பேராசிரியர்கள் .திரு.பிலிப் மற்றும் திருமதி.இம்மாகுலேட் பிலிப்.

சிரிமுகத்தவரின் ஆளுமை பற்றி பார்த்து வருகிறோம். அதிலுள்ள நற்பண்புகள் என்னென்ன எனச் சென்ற இதழிலிருந்து ஆய்வு செய்கின்றோம். சிரிமுகத்தவரின் நற்பண்புகளில் மேலோங்கி நிற்கின்ற மகிழ்ச்சியுடையவராயிருத்தல் பற்றி சென்ற முறை சிந்தித்தோம். அதாவது சிரிமுகத்தவர் மகிழ்ச்சியின் மனிதர்கள். இந்த மகிழ்ச்சி இருவகைப்படும் என்பதையும் எழுதியிருந்தோம். இப்போது பிற நற்பண்புகள் குறித்தும் பார்ப்போம்.

கருணை உள்ளம் கொண்டவர்

கடுமுகத்தவரின் முக்கியப்பண்புகளில் ஒன்று இதயக் கடினமாகும். கடுமுகத்தவர் பிறர் துன்பங்களைக் கண்டுகொள்வதில்லை. சொல்லப்போனால் பிறர் அழுவதைக் கண்டால் இவர்கள் அதைக் கிண்டல் செய்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சிரிமுகத்தவர் பிறர் துன்புறுவதைக் கண்டால் அவர்கள்மீது இரக்கம் காட்டும் ஈரமான இதயம் கொண்டவர்கள். பிறர் துன்பத்தை தனது துன்பமாக நினைத்து அழுவாரோடு அழுபவர்கள், மனிதாபிமானம் கொண்டவர்கள்.

நிகழ்ச்சி

நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு மூதாட்டி மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆட்டோ டிரைவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை. ஒருவர் இதற்காக எத்தனையோ பேரைக் கெஞ்சியும் ஒரு பயனும் இல்லாத நிலையில், ஒரே ஒரு ஆட்டோ டிரைவர் ஒரு நிபந்தனையோடு மூதாட்டியை மருத்துவமனைக்குத் தனது ஆட்டோவில் ஏற்றிச்செல்ல சம்மதித்தார். அதாவது வழக்கமாக அந்த மருத்துவமனைக்குச் செல்ல 50 ரூபாய் தான் கட்டணம்; ஆனால் தனக்கு 250 ரூபாய் கொடுத்தால் நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் தயார் என்றார்.

மூதாட்டியின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் தனக்கு 250 ரூபாய் ஒரு பொருட்டல்ல எனக் கூறி மூதாட்டியை மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஏற்றினார் அவளோடு நின்றவர். ஆட்டோ மருத்துவமனை போய் சேர்ந்தது. மூதாட்டியை பரிசோதிக்கும் முன் அவளது பெயரைச் சொல்லும் படி நர்ஸ் அவளைக் கொண்டு வந்தவரைக் கேட்டார். அவர் ‘தெரியாது’ என்று பதிலளித்தார். நர்சுக்கு ஒன்றும் புரியவில்லை.

அதன் பிறகுதான் அந்த நபர் பாட்டிக்கு எந்தவிதத்திலும் உறவினர் இல்லை; அவர் தனது வீட்டு வராந்தாவில் அவதிப்பட்டதைக் கண்டு மனம் இரங்கி இந்த முன்பின் தெரியாத நபர் அவளுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார் என்பதை மருத்துவமனையிலுள்ளவர்கள் அறிந்து கொண்டனர். இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாா் ஆட்டோ டிரைவர். அவரது உள்ளம் உருகியது. இனி நாம் 250 ரூபாய் வாடகை கேட்க வேண்டாம். 100 ரூபாய் போதும் என தீர்மானித்தார்.

ஒரு வழியாக சிகிச்சை முடிந்து மூதாட்டியை வீட்டில் கொண்டு வந்துவிட்டார்கள். இப்போது ஆட்டோ டிரைவர் இந்த மூதாட்டியிடம் மிகவும் பரிவோடு நடந்து கொண்டார். அவள் ஆட்டோவிலிருந்து இறங்க உதவி செய்தார். பத்திரமாக வீட்டிற்குள் கொண்டு சென்று படுக்க வைக்க அந்த உதவிக்கரம் நீட்டியவருக்கு உதவினார்.
இப்போது பாட்டியை மருத்துவமனை கொண்டு செல்லக் காரணமானவர் 250 ரூபாயை எடுத்து ஆட்டோ டிரைவரிடம் நீட்டிய போது, ஆட்டோ டிரைவர் “காசு எதுவும் வேண்டாம்” எனக் கூறி பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அவர் சொன்னாா், “முன்பின் தெரியாத ஒரு மூதாட்டி மீது மனிதாபிமான முறையில் கருணை கொண்டு நீர் உதவி செய்ய முன்வந்திருக்கிறீர். அதை நேரடியாகப் பார்த்த நானும் மனிதாபிமான முறையில் எனது பங்களிப்பையும் அந்த மூதாட்டிக்கு உதவுவதில் கொடுக்க விரும்புகிறேன். கட்டணம் வேண்டாம்” எனக்கூறிவிட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

சிரிமுகத்தவரின் நற்பண்புகளில் ஒன்று இந்தக் கருணை உள்ளம்.

