dressing Style), சிகை அலங்காரம்(Hair Style), ஒப்பனை (Makeup) போன்றவை மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது. என்னதான் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் அதற்கு காரணமானவர்கள் செய்தி வழங்குனரே. அவர்களால் மட்டுமே பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும் என்கின்ற நிலையில்தான் தற்போதைய தொலைக்காட்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும் புள்ளி விவரங்களைத் தெளிவாகக் காண்பதற்கு செய்தி நிறுவனங்கள் மிகப்பெரிய தொடுதிரைகளைப் (Touch Screen) பயன்படுத்துகின்றன. இதனால் புள்ளி விவரங்களுடன் பார்வையாளர்களுக்கு மிக எளிதில் புரிகின்றன.
மேலும் செய்தி வழங்குதலில் நேர்த்தியை வைத்துத்தான் தொலைக்காட்சியின் வருவாய் என்பது இருக்கின்றது என்பதால் தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்சமயம் AI (Artificial Intelligence) என்று சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவைப்
பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி வருகின்றனர். பல நாடுகளில் இது போன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில் நமது நாட்டில் ஒடிசா மாநிலத்தில் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் முதன்முறையாக லீசா என்ற நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பெண் செய்தி வாசிப்பாளரை உருவாக்கியுள்ளது. இது மிகுந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில், இந்த தொழில்நுட்ப மூலமே அனைத்துச் செயல்களும் நடந்தால் என்ன செய்வது என்பது குறித்து பிரச்சனைகளும் விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.