பிரபஞ்சம் காப்போம் – 02

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

மே 22 – சர்வதேசப் பல்லுயிர் தினம்

யிரினப்பன்மை (Biodiversity) என்பது புவியில் வாழும் பல்வகையான உயிரிகளைக் குறிக்கும். இது பலவகையான தாவர, விலங்கு இனங்கள் மற்றும் நுண்ணுயிர் இனங்கள், அவற்றிலுள்ள பன்முக மரபணுக்களையும் அடையாளப்படுத்தும். உயிரினப்பன்மை என்ற சொல் 1968ஆம் ஆண்டில் வன உயிரினப் பாதுகாவலர் ரேய்மண்ட் எப் டாஸ்மன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1988இல் இ.ஓ.வில்சன் உயிரினப்பன்மை எனும் சொல்லைப் பயன்படுத்தினார்.

ஒரு இடத்தின் உயிரினப்பன்மையை (அ). மரபணு பன்முகத் தன்மை (Genetic diversity), (ஆ). பன்முகச் சிற்றினங்கள் (Species diversity), (இ). பன்முகச் சூழல் மண்டலங்கள் (Ecosystem diversity) என மூன்றாக வகைப்படுத்தலாம்.

முதலாவது, மரபணு பன்முகத் தன்மை என்பதற்கு உதாரணமாக மனிதர்களைக் கூறலாம். ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனிலிருந்து வேறுபடுகிறான். இந்தப் பன்முக மரபணு அல்லது மரபணு வேறுபாடானது சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் அல்லது வேறுபட்ட சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வாழ, தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள உதவுகிறது.

இரண்டாவது, பன்முகச் சிற்றினங்கள் என்பது ஒரு இடத்தில் வாழும் வேறுபட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் குறிக்கும். இதில் சிற்றினங்கள் மூன்று வகைப்படும் அதாவது
1. வட்டார சிற்றினம், இவைகள் ஒரு குறிப்பிட்ட சூழலில் மட்டும் வாழும் தன்மையுடையவை. இவை வேறு இடத்தில் வாழ தங்களை மாற்றிக் கொள்ள இயலாத காரணத்தால் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளன. 2. அன்னிய இனங்கள், அதன் இயற்கையான சுற்றுச்சூழலை விட்டு வேறு ஒரு சுற்றுச்சூழலுக்குக் கொண்டு வரப்பட்ட இனம் ஆகும். இவை உயிரியல் பன்மை உலகெங்கும் இழந்து போவதற்குக் காரணமாகின்றன என்கிறார்கள். 3. உலகப் பொது இன உயிரிகள் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் இனமாகும். எடுத்துக்காட்டாக, நாய், பூனை மற்றும் மனிதன். உலகிலேயே கொல்லும் திமிங்கலம் தான் (Killer Whale) அதிக உலகப் பொது இனத் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது.

மூன்றாவது, பன்முகச் சூழல் மண்டலங்கள் என்பது, ஒரு குறிப்பிட்ட சுற்றுச் சூழலில் காணப்படும் உயிரினப் பன்மைத் தன்மையைக் குறிக்கும். நிலம் சார்ந்ததாகவும், நீர் சார்ந்ததாகவும் இருக்கும். காடுகள், புல்வெளிகள், பாலைவனம் முதலியன தனித்தன்மையுள்ள நிலம் சார்ந்த சூழ்நிலை மண்டலங்கள் ஆகும். ஆறு, ஏரி, குளம் ஆகியவை நீர் சார்ந்த சூழ்நிலைமண்டலங்கள் ஆகும்.

அதிக அளவு உயிரினங்கள் காணப்படும் பகுதிகள் “வளமையங்கள்” என அழைக்கப்படுகின்றன. வெப்பமண்டல மழைக்காடுகள் தான் அதிகப் பல்வகை உயிரிகளைக் கொண்ட செழுமையான “வளமையம்” ஆகும். வெப்ப மண்டலக் காடுகள் உலக நிலப்பரப்பில் 7% மட்டுமே உள்ளது. உயிரினப் பன்மை வள மையங்கள் என்கிற வார்த்தையை ஆங்கிலேய உயிரியலாளர் நார்மன் மைர்ஸ் என்பவர் 1988 ஆம் ஆண்டில் உருவாக்கினார். தற்சமயம் உலகில் 34 உயிரின பன்மை வள மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியா அபரிதமான பல்வகை உயிரினங்களைக் கொண்ட 17 நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவில் 4 வள மையங்கள் காணப்படுகின்றன. அவைகளாவன மேற்கு தொடர்ச்சி மலை, ஹிமாச்சலப் பிரதேசம், இந்தோ – பர்மா பிரதேசம் மற்றும் சுந்தர்லேண்ட் (நிக்கோபர் தீவுக் கூட்டமும் சேர்ந்தது).

