திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

கற்றல் எளிது -02

ன்று நாம் ஸ்மார்ட் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்றைய குழந்தைகள் பேச்சுப் பழகுவதற்கு முன்பே, ஸ்மார்ட்போன் பழகி விடுகின்றன. இதனால் புத்தக வாசிப்பு என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. பாடப் புத்தகங்கள் மட்டுமல்ல கதைப் புத்தகங்கள்கூட வாசிப்பதற்கு சிரமமாகிவிட்டன.

ஆனால் எத்தனை கடினமான புத்தகங்களையும் நாம் எளிதாக வாசிக்கலாம் என்கிறது அறிவியல். இந்தப் பிரபஞ்சத்திலேயே உருவான மிகவும் அதி சக்திவாய்ந்த கருவி என்ன என்று உங்களுக்கு தெரியுமா? நான் கேட்டவுடன் யோசிக்கத் தொடங்குகிறதே அதுதான். ஆம் நம் மூளை தான். நம் மூளையால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறீர்களோ அதற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு உங்களுக்கு உதவ முடியும்.

உங்கள் மூளைதான் இயற்கை உருவாக்கிய அதிநவீனக் கருவி என ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஒரு கணினியால் எவ்வளவு கடினமான கணக்கிற்கும் ஒரு நிமிடத்திற்குள்ளேயே தீர்வு காண முடியும். ஒரு நொடியில் நீங்கள் தேடும் விஷயங்களைக் கொண்டு வந்து உங்கள் கைகளில் தர முடியும். இதையெல்லாம் செய்ய உங்களுக்குக் கணினியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருந்தால்போதும்.

அதேபோல்தான் உங்கள் மூளையும். உங்கள் மூளையை எப்படிப் பயன்படுத்துவது என்று நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதைக் கற்றுக்கொண்டுவிட்டால் மூளையைப் பயன்படுத்தி எவ்வளவு பெரிய காரியத்தையும் சுலபமாகச் சாதித்துவிடலாம்.

இதே வழியில்தான் உங்கள் மூளையைப் பயன்படுத்தி கடினமான புத்தகங்களை எப்படிப் பயிலலாம் என்று இப்போது பார்க்கப்போகிறோம்.

முதன் முதலில் புத்தகம் வாசிக்கத் தொடங்கும்போது என்ன செய்தீர்கள் என்று நினைவு இருக்கிறதா? புத்தகத்தை எடுத்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்று படிக்கத் தெரியுமோ இல்லையோ, சும்மாவாவது புரட்டியிருப்பீர்கள். நண்பர்கள் கூட கேலி செய்திருப்பார்கள், ’படிக்கவா போற, படம் தானா பார்க்குற?’ என்று. ஆனால் எந்த ஒரு புத்தகத்தையும் வாசிக்கத் தொடங்கும் முன்பு அதைத்தான் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது அறிவியல்.

ஆங்கிலத்தில் அதனை Picture Walk எனக் குறிப்பிடுகிறார்கள். நாம் தமிழில் ‘படம் பார்த்தல்’ என அழைக்கலாம்.

பொதுவாக ஒரு புத்தகத்தை எப்படி வாசிக்கப் பழகியிருக்கிறோம்? புத்தகத்தைத் திறந்தவுடன் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பிப்போம். முதல் வரியில் தொடங்கி வரிசையாக சரசரவென வாசிப்போம். அடுத்த பக்கத்தைப் புரட்டுவதற்கு முன் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களும் புரிந்துவிட்டதா என்று உறுதி செய்தபின்தான் அடுத்த பக்கத்திற்கே போவோம். நமது ஆசிரியர்களும் அப்படித்தான் வாசிக்க வேண்டும் என்று சொல்லித் தந்திருப்பார்கள். அது தானே சரியான வழி? இல்லை, தவறு என்கிறது அறிவியல்.

ஒரு புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தை வாசிக்கும் முன் ‘படம் பார்த்தல்’ அவசியம் என்கிறது அறிவியல். அது என்ன படம் பார்த்தல்? ஒரு புத்தகத்தை வாசிக்கிறோம் என்றால் முதல் அத்தியாத்தைத் தொடங்கும்போது அதில் என்னென்ன விஷயங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பது குறித்து மேலோட்டமாக ஒரு முன்பார்வை பார்க்க வேண்டும். அதுதான் படம் பார்த்தல்.

