விண்ணில் ஒரு நண்பன்-02

இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார்

மது விண்வெளி நண்பனான செயற்கைக்கோள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா? அப்படி என்னதான் நமக்கு உதவி செய்கிறான் என்பதை இந்த மாதம் சற்று அலசுவோம்.

சென்னையில் வசிக்கும் சிறுவன் தனது அப்பாவுடன் டெல்லிக்குச் சுற்றுலா செல்கிறான். கடையில் சாப்பிடுவதற்கு அவருக்குப் பணம் தேவைப்படுகிறது. தனது கையில் இருக்கும் பணம் எடுக்கும் அட்டையை (ATM) எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் இயந்திரத்தில் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார். இங்கே அப்பா பணம் எடுத்துக் கொள்கிறாரே அது எப்படிச் சென்னையில் இருக்கும் வங்கிக் கணக்கு அதிகாரிக்கு தெரிய வரும் என்று அந்தச் சிறுவன் ஆலோசிக்கிறான். பணம் எடுத்த நொடிப் பொழுதில் அந்தச் செய்தி செயற்கை கோளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு வங்கிக் கணக்கில் பணம் எடுத்ததாக வரவு வைக்கப்படுகிறது.

தொலைதூரத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் ஒருவர் மட்டையை அடித்தவுடன், 10000-20000 கிலோமீட்டர் தாண்டி இருக்கும் நமது தொலைக்காட்சியிலும் அதேபோல் நாம் பார்க்க இயல்கிறது. இதற்கும் செய்திகள் செயற்கைக்கோளின் மூலம் உள்வாங்கப்பட்டு எல்லா வீட்டு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுவதால் தான்.

காலையில் பள்ளிக்குச் செல்லும் முன்பு இன்று மழை வருமா? வராதா? என்று கைப்பேசியில் கேட்டுப் பார்க்கிறோம். மழை வருவதற்கு 90 விழுக்காடு வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்த வாய்ப்பு எப்படி மாறுகிறது என்ற தகவல் நமக்குக் கிடைக்கிறது.

செயற்கைக்கோளின் தரவுகளில் இருந்து மேகம் எங்கே இருக்கிறது, அதன் செறிவு எவ்வளவு? எவ்வளவு மழை பெய்யும்? எவ்வளவு நேரத்திற்குப் பெய்யும் போன்ற தகவல்கள் தெரியும் பொழுது, எவ்வளவு மழை பெய்யும்? எங்கே பெய்யும்? என்பதை எளிதாகக் கணிக்க இயல்கிறது.

பள்ளியில் இருந்து கிளம்பும் சிறுவன் எப்பொழுது வீடு வந்து சேர்வான் என்று அம்மாவிடம் கேட்டால், தோராயமாக ஐந்து மணிக்கு வந்து விடுவான் என்று கூறுவார். ஆனால் சிறுவனின் புத்தகப்பையில் செயற்கைக்கோளுக்குச் சமிக்ஞைகளைக் கொடுக்க ஒரு சிறிய உபகரணத்தை வைத்து விடுவோம். அவன் எங்கே நடக்கிறான், எந்த வேகத்தில் நடக்கிறான், எப்படி நடக்கிறான் என்ற எல்லாத் தகவல்களும் நொடிப்பொழுதில் செயற்கைக்கோள் மூலமாக வீட்டில் இருக்கும் அவன் அம்மாவிற்குக் கொடுத்து விடுவோம்.

