‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

விவசாயி தங்கராஜ் தனது பெரிய பண்ணைத் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார். தொலைவில் ஏதோ வாகனச் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட பக்கத்துக்குச் சத்தமில்லாமல் நடந்து சென்றார். அங்கே ஒரு இளைஞன் தனியாளாக தங்கராஜின் மாம்பழத் தோட்டத்திலிருந்து மாம்பழங்களை மூட்டைகளில் கட்டித் தன் காரில் ஏற்றிக் கொண்டிருந்தான்.

கோபம் தலைக்கு ஏறத் தங்கராஜ் வேகமாகச் சென்று அவனது சட்ைடயைப் பிடித்துக் கொண்டார். டிராபிக் போலீஸ் செய்வது போன்று ேவகமாகக் காரின் சாவியையும் எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

“யாரடா நீ, என் தோட்டத்தில் வந்து மாம்பழங்களை மூட்டை, மூட்டையாகத் திருடுகிறாய்…” என்று கேட்டபடி அடிக்கக் கை ஓங்கினார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவனைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு தன் பண்ணை வீட்டிற்கு விரைந்தார்.

வீடு நெருங்கி வரும் இடத்தில் தங்கராஜின் தந்தை பொன்னுசாமி அங்கே வந்துவிட்டார். ‘என்ன நடந்தது?’ என்று கேட்ட போது, இந்த இளைஞன் திருடியுள்ளதையும், காரில் பல மூட்டைகளை ஏற்றியுள்ளதையும், சாவி தன் கையில் உள்ளதையும் கூறிவிட்டு, “போலீசுக்குத் தகவல் தருகிறேன்” என்றார்.

தங்கராஜின் தந்தை “மகனே, நீ ரொம்பக் கோபமாக உள்ளாய். போலீசுக்கு இப்போது தகவல் ஒன்றும் சொல்ல வேண்டாம். நீ வீட்டிற்குப் போ, நான் இவனைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவரை அனுப்பிவிட்டார்.

பொன்னுசாமி அந்த இளைஞனிடம், “என்ன தம்பி, ஏன் இப்படி மாம்பழங்களை எங்கள் தோட்டத்திலிருந்து திருடினாய்?” என்று கேட்டார்.

“ஐயா, உங்களது தோட்டம் மிகப் பெரியது. சில மூட்டைகள் மாம்பழத்தை நான் எடுத்துச் செல்வதால் உங்களுக்குப் பெரிய இழப்பு இருக்காது என்று எண்ணினேன். எங்களது கடையில் விற்பதற்கு மாம்பழங்கள் இந்தக் காலத்தில் அதிகம் தேவைப்படுகிறது” என்று கூறினான்.

பொன்னுசாமி அவனிடம், “நான் இந்தப் பெரிய பண்ணைத் தோட்டத்தை வைத்திருக்கிறேன். இது எப்படி வந்தது என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

இளைஞன் வேகமாக, “உங்கள் தந்தையார் உங்களுக்குத் தந்தது. அதனால்தான் நீங்கள் பெரிய பணக்காரராக இருக்கிறீர்கள்” என்றான்.

பொன்னுசாமி அவனிடம், “தம்பி, நீ சொல்வது தவறு. எனக்குத் திருமணமானபோது, என்னிடம் வெறும் இரண்டு ஏக்கர் நிலம் தான் இருந்தது. நீ பார்க்கும் இந்த நிலம் பொட்டல் காடாக இருந்தது. ஒரு மரமோ, செடியோ கிடையாது. நானும், என் மனைவியும் கடுமையாக உழைத்தோம். சில ஆண்டுகளில் கொஞ்சம் பணத்தைச் சேர்த்தோம். பின்பு என் மனைவி நகைகளையும் அடகு வைத்துவிட்டு இந்தப் பரந்த நிலத்தை வாங்கினோம். மொத்தம் இருநூறு ஏக்கர் பரப்புக் கொண்ட இந்த நிலத்தை ஏக்கர் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் காலத்தில் வாங்கினோம். இன்று இந்த மொத்த நிலத்தின் மதிப்பு மட்டுமே முப்பது கோடிக்கு விற்பனையாகும். ஆனால் இந்தத் தரிசு நிலத்தை இந்த நிலைக்குக் கொண்டுவர நாங்கள் முப்பது ஆண்டுகள் உழைத்திருக்கிறோம்” என்று கூறினார்.

