மதுரை.ஆர்.கணேசன்

தமிழகம் நன்கு அறிந்த எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ்.பிறருக்கு யோசனைகள் புத்திமதிகள் சொல்வதும், எழுதுவதும் மிக எளிது. அவற்றைக் கடைப் பிடிப்பதுதான் கடினம். எழுத்தும் பேச்சும் வெறும் உபதேசங்களாக மட்டும் இல்லாமல் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீவிரமாயிருக்கும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

என். சி. எம். அவர்களது படைப்புகள், இதுவரை 500க்கு மேல் சிறுகதைகள், 300க்கும் அதிகமாய் நாவல்கள், குறுநாவல்கள், 3,000 கட்டுரைகள், தொலைக்காட்சி நாடகங்கள், மற்றும் பிரபல இதழ்களில் எழுதிய படைப்புகள்,100க்கும் அதிகமான் புத்தகங்கள் என்று விரிகின்றன.

தமிழகத்தில் உள்ள பிரபல வானதி, மணிமேகலை, நர்மதா, சாந்தி, சாரதா, ராஜேஸ்வரி, அருணோதயம், கவிதா, திருமகள், கலைஞன் போன்ற பல பதிப்பகங்களும் இவரது நூல்களை வெளியிட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் நம்புகுறிச்சி எனும் (போஸ்டாபீஸ் இல்லாத – போன் உண்டு) கிராமத்தில் பிறந்து, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் B.Sc இரசாயனம் படித்து, கொச்சின், சென்னை பெட்ரோலியம் கம்பெனிகளில் வேலை பார்த்து – இப்போது குவைத் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டு எழுத்தையும் சமூகத் தொண்டையும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.

1997 – ஆண்டு முதல் குவைத்தில் வெற்றிகரமாய்ச் செயல்பட்டுவரும் இந்தியர்களையும் அவர்களது வெற்றிப் பயணத்தையும் Indian Frontliners எனும் புத்தகமாய்த் தொகுத்து – இதுவரை 22 தொகுதிகள் வெளியிட்டுள்ளார். பல்வேறு பிரபலங்கள் மூலம் வெளியிடவைத்திருக்கிறார்.

என்.சி. மோகன்தாஸ் அவர்கள், சமூகத் தொண்டாற்றும் சிந்தனையுடைய நண்பர்களைத் திரட்டி, நிகழ்ச்சிகள் நடத்தி இந்தியாவில் கார்கில் யுத்த நிதி, குஜராத் பூகம்பநிதி, உதவும் கரங்கள், பாலம், அமர்சேவா சங்கம், ஞான தீபம், சேவாதளம் போன்ற அமைப்புகளுக்கும் பாலம், மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார்கள்.

வாழ்வில் – இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவி பண்ணிப் பார்ப்பதைவிட பெரிய சந்தோஷம் வேறெதுவுமில்லை. அதற்கு உதவும் அளவில் வசதி வாய்ப்புகளைத் தந்துள்ள இறைவனுக்கு
என்.சி.மோகன்தாஸ் நன்றி தெரிவிப்ப துடன்,தன்னை இந்தளவிற்கு வளர உதவிய, ஆசிரியர் சாவி, தினமலர் ஆசிரியர் ராமசுப்பு, லேனா, ரவிதமிழ்வாணன், சுஜாதா, ஆசிரியர் மணியன், ஏ.நடராஜன், S.V.சேகர், ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், புகைப்பட யோகா, பி.கே.பி, கே.ஜி.ஜவகர், ப்ரியாகல்யாணராமன்,  பி.வெங்கட்ராமன், நண்பர் மனோகர், என்.ஆர்.சம்பத், நல்லி, நூருல்லா, பாடலூர் மதி எனப் பலரையும் நெஞ்சார நினைத்து வணங்குவதில் பெருமைப்படுகிறார்.

என்.சி.எம் .பொதுவாக விருதுகளிலிருந்து விலகி இருந்தாலும் டாக்டர். அப்துல்கலாம் மூலம் பாலம் விருது, முல்லைச்சரம், இலக்கியவீதி விருதுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

  • ஒரு எழுத்தாளன் என்று கௌரவமாய்-பெருமிதமாய் இருக்கும்போது! சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க…? என்கிற வினா எழுவதற்கு தங்களின் பதில் என்ன?

இது நியாயமான- யதார்த்த ஆதங்கம். இதில் உண்மை இருப்பது கண்கூடு. வெளிநாடுகளில் ஒரு நாவல் அல்லது புத்தகம் வருடத்திற்கு ஒன்று படைத்துவிட்டு அந்த வருமானத்தில் நான்கைந்து வருடங்கள் ஊர் சுற்றுவார்கள் அதனுடைய வீச்சும் – ரீச்சும் அப்படி.

இங்கே அதற்கு வாய்ப்பில்லை என்ன தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதினாலும் வாழ்க்கைத் தேவைகளுக்கு அவை ஈடு கொடுக்க முடியாது.

ஆரம்பம் தொட்டு இப்போதும்கூட நம் படைப்பை ரசித்து – விமர்சித்துப் பாராட்டுபவர்கள் கூட- “இதுக்கு சன்மானம் தருவார்களா… அப்படியா… எவ்ளோ?” என்று கேட்பது வாடிக்கை. இதில் பணத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் முன்னிலை பெறுகிறது.

நான் இந்த இக்கட்டிற்கு அப்பாற்பட்ட எழுத்தாளன்!. எழுத்தாளர் சுஜாதா- “முழுநேர எழுத்தாளராக இருக்காதீர்கள், குடும்பத்தைக் கவனிக்க நிரந்தர வருமானத்திற்கு வேலை பார்த்துக்கொண்டு எஞ்சிய நேரத்தில் எழுதினால் – நம் திருப்திக்கு எழுதலாம்” என்று கொடுத்த ஆலோசனை எனக்கு வேதமாயிற்று.