மகனைப் பற்றிய அனைத்து அசைவுகளும் அங்குலம் அங்குலமாக அந்தத் தாயாரால் கணிக்க இயலும். எப்பொழுது வீட்டிற்கு வருவான் என்பதையும் தெரிந்து கொள்ள இயலும். இப்படி ஒரு புயல் ஒரு இடத்தில் உருவாகும் பொழுது, எந்த இடத்தில் நிலை கொண்டு உள்ளது, எந்த வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது, எந்தத் திசையை நோக்கி நகர்கிறது என்பதை ஒவ்வொரு வினாடியும் செயற்கைக்கோளைக் கொண்டு எளிதாகக் கணிக்க இயலுகிறது. இந்தக் கணிப்புகளைப் பயன்படுத்திப் புயல் தாக்கக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அங்கே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

சமூக நலனில் செயற்கைக்கோள்

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை 93 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்டது. இதன் நீர்ப் பிடி பரப்பளவு 42 சதுர கிலோ மீட்டரை விட அதிகமாகும். அதிக மழைப் பொழிவால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகும் பொழுது அணையைச் சேதாரம் இல்லாமல் காப்பாற்ற நீரை வெளியேற்றும் மதகுகள் இருக்கின்றன. இதே போன்ற ஒரு நிலையைக் கற்பனை செய்வோம்.

பழைய ஒரு அணையின் கரைகள் சேதம் அடைந்திருக்கின்றன. நிறைவதற்கு முன்பாக ஏதாவது இடத்தில் உடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதைச் செயற்கைக்கோளின் படங்களை வைத்து எளிதாகக் கண்டறிய இயலும். அணையில் இருந்து வெளிவரும் நதியாக இருந்தாலும், மலையிலிருந்து உருவாகி ஆர்ப்பரித்து வரும் நதியாக இருந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு அகலம் மற்றும் ஆழத்தில் நதிகள் பயணிக்கின்றன. சில இடங்களில் எவ்வளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கடந்து செல்லக்கூடிய அகலத்தை நதிகள் கொண்டிருக்கும். நகர் பகுதிகளிலும், குறுகலான பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கின் போது மழை நீர் குடியிருப்புப் பகுதிகளில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பல நூறு கிலோ மீட்டர்கள் பாய்ந்து வரும் நதி நீர் எந்த ஊரில் உள்ள கிராமங்களுக்கு முதலில் செல்லும் என்பதைக் கண்டறிவது இயலாத காரியம். ஆனால் நதியின் பாதையைச் செயற்கைக்கோள் கொண்டு கண்காணிக்கும் பொழுது எளிதாக இதைக் கண்டறிய முடியும்.

மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப விவசாயம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அரிசியும் கோதுமையும் தேவையான அளவு விவசாயம் செய்யப்பட்டால் தான் பஞ்சமில்லாமல் இருக்க முடியும். இந்த வருடம் விவசாயம் எப்படி இருக்கிறது? எத்தனை ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு எப்படிப் பதில் கண்டுபிடிப்பது.

ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று தகவலைச் சேகரிக்க இயலாது. அதற்குப் பதிலாக மொத்த இந்தியாவைப் பல பகுதிகளாகப் பிரித்துச் செயற்கைக்கோள் கொண்டு புகைப்படங்கள் எடுக்கும் பொழுது அதில் இருந்து மிக எளிதாக நெற்பயிர் எத்தனை ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது, கரும்பு எத்தனை ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது என்பதை எளிதில் கண்டறிய இயலும்.

அது எப்படிப் புகைப்படத்தில் பயிர்கள்வேறு வேறு வகை என்று தெரியும் என்ற சந்தேகம் எழலாம். பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் அகச்சிவப்புக் கதிர்களை வெளியிடுகின்றன. இந்த அகச்சிவப்புக் கதிர்களைச் செயற்கைக்கோளில் உள்ள கருவி மூலம் படமாகப் பிடிக்கும் பொழுது அது என்ன பயிர் என்பது மட்டுமில்லாமல், அது கட்டிடமா? நீர் நிலையா? என்பதையும் எளிதாகக் கண்டறிய இயலும்.

அதைவிட ஆச்சரியமான செய்தி பயிர் செய்யப்பட்டுள்ளது நெற்பயிராக இருந்தாலும் அது நன்கு விளைந்த நெற்பயிரா? அல்லது பூச்சி்த் தாக்குதலுக்கு உட்பட்டு மகசூல் குறைந்த நெற்பயிரா? என்பதை எளிதில் கண்டறிய இயலும். உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து நாட்டின் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு உரம் கொண்டு செல்ல வேண்டும்? எவ்வளவு தேவைப்படும் என்ற தகவலும் இதன் மூலம் பெறப்படுகிறது.

