விஞ்ஞானி டாக்டர். வி.டில்லிபாபு

1960-களிலும் அதற்கு முன்பும் பால்பவுடர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.

வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியச்சந்தையில் கோலோச்சிய அக்காலகட்டத்தில், ஆவின், அமுல் போன்ற இந்திய வணிகப் பெயர்களைப் பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை.

வெண்மைப்புரட்சி

1970-ல் துவங்கிய ‘வெள்ள இயக்கம்’ (Operation Flood) இந்திய பால் உற்பத்தியில் மாபெரும் புரட்சியை உண்டாக்கியது. பொருத்தமாக வெண்மைப்புரட்சி (White Revolution) என்றழைக்கப்படும் இந்த இயக்கம் பால் உற்பத்தியில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றியது. 1998-ல் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா!

1950 களில் ஒரு இந்தியனின் தினசரிப் பால் தேவை 124 கிராம். 1970-ல் இது 107 கிராம் ஆகக் குறைந்தது. இது உலகிலேயே மிகக்குறைந்த தனிநபர் பால் உட்கொள்ளும் அளவு. மேலும், ஆரோக்கிய வாழ்வுக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்து அளவை விடவும் இது குறைவு. கால்நடைகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகில் முதலிடத்தில் இருந்தாலும் பால் உற்பத்தியில் பின் தங்கியிருந்தது என்பது விநோதமான உண்மை.

அமுல்

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் என்ற இடம் வெண்மைப்புரட்சியின் தலைநகரம். இந்தச் சிற்றூரில் துவங்கிய கூட்டுறவுப் பால் உற்பத்தி முயற்சிகள் வெற்றியடைந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உருவானதுதான் இந்தியாவின் வெண்மைப்புரட்சி.

 அமுல் (AMUL) என்ற பிரபல பால் பொருள் வணிகப்பெயரின் விரிவாக்கம் ‘Anand Milk Union Ltd.’ என்பது சுவாரசியமானது.

ஆனந்த் நகரத்தில், தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாலேடு ஆராய்ச்சி மையம் இருந்தது. இந்த மையத்தில் பணியாற்ற ஒரு இளம் அதிகாரி அனுப்பப்பட்டார். வேண்டாவெறுப்பாக பணியேற்ற அந்த அதிகாரி தான் ‘வெண்மைப்புரட்சியின் தந்தை’ என்றும் ‘இந்தியாவின் பால்காரர் ’    என்றும் பின்னாளில் அழைக்கப்பட்ட வர்கீஸ் குரியன்.

2000-ல் அப்துல் கலாம் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட போது வர்கீஸ் குரியன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னாளில் தன் வாழ்க்கையையே இந்தியாவின் பால் வள முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்த குரியன், ஆனந்த் நகரத்தில் பதவியேற்க வந்த போது வாடகைக்கு வீடு கூட கிடைக்காமல் திண்டாடியதும், மாதாமாதம் மத்திய வேளாண்மை அமைச்சகத்துக்கு ராஜினாமாக் கடிதங்களை அனுப்பி வைத்ததும் ருசிகரமான சம்பவங்கள்.

பதவியேற்ற துவக்க காலங்களில், இவரைப் பற்றி மேலதிகாரிகள் எழுதிய வருடாந்திர ரகசிய அறிக்கையில் கூட ‘இவர் தேர்ந்த அதிகாரியாவது சாத்தியமில்லை’ என்றே எழுதினார்கள்.

‘வாழ்க்கை ஒரு சிறப்புரிமை , அதை வீணடிப்பது தவறு’ – என்று பின்னாளில் எழுதிய குரியன் மாறியது எப்படி?அவர் ஆனந்தில் செய்த மாயாஜாலம் என்ன?

(புரட்சி தொடரும்)