அதனால் நிர்பந்தத்திற்கு… பொருளாதாரத்திற்கு என இல்லாமல் பெயர், புகழ், திறமை சந்தோஷத்துக்காக எழுத முடிகிறது.

=   ஒரு கதையோ, நாவலோ எந்த அடிப்படையில் உருவாகிறது? கரு கிடைத்தவுடன் எழுத அமர்ந்து விடுவீர்களா இல்லை- இவ்வளவு பக்கங்கள்… இந்தப் பத்திரிக்கை என தீர்மானித்து எழுதுவீர்களா?

என்னைப் பொறுத்தவரை கருக்களுக்குப் பஞ்சமில்லை. விழித்திருக்கிற (சமயத்தில் உறங்கும்போது கூட) கருக்கள் பளிச்சிடும்.
அவைகள் வந்த வேகத்திலேயே மாய்ந்து விடாமல் இருக்க- உடனே பிட்பேப்பரில் குறிப்பு வைத்துவிடுவேன். இதுமாதிரி ஆயிரக்கணக்கில் குறிப்புகள் சேர்ந்து கொண்டே உள்ளன. சிறுகதை – நாவல் என எழுத வேண்டிய தேவைக்கு அவற்றைப் புரட்டி… அந்த நேரத்திற்கு எது கிடைக்கிறதோ அதை டெவலப்
செய்வேன்.

ஆரம்ப நாட்களில் எழுதி எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பி- அவை பிரசுரமாகி அல்லது திரும்பி வரும்போது செப்பனிட்டு வேறு பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது உண்டு.

இப்போது பத்திரிகைகளைத் தேர்வு செய்து எழுதுவதால் அந்தந்தப் பத்திரிகைகளின் ‘குணம் மணம் காரம்’ அனுசரித்துப் படைப்புகள் உருவாகும்.

=   படைப்பிற்கு எதை அங்கீகாரமாய் நினைக்கிறீர்கள்? பணம் – பரிசு – புகழ் – விருது வாசகரின் பாராட்டு?

வாசகரின் – ஆசிரியரின் பாராட்டுக்குத் தான் முன்னுரிமை! இதில் கிடைக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் தனி!

எளிமையாக – வாசகருக்குப் புரியும் படி – நல்ல கருத்துக்களுடன் – சுவையாய் – சுவாரஸ்யமாய் எழுத வேண்டும் என்பதில் நான் தீவிரவாதி.

எழுதுவது, காதல் – குடும்பம் – சமூகம் – நகைச்சுவை – மர்மம் எதுவானாலும்… காசு கொடுத்துப் பத்திரிக்கை வாங்கும் வாசகரை ஏமாற்றக் கூடாது என்பதே எனது நோக்கம். அதில் நிச்சயம் வெற்றி மேல் வெற்றி தான்.

பணம்? சுஜாதா போலதான். வருவதை வரவில் வை!

விருது? என்னவோ… விருது மேல் அத்தனை காதலில்லை. நிர்பந்தம் – தவிர்க்க முடியாமல் சிலவற்றை ஏற்றுக்கொண்டதுண்டு. எனது நூல் வெளியிடும் போது மணிமேகலைப் பிரசுர திரு. ரவி தமிழ்வாணன் முதற்கொண்டு பலரும்- “நூலை விருதுக்கு அனுப்பலாம் – அனுப்புங்கள்!” என்பார்கள்.

கண்டுக்கவே மாட்டேன். வெறுத்துப்போவார்கள்!

=   சமீப காலங்களில் படைப்பாளிகளுக்கு சினிமா மூலம்தான் பேர் கிடைக்கிறதா?

அப்படி இல்லை. எழுத்தை முழுநேரமாக வைத்திருப்பவர்களின் திறமை – பொருளாதாரத் தேவை – உபரியாக உள்ள நேரம் – பிரபலமாவதற்கான வேட்கை – இவற்றுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது முயற்சிக்கிறார்கள்.

எழுத்தின் வீச்சும், சுதந்திரமும் சினிமாவில் கிடைக்காது. கவர்ச்சி! புகழ்! படங்கள் வெற்றி என்றால் ஓகே. எத்தனை படைப்புகள் அங்கே வெற்றி பெறுகின்றன? அது நிலையில்லா உலகம். எழுத்து – மிதம் என்றாலும்
நிரந்தரம்.

=   படைப்புக்கள் சலிப்பு ஏற்படுத்தியதுண்டா?

எந்தக் கரு என்றாலும் ஒரு வகையான வரை திட்டத்திற்குப் பின்தான் தொடருவேன். ஆனால் எனது கற்பனை சும்மா இருக்கும்போது விரிவதில்லை. மாறாக எழுதும்போது அது பாட்டிற்கு ஓடிக்கொண்டிருக்கும்.
கொட்டும்!

சிறுகதைகளுக்கு அதிக சிரத்தை வேண்டும். முன்பெல்லாம் இரண்டு மூன்று முறை கதைகளை வளப்படுத்த வேண்டியிருக்கும். இப்போது ஒரே Draft தான்.

எழுத அமரும் போது அந்த தருணத்திற்கு என்ன வருகிறதோ… எப்படி வெளிப்படுகிறதோ… அதுதான் அதன் படைப்பு. அதேபோல் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதினால் வேறு மாதிரி உருவம் கிடைக்கும்.

அப்புறம் எழுதவேண்டிய, கொடுக்க வேண்டிய காலத்திற்குள் முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அமரும்போது சில நேரம் திருப்தியாக வராது. வார்த்தைகள் பிசுறும் மொக்கையாகும். அந்த நேரத்தில் அவற்றைத் தொடர்வதில்லை, தூக்கிப் போட்டு விட்டு வெளியேறி விடுவேன்.

