வெற்றியோடு விளையாடு!  – 17

டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

ர்வம் இருந்தால் போதும் கல்விக்கு வறுமை எப்போதும் தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் கணியன்.செல்வராஜ். தற்போது புதுக்கோட்டை  வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இது ஒரு முகம் தான்.  இவருக்கு இன்னும் ஆறுமுகம் இருக்கிறது.‌ அது கலைகளின் முகம்.

‘பன்னிரெண்டாம் வகுப்பு வரைமட்டுமே படித்த நான் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்,  அப்போது பேராசிரியர் சந்திரன் அவர்கள் மூலம் பள்ளி ஆசிரியர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு உயர் கல்வி ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கை ரீதியாகவும் நிறைய அறிவுரைகள் சொன்னார்.‌ அவர் சொன்ன அறிவுரைகளை ஏற்று
அவரின் ஆலோசனைப்படி தொலை தூரக்கல்வியில் தொடர்ந்து படித்தேன்.‌ இப்போது தமிழில் முதுகலைப்பட்டம்,  கல்வியியலில் முதுகலைப் பட்டம், புலவர் பட்டம் ஆகிய பட்டங்களைப் படித்து முடித்து விட்டேன். பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே இதெல்லாம் சாத்தியமானது எனக்கே ஆச்சரியமாக இருக்கும்.‌

என்னுடைய திறமைகளை எனக்கு நானே நிரூபித்துக் கொள்ள பல  போட்டித் தேர்வுகளை எழுதினேன்.‌ ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.  கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.

உங்கள் கலை உலகப் பயணம் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் எழுதிய ‘ஆதாம் இல்லாத இரவு’, ‘வனத்தில் இருந்து வந்தவள்’, கவிதை நூல்கள் பெரும் வரவேற்- பைப் பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் தேடித்தந்தன.  மக்களிடத்தில் மெல்ல மெல்ல மறைந்து வரும் சிறுதெய்வங்கள் பற்றிய வரலாறு, பண்பாடுகள் அவை உருவான கதைப்பின்னணியை ஆவணப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தேடி அலைந்து பல விவரங்களைத் திரட்டி, கதைகளை  உருவாக்கி ‘முப்பிடாரி’ என்றபெயரில் புத்தகமாக வெளியிட்டேன். அந்தப் புத்தகமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நாணயங்கள் சேகரிப்பிலும் உங்களுக்கு ஆர்வம் உண்டு என்று கேள்விப்பட்டோம்!

உண்மைதான், நாணயங்கள் சொல்லும் வரலாறு இனிமையானது. நாணயங்களைச்  சேகரித்து அதை வெளியிட்ட காரணங்களை அறிந்து கொள்வதில் எனக்குப் பெரிய ஆர்வம் உண்டு. பழைய நாணயங்களைச் சேகரித்து, ‘‘நாணயங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள்’’,  என்ற பெயரில் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்குக் காட்சிப்படுத்தி வருகிறேன்.  இந்த முயற்சியை இந்து தமிழ் நாளிதழ் பாராட்டி கட்டுரை வெளியிட்டு கௌரவப் படுத்தியது.‌

உங்கள் சிறுகதை ஒன்று திரைப்படமானதாக சொன்னீர்கள். அது பற்றிச் சொல்லுங்களேன்!

நான் எழுதிய ‘அரண்மனைப்பெண்டு’ என்னும் கதை இந்தியாவின் முதல் திருநங்கை இயக்குநர் பிரியாபாபு அவர்களால் ‘அரிகண்டி’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. மூன்றாம் பாலினத்தவரின் தியாகம் குறித்துக் கூறுகிற வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது.

பாடல்களும் எழுதுகிறீர்களா?

ஆமாம்!  ‘உழைப்பாளர் தினம்’ என்ற திரைப் படத்தில் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியுள்ளேன். இது மட்டுமல்லாமல் தற்போது ‘சாஞ்சி புக்ஸ்’ என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி நல்ல நூல்களை வெளியிட்டு வருகிறேன். ‘பலாமரத்து முனி’ என்ற வரலாற்று நாவல் விரைவில் சாஞ்சி புக்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வர இருக்கிறது. கல்விப்பணி, திரைப்பணி, பதிப்புத்துறை,
வரலாற்று ஆய்வு என்று பல்வேறு துறையில் இயங்கி வந்தாலும் கற்பதில் எனக்கு ஆர்வம் குறைந்ததில்லை. விரைவில் என்னுடைய முனைவர் படிப்பைத் தொடங்க உள்ளேன். கல்வியில் எனக்குப் பெரிய ஆர்வமும், வறுமையிலும் கல்வியை தொடரலாம் என்ற எண்ணமும், எனக்கு வரக் காரணமானவர் இதோ இப்போது என்னைப் பேட்டி எடுத்து வெளியிடும் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார்தான்.  காரணம் தாங்களும் பல்வேறு தடைகளைமீறி பட்டங்கள் பல பெற்று முன்னேறிக்காட்டியவர்
என்று சொன்னார்.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன? என்று கேட்டோம்.‌

சாஞ்சி புக்ஸ் பதிப்பகத்தின் மூலம் நல்ல நூல்களை வெளியிட்டு அனைவருக்கும் படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான்
என்கிறார்.‌

இவருடைய பணிகளைப் பாராட்டி மதுரை நகைச்சுவை மன்றம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இவருக்கு ‘‘சிறந்த இளைஞர் விருதை’ வழங்கியுள்ளது.

கல்வி, எழுத்து, திரைப்படம் என்று அனைத்துத் துறைகளிலும் இன்னும் பல செயற்கரிய செயல்களை செய்ய ஆளுமைச் சிற்பி, ஆசிரியர் கணியன். செல்வராஜ் அவர்களை வாழ்த்துகிறது.=