தாராள குணம்

சிரிமுகத்தவரின் நற்பண்புகளில் மூன்றாவது வருவது அவர்களது தாராள குணமாகும். தாராள குணம் பற்றி அன்னை தெரசா கூறும்போது நமது இதயம் எவ்வளவு விரிகிறதோ அவ்வளவு அதிகமாக இறைவனின் அன்பும் உடனிருப்பும் நம்மில் இருக்கும் என்பார்கள்.

பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோவின் பிரபலமான நாவல்களில் ஒன்று “ராசியில்லாதவர்கள்” (The Unfortunate Ones) என்பதாகும். அதில் ஒரு நிகழ்ச்சியை அவர் குறிப்பிடுகிறார்.

திருட்டுக் குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்று, சிறையிலிருந்து வெளிவந்த ஒருவன் பசியின் கொடுமையினால் பல இடங்களில் உணவுக்காக அலைகிறான். இவன் சிறைப்பறவை என அறிந்த அனைவரும் இவனைக் கண்டவுடன் விலகிச் செல்கிறார்கள். பலர் இவனை துரத்திவிடுகிறார்கள். இறுதியாக ஒருவர் ஒரு சந்தின் இறுதியில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தைக் காட்டி, அங்கு சென்றால் அவனுக்கு உணவு கிடைக்கும் எனக்கூறி அந்தப் பகுதியிலுள்ள பிஷப் இல்லத்திற்கு அவனை அனுப்புகின்றனர். அந்த இல்லத்தின் கதவு எப்போதும் திறந்தே
இருக்கிறது.

மாலை நேரம் இல்லத்துள் சென்றவனை பிஷப் இன்முகத்தோடு வரவேற்று அவனது நிலைகண்டு அவன் மீது பரிதாபப்பட்டு அவனுக்கு உணவு கொடுக்கச் சொல்கிறார். உணவு அருந்திய பின் அவனை அன்றிரவு அந்த இல்லத்தில் தங்கச் சொல்கிறார்.

திருடனுக்கு சரியாக தூக்கம் வரவில்லை. மற்றவர்கள் தூங்கிய பின் இவன் படுக்கையிலிருந்து எழுந்து கொள்கிறான். மெதுவாக யாருக்கும் தெரியாமல், திருடுவதற்குத் தேவையானது ஏதாவது கிடைக்குமா என இல்லம் முழுவதும் தேடுகிறான். இல்லத்தில் அமைந்திருந்த சிற்றாலயத்திற்கு வருகிறான். அதில் சில மெழுகுவர்த்தி வைக்கும் இருப்பிடம் இவன் கண்ணில் படுகின்றது. இந்த மெழுகுவர்த்தி வைத்திருந்த இருப்பிடம் வெள்ளியாலானது. அதை விற்றால் காசு கிடைக்கும் என நினைத்தவன் அந்த மெழுகு வைக்கும் பாத்திரங்களைத் திருடிக் கொண்டு இரவோடு இரவாகத் தப்பியோடி விடுகிறான்.

காலையில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் இந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டை திருடிய கள்வனைப் பிடித்துக் கொண்டு பிஷப் இல்லம் வருகின்றனர். அவன் இந்த இல்லத்திலிருந்து தப்பியோடுகையில் காவல் துறையினர் இவனை பிடித்துள்ளனர். இவன் திருடிய மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் இவன் கையில் இருந்தது.

இல்லத்திலிருந்து வெளியே வந்த பிஷப்பிடம் காவல் துறையினர் இவனது திருட்டு பற்றி கூறுகின்றனர். இந்த வெள்ளியிலான ஸ்டாண்டுகளை இவன் திருடியதாக ஒத்துக்கொண்டதால் அவனை அங்கு அழைத்து வந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் பிஷப் காவலர்களிடம் அவன் அதை அங்கிருந்து திருடவில்லை. உண்மையில் அவை அவனுடையவைதான் எனக்கூறி அந்த வெள்ளி ஸ்டாண்டுகளை அவனிடம் கொடுக்கச் சொல்கிறார். காவல் துறையினர் அங்கிருந்து போய்விடுகின்றனர்.

பிஷப்பின் தாராள குணத்தைக் கண்ட திருடன் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். ஒரு புதிய வாழ்வு வாழப் போவதாக வாக்களிக்கிறான். இறுதியில் நாவலின் கதாநாயகனாக மாறிவிடுகிறான். தாராள மனம் திருடர்களையும் மாற்றும் பண்புடையது. இப்பண்பு சிரிமுகத்தவரின் நற்பண்புகளில் ஒன்றாகும்.

– தொடரும்