நாவல்கள் படைக்கும்போது முதல் பாதிக்கு ஒரு வாரம் இழுக்கும். ஆனால் பின்பாதி இரண்டு அல்லது சமயத்தில் ஒருநாளில் கூட முடிந்து விடும்.

ராஜேஷ்குமார் அவர்களின் வேகத்தை போல நாமும் செய்யணும் என்று – ஒருமுறை – நாவல் ஒன்றை ஒரே நாளில் முடித்த அனுபவம் உண்டு அது மகா அவஸ்தை!

ஆண்டவா! போதும்… இனி இத்தனை அழுத்தம் கூடாது, ராஜேஷ்குமார் வாழ்க.

=   எழுத்தில் பெயர் வாங்க – நிச்சயம் கடுமையாக உழைத்திருப்பீர்கள்? இப்போதும் இந்த உழைப்பு இருக்கிறதா?

எழுத்தில் முன்னேற ஐயோ… அதை உழைப்பு என்று சொல்லமுடியாது! பிசாசு மாதிரித் திரிவேன். துணுக்கு… ஜோக், போட்டிகள்… என எழுதி அனுப்பி – திரும்பி வந்து… திரும்ப அனுப்பி… பிறகு கதைகள்! நாவல்! தொடர்கதைகள்!

திருச்சி செயின்ட் ஜோசப்பில் B.Sc முடித்து – இரண்டு வருடங்கள் விவசாயம் போதும் என தீவிர விவசாயம் பார்த்து – மழையின்றி வறண்டதால், கேரளத்தில் கொச்சியில் வேலை கிடைத்து அங்கு போன பின்புதான் எழுத்திற்கு ஒளி கிடைத்தது.

ஊரில் இருக்கும் போது வயலில் அமர்ந்து எழுதி – போஸ்ட் – செய்தால் வீட்டுக்கே திருப்பி அனுப்பப்படும் போது ஏற்படும் வருத்தம் – ஏமாற்றம் – அவமானம்! ஆனால் வெல்ல வேண்டும் என்கிற வைராக்கியம் மென்மேலும் எழுத வைத்தது.

சகோதரர் ஜெயக்குமாரின் உரக்கடையில் இவருக்கு மாற்றாகப் பாடலூரில் அமரும் போது அங்கு – நண்பர்கள் ரெங்கராஜ் வாத்தியார், சோ. மதி சாரங்கபாணி… இப்படிப் பலரின் ஊக்கம், ஜெயிக்க டானிக்காக இருந்தது.

ஆனால் அந்த மாதிரி ‘பிசாசு’ தனமான உழைப்பு இப்போது இல்லை. தேவைப்படவில்லை என்பதே உண்மை.

என் குடும்பத்தினர்! குறிப்பாய் என் மனைவி – துணைவி எல்லாமாகிய அருள்மொழி – பக்கபலம் எனச் சொல்லலாம்.

யோசித்துப் பார்க்கும் போது எனது எழுத்து வேட்கைக்காக அவரிடம் ரொம்பவும் குரூராமாய் நடந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. வேலைக்கு அப்பாற்பட்டு ஏதாவது சாதித்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் – மனைவி மற்றும் குடும்பத்தில் சகோதரர்கள் -மற்றும் அண்ணிகள் !

குடும்பத்திற்கான – அவர்களுக்கான நேரத்தை மனமுவந்து (அல்லது – என்ன சொல்லியும் நான் கேட்கப் போவதில்லை… எடுபடாது என்று!) ஒதுக்கித் தந்த தியாகத்தால் என்னால் – எழுத மற்றும் சமூகத்தில் செயல்பட முடிந்திருக்கிறது. ஆனால் பெயர் மட்டும் எனக்கு!

எனது பெயர் – புகழ் அனைத்தையும் தனதாக எண்ணி பெருமைப்படும் மனைவி – எனது இலட்சிய வெறியைப் புரிந்து – சகித்துக் கொள்வதாலும் கூட இந்த வெற்றி!

திருமணத்திற்கு முந்தைய 5 வருட காத்திருப்பில் அவர் – நான் இதுதான் – இப்படிதான் என்பதை ஏற்றுக்கொண்டு – அது இப்போதும் தொடர்கிறது.

=   சினிமா, அரசியல், டாக்டர் – என்ஜினியர், பிசினஸ் போல எழுத்தாளர்களுக்கு வாரிசு வருவதில்லையே?

உண்மை. அப்படிப் பரவலாய் யாரும் வந்துவிட்ட மாதிரி தெரியவில்லை அதுதான் எழுத்தின் மகிமை. பலம் (லேனா தமிழ்வாணன் போல விதிவிலக்குகள் உண்டு).

பிற துறைகளில் பணம், செல்வாக்கு தூக்கி நிறுத்தலாம். இங்கே அது முடியாது. நிலை நிற்பதற்கு திறமையும் – ஆர்வமும் – விடாமுயற்சியும் வேண்டும். பிறர் எழுதித் தன் பெயரில் நீண்ட நாட்களுக்கு நிலைக்க முடியாது.

=   தங்களுக்கு எழுத்துப் பின்புலம் உண்டா?

சுத்தமாய் கிடையாது. வீட்டில் பத்திரிக்கைகள் விரும்பி படிப்பார்கள். அந்த அளவோடு சரி. என்னதான் எல்லோரும் சினிமா பார்த்தாலும் – சினிமாத் துறைக்கு போவதை வெகுஜன குடும்பங்கள் விரும்புவதில்லை. நிரந்தரமில்லா சினிமாவிற்குப் போய் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடுமோ என பெற்றோர்கள் கவலைப்படுவதில் நியாயமில்லாமலில்லை.

