சாதனையாளர் பக்கம்

மதுரை ஆர். கணேசன்

குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறமைகள் அளப்பரியது. தங்களது அசாத்தியத் திறமைகளை வெளிப்படுத்தும் போது தனித்துவமாக பேசப்பட்டு பிரபலமாகியிருக்கிறார்கள்..!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளில் தியா எனும் குழந்தை மக்களிடத்திலும், சமூக வலைதளங்களிலும் “..திருப்புகழ் தியா என்றும் குட்டி கே.பி.சுந்தராம்பாள்..” என்றும் அழைக்கப்படுகிறாள்..!

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தியாவிற்கு ஏழு வயது ஆகுகிறது. இவள் பாட்டுப் பாடியதைக் கேட்கும் போதும் அல்லது மேடையில் பாடும் போதும் கேட்டால் மனம் மெலிதாக தித்திக்கிறது.

தியாவின் குரல் திருக்குறளில் ஒரு குறளை ஞாபகப்படுத்துகிறது “..குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்..” என்று வரும். திருவள்ளுவர், தியா போன்ற குழந்தைகளை நினைத்து தொலை நோக்கத்துடன் எழுதியிருப்பார் போலும்..?!

ஒரு பாடல் “..கள்ளமில்லாமல் வரும் அடியார்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து..” என தொடர்ந்து தியா பாடுகிறாள். ஆன்மிகம் கலந்த கணீர் குரல், மழலைத்தனமான முகபாவங்கள், உடல் மொழி அனைத்தும் நமக்கு ரசிக்க கற்றுத் தருகிறாள்..!

அருணகிரிநாதரின் திருப்புகழ் அறுபடைவீடுகளில் பழமுதிர்சோலை பற்றிய பாடல்களில் இடம் பெரும் “…அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய் இகரமுமாகி இவைகளுமாகி இனிமையுமாகி வருவானே..” என்று தொடரும் பாடலுக்கு விளக்கமும் தந்து அட்சர சுத்தமாய் பாடுகிறாள் “..ஆஹா என்று சபாஷ் போடத் தோன்றுகிறது..!

மூன்று வயதிலிருந்து பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறாள். முதல் மேடை ஐந்து வயதில் ஆரம்பித்தது. முதல் கச்சேரி மதுரை பூங்கா முருகன் திருக்கோவிலில் வைகாசி விசாகத்தன்று தொடங்கியது.

திருப்புகழ், அறுபடைவீடு, முருகன் பாடல்கள், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி என்று மனம் விரும்பி பாடிக்கொண்டு வருகிறாள். பல்வேறு திருக்கோவில்களில் இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியிருக்கிறாள்.

சென்னையில் வடபழனி முருகன் கோவில், திருப்போரூர் கந்தசாமி முருகன் கோவில், பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் மட்டும் ஐந்து முறை இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறாள். மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் திருக்கோயில் உள்பட பட்டியல் நீள்கிறது.

தியாவிற்கு பழைய பக்தி பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். கே.பி. சுந்தராம்பாள், மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்கள் பாடிய பல பாடல்களை மேடைகளில் பாடியுள்ளார் அதனாலே பலரும் “..குட்டி கே.பி.சுந்தராம்பாள்..” என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

இசை நிகழ்ச்சிகளில் “..பக்தி இளவரசி என்றும் இளம் சாதனையாளர் விருது, தமிழ்மறை அறக்கட்டளையின் சார்பாக விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.

தியா, மேடைகளில் பாடல்கள் மட்டுமல்லாது பாடல்கள் பாடும் பொழுது, அப்பாடல்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், உதாரணமாக, திருப்புகழ் கந்தர் அலங்காரம் பற்றிய விளக்கக் கதைகள் கூறிப் பாடுவது தியாவின் தனிச்சிறப்புகளாகும்.