இளைஞன் மிகுந்த ஆச்சர்யத்தோடு அவரிடம், “ஐயா, இந்த நிலத்தின் மதிப்பே முப்பது கோடியா? அப்படியானால் நீங்கள் பெரும் பணக்காரர்தான். இவ்வளவு பணம் வைத்திருக்கும் நீங்கள் சில மூட்டைகள் மாம்பழத்துக்காக என்னைத் தடுக்கலாமா? நிறைய மரங்கள் மூலம் பல இலட்சம் இலாபம் பார்க்கும் நீங்கள் என்னிடம் ஒரு சுயநலவாதியாக அல்லவா பேசுகிறீர்கள். என்னைத் திருடன் என்று சொல்லலாமா?” என்று கேட்டான்.

பொன்னுசாமி அவனிடம், “என்னைச் சுயநலவாதி என்று எப்படி நீ கூறினாய்?” என்று கேட்டார். “உங்களிடம் நிறைய இருக்கின்றது. மற்றவர்களிடம் குறைவாக இருக்கிறது. அப்படியென்றால் நிறைய வைத்திருப்பவர்கள் சுயநலவாதிகள் தானே!” என்றான்.

பொன்னுசாமி அவனிடம், “தம்பி, இங்கு எல்லா இடத்திலும் காற்று பரவியிருக்கின்றது. ஒருவன் அதிக உடற்பயிற்சி செய்கிறான். அப்போது அவன் அதிகக் காற்றைச் சுவாசிக்கிறான்; அடுத்தவன் செய்யவில்லை, அவனுக்குக் கொஞ்சம் காற்றே போதுமானது. இப்போது உடற்பயிற்சி செய்து அதிகக் காற்றைச் சுவாசித்தவன் சுயநலவாதியா?” என்று கேட்டார். இளைஞன் “இல்லை” என்றான்.

“தம்பி, இந்த நிலம் தரிசாகப் பயனின்றிக் கிடந்தது. இதனைப் பணம் கொடுத்து வாங்கி, வளப்படுத்தி, உரமிட்டு, மரம் வளர்த்து, அதற்காகப் பல ஆண்டுகள் உழைத்து இதை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த உருவாக்கத்தில் நாங்கள் யாருடைய சொத்தையும் அபகரிக்கவில்லை. யாருடைய வாழ்வுக்கும் தடையாக இல்லை. எங்கள் உழைப்பினால் இந்த நிலம் செழுமையடைந்துள்ளது. பாடுபட்ட நாங்கள் இன்று பலனடைந்துள்ளோம். இதில் சுயநலம் எங்கே கண்டாய்?” என்று கேட்டார்.

இளைஞன் பதில் எதுவும் சொல்லாமல் அவருடைய பேச்சைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான். பொன்னுசாமி தொடர்ந்தார். “தம்பி, ஒரு ஆப்பிள் பழத்தின் விதைகளைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பல நூறு ஆப்பிள் மரங்களை உருவாக்கலாம். இரண்டு கோழிகளைக் கொண்டு ஒரு கோழிப் பண்ணையை விரைவில் உருவாக்கலாம். அதாவது சிறிய மூலதனத்தைக் கொண்டு உழைப்பின் மூலம் பெரிய மூலதனத்தைக் கொண்டு வரலாம். சிறிய வருமானத்தைக் கொண்டு, திட்டமிட்டு உழைத்தால் பெரும் செல்வத்தையும் அடையலாம். இது அவரவர் உழைப்பின் தன்ைமயைப் பொறுத்தது” என்று கூறினார்.

இளைஞன் உடனே, “அப்படியானால் பணக்காரர்கள் எல்லாம் நேர்மையானவர்களா?” என்று கேட்டான்.

பொன்னுசாமி அவனிடம், “உழைப்பால் உயர்ந்த பல மனிதர்கள் நேர்மையால் தான் இந்த நிலையை அடைந்துள்ளார்கள். எனவே பணக்காரர்கள் என்றால் பாவம் செய்து உயர்ந்தவர்கள் என்று நீ எண்ணக்கூடாது. ஒரு பணக்காரர் பல கடைகளைத் திறக்கிறார் என்றால் அதன் மூலம் பலரும் வேலை பெறுகிறார்கள், வாழ்வு பெறுகிறார்கள். நீயும் விரும்பினால் உழைத்துப் பணக்காரன் ஆகலாம். தொடர்ந்து உன் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். இப்படி உழைப்பால் உயரும் மனிதர்கள்தான் இந்த உலகை உருவாக்குகின்றார்கள். நீ இப்போது சொல், நீ உருவாக்குபவனாக இருக்கிறாயா? அல்லது மற்றவர்கள் உருவாக்கியதில் உழைப்பே இல்லாமல் அபகரிப்பவனாக அல்லது திருடுபவனாக இருக்கிறாயா?” என்று கேட்டார்.

