சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 08

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

1997 முதல் 2007 – ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் ஹாரி பாட்டர் என்ற கற்பனை நாவல் தொகுதிகள் 600 – மில்லியன் அதாவது இந்திய எண் கணக்கில் 60 கோடிப் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது. உலக நூல்கள் வெளியீட்டில் இதுபோன்ற ஒரு சாதனையை எந்தப் புத்தகமும் நிகழ்த்தியது இல்லை. இந்த ஹாரி பாட்டர் நாவல்கள் திரைப்படமாக, வீடியோ விளையாட்டுகளாக உலகைக் கலக்கின என்பதும் மிகப்பெரிய வெற்றியாகக் காணப்படுகின்றது.

“ஒருவர் என்னவாகப் பிறந்தார் என்பது முக்கியமல்ல; அவர் என்னவாக வளர்கிறார் என்பதுதான் முக்கியம்” என்று கூறும் ஜே.கே. ரைளலிங் என்பவர் தான் இந்த ஹாரி பாட்டர் கதைக் களஞ்சியங்களின் கதாநாயகர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில், இங்கிலாந்து நாட்டில் ஜேம்ஸ் ரெளலிங், அன்னே தம்பதியருக்கு மகளாக ஜூலை 31 – ஆம் தேதி 1965 – ஆம் ஆண்டு பிறந்தார்.

அவர் பிறந்த வீட்டில் புத்தகங்கள் நிறைந்து காணப்பட்டது. ஜே.கே. ரெளலிங் தாயார் அன்னே நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவர். எனவே, இளம் வயதிலிருந்தே தன் பிள்ளைகளுக்கு வாசிப்பை நேசிக்கவும், தன் இல்லத்தை நூல்கள் நிறைந்த அறிவுத் திடலாகவும் அமைத்துக் கொடுத்தார்.

ஆறு வயதுக் குழந்தையாக இருக்கும் போது ‘முயல் (Rabbit)’ என்ற பெயரில் ஒரு கதையைப் புத்தகமாக எழுதினார் ஜே.கே. ரெளலிங். பன்னிரண்டு வயதில், ‘ஏழு சபிக்கப்பட்ட வைரங்கள்’ என்ற பெயரில் ஒரு நாவலை எழுதினார். “நான் புத்தகங்களுக்கு இடையில் வாழ்ந்தேன். புத்தகங்கள் நிறைந்த தோட்டத்தில் புத்தகப் புழுவாக இருந்தேன்” என்று தன் வாழ்க்கைச் சரிதையில் குறிப்பிடுகின்றார் ஜே.கே. ரெளலிங். இப்படி அவருக்கு வாசிப்பை நேசிக்க அவரது தாயாரும், பெரியம்மா போன்ற உறவினர்களும் தூண்டுதலாக இருந்துள்ளார்கள்.

இவருக்கு 25 – வயது நடந்த போது, 1990 – ஆம் ஆண்டு இவரது தாயார் புற்றுநோயின் தீவிரத்தால் இறந்துவிட்டார். அந்த நாட்களில் தந்தையும் பொறுப்போடு குடும்பத்தைக் கவனிக்காத சூழல். எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மற்றும் இலக்கியங்களைப் பாடமாக எடுத்துப் படித்திருந்தார்  ரௌலிங். நூலகங்களில் புத்தகங்களை எடுத்துப் படித்துவிட்டு, திரும்பக் கொடுக்கத் தாமதமாகிட, பல சமயங்களில் அதற்காக தாமதக் கட்டணம் செலுத்தியுள்ளார். அந்த அளவுக்குப் புத்தக வெறியர் என்று சொல்லக் கூடிய ஒரு தீவிர வாசகராகத் திகழ்ந்தார் ரெளலிங்.

ஹாரி பாட்டர் தொடக்கம்

தான் மிகவும் அன்புடன் நேசித்த தாயின் மரணம், தன் குடும்ப வறுமை போன்ற சோதனைகள் ரெளலிங் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பணிபுரிந்த போது, அங்கே தான் சந்தித்த கைதிகள் மற்றும் அவர்கள் வாழ்வில் அவர்கள் சந்தித்து வந்த மன அழுத்தம் மிகுந்த நிகழ்வுகள் எல்லாம் ரெளலிங்கைச் சிந்திக்க வைத்தது.

தன் வாழ்க்கையின் வேதனைகள், மன அழுத்தங்களைவிட, பல மடங்கு வேதனைகளுடன் மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்பதைக் கண்டுகொண்டார். எனவே, தன் அன்றாடத் தேவைகளுக்காக ஒரு ஆசிரியப் பணியைத் தேர்ந்து கொண்டு, ஓய்வு நேரங்களில் எழுதிட எண்ணம் கொண்டார்.