எழுத்துத் துறையில் வீரியம் – பெயர் – பெருமை அறியாததாலும் “எழுதுவது நமக்கானதல்ல – அதற்கென்று யார் யாரோ இருக்கிறார்கள். நீ கவனத்தை அதில் செலுத்தாமல் வேலைக்கு முயற்சி செய்!” என்கிற அபிப்பிராயமே எங்கள் வீட்டிலும் எழுந்தது.

“எழுத எடுத்துக் கொள்ளும் முயற்சியில் நூறில் ஒரு பங்கு மேற்படிப்பிலும் – வேலைக்கான தேர்வுகளிலும் காட்டினால் உயர் பதவிகளுக்கு நிச்சயம் போகலாம்!” என்கிற உபதேசங்களுக்கு நேராகவோ – பிற உறவினர்கள் மூலமாகவோ என்னைத் தாக்கியதுண்டு. அவர்கள் எல்லாம் – பிறகு நான் பெயர் பெற்றதும் – “எங்களுக்கு உன்னை நினைச்சா பெருமையா இருக்கு!” என்றார்கள்.

தத்தி தடுமாறி எழுதி இரகசியமாய் அனுப்பினாலும் வீட்டு முகவரிக்குக் கடிதங்கள் வந்து விடும். அதனால் தபால்காரர் வருகிறநேரம் வழியிலேயே அவரிடம் மறியல்! இது பிற்காலத்தில் சன்மானமாக மணி ஆர்டர் அல்லது செக் வந்தபோது எத்தனை பெருமிதம்!

தேவி – 1980 தீபாவளி மலரில் எனது ஜோக் முதன்முதலில் பிரசுரமாகி அதற்கு 20 ரூபாய் கிடைத்த பரிசை மறக்கமுடியாது!

=   உங்கள் எழுத்தின் ஆர்வம் – தோற்றம் எப்படி?

பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம் எனும் கிராம – சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்தபோது எழுதும் ஆர்வம் ஊறிற்று.

ஒன்பதாம் வகுப்பு வரை – கல்கண்டு, ராணி, அம்புலிமாமா, கோகுலம், அணில், இரும்புக்கை மாயாவி என புத்தகத்திற்கிடையே ஒளித்துவைத்துப் படிப்பதுண்டு. சகோதரர் ஜெயக்குமார் தன் வகுப்பில் கிடைக்கும் பத்திரிகைகளை எனக்கும் படிக்கத் தருவார். பேசும்படம், பொம்மை போன்ற சினிமா இதழ்களும் அதில் அடக்கம்.

அப்புறம் அதுவே குமுதம், விகடன், கல்கி என வளர்ச்சி கண்டபோது சோவின் துக்ளக் பத்திரிகையை எனது மூத்த சகோதரர் பிரசன்னம் வாங்கி வந்து அறிமுகப்படுத்தினார்.

அன்று ஆரம்பித்ததுதான் இந்த எழுத்துப் பித்து!

சோவின் நகைச்சுவை – நையாண்டி – துணிச்சலான – சமூக அக்கறையுடனான விமர்சனங்கள் என அந்தப்பக்கம் ரொம்பவே ஈர்த்தன.

அதே மாதிரி நானும் ஒரு “சோ”ஆக வேண்டும் என்கிற உந்துதல்! சமூக அவலங்களின் மேல் கோபம் உள்ள எனக்கு துக்ளக் தூண்டுகோலாக இருந்தது.

 அதைத் தலைமையாசிரியர் ஆரோக்யசாமி பாதிரியார் வளர்த்து விட்டார் என்று சொல்லலாம். பொதுவாக பள்ளியில் பத்திரிகைகளுக்கு அனுமதியில்லை. அடி விழும்! திருட்டுத்தனமாய் பசங்கள் வாங்கிவரும் இதழ்களை – படித்து முடிக்கும் முன்பு ஹாஸ்டல் வார்டன் பிடிங்கிக் கொண்டு போய் விடுவார்.

ஆனால் தலைமை ஆசிரியரோ… துக்ளக், டைஜஸ்ட் போன்ற இதழ்களைப் படித்து விட்டு – பசங்களும் படிக்கட்டும் என வரவேற்பறையில் பரப்பி வைப்பார்.

ஆனால். நானோ… அது வரை காத்திருக்காமல் பிரதி மாதம்..1.. மற்றும் 15 தேதிகளில்.. அவர் அறையில் போய் துக்ளக்கிற்காக நிற்பேன்! பையன் துக்ளக் அளவிற்கு சமூக அக்கறை கொண்டு இருக்கிறானே என்று… அவரும் மகிழ்ந்திருக்க வேண்டும். அடி – குட்டு – காதுதிருகலுக்குப் பதில் “இந்தா வெளியே உக்காந்து படிச்சுட்டு உடனே திருப்பிக் கொடு!” என்பார்.

அப்படி சுடச்சுட பேப்பர் வாசம் கலையாமல் படிக்கப் படிக்க எழுத்தின் மேல் ஆர்வம் ஊறிற்று.

  • பத்திரிகைப் பிரவேசம் எப்போது? எப்படி?

கல்லூரி முடித்த சமயத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்திருந்தார். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பும் விதத்தை அவரிடம் கேட்டறிந்து பயணம் ஆரம்பமானது.

அப்போது பிரபலமாயிருந்த தேவி, சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், அலிபாபா… என மோதல்கள் தொடங்கின.

அந்த நேரம் எங்கள் கிராமத்திற்கு அருகிலிருந்த பெரிய கிராமமான பாடலூரில் – சகோதரரின் உரக்கடையில் அமர்ந்தபோது – நண்பர்கள் ரெங்கராஜ், மதி போன்றோர் கொடுத்த உற்சாகத்தில் துணுக்குகள் தொடர்ந்தன.

