அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
ஒரு மனிதன் கடப்பாரை, மண்வெட்டியின் துணையோடு தன்னையே தோண்டும்போதும், அவனைத் தாங்கியிருந்தாலும், நெகிழ்ந்து கொடுத்து அந்த மனிதனைக் கீழே தள்ளிவிடாத இயல்பைக் கொண்டது பஞ்சபூதங்களில் ஒன்றான நிலம்.
அதேபோல தன்னைக் காயப்படுத்தும் வார்த்தைகளால் ஒரு மனிதன் திட்டினால் கூட, அவனுடைய செயலைப் பொறுத்துக் கொள்வது என்பதே மனிதப் பண்பின் தலைசிறந்த நற்குணம் என்கிற வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தைப் பூக்களோடு யோசித்துப் பார்க்கையில், நாம் மனிதர்களாய் இருப்பதன் மேன்மையை நன்குணர முடியும்.
அந்த மேன்மையை நோக்கி நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம்.
இடையில் தட்டுப்படுகிற பொறாமை, கோபம், அழுகை, ஆத்திரம், வஞ்சகம், நன்றியுணர்ச்சி, நேசம், காதல், அன்பு என்கிற எல்லாவிதமான உணர்வுகளையும் இதயத்திலும், புத்தியிலுமாகச் சுமந்தபடி நாம் மெல்ல மெல்ல நடைபோடுகையில்தான் நம் முயற்சிகளும், வாழ்தலும் பூரணத்துவப்படுகிறது என்று சொல்லலாம்.
அதனை முழுமைப்படுத்தும் முயற்சிகள் கொண்ட மனிதர்களை இன்றைய யதார்த்த வாழ்க்கையில் காண்பது மிக அரிது. எனினும், அத்தகைய மகத்தான முயற்சியாளர்களும் நம்மிடையே வாழ்ந்து வருவதை நாம் அவ்வப்போது பார்க்கவே செய்கிறோம் என்பதை நினைக்கையில், வாழ்க்கையின் மீதொரு நம்பிக்கையும், பெருமிதமும் தோன்றுகிறது.
அப்படியான முயற்சியாளர்களில் ஒருவரான செல்வி சங்கம்பட்டி சரசு அவர்களின் வாழ்வியலை இம்மாதம் பீனிக்ஸ் மனிதர்கள் பகுதியில் வாசிக்க வாருங்கள்.
கவிஞர் சங்கம்பட்டி சரசு – திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் வாழ்ந்து வருகிற ஒரு கிராமத்துக் குடியானவரின் குடும்பத்தில் மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்தவர். இந்தத் தவழும் நிலைகொண்ட மாற்றுத் திறனாளிப் பெண் தனது வாழ்க்கையில் சந்திக்காத சோதனைகள் இல்லை.
ஆனாலும், தன்னுடைய வைராக்கியத்தால், நம்பிக்கையால், முயற்சிகளால், போராடும் குணத்தால் மெல்லக் கையூன்றி, ஆணிவேர் வளர்த்து, விழுதுகளோடு உயர்ந்து நிற்கும் ஆலமரம் போலக் காட்சியளிக்கிறார். கவிதாயினி, சமூக ஆர்வலர், மாற்றுத் திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்குப் பாடுபடும் உதாரண மனுஷி, பிரபலங்களின் செல்லப்பிள்ளை என பல்வேறு அடைமொழிகளால் இன்றைக்கு உலகம் இவரை அடையாளிக்கிறது.
இந்தப் பெருமைகளுடன்கூடிய சங்கம்பட்டி சரசு அவர்களின் வாழ்க்கை. இதோ உங்கள் கையில்…
- உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தினர் பற்றியும் சொல்லுங்கள்..?
என் பெயர் சரசு, நான் 1982 ஆம் ஆண்டு மார்ச் 26 -ஆம் தேதி பிறந்தேன். திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சங்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன்.
நான் பிறக்கும்போது நன்றாகத்தான் பிறந்தேன். மூன்று வருடம் பட்டாம்பூச்சி போல சுற்றித் திரிந்தேன்.. எனது போதாத காலம் மூன்று வயதில் போலியோ நோயால் என் இரண்டு கால்களும் முடமாகி விட்டது.
