கற்றல் எளிது – 01

திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

சில கேள்விகளுடன் இந்தத் தொடரைத் தொடங்கலாம். இந்தக் கேள்விகளுக்கு கூகுளில் தேடாமல் விடைகூற முயற்சி செய்யுங்கள்.

1) தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?

2) மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?

3) வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது?

4) தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்?

5) தென் இந்தியாவின் மேன்செஸ்டர் என அழைக்கப்படும் மாவட்டம் எது?

மேலே கேட்கப்பட்ட ஐந்து கேள்விகளும் எளிமையான, அடிப்படைக் கேள்விகள். இந்தக் கேள்விகளை நாம் பள்ளியில் படித்திருப்போம், அல்லது படித்துக்கொண்டிருப்போம். இதில் எத்தனைக் கேள்விகளுக்கு உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடிகிறது? ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லியிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் விஷயம் அறிந்தவர்தான். சூப்பர்.

இதில் ஏதாவது ஒரு சில கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை என்றாலோ, அனைத்துக் கேள்விகளுக்குமே கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது என்றாலோ கவலை வேண்டாம். நீங்கள் புத்திசாலி இல்லை என்பது அர்த்தம் இல்லை. ஒன்று சரியாகப் படித்திருக்க மாட்டீர்கள், இல்லை என்றால் மறந்து போயிருப்பீர்கள்.

நமக்கு ஒரு விஷயம் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் ஒன்று நமக்கு அந்தப் பாடத்தின் மேல் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கும். அல்லது, நமக்கு அந்தப் பாடத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று தெரியாமல் போயிருக்கும்.

ஒருவருக்குத் தனிப்பட்ட ஆர்வம் என்பது அவர் பிறக்கும்போதே ஒட்டிக்கொண்டு வருவதில்லை. அவர் அதிகம்  புழங்கும்  விஷயங்களை, புரிந்துகொண்ட விஷயங்களைப் பொறுத்தே வளர்கிறது. உங்கள் வீட்டில் யாராவது ஒருவர் சினிமாவில் இருந்தால், மற்றவர்களைவிட நீங்கள் சினிமா குறித்த விஷயங்களை அதிகம் தெரிந்துவைத்திருப்பதும், உங்களுக்குச் சினிமாவில் ஆர்வம் அதிகம் இருப்பதும் சாதாரண விஷயம்.

இப்போது உங்களுக்கு ஒரு பாடத்தில் ஆர்வம் இல்லை என்றால் என்ன அர்த்தம்? அந்தப் பாடம் உங்களுக்குச் சரியாக புரியவில்லை என்றுதான் அர்த்தம். உங்களுக்கு உயிரியல் பாடத்தில் ஆர்வம் கிடையாது என வைத்துக்கொள்வோம். Reticular formation, hypothalamus, Pineal gland ஆகிய வார்த்தைகளைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனேயே கண்ணைக் கட்டுகிறதா? தூக்கம் வருவதுபோல இருக்கிறதா? ஆம், நம் உடலில் இருக்கும் இந்த அமைப்புகள்தான் நமக்குத் தூக்கம் வருவதற்குக் காரணம். கீழே உள்ளதைக் கொஞ்சம் வாசியுங்கள்.

தூக்கம் எப்படி வருகிறது? இரவு வந்ததும், கண்களிலிருந்து ரெட்டிகுலர் அமைப்புக்குச் செய்தி போகிறது. அது ஹைப்போதலாமஸ் எனும் பகுதி வழியாக பீனியல் சுரப்பி எனும் உறுப்புக்குத் தகவல் அனுப்புகிறது. அது மெலட்டோனின் எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன் மூளையின் பெரும்பாலான மின்தூண்டல்களைத் தற்காலிகமாக அணைத்துவிடுகிறது. உடனே நம்மைத் தூக்கம் ஆட்கொள்கிறது.

இப்போது நமக்குத் தூக்கம் எப்படி வருகிறது என்று கொஞ்சம் புரிகிறதா? கொஞ்சம் புரிந்தவுடனேயே அட இவ்வளவு தானா? நன்றாக இருக்கிறதே என்று உயிரியல் மேல் கொஞ்சம் ஆர்வமும் வருவது போலத் தோன்றுகிறதா?