  • அப்புறம் எப்போது முதல் பிரமோஷன்?

கொச்சியில் வேலை கிடைத்துச் சேர்ந்தபோது எழுத்தாளர் கே.ஜி.ஜவஹரின் மூலம் அங்கு முத்தமிழ் சங்கமும் – அதன் தூண்களான விஷ்ணுதாஸ், சிவப்பிரகாசம், பி.வெங்கட்ராமன் என அறிமுகம்!

கே.ஜி.ஜவகர் சென்னைக்கு வங்கிப் பணியில் மாற்றாலான போது – சாவி பத்திரிகைக்கு என்னை அறிமுகப்படுத்தினார்.

டி.வி.எஸ்ஸில் PROவாக இருந்த குழந்தை எழுத்தாளர் பி. வெங்கட்ராமன் (PV) மூலம் எனக்குப் பல பிரபலங்களின் தொடர்புகளும் கிடைத்தன. நகருக்கு யார் வந்தாலும் அவர் உடனே அழைத்து அறிமுகப்படுத்தி – பேட்டியெடுத்து எழுதச் சொல்வார்.

ராஜீவ்காந்தி அங்கு வந்தபோது அவருடன் கும்பலுடன் கும்பலாய் நடந்து – அதை எழுதி அனுப்ப – சாவியில் அது முதல் பக்கத்திலேயே வெளியிடப்பட – எனக்கு வேப்பிலை அடித்த மாதிரி ஆயிற்று.

அதன்பின் PV-யின் தூண்டுதலில் – வழிகாட்டுதலில் எழுதி… எழுதி ‘சாவி’யின் முதல் மற்றும் கடைசி பக்கங்கள் எனக்காக – என் கட்டுரைக்காக ஒதுக்கப்படும் அளவிற்கு வளர்ச்சி!

கேரளத்தில் சினிமா அரசியல் பிரபலங்களுக்கு நம்மூர் போல பந்தாக்கள் அல்லது பந்தோபஸ்து… கெடுபிடிகள் கிடையாது.

அவர்கள் எளிமை! சினிமா நடிகைகள் தமிழ் மற்றும் மலையாளத்திற்கு பொது என்பதால் வசதி! அங்கு படப்பிடிப்பில் அவர்களை எளிதாய் சந்திக்க முடியும்.

அந்த வயதில்… பிரபலங்களைப் பார்க்க – பேச முடிகிற த்ரில்! நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ளும் பெருமிதம்! சினிமாக் கவர்ச்சி ஈர்ப்பு ஒரு பக்கம் என்றால், அந்த மேட்டர்களை எழுதி அனுப்பினால் உடனே பிரசுரமாகிவிடுவதில் ஆனந்தம்.

ஒரு படப்பிடிப்புக்கு போனால் – அதைப் பலகோணங்களில் பேட்டி எடுப்பேன். அவற்றைப் பிரித்து – சுவையாய் – குங்குமம், வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரஸ், சாவி, தினமணிகதிர், தேவி எனப் பலருக்கும் வெவ்வேறு புனைபெயர்களில் எழுதுவேன்.

  • என்.சி மோகன்தாஸ் உருவானது எப்படி?

ஒரு சமயம் கொச்சியில் பணியாற்றிய பிரபல எழுத்தாளர் இரவிச்சந்திரன் மூலம் பிரபல புகைப்பட நிபுணர் யோகாவின் அறிமுகம் கிடைத்தது. எனது படைப்புகளில் ஈர்க்கப்பட்ட அவர், ” இப்படிப் பல பெயர்களில் எழுதாமல் பளிச்சென ஒரு பெயர் தேர்வு செய்து எழுதுங்கள்” என்று யோசனை சொன்னார்.

“வெறும் சி. மோகன்தாஸ் என்பது என்னவோ போல் உள்ளது. வேண்டும் என்றால் ஊர் பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

எங்கள் ஊர் நம்புகுறிச்சி – குக்கிராமம். இன்று அளவிலும் போஸ்ட் ஆபீஸ் கிடையாது. இந்தப் பெயர் யாருக்கு தெரியும்?

ஊரை வைத்துப் பிரபலம் தேட வாய்ப்பில்லை. ஆனால் ஊர்ப்பற்று வெளிப்படனும் என யோசித்ததில் ஊரின் முதல் எழுத்தைச் சேர்த்து என். சி. மோகன்தாஸ் உருவாகிற்று.

அதன்பிறகு ஏற்றம்தான். பெயர் – புகழ் கிடைத்தபின் ஜோதிடர் ஒருவர் “உங்கள் பெயர் நியூமராலஜிப்படி அமைந்ததால் தான் உங்களுக்கு வெற்றி சாத்தியமாயிற்று” என்றார். என் முயற்சி – உழைப்பு – திறமைக்கு அப்பாற்பட்டு நியூமராலஜியும் வேலை செய்திருக்கிறது போலும்!

பணிபுரியும் போது கண்ணில் விபத்து ஏற்பட்டபோது “உச்ச கட்ட வளர்ச்சிக்கு மட்டுமில்லை – விபத்துக்கும் கூட அந்த நியூமராலஜி தான் காரணம்” என்று சொன்னவர்களும் உண்டு.

  • கதையுலகப் பிரவேசம் எப்படி?

பிரபலங்களைச் சந்திக்கிற ஜோர் மற்றும் உடனுக்குடன் அவைகள் பரபரப்பாய் பிரசுரமாகிறதில் மயங்கி – படைப்பிலக்கியம் பக்கம் போக முடியாமல் இருப்பதை தாமதமாகத்தான் உணர்ந்தேன்.

