ஐந்துஆறைவிடப்பெரியது 16

திரு.முகில்

‘அதோ கரையில் ஒருவன் நிற்கிறான் பார். யாரோ இளவரசன் போலத் தெரிகிறது. அவனைக் கடத்தினால் நிறைய சம்பாதிக்கலாம்!’

அந்தக் கடல் கொள்ளையர்கள் திட்டமிட்டார்கள். அழகான உடையணிந்து, அம்சமாக நின்று கொண்டிருந்த அந்த இளைஞனைச் சுற்றி வளைத்துத் தூக்கி, கப்பலில் போட்டார்கள். நடுக்கடலை நோக்கி கப்பலைச் செலுத்தினார்கள்.

‘எந்த நாட்டு இளவரசன் நீ?’ என்று இளைஞனை மிரட்டத் தொடங்கினார்கள். அவன் அசரவே இல்லை. அவனது கைகளைக் கயிறு கொண்டு கட்டினார்கள். முடிச்சு தானாக அவிழ்ந்தது. மீண்டும் கட்ட முயன்றார்கள். முடிச்சைப் போடவே முடியவில்லை. கடற்கொள்ளையர்கள் திகைத்து நின்றார்கள். அந்த இளைஞன் சிரித்தான். தன் சுய ரூபத்தைக் காட்டினான். ஆம், கடவுள் டயோனிசஸாக உருவெடுத்தான். கிரேக்க புராணக் கதைகளின்படி, ஒரு மானிடப் பெண்ணைத் தாயாகக் கொண்டே ஒரே கடவுள் இவரே. திராட்சை மற்றும் மதுவின் கடவுளாக அறியப்படும் டயோனிசஸ், இன விருத்தி மற்றும் செழிப்பு உள்ளிட்ட வேறு சில துறைகளுக்கும் பொறுப்பில் இருந்தார். ஏகப்பட்ட திருவிளையாடல்களை நடத்தியிருக்கும் டயோனிசஸின் ஒரு கதைதான் இது.

டயோனிசஸ், அப்போது புல்லாங்குழல் ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். இனிய மெல்லிசை ஒலிக்க ஒலிக்க, கடற்கொள்ளையர்கள் முகத்தில் உச்சபட்ச மிரட்சி. கப்பலின் பாய்மரத்தில் தடிமனான திராட்சைக் கொடிகள் சுற்றிச் சுற்றிப் படர்ந்தன. அதில் கொத்துக் கொத்தாக பிரமாண்ட திராட்சைகள் திகிலூட்டின. இசை நீண்டது. திராட்சைக் கொடிகள் சர்ப்பங்களாக படமெடுக்க, எங்கிருந்தோ சிங்கமும் கரடியும் புலியும் பாய்ந்து வந்தன. கடற்கொள்ளையர்கள் உயிர் பயத்துடன் கடலில் குதித்தார்கள்.

கடலில் குதித்தவர்களை டயோனிசஸ் உற்று நோக்கினார். நீரினுள் ஒவ்வொருவரும் டால்பின்களாக உருமாறினார்கள். ‘இனி நீங்கள் யாரையும் மிரட்டக்கூடாது என்பதற்காகத்தான் மனிதர்களுக்கு உதவி செய்யும் டால்பின்களாக உருமாற்றியிருக்கிறேன்’ என்று டயோனிசஸ் பன்ச் பேசினார்.

அப்போது முதல் டால்பின்கள் மனிதர்களுக்கு உதவும் குணத்துடன் மாறின. கடற்கொள்ளையர்களாக இருந்து டால்பின்களாக உருவெடுத்ததாலேயே அவை கப்பல்களை விருப்பத்துடன் பின்தொடர்கின்றன. டயோனிசஸின் புல்லாங்குழல் இசை கேட்டதாலேயே டால்பின்கள் எப்போதும் இசை விரும்பிகளாக இருக்கின்றன. இப்படி இந்த கிரேக்கப் புராணக் கதையோடு டால்பின்களின் இயல்புகளும் சரிவிகிதத்தில் கலந்து காலம் காலமாகப் பரிமாறப்படுகின்றன.

லாஜிக் பார்க்காமல் கதை கேட்பவர்களுக்கு எந்த மொழிப் புராணமும் சுவாரசியமானதுதான். லாஜிக்கோடு, டால்பின்களின் வாழ்க்கைக்குள் குதித்து உண்மைக் கடலிலும் நீந்திப் பார்ப்போம்.

