ஒரு பேராசிரியையின் எண்ணங்கள் கிராமப்புறப் பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றியே சுழல்கிறது. அத்துடன் தன் கற்பனையுடன் கலவையிட்டுத் தருகின்ற கட்டுமானத்துறையின் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய சிந்தனைகளுடன் வலம் வருகிறார்.
நாகர்கோயிலைப் பூர்வீகமாக கொண்ட கல்விப்பணியில் சிறந்து விளங்கிய தாத்தா “..பாகவதர்..” என்.எஸ். சிவராமன், அப்பா தமிழ்ப் பேராசிரியர், முனைவர், குமார் என்றால் அவ்வூரில் தெரியாதவர்கள் இருக்க முடியாது..!
அப்பேர்ப்பட்ட பாரம்பரிய குடும்ப வழியில் வந்த முனைவர் எஸ்.பி. சங்கீதா 39, B.E., M. Tec., Phd., படித்தவர். சமூகப்பணியில் அக்கறையும் கல்வியில் முழு அர்ப்பணிப்பும் முயற்சியும் கொண்டிருந்ததால் 2005ல் முதலில் ஹிந்துஸ்தான் கல்லூரியில் விரிவுரையாளர், பின்பு சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆறுபடை வீடு பொ றியியல் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து அதேகல்லூரியில் பேராசிரியர், மற்றும் துறைத்தலைவராகவும் ஆகிறார். 2019-ல் கல்லூரித் துணை முதல்வர் பணி அவரைத் தேடிவந்தது..!
தமிழகத்தில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் நடக்கும் கட்டிட விபத்துகளை அடிக்கடி கேட்டும், நேரடியாக பார்த்திருப்பதினாலும் இதுபோன்ற விபத்துகளை எவ்வாறு தடுக்க முடியும் என்கிற யோசனையில் ஈடுபட்டுக் கட்டுமானப் பணிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு, தொழில்நுட்ப முறைகளைப் படித்தும் தெரிந்து கொண்டு தம்மாணவர்களுக்கு பயிற்றுவிக்கத் தொடங்கினார்.
கட்டிடத் துறையில் சிறந்து சீராக்கும் பொறியாளர்களின் கனவுகளை கண் முன் நிஜமாகும் கட்டிடத் (கொத்தனார், மற்றும் சித்தாள்) தொழிலாளர்களுக்கு துறை சார்ந்த புதிய பயிற்சிகள் அவசியம் என்பதையும் உணர்ந்தார். இதற்காக ராம்கோ நிறுவனத்துடன் இணைந்து ஆண்டு தோறும் 3 நாட்கள் நடத்துகின்ற ‘பாதுகாப்பு தொழில் நுட்பம்’ குறித்த பயிற்சிகளை “..இலவசமாக..” வழங்கி
வருகிறார்.
விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் இயக்குனர் அனுராதாகணேசன் அவர்கள் அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்..! இதன் நிர்வாகம் பையனுர் கிராமத்தில் பல்வேறு சமுதாயப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கிராம மக்களுக்குக் கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று யோசித்த போது அதனைச் செயல்படுத்தும் ஆற்றல் படைத்த முனைவர் சங்கீதாவைப் பொறுப்பாளராக நியமித்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பையனுர் மற்றும் நடுவக்கரை, கொத்திமங்கலம், சிறுதாவூர், குன்னவாக்கம், அருங்குன்றம் போன்ற கிராமங்களைத் தத்தெடுத்து அங்குள்ள விவசாயம் மற்றும் கூலிவேலை செய்யும் மக்களுக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப்புடன் இணைந்து 5 மாதத்திற்குள் “..ஒருவீட்டுக்கு ஒருகழிப்பறை என்று மொத்தம் 207 கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளார்…” என்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர் சங்கீதாவிடம் இருக்கும் சமூகஅக்கறை, ஈடுபாடு, நேர்மை குணத்தையும் கவனித்த பல்கலைக்கழக நிர்வாகம் சமூகநலத்துறை சார்ந்த அனைத்திற்கும் இயக்குனர் பொறுப்பையும் வழங்கிக் கௌரப்படுத்தியிருக்கிறார்கள்.