என் தந்தை பெயர் சி.பெருமாள். தாயார் பெயர் பெ.பாப்பாத்தி. இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர்.எனக்கு இரண்டு அக்காக்கள் இருக்கின்றனர். முதல் அக்காவின் பெயர் தேவி. இரண்டாவது அக்காவின் பெயர் விஜயலட்சுமி. இருவருக்கும் திருமணமாகி விட்டது. எனது முதல் அக்காவின் கணவர் இறந்து விட்டார். அவர்தான் இப்போது என்னையும் என் பெற்றோரையும் பார்த்துக் கொள்கிறார்.
- ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில், மூன்றாவது பெண் குழந்தையாய் பிறந்ததற்காகவே பல்வேறு சோதனைகளைச் சந்தித்தவர் நீங்கள். அதுபற்றி வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்..?
ஆண் பிள்ளை மோகம் எல்லாப் பெற்றோருக்கும் உண்டு. ஆகையால், நான் மூன்றாவது பெண் பிள்ளை என்பதற்காக என் தந்தை ஆறு மாத காலம் என்னை தூக்கவே இல்லையாம். அதன்பிறகு நான் அவரைப் பார்த்து சிரித்த பிறகுதான் என்னைத் தூக்கினார் என்று என் அம்மா சொன்னார்.
நான் பிறந்த காலகட்டம் வறுமை சீர்தூக்கி நின்றது. நான் பிறந்ததினால்தான் அந்நிலை என்றெண்ணி என் தந்தை என் தாயை வெறுக்க, “இது இருந்தா இருக்கு.. செத்தா சாகுது” என்று 17 நாள் குழந்தையான என்னை சுடுகாட்டில் தொட்டில் கட்டி தூங்க வைத்து விட்டு, ஐம்பது பைசாவுக்கு அந்தி வேலை செய்தார் என் அம்மா. அந்த வெறுப்பே என் வாழ்வை முடமாக்கி விட்டது.
என் தந்தையின் தந்தையான என் தாத்தா சிக்கக்கவுண்டர் தான் எனக்கு சரசு என்று பெயர் வைத்தார். நான் 7 மாத குழந்தையாக இருக்கும்போது, என் தாத்தா இறந்து விட்டார்.
அப்போதெல்லாம் எனக்கு விவரம் தெரியாது என்று நினைத்தபடி, என் முன்னே இதையெல்லாம் பிறரிடம் என் அம்மா சொன்னபோதுதான் என் மனதில் ஒரு தாக்கம் ஏற்பட்டது. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் என் பிஞ்சு மனதில் பதிந்தது. ஐந்து வயதில் என் தாத்தா வைத்த பெயருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற அந்த வேள்விதான் இன்று என்னை சங்கம்பட்டி சரசுவாக வளர்த்திருக்கிறது. அந்தவகையில் என் தாத்தாதான் இன்றும் என்னுடைய மானசீக குரு.
- உங்கள் உடற்குறை பற்றியும், அதனால் தொலைந்து போன உங்களின் கல்வி முயற்சிகள் பற்றியும் சொல்லுங்கள்..?
இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் என்னால் முட்டி போட்டுதான் நடக்கமுடியும். என் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். அவ்வளவுதான் என் ஊரில் பள்ளியும் உள்ளது என்பதால், என் படிப்பும் அத்தோடு நின்றுபோனது.
நான்காம் வகுப்பு வரை என் அம்மாவும், அக்காவும் இடுப்பிலும், முதுகிலும் தூக்கிச் சென்று பள்ளியில் விடுவார்கள். அதன் பிறகு நண்பர்களின் உதவியோடு மூன்று சக்கர சைக்கிளில் சென்று எட்டாம் வகுப்பு வரை படித்தேன்.
மேற்படிப்புக்காக நான் விடுதியில் தங்கிப் படிக்கிறேன் என்றும், என்னை பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்றும் கேட்டபோது, அதெல்லாம் வேண்டாம் என்றும், நீ வீட்டிலேயே இரு என்றும் சொல்லி விட்டார்கள் என் பெற்றோர்கள்.