செயற்கைக் கோள் நண்பன்

மனிதனுடைய உடல் ஓர் அடுப்பு. எந்தச் சீதோசன நிலையில் நாம் வாழ்ந்தாலும் உடலில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் வைக்கப்படுகிறது. குளிரான ஊட்டிக்கு சென்றாலும், அதிகமாக உணவை உட்கொண்டு இந்த வெப்பநிலையில் வைக்கப்படுகிறது. இரையைத் தேடும் பொழுது பாம்பு தனது ஒரு மீட்டர் சுற்றளவில் இது போன்ற வெப்பத்தைச் சமநிலைப்படுத்தும் உயிரிகள் இருக்கின்றனவா? என்பதைத் தனது கண்கள் மூலம் அறிந்து கொண்டு இரையைப் பிடிக்கிறது.

அதே நேரத்தில் பாம்பு மற்றும் மீன் வகைகள் உடல்நிலையின் வெப்பநிலையைச் சமன்படுத்துவது இல்லை. எந்தச் சூழ்நிலையில் இருக்கின்றனவோ அந்தச் சூழ்நிலையில் தான் உடலின் வெப்பநிலையை வைத்திருக்கும். ஒரு மிருகம் அல்லது எதிரி நாட்டு மனிதர்கள் கடந்து செல்கிறார்களா? என்பதைச் செயற்கைக்கோளில் கண்காணிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரியிலிருந்து வெளிவரும் அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு எளிதாகக் கண்டறிய இயலும்.

பரந்து விரிந்த கடலில் மீன் பிடிக்கச் செல்வது எவ்வளவு சிரமமான காரியம். அப்படிச் சென்றாலும் மீன் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

மனிதன் வாழ்வதற்குத் தேவை உணவு, உடை, இருப்பிடம் என்று ஆரம்ப வகுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதில் உணவு எல்லா உயிர்களுக்கும் முக்கியம். அது நிலத்தில் வாழும் உயிரினமாக இருந்தாலும், நீரில் வாழும் உயிரினமாக இருந்தாலும் பொருந்தும். கடலில் மீனுக்கு உணவாக இருப்பது உணவுப் பாசிகளும், தாவரங்களும். அவை இருக்கும் இடத்தைச் செயற்கைக்கோளில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு எளிதாகக் கண்டறிய முடியும்.

அப்படிக் கண்டறிந்த இடத்தை மீனவருக்குத் தெரிவித்தால் அங்கே கூட்டமாக மீன்கள் வரும். அவை ஓரிரு நாட்கள் தங்கி எல்லா உணவும் தீரும் வரை சாப்பிட்டுவிட்டு பின்பு அடுத்த இடத்திற்குச் செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும். அவைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வலை விரித்தால் ஆயிரக்கணக்கான மீன்கள் கிடைக்கும். இப்படியாக நமது செயற்கைக்கோள் நண்பன் மீன்பிடிப்பவர்களுக்கு உதவுகிறான்.

மிதிவண்டி ஓட்ட முயற்சிக்கும் சிறுவன் கீழே விழுந்து கை வலிக்கிறது என்றால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோம். எலும்பு முறிந்து விட்டதா? என்பதை எக்ஸ்ரே எடுத்து பார்க்கச் சொல்கிறோம். எக்ஸ்ரே எடுக்கும் பொழுது எலும்புகள் மட்டும் தெரிவது எப்படி? தசையும் ரத்தமும் தெரியாமல் போய்விடுகிறது. அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக எக்ஸ்ரே கதிர்களை உள்வாங்கும் பொருட்கள் மாறுபடுகிறது.