என் லட்சியம் கதைகள்…. கதாசிரியர் தான் ! ஜர்னலிசம் இல்லை . எனது கதைகளையும் கண்டு கொள்ளுங்கள்’ என சாவி இதழுக்கு அனுப்ப ஆரம்பித்தேன்.

ஆசிரியர் சாவி அவர்கள் “கதைகள் யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எழுதலாம். ஜர்னலிசம் அப்படியில்லை. உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எதை – எப்படி – எப்போது சுவையாய் சொல்ல வேண்டும் என்கிற பளிச் ஆற்றல் உங்களிடம் உள்ளது. பிற்காலத்தில் கதைகள் மங்கிப் போகும். ஜர்னலிசம்தான் நிற்கும்” என்று உசுப்பி உசுப்பி என்னை அந்தப் பக்கமே இயங்க வைத்தார்.

அதற்கிடையிலும் கதைகள் எழுதி அனுப்பி பிரசுரமாயிற்று. சாவி குழுமத்தின் மோனா மாத இதழில் முதல் நாவல் ! அப்புறம் தொடர்கதை!

சாவி பத்திரிகை எனது குடும்ப உறவாயிற்று. அந்த அளவிற்கு சாவி – சாவி என உருகுவேன். பிற பத்திரிகைகளுக்கும் எழுதி அனுப்பினாலும் சாவி தான் பிரதானம்.

இரண்டு மாதத்திற் கொரு முறை சென்னை சென்று சாவியின் ஆசிரியர் குழுவில் ஐக்யமாவேன்.

யோசனைகள் சொல்வேன். சாவி அவற்றை ஏற்றுச் செயல்படுத்துவார்.

அந்த நேரம், எஸ்.வி. சேகரின் நட்பு கிடைத்திருந்தது. எனக்கு சென்னையில் கிடைத்த முதல் பிரபல நட்பு வண்ண ப்பட யோகா. அடுத்தது எஸ். வி. சேகர்!

அவர் அப்போது ஆரம்பித்திருந்த நாரதர் பத்திரிகையில் எனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து – தொடர்கதை எழுத வைத்தார்.

  • தினமலரில் உங்கள் படைப்புகள் வெளியானது பற்றி?

ஆமாம் என் உடல் – உயிர் – ஊன் – உறக்கம் எல்லாமும் எழுத்தின் மேலேயே இருந்ததால் மேலும் அதற்கு உயிர் கொடுத்தது தினமலர் அந்துமணி அவர்கள்.

அவரைச் சந்தித்தது எனது படைப்புகளைக் காட்ட, “உங்களை ஏற்கனவே தொடர்ந்து கவனித்து வருகிறேன். தினமலருக்கும் எழுதுங்கள்” என ஊக்கம் தந்தார்.

அப்போது போட்டது டாப் கியரில் செல்ல ஆரம்பித்தது. தினமலர் குழுமத்தில் வாரமலர்… கதைமலர் எனச் சிறுகதைகளை எழுதி குவித்தேன். அங்கு தேர்வாகாத கதைகளைச் செப்பனிட்டு பிற பத்திரிகைகளுக்கும் அனுப்புவேன்.

அப்போது பாக்கெட் நாவல் ஆரம்பிக்கப்பட்டு அது வெற்றி பெறவே பல மாதநாவல் இதழ்களும் உதித்தன. தமிழில் ஆவேசமான – வெறியான வாசகர்களைப் பெற்றிருந்த காலம் அது.

விகடன், குமுதம், கல்கி, ராணி, இதயம், குங்குமம், தினமணி, தேவி போன்ற வார இதழ்கள் மட்டுமின்றி மாத இதழ்களிலும் எனது ஏவுகணைகள் திரும்பிற்று.

அந்த நேரம் எழுத்தாளர் ராஜேந்திர குமார் அவர்களும் மாத நாவல் ஒன்றிற்கு ஆசிரியராக இருந்து வெற்றிகரமாய் நடத்தினார். அதில் எனக்கு நிறைய வாய்ப்பளித்தார். அவரது தூண்டுதல் – அப்போது எனக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது.

நாவல், தொடர்கதை என அடுத்த கட்டத்திற்கு ஆசைப்பட்ட போது கல்கண்டு லேனா தமிழ்வாணன், ப்ரியா கல்யாண ராமன் மற்றும் பாக்கட் நாவல் அசோகன் போன்றோரின் வழிகாட்டுதல் என்னை மென்மேலும் உசுப்பிவிட்டது. வளப்படுத்திற்று.

வார இதழ்களின் விற்பனை பிரபல எழுத்தாளர்களின் தொடர்களையும், மாத நாவல்கள் பிரபலங்களை வைத்துமே நடத்தப்பட்டு வந்தன. அப்படியிருக்கும் போது அன்றைய என் பிரபலம் அல்லது திறமை.. புகழ் தொடர்கதைக்கோ இல்லை. மாத இதழின் நாவலுக்கோ போதாது. இன்னும் வளர வேண்டும் என்பதை எனக்குப் புரியவைத்தனர்.

அத்துடன் நில்லாமல், “வாரமலரில் நிறைய சிறுகதைகள் எழுதுகிறீர்கள். அதில் தொடர்கதையையும் எழுத ஆரம்பித்தீர்கள் என்றால் லட்சக்கணக்கான வாசகர்களை சென்று அடைந்து விடுவீர்கள். அதன்பிறகு எங்களுக்கும் சர்குலேஷன் பிரச்சினை வராது. நாங்களும் உங்களை கொண்டாடுவோம்” என்ற னர். உண்மை .

