பிரபஞ்சம் காப்போம் – 05
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
இயற்கை வளம் என்பது மனிதனின் தலையீடு இன்றி இயல்பாக உருவான வளமாகும். அதாவது இயற்கையாகத் தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், கனிமங்கள், தாவரங்கள், உயிரினங்கள் இவை மட்டுமின்றி மேலும் பல வகையான வளங்கள் இவ்வுலகத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இயற்கை வளங்கள் மனித வாழ்க்கைக்கும் மற்ற உயிர்களின் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாகத் துணை புரிகின்றன. உலகில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் மூலாதாரம் இயற்கை வளங்கள். இந்த வளங்களைக் கவனத்துடன் பயன்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் தான் இதன் பாதுகாப்பு அடங்கியுள்ளது. “இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் தவறு நடந்தால், வேறு எதுவும் சரியாக இருக்காது.” என்ற வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் வார்த்தைகளை நினைவில் கொள்வது அவசியம்.
இன்றைய நிலை
உலகில் ஜீவராசிகள் படைக்கப்பட்டபோதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டன. மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அவரவர்களுக்குரிய தேவைகளை இயற்கையிடமிருந்து பெற்றுவந்தார்கள். மனிதனிடம் தனிமனித உடைமைப் போக்கு தலைதூக்கியவுடன், ‘பூமி தனக்கானது மட்டுமே’ என எண்ணத்துவங்கினான். இயற்கைவளத்தைத் தேவைக்கு அதிகமாகச் சுரண்டத் துவங்கினான். மனிதனின் பேராசை இன்றைக்கு இயற்கை வளங்களைத் துவம்சம் செய்து வருகிறது.
ஆறுகள் உள்ளிட்ட நமது நீர் ஆதாரங்களில் பெரும்பாலானவற்றை மாசுபடுத்தி விட்டோம். நிலத்தைத் துளைத்து ஆராய்ச்சிகள் செய்கிறோம், எண்ணெய்க் கிணறுகளை உருவாக்கி வருகிறோம். இருப்பிட வசதி, விவசாயம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு எனச் சொல்லி காடுகளை அழித்து வருகிறோம். காடுகள் அழிக்கப்படுவதனால் நீர் வளம் குறைகிறது. அத்துடன், விலங்குகளுக்கு உணவில்லாத நிலையும், இருப்பிடம் இழப்பும் ஏற்படுகிறது. மரங்கள் வெட்டப்படுவதனால் மழை குறைகிறது. அதன் விளைவாக, நிலங்களுக்குத் தேவையான போதிய நீர் கிடைக்காமையால் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றது. விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் குடியிருப்புகளும் சாலைகளும் உருவாக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகளால் நிலம் மாசடைந்து வரும் அதேவேளையில் அந்த மாசானது, நீருடன் கலப்பதால் நீரும் மாசடைகிறது.
வாகனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால் காற்று மண்டலம் மாசடைவதுடன், ஓசோன் படலத்தில் துவாரங்கள் ஏற்படுகின்றன. நதிகள் வறண்டு விட்டன. கடல்நீர் மட்டம் உயரும் அபாயத்தை எட்டியுள்ளது. இவ்வாறு இயற்கை வளங்கள் சீரழிக்கப்படுவதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்பட்டு அழிவை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் நம் பேராசையே காரணம். “ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்திச் செய்யப் பூமி போதுமான அளவு இயற்கை வளங்களை வழங்குகிறது, ஆனால் ஒவ்வொரு மனிதனின் பேராசையையும் அது பூர்த்தி செய்யாது.” என்பார் மகாத்மா காந்தி. மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.