இளைஞன் உண்மையைப் புரிந்து கொண்டான். உழைப்பவர்கள் உருவாக்குகிறார்கள்; உழைக்காமல் மற்றவர் உழைப்பை எடுப்பது திருட்டு என்று புரிந்து கெண்டான். “ஆம், ஐயா நான் திருடியிருக்கிறேன். இனி இப்படிச் செய்ய மாட்டேன்” என்று கூறினான்.

இளைஞனை பொன்னுசாமி தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவனுக்கு என்ன தேவை? என்று கேட்டார். அதைக் கொடுத்துவிட்டு, “இனிமேல் உழைத்து வாழ்வாய்” என்று நம்புகின்றேன் என்று கூறினார்.

இளைஞன் அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, “என்னைத் தெளிவாக்கினீர்கள் ஐயா, மிக்க நன்றி” என்று சொல்லிச் சென்றான். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அவரது தோட்டத்திற்கு வந்து காய், கனிகளைப் பணம் கொடுத்து எடுத்துச் சென்றான். இந்தச் சம்பவம் கேமருன் சி.டெய்லர் அவர்களது நூலில் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

பாடுபட மறுப்பது ஏன்?

‘பாடுபட்டால் பலனுண்டு’ இதன் அர்த்தம் கஷ்டப்பட்டால் நமக்கு நிச்சயமாக நன்மை கிடைக்கும் என்பதுதான். இந்த எளிய மொழியை நாம் எல்லோரும் எளிதாகவே புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்தப் பொன்மொழிக்குப் பின்னால் மிகப்பெரிய தத்துவம் அல்லது மறைமுகச் செய்தி அடங்கியுள்ளது.

‘பாடுபட்டால்’ என்ற வார்த்தையை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும். “கஷ்டப்பட்டு உழைப்பவர்கள் வாழ்வில் கஷ்டப்படுவதில்லை” என்ற வார்த்தை இதற்கான செய்தியைச் சொல்லுகிறது. ஆனால் கஷ்டப்பட்டு உழைக்க மனிதர்கள் முன்வராததன் காரணங்களை நாம் காணவேண்டும்.

எனக்கு நல்ல சூழ்நிலை வாய்க்கவில்லை.

எனக்குப் படிப்பு, வசதியில்லை.

எனக்கு நல்ல உடல்நிலை இல்லை. அதனால் என்னால் கஷ்டப்பட முடியவில்லை.

என் தாய், தந்தை சொத்து எதையும் தரவில்லை. எனவே என்னால் பணம் சம்பாதிக்க இயலவில்லை.

நான் புறக்கணிக்கப்பட்ட இனத்தில், மதத்தில் அல்லது மொழியில் பிறந்துவிட்டேன். என்னால் முன்னேற முடியவில்லை.

இப்படிப் பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஒருவகையில் சிந்தித்துப் பார்த்தால் இதுபோல நாம் சொல்லும் எல்லாக் காரணங்களுக்கும் நியாயப்படுத்தும் வாதங்களையும் நாம் எடுத்துச் சொல்லலாம். இப்படிச் சொல்வதற்காகவும், சிந்திப்பதற்காகவும் தான் நாம் காலம் காலமாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம் என்பதுதான் இங்கே மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது.

பொதுவாகவே நமது சிறுவயதிலிருந்து நாம் எளிதில் வெற்றிபெறக் கூடிய விஷயங்களில் ஈடுபட்டு, அந்த வெற்றிகளை அடைவதில் திருப்தியடையுமாறு பயிற்றுவிக்கப்படுகின்றோம். பெரிதாக எதையாவது செய்தால் “நீ தோற்றுப் போவாய்; எதற்கு வம்பு? பேசாமல் கௌரவமாகச் சிறிய செயல்களைச் செய்துவிட்டு நிம்மதியாக இரு” என்று தான் நம்மை இந்தச் சமூகம் பழக்கியிருக்கின்றது.

ஒரு நிமிடம் நமது நாட்டில், ஏன் நமது தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள, உழைத்து உயர்ந்துள்ள பல மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை யோசித்துப் பார்ப்போம். இவர்களில் பலர் தங்களது தொழிலின் துறையில் ஆரம்பக் கட்டத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துத் தான் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள். தொழில் வளர ஆரம்பித்த போது இந்தத் தொழிலதிபர்கள் கடைகடையாக ஏறிச்சென்று வியாபாரம் செய்துள்ளார்கள்.

