ஊடகம் பழகு – 01
-திரு.மனோஜ் சித்தார்த்தன்
முன்னொரு காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பது இருந்தது. அதனால் ஒருவருக்கொருவர் தங்களது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று அந்த நிலை என்பது தற்போது தலைகீழாக மாறிப் போய் உள்ளது, உலகமயமாக்களின் காரணமாக இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் பண்டிகை விசேஷ காலங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு நேரடியாகச் சென்று பண்டிகை வாழ்த்துக்களைப் பரிமாறிய காலம் உண்டு. இது நம் தமிழர் மரபில் தொன்று தொட்டு இருந்த நடைமுறை, அதன் பின் காலத்தின் கட்டாயத்தால் கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் என மாறிப் போயின. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் தொலைபேசியின் மூலமாக வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொண்டோம்.
அந்த நிலை தற்போது தலைகீழாய் மாறிச் சமூக வலைத்தளங்கள் மூலம் நொடிக்கு நொடி வாழ்த்துச் செய்திகள் தொடங்கி காலை வணக்கம், முக்கிய செய்திகள், மருத்துவ குறிப்புகள், முக்கிய நிகழ்வுகள் அன்றாட நமது நடவடிக்கைகள் என அனைத்தையும் இத்தளத்தின் மூலம் மேற்கொண்டு வருகின்றோம். இதனால் இதன் வளர்ச்சி அபரிவிதமாக உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதன் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்தது, மேலும் பொழுதுபோக்கிற்காகவும் செய்திகளைப் பரிமாறவும் பயன்படுத்தப்பட்ட இந்த சமூக வலைத்தளங்கள் இன்று பொருளினை சந்தைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் பலருக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றது.
காலை எழுந்தவுடன் சூடான காபி உடன் இத்தகைய வலைத்தளங்களைப் பார்த்தால் மட்டுமே காலைப்பொழுதே இனிதாய் பலருக்கும் அமைகின்றது. மேலும் ஒரு செய்தியினை உடனடியாக கொண்டு போய் மக்களிடம் சென்று சேர்ப்பதற்கு இவை பெரிதும் உதவுகின்றன, இவ்வளவு உள்ள வலைத்தளங்களால் ஒரு சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன, இதற்கெல்லாம் என்ன தீர்வு இதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன, என்பது குறித்த கேள்விகள் வலைத்தளங்களைப் பயன்படுத்தும் மக்கள் மனதில் எழுகின்றன. அது குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
வலைத்தளங்களின் பரிமாண வளர்ச்சி
வலைத்தளங்கள் என்பது இன்று மனித வாழ்வில் மிக முக்கிய ஒன்றாகி ஆகிவிட்டது. ஆம், ஒரு காலத்தில் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகள்,சம்பவங்கள் மற்றும் சமூக பிரச்சனைகள் போன்றவை வெளி உலகத்திற்கு தெரிவதற்கு மிகவும் சிரமமாகவும் காலதாமதமாகவும் இருந்தது. ஆம், ஏதாவது ஒரு செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் எப்போதாவது இது குறித்துச் செய்திகள் வெளியாகும். அப்போது மட்டுமே அது குறித்த முக்கியத்துவமும் தீர்வுகளும் இருக்கும். ஆனால் தற்போதுள்ள காலத்தில் அவ்வாறு அல்ல. நொடிக்கு நொடி நம் பகுதியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு சம்பவமும் இன்று வலைத்தளங்களில் செய்திகளாக கட்டுரைகளாக புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் வெளியாகி அதற்கான தீர்வினை உடனுக்குடன் கிடைப்பதற்கு இத்தகைய வலைத்தளங்கள் பெரிதும் உதவுகின்றன.