எவ்வளவு உயிரினங்கள்

சுவிட்சர்லாண்ட் நாட்டைச் சார்ந்த இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேசன் ஆப் நேச்சர் என்ற அமைப்பானது, இப்பூமியில் தாவரங்கள், விலங்குகள், மற்ற பிற உயிர்கள் உள்ளிட்ட சுமார் 87 லட்சம் இனங்கள் உள்ளதாகக் கூறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவியலாளர்கள் கணக்குப்படி 18.7 மில்லியன் உயிரினங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் நுண்ணுயிரிகளிலிருந்து மிகப் பெரிய பாலூட்டிகள் மற்றும் ஊர்வன வரையிலான இரண்டு மில்லியன் உயிரினங்கள் மட்டுமே நாம் அறிந்தவையாக உள்ளன.

இந்தியா

இந்தியா உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவிகிதம் மட்டுமே உள்ளது, ஆனால் 8 சதவிகிதத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ளது. இதில் 45,000க்கும் மேற்பட்ட தாவர வகைகள் மற்றும் 91,000 வகையான விலங்குகள் உள்ளன.

The Swiftest  இன் ஆராய்ச்சிக் குழு சமீபத்தில் 200 நாடுகளில் ஆய்வு செய்து , உலகளாவிய பல்லுயிர் குறியீட்டை உருவாக்கியது. இந்தியா ஒட்டுமொத்தப் பல்லுயிர் பெருக்கத்தில் 8ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள சில பறப்பன, ஊர்வன உயிரினங்கள், காண்டாமிருகம், புலி, சிங்கம், உள்ளிட்டவை சிறப்பானதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா 7,517 கிமீ நீளமுள்ள ஒரு பரந்த கடற்கரையைக் கொண்டுள்ளது, இந்தியாவின் மற்றொரு முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பு அதன் காடு ஆகும், நாட்டின் புவியியல் பகுதியில் 23.39 சதவிகிதம் காடுகளாகும்.

தமிழகத்தில் ஏறக்குறைய 5,640 பூக்கும் தாவரங்கள், 534 பறவை இனங்கள், 3,609 பூச்சி இனங்கள், 2,500 மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய செறிவான உயிரினப்பன்மை வளத்துக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு வகையான நிலப்பரப்புகளும் பருவ நிலையும் முக்கியக் காரணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் உயிரினப்பன்மை தேவை?

இந்தியாவைப் பொறுத்தவரை, பல்லுயிர்ப் பாதுகாப்பு முக்கியமானது, ஏனெனில் இது, மில்லியன் கணக்கான உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்குவதோடு, அவர்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது. அதாவது உயிரினப்பன்மை நமக்கு உணவு, மருந்து, சுத்தமான காற்று மற்றும் நீர் என முக்கிய ஆதாரங்களை வழங்குகிறது. பயிர்கள், கால்நடைகள், மீன்வளம் மற்றும் காடுகள் ஆகியவை உணவின் வளமான ஆதாரங்களாகும். சின்கோனா மற்றும் ஃபாக்ஸ்க்ளோவ் போன்ற காட்டுத் தாவரங்கள் மருத்துவத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோல மரங்களிலிருந்து பெறப்படுபவை ஏராளம். தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும் சுற்றுலாவின் ஆதாரமாக உள்ளன. இந்தியாவின் கடற்கரையிலிருந்து 50 கிமீ தொலைவில் கிட்டத்தட்ட 250 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். மேலும் 200 மில்லியன் மக்கள் காடுகளை நம்பி வாழ்கின்றனர்.

ஏன் பாதுகாப்பு தேவை

உலக அளவில் சுமார் 26 சதவிகிதப் பாலூட்டிகள், 14 சதவிகிதப் பறவை இனங்கள், 41 சதவிகித ஊர்வன இனங்கள், 39 சதவிகித நீர்நிலவாழ் இனங்கள், 25 சதவிகித மீன் இனங்கள் மற்றும் 20 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையிலான தாவர இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாக அறிவியலாளர்களின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 94 வகையான பாலூட்டிகள், 78 வகையான பறவைகள், 66 வகையான நீர்வீழ்ச்சிகள், 30 வகையான ஊர்வன, 122 வகையான மீன்கள், 113 வகையான முதுகெலும்பில்லாத உயிரினங்கள் மற்றும் 255 வகையான தாவரங்கள் ஆபத்தான நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே இவையனைத்துக்கும் பாதுகாப்பு தேவை. காடழிப்பு, நகரமயமாக்கல், காலநிலை மாற்றம், இயற்கைவளங்களின் மீதான அதீத நுகர்வு, சுற்றுச் சூழல் மாசுபாடு உள்ளிட்டவை பல்லுயிர் அழிவில் பெரும்பங்கு வகிக்கின்றன.

