விண்ணில் ஒரு நண்பன்-01
இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார்
விடோடியாகச் சுற்றித்திரிந்த மனிதன் விவசாயத்தைக் கண்டறிந்ததும், நிலையாக ஓரிடத்தில் வசிக்க ஆரம்பித்தான். அதன் பிறகு விவசாயமல்லாது பிற தொழில்களும் முன்னேற்றம் அடைந்தன. முதலில் விவசாயத்திற்குத் தேவையான கருவிகள் செய்யும் தொழில் தொடங்கப்பட்டது. பின்னர் மனிதர்கள் வாழ்வதற்குத் தேவையான கட்டுமானங்கள் வந்தன. அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய உபகரணங்கள் மற்றும் வீட்டுச் சாதனங்கள் ஆகியவையும் தயாரிக்கப்பட்டன. இப்படியாகத் தொழில்துறை மெல்ல வளர ஆரம்பித்தது.
நமக்கு ஏதாவது பொருட்கள் வேண்டும் என்றால் அது தயாரிக்கும் கடையை நோக்கிச் செல்கிறோம். அல்லது ஏதாவது வேலை நடக்க வேண்டும் என்றால் அந்தத் துறையில் அல்லது அந்த வேலையில் சிறந்து விளங்கும் ஒரு நபரை நாடுகிறோம்.
சில உதவிகளுக்கு நமது தெரிந்த நண்பர்களாகவும், சில உதவிகளுக்கு அந்த வேலையைச் செய்யும் தொழிலாளியையும் தேடுகிறோம். கணிப்பொறியில் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அந்தத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நண்பரை அழைத்து எப்படிச் செய்யலாம் என்று கேட்கிறோம். வீட்டில் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விட்டால் அதைச் சரி செய்யக் குழாய் செப்பனிடுபவரின் உதவியை நாடுகிறோம். இப்படியாக இன்றைய நவீன உலகத்தில் ஒவ்வொரு வேலையைச் செய்வதற்கும் சில நண்பர்கள் இருக்கின்றனர். அந்த நண்பர்கள் வரிசையில் முக்கியமாக வருபவர் தான் விண்ணில் இருக்கும் நண்பர்.
நவீனயுக நண்பர்கள்
இன்றைய நவீன யுகத்தில் கணிப்பொறிகளும், கருவிகளும், இயந்திர மனிதர்களும் எப்படி நமது உயிருள்ள மனிதர்கள் உதவி செய்கிறார்களோ அதைப் போன்று உதவி செய்கின்றன. அதனால் தான் இயந்திரங்களையும் நண்பர்கள் என்று அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். முன்பு கதவைத் திறக்க வேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் வந்து கதவைத் திறக்க வேண்டும். இன்று ‘கதவைத் திற’ என்று பேசினாலே போதும் கதவு திறக்கப்படுகிறது.
கைப்பேசியிலும் இதுபோன்ற உதவியாளர்கள் வந்துவிட்டனர். ஏதாவது தெரியவில்லை என்றால் எப்படித் துறை சார்ந்த அல்லது அனுபவம் மிக்க வீட்டில் உள்ள பெரியோர்களைக் கேட்டால் பதில் கிடைக்குேமா, அதைப்போல இந்த உதவியாளர்களிடம் கேட்டால் அவர்கள் பதில் கொடுக்கின்றனர். இந்த எல்லா நண்பர்களிலும் தனித்துவமான நண்பராக விண்ணில் இருக்கும் நண்பரை நான் கூறுவேன்.
எப்படி உடலில் வேறு வேறு தேவைக்காக உறுப்புகள் படைக்கப்பட்டுள்ளனவோ, அதேபோல் நமது தேவைக்காகவும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. “தேவையே கண்டுபிடிப்பின் தாய்” என்ற பழமொழிக்கு ஏற்ப மனிதனின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நவீன அறிவியல் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது என்றால் அது மிகையல்ல.
துணி துவைக்க ஒரு இயந்திரம், எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகளை வீட்டிற்குக் கொண்டு வர தொலைக்காட்சிப் பெட்டி, சமையலறைப் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய இயந்திரம், தானாகத் தினமும் காலையும் மாலையும் வீட்டை சுத்தம் செய்யச் சிறிய ரோபோ, அறையின் வெப்பநிலை கூடினால் அதை அறிந்து இதமான வெப்பநிலையை வைக்க உதவும் குளிர்விப்பான் என்று இயந்திரங்களின் வகைகளைக் கூறிக் கொண்டே செல்லலாம்.
இந்த விதத்தில் பூமியிலிருந்து 100 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேலே சென்றால் விண்வெளி தொடங்குகிறது. இந்த விண்வெளியில் சில நண்பர்களை நாம் உலாவ விடுகிறோம். பலதரப்பட்ட பயன்களுக்காக இந்த நண்பர்கள் அங்கே பணியமர்த்தப்படுகின்றனர். 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஸ்புட்னிக்-1 என்ற முதல் விண்வெளி நண்பர் புவியை வலம் வந்தார். அதன் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தில் இருந்து கிடைக்கும் எண்ணற்ற பயன்களை ஒவ்வொன்றாக உருவாக்க ஆரம்பித்தோம்.
சூரியக் குடும்பத்தில் சூரியனை கோள்கள் சுற்றி வருகின்றன. இவை கோள வடிவில் இருப்பதாலும், இயற்கையாக உருவாகியதாலும் இவற்றைக் கோள்கள் என்ற பதத்தில் அழைக்கிறோம். அதே நேரத்தில் எப்படிக் கோள்கள் சூரியன் மற்றும் சூரியனைப் போன்ற விண்மீனை ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகின்றனவோ, அதேபோன்று பூமியைப் போன்ற கோள்களைச் சுற்றிவர மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படும் இயந்திரங்களைச் செயற்கைக்கோள் என்று பெயரிட்டுள்ளோம்.