இக்காலத்தில் பொதுமக்களும் பத்திரிகையாளர்கள் போலவே சமூகத்தில் நடக்கும் அவலங்களை மற்றும் குற்றங்களை நமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலமாகவே சமூக வலைத்தளங்கள் மூலம் வெளி உலகத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வை நொடிப்பொழுதினில் வாங்கிக் கொள்கின்றனர். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஊடகமாக சமூக வலைத்தளங்கள் திகழ்கின்றன. குறிப்பாக நகர்புறங்களை காட்டிலும், கிராமங்களிலே இத்தகைய வலைத்தளங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம், அதிகரித்து வரும் ரீல்ஸ் கலாச்சாரம், சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக வேண்டி தங்களுக்குத் தெரிந்தவை மற்றும் தங்களுக்குள்ள திறமைகளை வெளிப்படுத்தி பலர் இதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பதிவிடுகின்றனர், இதனை ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாகப் பார்க்கின்றனர்.
அதன்படி பெண்கள் சலிப்பின் காரணமாகவே இத்தகைய வலைத்தளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக 2021 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் ஆர்வத்திற்காகவும் மற்றும் சிலர் தகவலுக்காகவும் இதனைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இதில் ஆபத்து இருக்கின்றது எனத் தெரிந்தும் இதனைப் பயன்படுத்திப் பார்ப்பதில் இன்றைய இளைஞர்கள் ஆர்வமாய் இருக்கின்றனர். மேலும் தற்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, நடனத் திறனை அதிகரிக்க ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்பு தான் டீப் பேக் எனப்படும் தொழில்நுட்பம். ஆனால், இன்று இதைத் தவறாகப் பயன்படுத்தி போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் பிரபலங்களுக்கு எதிராகச் சிலர் பயன்படுத்துவதால் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. இதனால், வலைத்தள நிறுவனங்கள் பல கலக்கத்தில் இருந்து வருகின்றன. மேலும் இதுபோன்ற போலியான புகைப்படங்கள் வீடியோக்கள் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
வலைத்தளங்களால் ஏற்படும் நன்மை தீமைகள்
ஒரு தொழில்நுட்பம் அறிமுகமாகின்றது என்றால் அதில் நன்மை தீமைகள் கலந்தே தான் இருக்கும். அதுதான் நியதி. நாம் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு, கெட்டதைப் புறம் தள்ள வேண்டும். அது போலவே சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால் இன்று பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. நாளிதழ்கள் தொலைக்காட்சிகள், செய்தி நிறுவனங்கள் போன்றவற்றை விட செய்திகளை முந்தித் தருவதில் சமூக வலைத்தளங்கள் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக இயற்கைப் பேரிடர் மற்றும் பற்பல முக்கிய அறிவிப்புகளை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க முடிகின்றது. இதற்காக, பெரிய அளவில் செலவு செய்யவும் தேவையில்லை. எனவே, அரசும் தனது பங்கிற்கு முக்கிய அறிவிப்புகளை இதன் மூலம் மேற்கொள்கின்றன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கும் தனித்தனியாக சமூக வலைத்தள கணக்குகள் தற்சமயம் துவங்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ள முடிகின்றது. இதனால் மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது, அதனை எதிர்த்துப் பல லட்சக்கணக்கானோர் அறவழியில் போராட்டம் நடத்தினர். அதற்கு மூல காரணமாக அமைந்தது இத்தகைய வலைத்தளங்களே, அதனாலே அப்போராட்டம் வெற்றி பெற்றது. மேலும் பொழுதுபோக்கு, அரசியல், சினிமா, ஆன்மீகம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பற்பல காணொளிகள் மற்றும் தகவல்கள் இத்தளங்களில் இருப்பதால் பொழுதுபோக்கைத் தாண்டி மக்களுக்கு தகவல் சுரங்கமாக இது செயல்படுகின்றது. எனவே, அனைத்துத் தரப்பு மக்களிடமும் வயது வித்தியாசம் இன்றி வரவேற்பினைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து சமூக வலைத்தளங்களை டிஜிட்டல் சாதனங்களில் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்வகையான சாதனங்களுக்கு நாம் அடிமையாகி போகும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். காலை எழுந்தவுடன் வலைத்தளங்களில் உலாவுவது, இரவு தூங்கச் செல்லும் முன் இதனைப் பார்த்துவிட்டு தான் படுக்கைக்கு செல்வது, என்ற