வாரமலரில் அந்துமணி அவர்கள் தொடர் கதை எழுத வாய்ப்பளித்தார். இனியவளே’ என்கிற அந்த உண்மைக் கதை தீபாவளி சமயம் ஆரம்பம்.

தொடர் கதை வாய்ப்புக் கொடுத்தது மட்டுமின்றி – ஆச்சரியமாய் – இன்ப அதிர்ச்சியாய் – நான் அதுவரை எழுதி வந்த அத்தனை பத்திரிகைகளிலும் – ‘இனியவளே’க்கு முழுபக்க விளம்பரமும் கொடுத்திருந்தார்கள்.

அது வெறும் விளம்பரம் அல்ல…. எனக்கு. என் எழுத்திற்கு கொடுக்கப்பட்ட ஆக்சிஜன்! உயிர்! அதன் பிறகு எனக்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க ஆரம்பித்தது. பாக்கியா, டி. ராஜேந்தரின் உஷா; மாத நாவல்கள்! தமிழ்வாணனின் மர்மத் தொடர்களை ஒளித்து வைத்துப் படித்த அதே கல்கண்டில் தொடர் எழுத லேனா மூலம் வாய்ப்பு! மாலைமதி – தேவியின் கண்மணி – ராணிமுத்து – பாக்கெட் நாவல் முதற்கொண்டு பலதிலும் நாவல்கள் ! தொடர் கதைகள் ! போட்டிப் பத்திரிக்கை என்றாலும்கூட அந்துமணி – தினத்தந்தி – தினகரன் – மாலைமுரசு குழுமங்களிலும் எழுத அனுமதித்தார்.

அந்த நேரம் சென்னைக்கு வேலையை மாற்றினேன். எழுத்து ராக்கெட் வேகமெடுத்து, ஒரே நேரத்தில் நான்கு தொடர் கதைகள் என ஜல்லி கட்டினபோது கண்களில் விபத்து!

  • ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு பானி இருக்கும். ஒரு குறிப்பிட்ட பிரிவிலேயே அவர்களால் எழுத முடியும் என்பார்கள்… நீங்கள்?

காதல் – சமூகம் – குடும்பம் – மர்மம் – நகைச்சுவை – அரசியல் என எல்லாமுமே எனக்கு ‘கை’ வந்திருப்பதாகவே பத்திரிகை ஆசிரியர்களும் – வாசகர்களும் பாராட்டுகிறார்கள். அதிலும் காதல் ரொம்பவே கைகூடி வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்குமாம்!

சரித்திர கதைகள் பக்கம் அதிகம் போவதில்லை . அதற்கு காரணம் – அதற்காக மெனக்கெடுகிற அளவிற்கு வாசகர்களிடம் போய் சேராததுதான். சரித்திரம் தொடாமலேயே – பிரபல பத்திரிகைகளின் டாப்10 லிஸ்டில் நானும் இடம் பெற்றிருந்தேன் என்பதும் ஒரு சரித்திரமே! •

  • இப்போது கதை…. நாவல்களில் அத்தனை வேகம் இல்லையோ…?

உண்மை . அதற்கு காரணம் – படிப்பதை விட – பார்ப்பது – கேட்பது என்கிற சோம்பேறித்தனத்திற்கு நாம் பழகிவிட்டதுதான். எதையும் ஆழமாய் அலசும் – படிக்கும் பழக்கம் போய் நுனிப்புல்! விஞ்ஞான வளர்ச்சியில் எல்லாமே பளிச்பளிச்சென தாவிடும் சுபாவம்!

என்னைப் பொறுத்தவரை எழுத்து குறைய இன்னொரு காரணமும் உண்டு. அது – குவைத்தில் இருந்து செயல்படும் Indian Frontliners(IFL) சேவை அமைப்பின் செயல்பாடுகள்!

  • அந்த அமைப்பின் தோற்றம் – செயல்பாடுகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!

இது – திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டதல்ல! குவைத்திற்கு சென்றது எனது பொருளாதார மேம்பாட்டிற்குத் தான். அங்கு போன பின்பும் நாவல்கள் விடாமல் எழுதிக் கொண்டிருந்தேன்.

அப்போது இலக்கியவீதி இனியவன் அவர்கள் மூலம் தொழில் முதலீடு எனும் பத்திரிகையின் ஆசிரியர் அரிதாசன் அறிமுகமானார். “நீங்கள் கதைகள் மட்டுமின்றி – குவைத்தில் வெற்றிகரமாய் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி எழுத முடியுமா?” என்றார்.

சரியென்று 1996-இல் அவரது பத்திரிக்கையில் இந்திய முக்கியஸ்தர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதினேன். வட இந்தியர்கள் – இவற்றை ஆங்கிலத்தில் கொண்டுவந்தால் நாங்களும் படிக்க முடியுமே…” என்றார்கள்.

ஆங்கில மொழிபெயர்ப்புக்கு நண்பர்களைக் திரட்டி – வருடம் ஒரு புத்தகமாக இதைக் கொண்டு வர ஆரம்பித்தேன். அது இதுவரை 22-தொகுதிகள் ஆயிற்று.

இந்தியர்களைப் பெருமையுடன் வெளிப்படுத்துவது மட்டுமின்றி – அதன் மூலம் சேவையும் செய்யலாம் என – சேவை குணமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. தான் இந்தியன் ஃப்ரண்ட்லைனர்ஸ்(IFL) அமைப்பு.

புத்தக ஆக்கம் – அதை வெளியிட வருடம் ஒரு நிகழ்ச்சி… அதன் மூலம் நிதி சேகரித்து – கல்வி – மருத்துவம் – ஆதரவற்ற … முதியோர் இல்லங்கள் என இதுவரை 4 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவில் உதவியுள்ளோம்.

