கற்றல் எளிது -07
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
1800 – களில் விஞ்ஞானிகளுக்கு மூளையின் அமைப்புப் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்தது. நம் மூளையில் நரம்பணுக்கள் ஒரு சிலந்தி வலை போல ஒன்றோடு ஒன்றாகப் பிண்ணி மூளை முழுவதும் பரவி இருப்பதாக எண்ணினர். அதனால் மூளையின் ஒரு பகுதியில் உருவாகும் சமிக்ஞை மூளையின் மற்றொரு பகுதிக்கு எளிமையாகச் செல்ல முடிகிறது என்றும் நினைத்தனர்.
சிக்கல் என்னவென்றால் அப்போது நவீனக் கருவிகள் இல்லை. அதனால் அப்போது இருந்த நுண்ணோக்கிகளால் (மைக்ரோஸ் ேகாப்புகளால்) நரம்பணுக்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இதனால் சிலந்தி வலை கோட்பாடு அவர்களுக்கு நம்பகத்தன்மையாக இருந்தது.
இதன்பிறகு தான் சாண்டியாகோ ரமோன் கஜால் விஞ்ஞானியாகி வருகிறார். ஆம் நாம் முன்னாள் பார்த்த மக்குப்பையன் சாண்டியாகோதான்! அவர் தான் நமது மூளை தனித்தனி நரம்பணுக்களினால் உருவானது எனக் கண்டறிந்து கூறினார். நரம்பணுக்கள் சிலந்திவலையைப்போல பின்னி இல்லாமல் ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு இருப்பதாகக் கூறினார். ஆனால் அந்த இடைவெளி நம் கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு மிகச்சிறியதாக இருக்கிறது. நரம்பணுவில் உருவாகும் சமிக்ஞைகள் ஒரு சிறு மின்சாரப் பொறியாக இந்த இடைவெளியின் மூலமே பயணிக்கிறது என்றும் விளக்கினார். ஆனால் அவர் கூறும்போது யாரும் நம்பவில்லை. பின்னால் நவீன மைக்ரோஸ்கோப் கருவிகள் வந்தபோது அவர் கூறியது தான் சரி என்று நிரூபணமானது.
இப்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நரம்பணுக்கள் ஒன்றுக்கொன்று பேசுவதைக்கூட நம்மால் கேட்க முடியும். மூளை மின்அலைப்பதிவி (Electroencephalography) என்ற கருவியின் மூலம் மூளையில் உருவாகும் மின்சார அலைகளைக்கூடப் பார்க்க முடியும். கடல் அலைகள் எப்படிச் சத்தம் எழுப்பியபடி இருக்கின்றனவோ அப்படித்தான் நம் மூளையின் எண்ண அலைகளும் சத்தம் எழுப்பியபடியே இருக்கின்றனவாம்.
கடந்த அத்தியாயத்தில் நரம்பணுக்கள் பற்றிப் பார்த்தோம். நாம் வாசிப்பதனால் உருவாகும் மூளை இணைப்புகள் பற்றிப் பார்த்தோம். இப்போது அதுகுறித்து ஆழமாகச் செல்லலாம்.
உவமைகள்
நமக்கு உவமைகள் பிடிக்கும். சங்க காலப் பாடல்களில் இருந்து நாம் உவமைகளைப் பயன்படுத்தி வருகிறோம். தமிழில் எக்கச்சக்கமான உவமைகள் இருக்கின்றன. நாம் பேசும் போதே உவமைகள் கலக்காமல் பேசுவதில்லை. ‘காலம் பொன் போன்றது’ என்று படித்திருக்கிறோம். ‘சொம்பு உருண்டு ஓடுவதுபோல கலகலவென்று சிரிக்கிறாய்’ என்று வடிவேலு சொல்லும் திரைப்பட நகைச்சுவைகூட உள்ளது. கவிதை எழுதுவதற்கு மட்டுமல்ல கற்கவும்கூட இதுபோன்ற உவமைகள் பயன்படுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
முதலில் உவமைகள் என்றால் என்ன? ஒரு பொருளை மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டுப் பேசுவது அல்லது விளக்குவது. உதாரணமாக மின்சார அலையை எடுத்துக்கொள்வோம். மின்சார அலையை நாம் கண்களால் பார்க்க முடியாது. அதனால் அவற்றை கடல் அலையுடன் ஒப்பிட்டுத் தெரிந்துக்கொள்வோம். இது நமக்கு கற்பதற்கு எளிமையாக இருக்கிறது.