இவைதான் எலும்பு முறிவு இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறிய உதவுகிறது. இதே போல் புவியின் தரையில் இருக்கும் பல வேறுபட்ட பொருட்களின் அடர்த்தி எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிந்தால் எளிதாக இருக்கும் அல்லவா? அப்படிக் கண்டறிவதால் கிடைக்கும் பயன்கள் தான் நிலத்திற்கு அடியில் எங்கே நீரின் பாதை இருக்கிறது என்பதைக் கண்டறியும் முறை. அதன் மூலம் எங்கே ஆழ்துளை கிணறு அமைத்தால் நீர் கிடைக்கும் என்பதை எளிதாகக் கண்டறியலாம். அது மட்டும் இல்லாமல் எந்த விதமான தாதுப் பொருட்கள் புவியின் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதையும் இந்த அடர்த்தி வேறுபாடு கொண்டு கிடைக்கும் தரவுகளால் எளிதாகக் கண்டறிய இயல்கிறது.

சென்னை மாநகரத்தில் எத்தனை வீடுகள் இருக்கின்றன? ஒவ்வொரு வீட்டின் நீள அகலம் எவ்வளவு? எந்த விதமான கட்டடங்களால் அவை கட்டப்பட்டுள்ளன என்ற தகவல் தெரிந்தால் மாநகராட்சி யாருக்கு எவ்வளவு வரி விதிக்கலாம் என்பதை எளிதில் முடிவு செய்துவிடலாம்.

ஓட்டு வீடு எத்தனை? கான்கிரீட் வீடுகள் எத்தனை? குடிசை வீடுகள் எத்தனை? என்பதை எண்ணிப் பார்த்து கண்டறிய வேண்டும் என்றால் பல மாதங்கள் ஆகும். அதே நேரத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பெற்று அதில் எது என்ன என்பதைக் கணிப்பொறிக்கு சொல்லிக் கொடுத்தால், சில மணித்துளிகளில் ஒவ்வொரு வீட்டைப் பற்றிய தகவல்களும் அதன் பரப்பளவு மிக எளிதாக நமக்குக் கிடைத்துவிடும். அதன் மூலம் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்கள் எவை? வீடுகள் அதிகமாக இருக்கும் இடங்கள் எவை? எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்ற பல செயல்கள் எளிதாக நடைபெறும்.

செயற்கைக்கோள் மனிதனுக்குப் பயன்படுவது மட்டுமில்லாமல் பிரபஞ்ச ரகசியத்தைக் கண்டறிய மிக முக்கியக் கருவியாக இருக்கிறது. “தவளை தன் வாயாலே கெடும்”, “அழுகிற குழந்தைக்குப் பால் கிடைக்கும்” போன்ற பழமொழிகள் ஒருவன் தான் இருக்கும் இடத்தை உணர்த்துவதனால் ஏற்படும் பின் விளைவுகளைக் குறிக்கிறது.

தலையை மேலே தூக்கி வானத்தை உற்று நோக்கினால் மின்னும் நட்சத்திரங்களை நம்மால் பார்க்க இயல்கிறது. சூரியன் போன்ற நட்சத்திரத்தில் இருந்து ஆற்றலை வாங்கி ஒளிரும் நிலா போன்ற சில துணைக்கோள்களையும் பார்க்க இயலும். நாம் பார்க்கும் அனைத்தும் ஒளிரும் பொருட்கள் அல்லது வெளிச்சத்தை உண்டு செய்யக்கூடிய பொருட்கள் தான். இந்தப் பிரபஞ்சத்தில் ஒளிராத பொருட்கள் 65 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கின்றன.

ஆனால் இந்த ஒளிரும் பொருட்கள் நம்மை நோக்கி வருவதற்குப் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள தூசு, குப்பைகள் ஆகியவற்றைக் கடந்து நமது கண்களுக்கு வந்து சேர வேண்டும். புவியின் மீது அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கியாக இருந்தாலும் இந்த வழியில் தான் வந்து சேரும். அதனால் பல தகவல்கள் சிதறடிக்கப்பட்டுப் பாதித் தகவல்கள் தான் நமக்குக் கிடைக்கின்றன.