இவர்களில் பலரது குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு வேலை என்று பகிர்ந்து கொண்டு இரவும், பகலும் கண்விழித்து உழைத்திருக்கின்றார்கள்.

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அமெரிக்காவில் முதன்முதலில் கடன் வாங்கி ஒரு அச்சகத்தைத் தொடங்கியிருக்கின்றார். அவ்விடத்தில் ஏற்கெனவே இரண்டு அச்சகங்கள் இருந்ததால் இவரால் ஒரு மாதம் கூடப் பிழைக்க முடியாது என்று நண்பர்களும் மிரட்டியிருக்கிறார்கள்.

ஃபிராங்க்ளின் அது பற்றிக் கவலைப்படவில்லை. தனக்கு வந்த சிறிய அச்சு வேலையை மிகச் சிரத்தையோடு செய்திருக்கிறார். இதைப் பார்ப்பவர்கள் தன்னைத் தேடி வருவார்கள் என்று நம்பினார். அவரது அச்சகம் அருகில் வசித்த ஒரு பெரிய மனிதர் தினமும் தான் அப்பக்கம் அலுவலகம் செல்வதற்கு முன்பே அச்சகத்தில் வேலை செய்யும் ஃபிராங்க்ளின் அவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த பின்பும் பல மணி நேரம் உழைப்பதைக் கண்டதாகக் கூறுகின்றார். இந்த உழைப்பு தான், பாடுபடல் தான் பலரை உயர்த்தியுள்ளது.

பொதுவாக நமது இளைஞர்களிடம் இன்று என்ன மனநிலை உள்ளது என்றால் “எல்லோரும் படிக்கிறார்கள், எனவே எல்லோருக்கும் வேலை கிடைக்காது” என்பதாகவே உள்ளது. இது ஒரு தவறான மனப்போக்கு. எல்லோரும் படிக்கின்றார்கள். ஆனால் ஒரே மாதிரிப் படிக்கின்றார்களா? அல்லது ஒரே அளவில் புரிந்து கொண்டு படிக்கின்றார்களா? இதில் எத்தனை பேர் பாடம் சம்பந்தமான அல்லது தனது எதிர்காலப் படிப்பு சம்பந்தமான தீவிரத் தேடலில் கவனம் செலுத்துகிறார்கள்? என்றெல்லாம் கவனிக்க வேண்டியுள்ளது.

உலகிலுள்ள அனைவருக்கும் வேலை தரக்கூடிய அளவில்தான் இந்த உலகம் விரிந்து கிடக்கிறது. பல நாடுகளில் முதியவர்கள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக உள்ளது. அங்கெல்லாம் உழைக்க, உருவாக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு முன்னேற நம் இளையவர்கள் தயாராக வேண்டும்.

மக்கள் தொகை அதிகமாக இருந்தால் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று கருதியதால் தான் நமது நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மக்கள் ெதாகையும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இன்று இந்தியாவில் உணவு உற்பத்தி இத்தனை கோடி மக்களுக்கும் போதுமானதாகத்தான் இருக்கிறது. ஆயினும் ஏன் பட்டினி? சீனாவில் நம்மைவிட அதிக மக்கள் தொகையிருந்து, பட்டினி குறைவு! மக்களுக்கு வேலையிருக்கிறதும் காரணம், அங்கு உழைப்பவர்கள் அதிகம். நமது தேசத்தில் உழைப்பவர்கள் எண்ணிக்கையை நம்மால் அதிகரிக்க முடியாதபடி பல்வேறு தடைகள் உள்ளன. அரசியல் ரீதியிலும், சமூக ரீதியிலும் இந்தத் தடைகள் தொடர்கின்றன. இவை களையப்பட்டால், உழைத்தால் இங்கு யாருக்கும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை.

நமது நாட்டில் வீணடிக்கப்படும் உணவே பல இலட்சம் கோடியாக உள்ளது. நமது இளைஞர்களால் நமது நாட்டில் வீணடிக்கப்படும் நேரம் பல ஆயிரம் கோடி மணித்துளிகளாக உள்ளது. எந்த நேரமும் இணையத்தில் கதை பேசும் இந்த சமுதாயம் உழைத்து முன்னேறும் பணக்காரர்களைக் கண்டு வயிறு எரிந்து கொண்டே, வெட்டிக்கதை பேசிக் கொண்டே பொழுதைப் போக்குகிறது. காரணம், இங்கு திருமணம் வரை வீட்டில் சாப்பாடு கிடைக்கிறது. சிலருக்கு அதன் பிறகும் கிடைக்கிறது.