அதனாலேயே என் மனதில் இன்றளவும் எனது ஊரின் பள்ளிக்கூடமே கோவிலாகக் காட்சி தருகிறது. இப்பள்ளி மட்டும் இல்லையென்றால் கல்வியென்பதே எனக்கு இல்லாமல் போயிருக்கும். அப்படிப்பட்ட பள்ளியில் இன்றும் ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் இப்பள்ளியில் கவிதை வாசிப்பதால் மிகுந்த ஆனந்தமடைகிறேன்.
- நீங்கள் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தும், ஒரு தையற்கலைஞராகவும், தையல் ஆசிரியையாகவும் செயலாற்றி வருகிறீர்கள். அதற்கான வாய்ப்புகள் எப்படி அமைந்தது..?
நான் கல்வி முடித்த வருடம் என் முதல் அக்கா இரண்டு பெண் குழந்தைகளோடு வீடு வந்த தருணமாக அமைந்துபோனது. அக்குழந்தைகளை வளர்ப்பதில் 7 வருடம் கழிந்தது. அதன் பிறகு 8 வருடம்வரை குடிசைத் தொழிலாக ஒயர் கூடைகள் போட்டேன்.
அதன் பிறகு தஞ்சை மாவட்டம் திருவையாறில் என் அண்ணனும், அண்ணியும் புட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். அவ்வூரிலுள்ள என் தோழியான மீனாவிடம், “நான் தையல் கற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டபோது ஜமுனா ராணி என்கிற தையல் ஆசிரியையை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
ஜமுனா ராணி அக்காவிடம் கேட்டபோது, “கையால் சுத்துகின்ற தையல் மிஷினை வாங்கிக் கொண்டு வா! நான் உனக்கு தையல் கற்றுத் தருகிறேன்!” என்று சொன்னார். என் பெற்றோரிடம் வந்து சொன்ன போது, “நீ சம்பாதித்துதான் நாங்கள் சாப்பிடப் போறோமா?” என்று முட்டுக்கட்டை போட்டுவிட்டனர்
அன்று துணிந்தேன்.. என் இரு அக்காக்களிடமும் கடன் வாங்கினேன்.. அந்த வலி வெறியாக மாறி, 70வது நாளில் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தேன். என் ஆசிரியரே வியக்கும்படி இன்றைக்கு நான் தையல் ஆசிரியராக இருந்து, 5 வருடத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளேன். என் தொழில் வளர்ச்சிக்கு என் அண்ணன் உறுதுணையாக
இருந்திருக்கிறார்.
- உங்கள் எண்ணங்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்தி, வெற்றி அடைந்திருக்கிறீர்கள். அந்த எழுத்தார்வம் தோன்றிய விதத்தைச் சொல்லுங்களேன்..?
அன்றைய நாட்களில் கூடை போட்டுக்கொண்டே கோடைப் பண்பலை கேட்பதுதான் என் பொழுதுபோக்கு. அப்பொழுதெல்லாம் நல்ல ஒரு நண்பனாக விளங்கியது கோடைப் பண்பலை. சமூகம் கொடுத்த சங்கடமும், சாடிய வார்த்தைகளும், என்னைச் சுற்றி நடந்த நிகழ்வுகளும்தான் கவிதை எழுதத் தூண்டியது.. வலிகளை வரிகளாக்கினேன்..
என் எண்ணத்தில் விளைந்தவை சரியோ, தவறோ எனக்குத் தெரியாது. தோன்றியதை எழுதினேன்.. அவ்வளவுதான்.. என் நண்பன் சிவா படித்துவிட்டு, “நல்லா எழுதியிருக்கீங்க அக்கா. தொடர்ந்து எழுதுங்க!” என்று ஊக்கமளித்தான்
நான் இலக்கியமும் படிக்கவில்லை.. இதிகாசமும் படிக்கவில்லை.. வரலாறும் படிக்கவில்லை.. மனதில் தோன்றியதையே கவிதையாக எழுதினேன்.