அட்லஸ் உருவாக்கம்

முழுத் தகவல்களையும் அறிய, விண்வெளித் தொலைநோக்கியை விண்வெளியில் வலம் வரச் செய்யலாம் என்று முயற்சி செய்தார்கள். அப்படி முயற்சி செய்து இந்தப் பிரபஞ்சத்தைப் படம் எடுக்கும் வகையில் விண்வெளி தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டன. அவற்றில் மிக முக்கியமானது ஹப்பிள் தொலைநோக்கி. அது விண்வெளியை உற்று நோக்கி, அதுவரை நாம் அறிந்திருந்த பல தகவல்கள் எது சரி, எது தவறு என்பதைக் கண்டறிய உதவியது. பிரபஞ்சத்தின் முதல் படப் புத்தகம் (Atlas) உருவாக்க உதவியாக இருந்தது.

வீட்டிலேயே அமர்ந்து கொண்டு என்னைப் பார்க்க யாரும் வரவில்லை என்று கூறினால் எப்படி? வெளியே சென்று பார்த்தால் தானே அண்டை வீட்டார் யார் என்று தெரிந்து கொள்ள இயலும். வேற்றுக் கிரகத்தில் மனிதர்கள் வாழ்கிறார்களா? இல்லையா? என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் எப்படி? நாமும் வெளியே சென்று பயணிக்க வேண்டும் அல்லவா.

அதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள்கள் தான் வயோஜர் ஒன்று மற்றும் இரண்டு. 1977-ல் தனது பயணத்தைத் தொடங்கி இன்று பூமியிலிருந்து 2000 கோடி கிலோ மீட்டருக்கு அதிகமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இவை இரண்டிலும் தங்க தகடு வைக்கப்பட்டுள்ளது. 90 நிமிடங்கள் ஒவ்வொரு புறமும் பேசிக்கொண்டே செல்லக்கூடிய வகையில் அந்தச் செயற்கைக்கோள் இருக்கிறது. உலகின் உள்ள 55 மொழிகளில் அது பேசிக் கொண்டே செல்லும். நாம் யார்? பூமி என்றால் என்ன? என்று அதன் பேச்சு இருக்கும். அத்துடன் பூமியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் மிருகங்களின் சத்தம் எப்படி இருக்கும் என்ற செய்தியும் அதில் இருக்கிறது.

ஒரு காலத்தில் புதிதாக ஒர் ஊருக்குச் செல்லும் பொழுது, வழி கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்த காலம் மாறி, மூடிய குளிர்சாதன காருக்குள்ளே நாம் எங்கே செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வருகிறது. செயற்கைக்கோள் என்ற நண்பனிடம் இருந்துதான் அந்தத் தகவல்களைத் திரட்டி நமக்குக் கூறிக் கொண்டே வருகிறது.

செயற்கைக்கோள் இல்லாத உலகம் இன்றைய நவீன யுகத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. தொலைக்காட்சி வேலை செய்யாது, வங்கிகள் வேலை செய்யாது, வானிலை பற்றிய சரியான கணிப்பு இருக்காது, நமது வாழ்க்கையே நிலைகுலைந்து விடும். இன்று நாம் பயன்படுத்தும் கைப்பேசி மற்றும் இணையதள வலைத்தளங்கள் செயற்கைக்கோள் இல்லாமல் இயங்கி வருகின்றன. இருந்தாலும் எதிர்காலத்தில் இவையும் செயற்கைக்கோளின் உதவியுடன் இணைக்கப்பட்டு விடும். அதற்கான முன்னோட்டங்கள் வளர்ந்த  நாடுகளில் தொடங்கி விட்டன.

இந்தச் செயற்கைக்கோள் நண்பன் எப்படி விண்ணுக்குச் செல்கிறான் என்பதை அடுத்த மாதம் தெரிந்து கொள்வோம்.=