பிரபஞ்சம் காப்போம் – 06
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

மக்கு இலவசமாகக் கிடைத்து வந்தது காற்று மட்டும் தான். ஆனால் இப்போது அறைகளில் காற்று சுத்திகரிப்பான் இயந்திரம் வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் ஏதாவது ஒருவழியில் காற்றை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். காற்று மாசின் விபரீதத்தை நாம் முழுமையாக உணரவில்லை. இந்தியாவில் ஆண்டுதோறும் காற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையானது சாலை விபத்துகள், தற்கொலை, வன்முறை, இயற்கைப் பேரிடர் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிகம்.

சுத்தமான காற்று என்பது மனித உரிமையாகும். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மாசடைந்த காற்றினையே சுவாசிக்கிறார்கள் என உலக வங்கி கூறுகிறது. நாம் ஒரு நிமிடத்திற்கு 12 – முறை சுவாசிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் வேதியியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், “காற்று மாசுபாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 21 – லட்சம் பேர் இறக்கின்றனர்” என்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட “ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் (SoGA) 2024” இந்த எண்ணிக்கையை உறுதி செய்கிறது. காற்று மாசுபாட்டால், நம் தேசம் ஆண்டுக்கு 2,60,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பையும் சந்திக்கிறது என இந்த மத்திய அரசின் அமைப்பான ஐ.சி.எம்.ஆரின் அறிக்கை கூறுகிறது. காற்று மாசுபாடு என்பது நமது காலத்தின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ஆபத்து.

இந்தியாவின் இடம்

காற்றின் தர அளவுகளை மதிப்பீடு செய்யும் சுவிட்சர்லாந்தின் ’ஐக்யூஏர்’ அமைப்பு 2023 – ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் காற்றுத் தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. 134 – நாடுகளில் 7,812 – இடங்களில் பெறப்பட்ட காற்றுத் தரம் தொடர்பான தரவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்று மாசு பட்டியலில் முதல் இடத்தில் வங்கதேசமும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் 2023 – ஆம் ஆண்டுக்கான காற்றுத் தர வாழ்க்கைக் குறியீடு (AQLI) அறிக்கையின்படி, உலகின் இரண்டாவது மாசுபட்ட நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

2023 – ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறையால் வெளியிடப்பட்ட ‘சுத்தமான காற்று நகரம்’ என்ற ஆய்வு அறிக்கையின்படி,  10 – லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட 47 – நகரங்களில் சென்னை 39 – ஆவது இடத்தில் உள்ளது. மதுரை 46 – ஆவது இடத்தில் உள்ளது. காற்று மாசின் தலைநகரமாக நமது தேசத்தின் தலைநகரமான தில்லி உள்ளது. குளிர்கால மாதங்களில் டெல்லியின் காற்றின் தரம் “கடுமையான” நிலைக்குச் செல்கிறது. மேலும் வாசிக்க….

ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.