அந்த அத்தியாயத்தில் என்னென்ன படங்கள் இருக்கின்றன, என்னென்ன தலைப்புகள் இடம்பெற்றுள்ளன, அதில் உள்ள வரைப்படங்கள் எதைப் பற்றியது என அனைத்தையும் ஒருமுறை பார்க்க வேண்டும். அடைப்புக்குறிக்குள் இருந்தால் அதில் தரப்பட்டிருக்கும் தகவல்கள் என்ன, அத்தியாயச் சுருக்கங்கள் (Summary) இருந்தால் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் என்னென்ன என்று ஒருமுறை அலச வேண்டும். அத்தியாயத்தின் இறுதியில் கேள்விகள் இருந்தால் அதையும் ஒரு முறை பார்த்துவிட வேண்டும். இதைத்தான் நாம் படம் பார்த்தல் என்கிறோம்.

நாம் ஏன் இதைச் செய்கிறோம்?

நீங்கள் இன்னும் முதல் அத்தியாயத்தையே தொடங்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே படம் பார்க்கத் தொடங்குவது அந்த அத்தியாயத்தில் என்னவெல்லாம் வரப்போகிறது என்பது குறித்த ஓர் ஐடியாவை உங்கள் மூளைக்குக் கொடுத்துவிடும். அதன்பின் அந்த அத்தியாயத்தை நீங்கள் வாசிக்கத் தொடங்கும்போது உங்கள் மூளை நீங்கள் கொடுத்த ஐடியாக்களை வைத்து புத்தகத்தில் இருக்கும் தகவல்களைச் சரியாக உள்வாங்கத் தொடங்கும். மேலும் உங்கள் எண்ணங்களை ஒழுங்குப்படுத்தி, குழப்பம் இல்லாமல் பதியவைக்கும்.

இதை இப்படி எளிமையாக விளக்கலாம்

நீங்கள் புதிதாக ஓர் இடத்திற்குச் செல்ல யாரிடமோ வழி கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் சொல்லும் முழு விவரங்களையும் உங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியாது. போகும் வழியில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது, ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது, ஒரு ஆற்றுப்பாலத்தைக் கடக்க வேண்டும், இறுதியில் நாம் சென்று சேர வேண்டிய இடம் வரும் என்று முக்கிய இடங்களை மட்டுமே உங்கள் மூளை நினைவில் வைத்துக்கொள்ளும்.

பிறகு நீங்கள் பயணத்தைத் தொடங்கும்போது கோயில் வருகிறது, பள்ளிக்கூடம் வருகிறது, பாலம் வருகிறது என்று உங்கள் மூளை ஏற்கெனவே பதித்து வைத்திருக்கும் இடங்களை அடையாளம் கண்டு வழி தவறாமல் அழைத்துச் செல்லும். அதேபோலத்தான் புத்தகம் படிக்கும் போதும் நாம் செய்யும் படம் பார்த்தலும்.

நீங்கள் ஓர் அத்தியாயத்தை வாசிக்கும் முன் அது பற்றி ஒரு மேற்பார்வை பார்த்துவிடும்போது இந்தத் தகவல்கள் எல்லாம் இருக்கிறது என்று உங்கள் மூளைக்கு ஒரு வலுவான அடித்தளம் கிடைத்துவிடும். பின்னர் படிக்க தொடங்கியவுடன் ஒவ்வொரு கருத்துக்களையும் சரியாக இணைத்து உங்கள் மூளை எளிதாக உள்வாங்கிவிடும்.

நீங்கள் படம் பார்க்காமல் ஓர் அத்தியாயத்தை நேர்வரிசையில் படிக்கும்போது புதிய புதிய தகவல்களை அடுத்து அடுத்து உங்கள் மூளைக்குக் கொடுக்கிறீர்கள்.  பிரச்சனை என்னவென்றால் நம் மூளையில் உள்ள குறுகிய கால நினைவாற்றலால் (Working Memory / Short term memory) ஒரே நேரத்தில் சராசரியாக நான்கு புதிய தகவல்களை மட்டும்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அதனால் நீங்கள் தொடர்ச்சியாகப் படிக்கும்போது பழைய தகவல்களைக் கொஞ்சம் மறந்துவிட்டுத்தான் புதிய தகவல்களை உள்வாங்கும். இதனால் ஒரு அத்தியாயத்தை முழுதாகப் படித்து முடிப்பதற்கு உள்ளாகவே, அதிலுள்ள சில விஷயங்கள் நமக்கு மறந்துபோய் இருக்கும். இதுவே நாம் படம் பார்த்துவிட்டுப் படிக்கத் தொடங்கும்போது எல்லாத் தகவல்களையும் இணைத்து உங்கள் மூளை ஒரே தகவலாக மூளையில் பதிய வைத்துவிடும்.

இதனால்தான் நாம் எந்த ஒரு புத்தகத்தையும் எடுத்து முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கும் முன்பு படம் பார்த்தல் அவசியம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாகப் பாடப் புத்தகங்கள் வாசிக்கும்போது அதில் வெறும் தகவல்கள் மட்டுமே அடங்கியிருக்கும் என்பதால் உங்கள் மூளை விரைவாகச் சோர்வாகிவிடும். இதனைத் தவிர்க்க நாம் படம் பார்த்துவிட்டு படிக்கத் தொடங்குவது நல்லது.