ஒரு சமயம் இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரிலிருந்து இலண்டன் கிங்ஸ் கிராஸ் வரை செல்வதற்காக இரயில் நிலையம் சென்றார். அப்போது இரயில் வருவதற்கு நான்கு மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

அந்தக் காத்திருப்பு நேரத்தில் தான் ‘ஹாரி பாட்டர்’ என்ற கற்பனைக் கதாபாத்திரமும், அதன் எல்லையில்லாத விரிந்த கதைப் போக்குகளும் அவருக்கு மனதில் உதித்தன. இந்தக் கற்பனைக் கதை அவர் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.

வீடு வந்து சேர்ந்ததும் தாள்களை எடுத்துக் கொண்டு தன் கற்பனைக் கதையை எழுத ஆரம்பித்தார். முதலில் சிறு சிறு தாள்களில் குறிப்புகள் போன்று எழுத ஆரம்பித்தார். அதனைத் தொகுத்து ஒரு நாவலாகக் கொண்டுவர மனதில் எண்ணம் கொண்டார்.

இதற்கிடையில் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் ஆசிரியராகப் போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றார். 1992 – இல் ஜார்ஜ் அரான்டெஸை மணந்தார். 1995 – இல் ஜெசிகா என்ற மகள் பிறந்தாள். மீண்டும் இலண்டன் திரும்பிய போது ஹாரி பாட்டரின் மூன்று பகுதிகளை எழுதி முடித்திருந்தார். எடின்பர்க் நகரில் ஆசிரியராகப் பணி செய்தார். ஓய்வுநேரங்களில் தன் கற்பனைக் கதையை எழுதினார்.

ஹாரி பாட்டர் மூன்று தொகுதிகளை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களுக்கு அனுப்பினார். வாசித்த அவர்கள், இந்த நாவல் விற்பனையாகாது என்று சொல்லிவிட்டார்கள். ஒரே ஒருவர் மட்டும் “இன்னும் தொடர்ந்து நாவலைக் கொண்டு செல்லுங்கள், பார்க்கலாம்” என்று கூறியிருந்தார். இந்த வார்த்தைகள் ரெளலிங் மனதில் மிகவும் மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்தது. தொடர்ந்து கதையை விரிவாக்கினால் அது விற்பனைக்குத் தகுதிபெறும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்தார். 1997 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘ப்ளூம்ஸ்பரி பதிப்பகம்’ என்ற பதிப்பகம் மூலம் முதன்முதலில் ஹாரி பாட்டர் நாவல் வெளியிடப்பட்டது. தனது பெயருக்கு முன்னால் JK என்று வைத்துக் கொண்டார்.

‘ஜோ’ என்ற இவரது பெயரின் முதல் எழுத்தும் இவரது தந்தைவழிப் பாட்டி ‘கேத்லீன்’ என்பவர் பெயரின் முதல் எழுத்தான ‘கே’ என்ற எழுத்தும் சேர்க்கப்பட்டது. தந்தை பெயரான ரெளலிங் என்பதையும் சேர்த்து ஜே.கே. ரெளலிங் என்ற பெயரில் நாவல் வெளியிடப்பட்டது. நாவல் வெளியீட்டாளர் பெண்கள் பெயரால் வெளியிட்டால் விற்பனையாகாது என்று கூறி அவர்களின் பெயரை ‘ேஜ.கே.’ என்று சுருக்கிவிட்டார். ஆயினும் இதனைப் பொருட்படுத்தாமல் வெற்றிவாகை சூடினார் ஜே.கே. ரெளலிங்.

புத்தகம் அமோகமான விற்பனையை எட்டியது. 2001 – ஆம் ஆண்டில் திரைப்படமாக்கப்பட்டது. ‘ஹாரி பாட்டர்’ என்ற ஏழைச் சிறுவன் தனக்குள்ள அதீத சக்தியால் பல தடைகளை வென்று சாதிக்கின்றான் என்பதை மையமாகக் கொண்டே ஏழு தொகுதிகளும் அமைந்துள்ளது. இந்த சாகசப் பயணத்தில் பல கற்பனைக் கதாபாத்திரங்களை இணைத்து, அதனைப் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் விரும்பிப் பார்க்கும் வண்ணமும், வாசிக்கும் வண்ணமும் வழங்கியது ரெளலிங்கின் சாதனையாகும்.

ஒரு நான்கு மணிநேரக் காத்திருப்பை மகிழ்ச்சியோடு தன் கற்பனை உலகில் சஞ்சரிக்க ஜே.கே. ரௌலிங் பயன்படுத்தியதன் விளைவுதான் அவர் இன்று பெற்றுள்ள மாபெரும் புகழுக்கும், சாதனைகளுக்கும் காரணமாகும். தன் ஒவ்வொரு கதையின் மூலமும், பயமுறுத்தும் தீய சக்திகளிடமிருந்து இளைஞர்கள், குழந்தைகள் வெளியேறி வெற்றி பெற வேண்டும் என்று கற்றுக்கொடுக்க விரும்புவதாக ரெளலிங் கூறுகின்றார்.

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.