வெட்கத்துக்குரிய விஷயம் நமது இளைஞர்களிடம் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து காணப்படுகின்றது. விவசாயப் புரட்சி மூலம் ஒரு ஏக்கரில் இன்று பல மடங்கு உற்பத்தி பெருகியுள்ளது. எனவே, விவசாய உற்பத்தியை மேம்படுத்தி, ஏற்றுமதி செய்யலாம். இந்த விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை கிராமங்களில் உருவாக்கிச் சுயசார்பு வளர்ச்சியைப் பெறலாம்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பயன்படுத்தி உலகின் தொழில்நுட்பச் சந்தையில் பெரும்பங்கு வகிக்கலாம். இயற்கை மூலிகைகள் கொண்டு மருந்து உற்பத்தி செய்வதில், இது சார்ந்த ஆராய்ச்சியில் பங்குபெற்று உதவலாம். அரிய நமது தானியங்களின் பலன்களை உலகிற்குச் சொல்லி அவற்றை ஏற்றுமதி செய்யலாம்.

நம்மிடமுள்ள கடல் வளத்தைப் பயன்படுத்தி மீன்பிடித்துறையில் அபரிதமான வளர்ச்சியை, ஏற்றுமதியைக் கொண்டு வரலாம். இப்படி எண்ணற்ற வகைகளில் நமது சூழலிலேயே வளம் பெருக்குவதில் கவனம் செலுத்தினாலே எல்லோரும், எல்லாமும் பெறமுடியும்.

இந்த நிலை ஏற்பட முதலில் “நாங்கள் ஏழைகள், அவர்கள் பணக்காரர்கள்” என்ற மனநிலை மாறவேண்டும். எல்லோருக்கும் இந்த பூமியில் வாய்ப்புகள் ஒன்றுதான். இன்று சிலர் முன்னே சென்று பயணிக்கிறார்கள். நாங்களும் உழைத்து அங்கு வருவோம் என்ற எண்ணம் கொண்டு உழைப்பதற்கு நமது பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவோம். “அதோ பார், அந்த மனிதனும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு உன்னைப் போல தான் இருந்தான். கடும் உழைப்பின் மூலம் அவன் செல்வந்தனாகியிருக்கிறான். நீயும் கடினமாக உழைத்தால் அடுத்த சில ஆண்டுகளில் உனக்கும் அந்த வாய்ப்புக் கட்டாயம் கிடைக்கும்” என்று ஊக்கமூட்டுங்கள்.

அதேசமயம் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆனவர்களைக் காட்டி எச்சரிக்கையும் செய்யவேண்டும். இந்த மனிதர்களைப் புறக்கணிக்கச் சொல்ல வேண்டும். காரணம், பாடுபடாமல் வரும் செல்வம் அதற்கான அழிவைப் பெறும் அல்லது அசிங்கத்தைப் பெறும் என்பதையும் நாம் எடுத்துச் சொல்லலாம்.

உழைப்பவர்களுக்கு ஒரு நாளும் வறுமை வந்து வாழ்விழக்கும் சூழல் உருவாகாது. பாடுபட்டால், உழைத்தால் நிச்சயமாகப் பலன் உண்டு. ஆனால் வளர்ந்துவிட்ட அறிவியல் உலகில் திட்டமிட்டு உழைக்க வேண்டும், திறமையோடு உழைக்க வேண்டும், தினசரி உழைக்க வேண்டும் என்பதை மனதில் இருத்திட வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள நம்மைவிடச் செல்வ வளம் மிக்கவர்கள் எப்படி உயர்ந்தார்கள் என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் பொறாமைப்படுவதை நிறுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியின் நுட்பங்களை நாம் செய்யும் ஒவ்வொரு சாதாரண தொழிலிலும் பயன்படுத்திப் பலன் பெறக் கற்றிட வேண்டும். இத்தகைய கற்றல் நமக்கு நல்ல இலாபத்தைத் தரும் தொழில்களை உருவாக்கிட வழிவகுக்கும். அரசும் இத்தகைய பயிற்சிக் கூடங்களை வழங்கிச் சாதாரண மக்களும் சாதனை படைக்க வழிகாட்டிட வேண்டும்! எனவே உழைப்போம், நிச்சயம் உயர்வோம்.