மனநிலையில் இன்று நாம் பலர் இருக்கின்றோம் இதனால் மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. மேலும் சமூக வலைத்தளங்களில் உள்ள ஒரு சில தகவல்களை ஆராய்ந்த போது, அவை பல முறை பகிரப்பட்டு இருப்பதும், அந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாக இருப்பதுமே, இதன் பெரும் குறைபாடாகும். காலை வணக்கச் செய்திகளை தாண்டி மக்களின் வாழ்வை குழைக்கும் அதிர்ச்சியூட்டும் போலிச் செய்திகள் பெருமளவில் பகிரப்பட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. இவை நம் வாழ்வின் போக்கையே மாற்றக் கூடியதாக இருக்கின்றது. இதன் வழியே உருவாக்கும் பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
வலைத்தளங்களால் நம்முடைய விலை மதிப்பு இல்லாத நேரம் வீணாவதை எத்தனை பேர் உணர்கிறோம். ‘‘சும்மா கொஞ்ச நேரம் பொழுது போகல அதனால பார்க்கிறோம்’’ என யோசிக்காமல் நாம் செய்யும் தவறு, அதிலேயே நாம் மூழ்கிப் போகின்ற சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். நேர விரையத்தைத் தாண்டி உடல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியது உள்ளது. டிஜிட்டல் திரையினை தொடர்ந்து பார்ப்பதால் பார்வை கோளாறு, உடல் பருமன், தூக்கமின்மை என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உறவுகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றது. இத்தளங்களில் பெரும்பாலும் போலிச் செய்திகள். உணர்ச்சிகளை தூண்டுவதிலே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் ஒரு செய்தியைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவதற்கு முன் அதன் உண்மை தன்மையை சரி பார்ப்பது அவசியம்.
அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்
சமூக வலைத்தளங்கள் நமது வாழ்வின் போக்கையே மாற்றக் கூடியதாக மாறிவரும் இக்காலத்தில், அதன் வழியே உருவாகும் பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன. தனிப்பட்ட நபரின் தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தவறான முறையில் பயன்படுத்துவது மற்றும் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவது, போன்ற செயல்கள் மக்களிடத்தில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்துகின்றது. பிறரின் சமூக வலைத்தள கடவுச்சொற்களை களவாடித் தவறாகப் பயன்படுத்துவது அல்லது பிறரின் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி அச்சுறுத்தலில் ஈடுபடுவது போன்ற அநாகரிகமான செயலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையினை வெளியிட்டது, அதில் போலிச் சமூக வலைத்தள கணக்குகள் மூலம் ஒரு சில நாடுகளைப் பற்றிய தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் துணையுடன் நடைபெறும் இணைய வழிக் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. ஆண் பெண் வயது வித்தியாசம் இன்றி இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்வது தொடர்கதை ஆகின்றது. கணவருக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவரும் என ஏராளமான குடும்பங்கள் இத்தளங்களால் பெரும் பாதிப்பினை பெற்றுள்ளன. ஒரு பலவீனமான நேரத்தில் உருவாகும் ஒரு சிறிய சபலம் போதும், பறவை ஒன்று மீனைக் கொத்தி செல்வது போல குடும்பப் பிரச்சினைகளுக்கு இந்த சமூக வலைத்தளங்களே மூல காரணமாக அமைகின்றன.
சைபர் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ்ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. மேலும் ஆபாச படங்கள், வீடியோக்கள், போலியான வேலை வாய்ப்புகள், வீட்டிலிருந்து வேலை வாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு, திருமண வரன்கள், போன்ற மோசடியான தகவல் அனைத்தும் இத்தளத்தின் மூலம் பரப்பப்படுகின்றன. இதனை உண்மை என நம்பி, பலர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். தொழில்நுட்பத்தினை சிலர் தவறாக பயன்படுத்துவதால், இச்சமூகத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக அமைகின்றது. மேலும் இத்தகைய சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக மக்களை கண்காணித்து அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் மின்னணு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. நம்மிடமிருந்து அறுவடை செய்யும் தகவல்களை விற்றுத்தான் வலைத்தளங்கள் லாபம் பார்க்கின்றன.