டால்பின் என்பதற்கான தமிழ்ச்சொல் ஓங்கில். இவை நீரில் வாழும் பாலூட்டி. திமிங்கலங்களுக்கு மிக நெருக்கமான இனம். 17 பேரினங்கள் மற்றும் 40 சிற்றினங்களாக டால்பின்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நான்கடி குட்டி டால்பின்களும் உண்டு. 31 அடி நீ……ளமான மெகா டால்பின்களும் உண்டு. 40 கிலோ முதல் 10 டன் வரை எடை கொண்ட டால்பின்கள் உலகில் இருக்கின்றன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் 25 ஆண்டுகள்.

வேகமாக நீந்துவதற்கு ஏற்ப நீள்வடிவ உடலைக் கொண்டவை டால்பின்கள். தம் வால் பகுதியை மேலும் கீழுமாக அசைத்து சராசரியாக மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நீந்துகின்றன. எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது… என 30 அடி உயரம் வரை அநாயசமாகத் துள்ளிக் குதிக்கின்றன. உடல் வெப்பத்தைச் சரிவர வைத்துக் கொள்ளவும் சுவாசிப்பதற்காகவும் சில நிமிடங்களுக்கு ஒருமுறை நீர்ப்பரப்பிற்கு மேலே வந்து செல்கின்றன. டால்பின்களால் சுமார் 10 நிமிடங்கள் வரை மூச்சை இழுத்துப் பிடித்து ஆழ்கடலுக்குள் சென்று வர இயலும்.

துருவப்பகுதி தவிர மற்ற இடங்களில் எல்லாம் காணப்படுபவை பாட்டில் மூக்கு (Bottlenose) டால்பின்கள். முன்புறம் ஒரு பாட்டிலின் முனைபோன்ற நீண்ட வாயும் மூக்கும் கொண்ட இந்த டால்பின்கள் குறித்து ஏகப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாட்டில் மூக்கு டால்பினும் விசிலடிப்பதுபோல எழுப்பும் ஓசைகள் தனித்துவமானவை. அதாவது அவை தம் பிரத்யேகமான பெயரைச் சொல்வதுதான் அந்த விசில் ஓசை. பிறந்து ஒரு வருடத்துக்கு உள்ளாக இந்த டால்பின்கள் தமக்கான தனித்துவ விசிலோசையை உருவாக்கிக் கொள்கின்றன.

வானுக்கும் எல்லை உண்டு, நட்புக்கில்லையே!

பெண் டால்பின்கள் தம் வாழ்நாள் முழுக்க அதே விசிலோசையை மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆண் டால்பின்கள் பத்து வயதுக்குள்ளாக குறைந்தது இரண்டு ஆத்மார்த்தமான ஆண் நண்பர்களையாவது தேடிக் கொள்கின்றன. இந்த பாய்ஸ் கேங் எப்போதும் பிரிவதில்லை. அல்லது பிரிய விரும்புவதில்லை. அவை ஒவ்வொன்றும் தமக்கான ‘தனித்துவ விசிலோசையை’ நண்பர்களுக்கும் புரியும்விதத்தில் சற்றே திருத்தி இசையமைத்துக் கொள்கின்றன. குழுவில் ஒரு டால்பின் தனித்திருக்கும்போது, தம் சிக்னேச்சர் விசிலை ஒலித்தால் போதும். மற்ற இரண்டும் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் சொய்ங்ங்ங் என்று நீந்தி வந்துவிடும். நண்பன் ஒருவன் வந்த பிறகு, விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு… வானுக்கும் எல்லை உண்டு, நட்புக்கில்லையே!

இவை எல்லாவற்றையும்விட இன்னோர் ஆச்சரியமான விஷயம், சின்ன வயதில் சந்தித்து விசில் சத்தத்தால் உரையாடிக் கொண்ட இரு டால்பின்கள், பின் விதி வசத்தால் பிரிந்து வேறு வேறு கடல்களில் வாழ்கின்றன. வயதான காலத்தில் எதார்த்தமாகச் சந்திக்கின்றன. அப்போதும் விசில் சத்தம் கொண்டு அடையாளம் கண்டுகொள்கின்றன. ஆம், டால்பின்களின் ஞாபக சக்தி அபாரமானது. அதுவும் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை சந்தித்து அன்போடு விளையாடிய சக டால்பினைக்கூட அவை காலத்துக்கும் மறப்பதில்லை.

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.