உயிரினப்பன்மைச் சட்டத்தை மத்திய அரசு 2002-ல் நிறைவேற்றியது. இச்சட்டத்தின் அடிப்படையில் தேசிய உயிரினப்பன்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதன் கீழ் மாநில உயிரினப்பன்மை வாரியங்களும் ஒவ்வொரு மாநில வாரியத்தின் கீழ் உயிரினப்பன்மை மேலாண்மைக் குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் சமூகத்தின் பங்களிப்பே மிக அவசியம்.

சமுதாயத்தின் பங்களிப்பு

ஆங்கில வீரர்கள் சிலர் 1798ஆம் ஆண்டு வேடந்தாங்கலில் சில நாரைகளைச் சுட்ட போது அப்பகுதியினர் திரண்டு சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துக் கூடு கட்டியுள்ள பறவைகளைச் சுடக்கூடாது என்பதற்கான உத்தரவு போடவைத்தனர். இது உயிரி பன்மையம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இந்த விழிப்புணர்வு ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே நடந்த சம்பவமாகும். இந்தியாவில் இதைப் போன்ற பல சம்பவங்களுக்கு ஆதாரங்கள் உண்டு.

இந்தியாவில் வன உயிரிகள் பாதுகாப்பில் மக்கள் பங்கேற்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டு, இராஜஸ்தான் சரிஸ்கா புலிகள் காப்பகத்தை உதாரணமாகக் கூறலாம். அங்குள்ள மக்கள் சுரங்கப் பணிக்கு எதிராகப் போராடி தாங்களே வன உயிரிகளின் வாழிடத்தைப் பாதுகாக்கின்றனர். இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் ஐந்து கிராம மக்கள் இணைந்து 1200 ஹெக்டேர் காடுகளைப் பைரோடெவ் டாகவ் சொன்சூரி என்று அறிவித்து அதைப் பாதுகாக்க தாங்களே விதிகள் அறிவித்து வனவிலங்குகளைக் காத்து வருகின்றனர். ராஜஸ்தானில் உள்ள பிஷ்னாய் கிராமங்களில் வெளி மான்கள் கூட்டமாய்ச் செல்வதையும், நீல மான் இனங்கள் மற்றும் மயில்கள் அந்தக் கிராமத்தின் ஒரு அங்கமாகத் திகழ்வதையும் யாரும் அவற்றைத் துன்புறுத்தாமல் இருப்பதும் அந்தக் கிராமத்தினரின் உயிரிய பன்மைக்கான அக்கறையாகும்.

என்ன செய்யவேண்டும்?

ஒவ்வொரு ஆண்டும் மே 22ஆம் தேதி சர்வதேசப் பல்லுயிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேசப் பல்லுயிர் தினத்தின் இவ்வாண்டு மையக்கரு “`திட்டங்களில் அங்கமென நீங்களும் இணையுங்கள்” என்பதாகும். அதற்கு, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை மையப்படுத்திய கல்வி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவேண்டும். பல்லுயிர்ப் பாதுகாப்பில் பழங்குடி மக்களின் பங்கு அபரிமிதமானது. எனவே அவர்களின் பணிகளைப் பாராட்டி ஊக்கப்படுத்துவது மிக அவசியம். தேசிய மற்றும் பிராந்திய பூங்காக்கள் போன்ற புதிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குதல், அத்துடன் ஏற்கனவே உள்ளவற்றைப் பாதுகாத்தல், காடழிப்பு மற்றும் வாழ்விட அழிவை எதிர்த்துப் போராடுதல், வளிமண்டலம், நீர் மற்றும் மண் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுதல், சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துதல், மரம் மற்றும் நீர் போன்ற இயற்கை வளங்களுக்கான நிலையான மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும். பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் தேனீக்கள் முக்கியமானவை. தேனீக்களைப் பாதுகாக்கவேண்டும். நாம் பூமியின் பாதுகாவலர் மட்டுமே. இதனைப் பாதுகாப்பாக அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்வது நமது கடமையாகும். =