குறிப்பெடுங்க

அதேபோல வாசிக்கச் செல்லும்போது குறிப்பெடுப்பதற்கு என்று ஒரு நோட்டு புத்தகத்தை வைத்துக்கொள்வதும் அவசியம் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஒரு தலைப்பை வாசித்துவிட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களைக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்வது உங்கள் நினைவாற்றலைத் தூண்டும் எளிய பயிற்சி.

அதற்காக ஓர் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களையும் அப்படியே வரிக்கு வரி குறிப்பெடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. முக்கியமான கருத்துக்களை (Key Insights) மட்டும் உங்களுக்குப் புரியும்படி குறிப்பெடுக்க வேண்டும்.

அந்தக் கருத்துக்களை நீங்கள் ஒரு வரைபடமாகவோ, ஓவியமாகவோ வரைந்து குறிப்பு எடுக்கலாம். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த தகவல்களுடன் இணைத்துப் புரியும்படி குறிப்பெடுக்கலாம். ஒரு விடுகதையைப் போலக் கேள்விகளை எழுப்பிக் குறிப்பெடுக்கலாம். இங்கே குறிப்பெடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் முக்கியம். எப்படி எடுக்கிறீர்கள் என்பது அல்ல. குறிப்பெடுப்பது நம் நினைவாற்றலை எப்படிச் சீராக்க உதவுகிறது என்பது விரிவாக நாம் பின்னால் பார்க்கலாம். இப்போதைக்குக் குறிப்பெடுக்க வேண்டும் என்பதை மட்டும் உணர்ந்துகொள்வோம்.

படம் பார்த்தல், குறிப்பெடுத்தல் மேற்கூறிய இரண்டு விஷயங்களையும் நீங்கள் செய்யும்போதே உங்கள் புரிதலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.  இரண்டையும் நீங்கள் ஒரு பழக்கமாக மாற்றிக்கொண்டீர்கள் என்றால் எந்தப் புத்தகமாக இருந்தாலும் அசால்டாக படித்து புரிந்துகொண்டுவிடலாம்.

ஞாபக மறதியை வழிக்குக் கொண்டு வரலாம்!

படிக்கும்போது அடுத்ததாக நமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை ஞாபக மறதி. நாள் முழுதும் உட்கார்ந்து பாடத்தைப் படிப்போம் ஆனால் பரீட்சை ஹாலில் நுழைந்தவுடனேயே என்ன படித்தோம் என்பதை மறந்துவிடுவோம். வேறு சிலருக்கு எவ்வளவு படித்தாலும் பாடம் மண்டையில் ஏற மறுக்கும். அதேபோல சிலருக்குப் பலமுறை படித்தால்தான் புத்தகத்தில் உள்ள விஷயம் புரியவரும். அவர்களால் எதையும் வேகமாகவும், எளிதாகவும் கற்க முடியாது. இப்படிப்பட்ட பிரச்னைகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால் கவலை வேண்டாம்.

உங்களால் வேகமாக கற்க முடியவில்லை என்றால் உங்களுக்குப் படைப்பாற்றல் திறன் (Creativity skill) அதிகம் இருக்கிறது என்று அர்த்தம். இதை நான் கூறவில்லை அறிவியல் கூறுகிறது. உங்களுக்கு இருக்கும் கற்பனைத் திறனைக்கொண்டு சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும். ஆனால் அதற்காக உங்களால் எதையும்  கற்க முடியாது என்று அர்த்தம் இல்லை. உங்களால் மற்றவரை விடச் சிறப்பாக கற்கவும் முடியும். அதையும் பின்னால் பார்ப்போம்.

நம்மில் நிறைய பேர் கடினமான பாடங்களை எல்லாராலும் கற்கவே முடியாது என்று நினைக்கிறோம். ஆனால் மூளை குறித்து ஆய்வுகளை செய்யும் நரம்பணுவியல் (NeuroScience) துறையானது இந்தக் கருத்தைத் தவறு என்று நிரூபித்திருக்கிறது. மக்கு குழந்தையும் விஞ்ஞானியாக முடியும் என்று கூறுகிறது. அதற்கான வாழும் உதாரணங்களையும் வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

இப்போதைக்கு நன்றாகப் படிப்பதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். அது கஷ்டப்படாமல் படிப்பது. என்ன புரியவில்லையா? எல்லோரும் கஷ்டப்பட்டுப் படித்தால்தான் நன்றாகப் படிக்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால் அறிவியலோ அதிகம் கஷ்டப்பட்டால் படிக்க வேண்டும் என்று கூறுகிறது என்று குழம்புகிறீர்களா? அது ஏன் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.