உவமைகள் ஏற்கனவே நமக்குத் தெரிந்த ஒரு கருத்துடன் புதிதாக (அல்லது கடினமான) ஒரு கருத்தை ஒப்பிட்டுப் பார்த்து புரிந்துக்கொள்ள உதவுகிறது. இதனால் நம்மால் வேகமாக கற்க முடியும். நாம் முன்னர் நரம்பணுக்களை ஏலியன்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொண்டதும் உவமையின் வழியைப் பின்பற்றித்தான். ஏனென்றால் இரண்டுக்கும் பொதுவான சில ஒற்றுமைகள் இருக்கின்றன.
ஒரு புதிய கருத்தைக் கற்றுக் ெகாள்வதற்கு நாம் எந்த அளவுக்கு உவமைகளை உருவாக்கிறோமோ, அந்த அளவுக்கு வேகமாக நம்மால் கற்க முடியும் என அறிவியல் கூறுகிறது. அடுத்தவரிடம் ஒரு கருத்தை விளக்கிக் கூறவும் இந்த உவமைகள் நன்றாகப் பயன்படுகின்றன. அதனால் தான் எல்லா மொழிகளும் எக்கச்சக்கமான உவமைகளைக் கொண்டுள்ளது. ‘கல்வியே செல்வம்’ என்பது ஒரு உவமை தான். இந்த உலகமே ‘ஒரு நாடக மேடை’ என ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் கூறியதும் ஒரு உவமை தான். ‘மதம் அபீன் போன்றது’ என்று காரல் மார்க்ஸ் அரசியலைப் பேசுவதும் உவமையைப் பயன்படுத்திதான்.
மூளை இணைப்பும், உவமைகளும்
நாம் உவமைகளைப் பயன்படுத்தும்போது நமது மூளை இணைப்பு நன்றாக வேலை செய்யத்தொடங்குகிறது. இதனால் மிகவும் கடினமான கருத்தைக் கூட நம்மால் சிந்திக்க முடிகிறது. புரிந்து கொள்ள முடிகிறது, கற்க முடிகிறது. இதனை ஆங்கிலத்தில் Neural reuse theory என அழைக்கிறோம். அதாவது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு கருத்தைப் பயன்படுத்தி, அந்தக் கருத்தின் துணைக்கொண்டு புதிய கருத்துக்களை புரிந்து ெகாள்கிறோம்.
ஆனால் ஒரு சில விஷயங்களை முழுமையாகப் புரிந்துக்கொள்ள ஒரே ஒரு உவமை பயன்படாது. உதாரணத்திற்கு நரம்பணுக்களைப் பற்றி ஆழமாக நாம் கற்கும்போது அவை ஏலியன்கள்போல இருக்கும் என்ற உவமை மட்டும் நமக்கு பயன்படாது. அதனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு கருத்தைப் புரிந்துக்கொள்வதற்கு பாதியில் ஒரு உவமை பயன்படவில்லை என்று நமக்கு தோன்றினால், அதனை தூக்கி எறிந்துவிட்டு வேறு உவமைக்கு மாறிவிடலாம். ஒரே ஒரு கருத்தை கற்பதற்கு நாம் எக்கசக்கமான உவமைகளைப் பயன்படுத்தலாம். நமக்கு வேண்டியதெல்லாம் அந்தக் கடினமான கருத்தைப் புரிந்துக்கொள்வதற்கு ஏதாவது ஒரு உவமையை நாம் பயன்படுத்த வேண்டும். அவ்வளவு தான்.
அதேபோல உவமைகள் வினோதமாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். சில விசித்திரமான உவமைகள் உண்மையில் உங்கள் மூளையின் ஆற்றலைத் தூண்டி சில விஷயங்களைச் சிறப்பாக கற்க உதவும். அது குறித்த சிந்தனைகள் என்றும் அழியாமல் நம் நினைவிலேயே நிற்கும்.
நாம் இனி வரும் பகுதிகளில் நிறைய உவமைகளைப் பார்க்கப்போகிறோம். நாம் ஏற்கனவே பார்த்த ஜோம்பிகள், ஏலியன்களைத் தொடர்ந்து ஆக்டோபஸ்கள், எலிகள் என்று நிறைய உவமைகளைக் கொண்டு மூளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வோம். இந்த உவமைகள் கடினமான அறிவியலையும் எளிதில் புரிந்து கொள்ள உதவுகின்றன.
இப்போது நாம் மீண்டும் சாண்டியாகோவின் கதைக்கு வருவோம்.
படிக்கவே கஷ்டப்பட்ட ஒரு மக்குக் குழந்தை எப்படிப் பெரிய விஞ்ஞானியானது? நோபல் பரிசு வென்றது?
மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.