1957இல் இப்படியாக முதல் செயற்கைக்கோள் பூமியைச் சுற்றி வலம் வரச் செய்யப்பட்டது. புவியில் இயந்திர நண்பர்கள் இருந்தால் போதாதா? ஏன் விண்வெளிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற சந்தேகம் இப்பொழுது அனைவருக்கும் எழும். கண் தெரியாத ஐவர், யானையைத் தொட்டுப் பார்த்து யானை எப்படி இருக்கும் என்று வர்ணனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். யானையின் வாலைத் தொட்டுப் பார்த்தவர், யானை குச்சி போல் இருக்கும் என்றார். யானையின் பரந்த உடற்பரப்பைத் தொட்டுப் பார்த்தவர் யானை சுவர் போல் இருக்கும் என்றார். காலைத் தொட்டுப் பார்த்தவர் பெரிய தூண் போல் யானை இருக்கிறது என்றார்.
தும்பிக்கையைத் தொட்டுப் பார்த்தவர் தரையில் தொட்டுக் கொண்டிருக்கும் பெரிய கயிறு போன்று யானை இருக்கிறது என்றார். இந்தக் கதையில் வரும் புரிதல் கண் தெரியும் அனைவருக்கும் பொருந்தும் என்பது நிதர்சன உண்மை. ஒரு பிரச்சனையை எங்கிருந்து வந்தது? எங்கே செல்லும்? ஏன் இப்படி நடக்கிறது? என்று முழுவதும் புரிந்து கொள்ளாமல், நம் கண்ணில் பட்டதை மட்டும் பார்த்துக் கொண்டு முடிவு எடுத்தால் தவறாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
பறவையின் பார்வை
அதே நேரத்தில் தொலைநோக்குடன் முதலிலிருந்து இறுதிவரை என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் பொழுது புரிதல் எளிதாகிறது. இதைத்தான் “பறவையின் கண் பார்வையில்” என்ற பதம் நமக்கு உணர்த்துகிறது. நெரிசலான கடைவீதியில் நண்பர்கள் மூவர் வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட்டார்கள் என்று கருதுங்கள். கடைவீதியின் சாலையில் நீங்கள் நடந்து மூவரையும் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
அதற்குப் பதிலாக அருகிலுள்ள 5 மாடி கட்டடத்தின் மேல் ஏறி நின்று ஒவ்வொரு நண்பரும் எங்கே மாட்டிக் கொண்டனர். ஏன் ஒருவரை ஒருவரை சந்திக்க முடியவில்லை என்பதை உயரத்தில் இருந்து பார்க்கும் பொழுது மிக எளிதாகக் கண்டறிய முடிகிறது. இதைப் போலத்தான் தனக்கு இரை தேவை என்று முடிவு செய்துவிட்டால் கழுகு உயரே சென்று வானத்தில் வட்டமடிக்கிறது. ஒரு கிலோமீட்டரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் உயரம் வரை சென்று வட்டமடித்துக் கொண்டே தனக்குத் தேவையான இரை எங்கே இருக்கின்றது என்பதைக் கவனிக்கின்றது.
அப்படிக் கவனித்த பிறகு அந்த இரை எந்தத் திசையில் செல்லும் என்பதைக் கணித்து மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணித்து இரையை லாவகமாகப் பிடித்துக் கொள்கிறது. இப்படிப் பறவையின் பார்வையில் இருக்கும் பல பயன்களைக் கூறிக் கொண்டே செல்லலாம். ஒரு நகரத்தை கட்டமைப்பதில் செயற்கைக்கோள் என்ன செய்கிறது என்பதைப் பற்றி இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும்.
ஒரு நகரத்தின் ஓர் இடத்தில் வீடு கட்ட நினைக்கிறீர்கள். எல்லா வசதிகளும் அந்த வீட்டிற்கு இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் வீடு இருக்கும் இடத்தையும் சேர்த்து அந்த நகரத்தின் முழுப் புகைப்படம் உங்களுக்குக் கிடைத்தால் இதைக் கண்டுபிடிப்பது மிக எளிதாகும். உங்கள் வீட்டிற்கு அருகில் எங்கே வங்கி உள்ளது, பள்ளிக்கூடம் எங்கே உள்ளது, ரயில் நிலையம் எங்கே உள்ளது, பேருந்து எங்கெல்லாம் வரும், மருத்துவமனை அருகில் உள்ளதா? போன்ற தகவல்களை எளிதில் கண்டறிய இயலும்.
வரும் மாதங்களில் “விண்ணில் ஒரு நண்பன்” என்ற இந்தத் தொடர் கட்டுரையில் செயற்கைக்கோள் என்ற நண்பன் எப்படி உருவாக்கப்படுகிறான். எந்த உயரத்தில் பூமிக்கு மேலே இவை நிலைநிறுத்தப்படுகின்றன. எந்தெந்த பணிகளுக்காகச் செயற்கைக்கோள்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் உதவிகள் மாறுபடும் பொழுது அதன் வடிவமைப்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? எப்படிக் குறிப்பிட்ட ஒரு சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படுகிறது, போன்ற பல தகவல்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.
இந்தக் கட்டுரையில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அந்தக் கேள்விகளை ‘ஆளுமைச் சிற்பி’ Whatsapp (94442 03115) எண்ணுக்கு அனுப்பி வையுங்கள். அதற்கான பதில்களையும் வரும் மாதங்களில் தெளிவுபடுத்துகிறேன். =