ஆர்வமும், வகுப்பறை அனுபவமும்

பெரும்பாலும் நமக்கு ஒரு பாடத்தில் ஆர்வமில்லாமல் போனதற்கு நமக்குக் கிடைத்த மோசமான வகுப்பறை அனுபவமே காரணமாக இருக்கும். சிறுவயதில் எந்த ஒரு பாடத்தைத் தொடங்கும்போதும், இந்தப் பாடத்தில் வரும் கருத்துக்கள் நாம் உலகத்தை  புரிந்துகொள்ள எப்படி உதவுகிறது? அந்தக் கருத்துக்கள் ஒவ்வொரு தனிமனிதருக்கும், அவரைச் சுற்றியுள்ள பிற மனிதர்களுக்கும், சமூகத்திற்கும் எப்படிப் பயன்படுகிறது? அந்தக் கருத்துக்களைப் பயன்படுத்தி வாழ்வை எப்படி அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும் போன்ற விஷயங்களைப் பள்ளியில் ஆசிரியர்கள் கூறியிருந்தால் நாமும் ஆர்வத்துடன் கற்றிருப்போம். இயற்கணிதம், முக்கோணவியல், வளர்சிதை மாற்றம் என்று வறட்டுத்தனமான வார்த்தைகளையே நாம் வகுப்பறையில் கேட்டு மனப்பாடம் செய்ய நேர்வதால் நமக்கு ஆர்வம் குறைந்து விடுகிறது. இதற்காக நாம் ஆசிரியர்களையும் குறை சொல்லிவிட முடியாது. அவர்களுக்கு இருக்கும் நெருக்கடியையும் நாம் புரிந்துகொண்டு நாமே கற்றல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படி என்றால் ஒரு பாடத்தில் உங்களுக்கு ஆர்வம் வரவைப்பது எப்படி?  ஒரு பாடத்தைப் புரிந்துகொள்வது எப்படி? நாம் படிக்கும் விஷயங்களைக் காலத்திற்கும் மறக்காமல் நம் நினைவில் நிற்க வைப்பது எப்படி? நாம் ஒரு விஷயத்தைப் புதிதாக கற்கும்போது முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவருக்கும் சரி, மோசமான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடையாத மாணவருக்கும் சரி கற்றல் செயல்பாடு மூளையில் ஒன்று போலவே தான் நிகழ்கிறது. பின் ஒருவர் மட்டும் எப்படிப் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்கிறார்? மற்றவருக்கு ஏன் அந்தப் பாடம் தீயைப்போலச் சுடுகிறது? மூளை ஒரே மாதிரி இயங்கும்போது மாணவர்களுக்கு இடையே ஏன் கற்றல் திறனில் இந்த வேறுபாடு? எந்த முறையில் கற்றால் ஒரு கடினமான விஷயத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்? 

இந்தக் கேள்விக்கான பதில் நாம் மூளையைப் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது. மூளை எப்படி இயங்குகிறது என்பதை ஆராய்வதில்தான் இருக்கிறது. ஒருவர் கற்கும்போதும், சிந்திக்கும்போதும் அவரது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு நாம் கற்றல் முறையை மாற்றினால் எந்த ஒரு கடினமான விஷயத்தையும் சுலபமாகக் கற்றுக்கொண்டு விடலாம். மறந்தும் போகாது. அதுகுறித்துத்தான் நாம் இந்தத் தொடரில் பார்க்க இருக்கிறோம்.

எவையெல்லாம் பாடங்கள்?

பாடம் என்று இங்கு நான் குறிப்பிடுவது வெறும் பள்ளி, கல்லூரிப் பாடங்களை மட்டுமே அல்ல. புதிய இசைக் கருவி வாசிக்கப் பழகுவதாகட்டும், புதிய விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்வதாகட்டும் அதுவும் கற்றல்தான். இதைத்தவிர நாம் தொழில் தொடர்பாகப் பயில்கிற கம்ப்யூட்டர் புரோகிராமிங், டிசைனிங், புதிய மொழி என்று அனைத்தும் கற்றல்தான். அந்தக் கற்றலை நாம் எளிதாக அணுக முடியும். எதுவுமே கடினமில்லை என்பதுதான் உண்மை.

இப்போது உங்களில் சிலருக்கு ஒரு கேள்வி வரலாம். நான் பள்ளி, கல்லூரி முடித்து பல காலம் ஆகிவிட்டது இப்போது போய் புதிதாக ஒரு பாடத்தை கற்கலாமா? எளிதாக கற்க முடியுமா?  அதனால் எதுவும் பயன் இருக்கிறதா? இருக்கிறது என்றுதான் அறிவியல் கூறுகிறது. பெரியவர்கள் புதிய பாடங்களை கற்பது அவர்களது வாழ்க்கைத் திறனை எப்படி வளர்க்கிறது என்பதையும் அறிவியல் விளக்குகிறது. அதையும் நாம் பார்க்கலாம்.

இங்கு இன்னொரு விஷயம். நான் எனக்குப் பிடித்த பாடத்தில் சிறந்து விளங்குகிறேன், அந்தப் பாடம் சம்பந்தப்பட்ட துறையில்தான் வேலை பார்க்கிறேன், கை நிறையச் சம்பாதிக்கவும் செய்கிறேன், நான் எதற்கு மற்ற பாடங்களை கற்க வேண்டும் என்று கேட்பவர்களும் உண்டு. நீங்கள் ஒரு  கட்டடப் பொறியியலாளராக இருக்கிறீர்கள். உங்களுக்குக் கணிதமும், அறிவியலும்தான் அடிப்படை பாடம். ஆனால் நீங்கள் உங்கள் தொழிலில் நிபுணராகத் திருவள்ளுவரும், பாரதியும், ஷேக்ஸ்பியரும்கூட தேவை என்று அறிவியல் கூறுகிறது தெரியுமா? இது எப்படி என்று கேட்கிறீர்களா? அதையும் பார்ப்போம்.

நம் மூளை என்பது பரிணாம வளர்ச்சியில் உருவான ஓர் அதிசயக் கணினி. அதன் ஆற்றல் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு அபரிவிதமானது. மூளை என்கிற அதிசயக் கணினியையும், அதன் ஆற்றலையும் எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்திப் பல விஷயங்களைக் கற்று, நம் வாழ்க்கையையும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கையையும் சிறப்பாக, அழகாக மாற்றலாம் என்பதைத்தான் இந்தத் தொடரில் நாம் பார்க்கப்போகிறோம். கற்றல் எளிது தொடரில் வரும் பகுதிகள் வெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல. வாழ்க்கையை மேம்படுத்த நினைக்கும் ஒவ்வொருக்கும்தான். =