அத்துடன் டாக்டர் கலாம் அவர்களின் ஆலோசனைப்படி – குவைத்தில் பலவித பிரச்சனைகளால் பாதிக்கப்படும் – வஞ்சிக்கப்படும் தொழிலாளர்களுக்கும், பணிப்பெண்களுக்கும் இந்திய தூதரகத்துடன் இணைந்து உதவி வருகிறோம்.

எங்கள் அமைப்பின் செயலாளர் கீரணி மதி இந்திய தூதரகத்தின் ஒருங்கிணைப்பைச் செய்து வருகிறார். மருத்துவ உதவி, இறந்து போனவர்களின் உடல்களை ஊருக்கு அனுப்புதல், சட்ட உதவி என எல்லாம் செவ்வனே நடந்து வருகிறது.

  • கொரொனா காலத்தில் தங்களது ப்ரண்ட்லைனர்ஸ் பணிகள் குறித்து…

நண்பர் மனோகரின் ஊக்குவிப்பில் ஆரம்பித்த எனது எழுத்துப் பயணம் இந்தியன் ப்ரண்ட்லைனர்ஸ் தொண்டு நிறுவனம் வரை வளர்ந்திருக்கிறது.

எங்களது தற்போதைய சேவை கொரோனா நிவாரணப் பணிகள்! குவைத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் வேலை சம்பளமின்றி பாதிப்படைந்துள்ளவர்களுக்கு உணவு – உணவு பொருட்கள் என Indian Frontiers துணை தலைவர் திரு. ப. செந்தில் குமார் தலைமையில் குழு அமைத்து ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாய் நிவாரண உதவிகள் செய்திருக்கிறோம்.

  • தங்களின் பலம், பலவீனம்?

ஒன்றா இரண்டா … முதலில் நிற்பது கோபம்! அது பலவீனமான பலம்! கோபம் என்பது ஃபயர்! இந்தப் ஃப்யர்தான் எங்கும் எனர்ஜி தருகிறது! ரயில், விமானம், வாகனங்கள், மின்சாரம்…. இப்படி நிறையச் சொல்லலாம். என் கோபம் என்பது காரியம் நடப்பதற்காக. அதுவும் நேரப்படி – முறைப்படி – முழுமையாக வேண்டும் என்பதற்காகவே இருக்கும்.

எல்லாவற்றிற்கும் ஒரு காலம் நேரமிருக்கிறது. ஏற்றுக்கொண்ட விஷயத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் உரிய நேரத்தில் தெரிவித்தால் உடன் அந்தக் காரியம் தடைபடாமல் சரிசெய்து விட முடியும்.

அதை நம்மாட்கள் குறிப்பாய் நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள் செய்வதில்லை. பொதுவாகவே பரிட்சைக்கு மட்டும் படிக்கும் மனோபாவம்! செய்யவேண்டியதை செய்து முடித்துவிட்டு அப்புறம் ரிலாக்ஸ் பண்ணலாம் என நினைப்பதில்லை.

அடுத்தது – விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து தகவல் பரிமாற்றத்திற்கு எத்தனையோ மார்க்கங்கள் இருந்தும்கூட தகவலை முறைப்படி தெரிவிக்கமாட்டார்கள்! இதனால் கோபம்!

என் கோபம் நிரந்தரமானதல்ல. எவரையும் பகை பாராட்டுவதுமல்ல! சரியாக இயங்காத செயல் மேல் மட்டும் கோபம் பாயும்! அப்புறம் சரியாக உள்ளவற்றிற்கு கைகோர்த்துக் கொள்வேன்!

முயற்சி வேண்டும். பேராசை கூடாது! பிறர் பொருள் மேல் பற்று கூடாது! நம்மிடம் உள்ளதை வைத்து தேவைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அதனால் நிராசையோ… புலம்பலோ, பிறர் மேல் பொறாமையோ எழாது. நல்லதை வாழ்த்துகிற – தூக்கிப் பிடிக்கிற அதேசமயம் – தீயதையும் – தீயவர்களையும் எதிர்ப்பதிலும் காட்டுவதுண்டு.

அரசியல்வாதிகளின் போலி, பொய் – பித்தலாட்டம், ஓட்டுக்காக சாதி, மத சண்டையை கிளறிவிட்டு அப்பாவிகளைப் போராட வைத்துப் பலி கொடுப்பது எல்லாம் கோபப்பட வைக்கிறது. சுயநலம் ஆகாது. முடிந்தால் உதவு. இல்லாவிட்டால் போய்விடு! சேவையை – நல்ல காரியங்களை கொச்சைப்படுத்துதல் ஆகாது!

  • கடை பிடிக்க விரும்பும் விஷயங்கள்?

அமைதி, மகிழ்ச்சி, மன திருப்தி! எளிமை! வரட்டு கௌரவமின்மை! உள்ளதைச் சொல், நல்லதை செய்! ஆடம்பரம் தவிர் ! வீண் – பகட்டு – ஜம்பம் அகற்று.. இப்படிப் பல !

அடுத்து உலகத்தில் எந்த மதமும் சண்டை – சச்சரவு – வன்மம் – பகையை போதிக்கவில்லை . மதம் என்ன அரசியல் கட்சியா. ஆள் பிடிக்க -? உறுப்பினர் சேர்க்க? சுயநல போலி மதவாதிகள் ஒழிக! அவரவர்கள் தத்தம் மார்க்கங்களை போற்றலாம். அது கற்றுத்தரும் நற்பண்புகளை கடைபிடிக்கலாம். கொண்டாடலாம். அதுபோல அடுத்தவர்களின் கொண்டாட்டம் மற்றும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். சாதி – மத – இன – மொழி வித்தியாசமில்லா ஒன்றுபட்ட இந்தியா வேண்டும் என்பதே என் பேராவல்.