திரைப்பட பின்னணிப் பாடகி மாலதி, பாடகர் வேல்முருகன், இசையமைப்பாளர் C.சத்யா, கர்நாடக இசைப் பாடகி நித்ய மகாதேவன், ஹரிகதா புகழ் திருமதி விஷாகா ஹரி, பாடகர் வீரமணி ராஜு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தினமலர் ஆதிமூலம், டிரம்ஸ் சிவமணி போன்றோரை தியா சந்தித்து இதுவரை வாழ்த்துகளும் ஆசிகளும் பெற்றுள்ளார்.

திருக்கோவில்களில் மட்டுமல்லாது, ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சிகள் மதுரை, சென்னை, சேலம் கோயம்புத்தூர், நாகர்கோவில் போன்ற பல ஊர்களில் நடக்கும் போதும், முக்கிய நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் கலந்து கொண்டு தன்னுடைய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

தியா பேச்சுப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி என, பல போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் வாங்கி உள்ளார். இரண்டரை வயதில் தேசிய கீதம் பாடி, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு Young Patriot Award பெற்று உள்ளார். தான் படிக்கும் பள்ளியில் முதல் மாணவியாகவும் திகழ்கிறாள். இதனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் முழு ஒத்துழைப்புத் தருகிறார்கள்.

தியாவின் பெற்றோர் அபி மற்றும் ஹேம்..,

“..எங்க அம்மா, தியாவின் பாட்டி லதா குழந்தையாக இருக்கும் போதே அவளுக்கு கதைகள், சின்ன சின்ன ஸ்லோகங்கள் என்று ஆரம்பித்து பின்பு, பாடல்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார். முக்கியமாக திருப்புகழ் பாடல்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார். நான் பக்திப் பாடல்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

ஒரு அம்மாவாக தியாவிற்கு இத்தனை மேடைகள் அமைந்திருப்பதும், இத்தனை பாடல்களை அவள் பாடுவதில் மக்கள் நின்று ரசித்து அவளைப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிப்பதும், ஆசீர்வாதங்கள் செய்வதும் முருகனின் திருவருளாகவே குடும்பத்தில் உள்ள அனைவரும் நம்புகிறோம்.

அவளுக்கு ஒரு மருத்துவராக வேண்டும் என்பது ஒரு ஆசை. படிப்பிலும் இசையிலும் சிறந்து விளங்கும் ஒரு குழந்தையாக வளர்ந்து வருகிறாள். அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறோம். அவளது கனவு, இலட்சியம் அடைய உறுதுணையாக இருப்பதை எங்கள் கடமையாகக் கருதுகிறோம்.

அவள் இதுவரை 41 இசை நிகழ்ச்சிகளுக்கும் மேல் சென்றிருக்கிறாள். விரைவில் 50 ஆவது இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் சுமார் 20 பாடல்கள் பாடுகிறாள்.

அந்தந்த இசை நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் பலரும் தியாவை வாழ்த்திப் பாராட்டி ஆசீர்வதிப்பது அனைத்துமே மறக்க முடியாத நிகழ்வுகளாகவே இருந்திருக்கிறது. தியாவை  “..குட்டிமுருகன் என்றும் குட்டிமீனாட்சி..” என்றும் மக்கள் கொஞ்சுவதும் எங்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

இசை நிகழ்ச்சிகளில் பலபெரியவர்கள் ஆனந்தக் கண்ணீரோடு தியாவிற்கு ஆசீர்வாதம் செய்து வாழ்த்துகின்றனர். நிறையப் பெரியவர்கள் தங்களது கவலையை மறந்து அந்த ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மிகவும் மகிழ்வோடு இருந்ததாக வாழ்த்துக் கூறியுள்ளனர். அந்த மகிழ்ச்சி எங்களுக்கு மிகவும் மனநிறைவை எப்பொழுதுமே கொடுக்கிறது…”

ஏழு வயதில் இறைவன் புகழ்பாடி, மக்களை மகிழ்வித்து, நற்பணியாற்றும் ‘தியா’வின் வெற்றிப் பாதைகளுக்கு ’ஆளுமைச் சிற்பி’  வாழ்த்துகின்றது.