கல்லூரி நிர்வாகம், மற்றும் என்.எஸ்.எஸ்., ரோட்டரிகிளப், ரெட்ரிப்பன் கிளப், தேசிய நலச்சங்கம் மத்திய அரசின் உன்னத பாரத திட்டம் மூலமாக வருஷத்திற்கு 100 பெண்களுக்கு என்ற ரீதியில் அந்தந்தத்துறையில் அனுபவம் பெற்றவர்களைக் கொண்டு எம்பிராய்டரி, தையற்பயிற்சி, இயற்கை உரம் தயாரிப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் தரப்படுகின்றன. இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று அதில் 200க்கும் மேலானவர்கள் இன்று சுயமாகச் சம்பாதிக்கின்றனர்.
தமிழ் மற்றும் 4 மொழிகளில் தேர்ச்சி பெற்றவரான முனைவர் சங்கீதா கொரோனா வைரஸ் காலம் என்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மற்றும் வீட்டிலிருந்தபடியே எப்படிச் சம்பாத்திக்கலாம்? என்பதைத் தற்போது “..ஆன்லைன் மூலமாக இலவசமாக ..” ஆலோசனைகள் கூறிவருகிறார். தன்னுடைய துறை சார்ந்த கல்வி அனுபவத்தின் பயனை மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் 1) BASIC CIVIL ENGINEERING, 2) ADVANCED CONSTRUCTION TECHNOLOGY, என்கிற இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
நவீனக் கட்டிடக்கலை பற்றிய 30 ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியும், 50க்கும் மேற்பட்ட கட் டிடக்கலை கருத்தரங்கத்திலும் பங்கேற்றுள்ளார், கல்வி மற்றும் சமூதாயப் பணிகளுக்காக டிகேரஃப் நிறுவனத்தின் நல்லாசிரியர் விருது, சிரியாஃமீடியா பில்ஸ் நிறுவனம் வழங்கிக் கௌரப்படுத்திய தென்னிந்திய பெண்களுக்கான “..அவுட்ஸ்டான்ட்டிங் எஜுகேட்டர்.. விருது”, மாணவர்களை நயமாக வழிநடத்தியதிற்காக ரோட்டரி கிளப்பின் இரண்டு முறை விருதுகள் உள்ளிட்ட பல அமைப்புகளின் விருதுகள் இவருக்கு ஊக்கமளித்து வருகின்றன.
“..ஆன்லைனில்..” ஆக்கப்பூர்வமான பணிகளுக்குக்கிடையே பேராசிரியை முனைவர் எஸ்.பி.சங்கீதா இனிநம்மோடு….,
“..அப்பா எனக்கு “..ரோல்மாடல்..” இந்த சமூகத்திற்கு ஏதாவது பண்ணனும், நாம பார்த்துப் பழகிய விஷயம் கூட மக்களுக்குப் பயன்படுகிற மாதிரி செயல்படுத்தனும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையில் நட்பை விதைத்து நண்பர்களாகப் பழகவேண்டும் என்று அடிக்கடிச் சொல்லுவாங்க…அதை அப்படியே கடைபிடிக்கிறேன்.
கிராமப்புறப் பெண்கள் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கவேண்டும், அப்பத்தான் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் நிற்கலாம் அதற்கான பயிற்சியும் மற்றும் தன்னம்பிக்கை பயிற்சியும் தருகிறேன்.
உன்னத பாரத திட்டம் மூலம் நாமும் மக்களுக்கு நல்லது செய்திருக்கிறோம் அவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை நாங்கள் பெற்றுத் தருகிறோம் மேலும் அரசுக்கும் மக்களுக்கும் ஒருபாலமாக இருக்கிறோம் என்பதில் சந்தோசம் அடைகிறேன்…” என்று கூறும் முனைவர் சங்கீதா நற்பணி தொடர ‘ஆளுமைச் சிற்பி ’ வாழ்த்துகின்றது.=
மதுரை.ஆர்.கணேசன்