தேவைகளும் தீர்வுகளும்
தொழில் நுட்பங்களின் வளர்ச்சி தான் மனித குல வளர்ச்சிக்கு முதன்மையான காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், தொழில்நுட்பம் மனித குலத்திற்கு பெரும் இடையூறாக இருக்கின்றது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. சமீபகாலமாக வலைத்தளங்களில் போலிச் செய்திகள் அதிகளவில் பரப்பப்படுகின்றது. இணையத்தில் கதி கலங்க வைக்கும் போலிச் செய்திகள் உலாவுவதற்கு மனிதரின் மூளை இயல்பே காரணம் என்கின்றது சமீபத்திய ஒரு ஆய்வு.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போலி செய்திகளை வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர், சமூக வலைத்தளங்கள் மூலமாகவே இன்று பெரும்பாலான வதந்திகள் பரவுகின்றன. அதனை உண்மை என நினைத்து நாமும் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்கின்றோம். அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்வதில்லை எனவே இதனைப் பற்றிய புரிதல்கள் நமக்குத் தேவைப்படுகின்றது. மேலும் சமூகத்தில் பிரபலமடைய வேண்டி சில தேவையற்ற பதிவுகள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர். குறிப்பாக சாலை விதிகளை மதிக்காமல் அதிவேகமாக வாகனங்களை இயக்கி, அதனை வீடியோக்களாக வலைத்தளங்களில் பதிவிடும் போக்கு தற்சமயம் அதிகரித்துள்ளது. இதனைப் பார்க்கும் பார்வையாளர்கள் குறிப்பாக சிறார்கள் அதே தவறை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனை எவ்வாறு தடுப்பது, எதனை நம்புவது எதனைப் புறந்தள்ளுவது, என பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.
இதற்கான முன்னேற்பாடாக கூகுள் நிறுவனம் சார்பில் Trusted Media Summit என்ற பெயரில் உலகின் பல நாடுகளில் சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அதில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு அணுகுவது குறிப்பாக இதில் வரும் போலி செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்து கல்வியாளர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வைத்து பல நாடுகளில் மாநாடுகள் நடத்தி வருகின்றது கூகுள் நிறுவனம். வலைத்தளங்கள் வளர்ச்சி அடைந்துள்ள இக்காலத்தில் இம் மாநாடு பெரும் பேசு பொருளாகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்தே இதற்கான முன்னேற்பாடுகளை கூகுள் நிறுவனம் துவங்கியுள்ளது. இதன் முக்கிய நோக்கமே போலிச் செய்திகளை எவ்வாறு அணுகுவது, மனித சமூகத்திற்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இம்மாநாட்டில் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் வலைத்தளங்கள் பயன்பாடு மிகவும் அதிகம். இதனைப் பயன்படுத்தி சாதிய, மத ரீதியான வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் சமூகத்திற்கு எதிரான கருத்துகளும் இதன் மூலம் பரப்பப்படுகின்றது. தேர்தல் நேரங்களில் போலிச் செய்திகள் அதிகளவில் உருவாகின்றன. பல நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தான் தகவல் மையமாக உள்ளது. இதனால் போலிச் செய்திகள் எளிதாக பரவி சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது. இதனைத் தடுக்க இதன் உண்மைத்தன்மையினை அறிந்து வெளியிடும் முன்னரே அதிவேகமாய் மக்களிடம் போய் சேர்ந்து விடுகின்றது என்று தகவல் சரிபார்ப்பு குழு Fact Checkers கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தான், பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களிடம் தவறான மற்றும் போலிச் செய்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், மேலும் போலியான புகைப்படங்கள் மற்றும் தவறான வீடியோக்களை சரி பார்ப்பதில் பத்திரிகையாளர்கள் தங்களின் திறனை மேம்படுத்த வேண்டும். தவறான செய்திகள் குறித்து புகார் அளிக்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது நமது கடமை. ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது அதற்கு இரண்டு கைகள் இணைய வேண்டும், அதே போல தான் மக்களும் ஊடகங்களும் ஒன்று சேர்ந்தால் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சமூக வலைத்தளங்களை நல்ல வழியில் பயன்படுத்தினால் நல்ல பயனுள்ள தகவல்களை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். இது வலைத்தளங்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கடமை இதனை உணர்ந்து செயல்பட்டாலே போதும் யாருக்கும் எந்த பிரச்சனையும் யாருக்கும் வராது…