- நீங்கள் பத்தாண்டுகள் முன்பு “கவியோடு வருகிறேன்” என்கிற கவிதை நூலை வெளியிட்ட அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..?
எங்கள் ஊர் பள்ளியில் 60 ஆம் ஆண்டு விழா நடந்தது. அதற்கு எங்கள் ஊரைச் சார்ந்த கப்பல் கவிஞர் திரு கி.கிருஷ்ணமூர்த்தி ஐயா வந்திருந்தார். அவரிடம் என் கவிதைகள் சிலவற்றை என் மாமா சி.குப்புசாமி கொடுத்திருந்தார். ஐயா அவர்கள் அதைப் படித்து விட்டு, “நல்லா இருக்கு. இதிலேருந்து நல்ல கவிதைகளை தேர்வு செய்து எனக்கு அனுப்பி வை. ஒரு புத்தகமாகப் போடலாம்” என்று எனக்கு கடிதம் எழுதினார்.
அதன்படி நான் கவிதைகள் மட்டும்தான் கொடுத்தேன். அதற்கு என்ன செலவானது? எப்படி அச்சிடப்பட்டது? என்கிற எதுவுமே எனக்குத் தெரியாது.. ஹோட்டல் ஃபெமினாவில் 4.2.2012 அன்று திரு க.ப.அறவாணன் அவர்களின் கரங்களால் “கவியோடு வருகிறேன் என்னும் புத்தகமாக வெளியானது.
சாதாரண சரசுவாக இருந்த என்னை, சங்கம்பட்டி சரசுவாக கவிதை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் கப்பல் கவிஞர் திரு கி.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள். என் வாழ்வில் ஒளியேற்றிய தெய்வமான அவருக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. ஆனாலும், என் உயிருள்ளவரை உள்ளத்தில் பூசிப்பதுதான் நன்றியாகும்.
- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள நல்லதொரு படைப்பாளி நீங்கள். அந்தக் கவிதையை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளுங்களேன்? பெண் சிசுவின் கேள்வி?
என் கண்களைக் காண
சூரியன் காத்திருக்க…
என் புருவத்தைக் காண
வானவில் காத்திருக்க…
என் கூந்தலைக் காண
கார்மேகம் காத்திருக்க…
என் கொஞ்சும் குரலைக் கேட்க
குயில்கள் காத்திருக்க…
என் பாதச்சுவடு பதிய
பூமித்தாய் காத்திருக்க…
என் மூச்சுக் காற்றைச் சுவாசிக்க
தென்றல் காத்திருக்க…
என் பிஞ்சு உருவத்தை காண
இவ்வுலகமே காத்திருக்க…
ஏனம்மா என்னைக்
காற்றில் கரைந்த கற்பூரம் மாதிரிக்
கருவிலேயே அழிக்கத் துடிக்கின்றாய்?
- எழுத்து மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்சார்ந்த சமுதாயப் பணிகள் என்று இரட்டை முகங்கொண்டு வெற்றியாளராக வலம் வருகிறீர்கள். அந்தவகையில், நீங்கள் பெற்றுள்ள அங்கீகாரங்களையும், பங்கேற்றுள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலி, பத்திரிகைச் செய்திகள் பற்றியும் சொல்லுங்கள்…?
என் கவிதைகள் என்னைக் குன்றின் மீது அமர வைத்து மக்களின் பார்வைக்கு கொண்டுசென்றது என்று சொல்வேன். அதனைத் தொடர்ந்து என்னைப்போன்ற சக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காக நான் மேற்கொண்ட சில முயற்சிகள் பெரிதும் பயனளிக்க, அதற்காகவும் சில அங்கீகாரங்கள் கிடைத்தன. அவற்றையும் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்..
படைப்பாளுமைக்காக…
8.3.2012 அன்று திருச்சி பெண்கள் நல சங்கம் “கவிமகள்” என்கிற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
14.2.2012 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட நிதிக்குழுவின் சார்பில் ரூ 5,000 பரிசு பெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜெய முரளிதரன் அவர்கள் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு சிவபதி அவர்கள் இதற்கான காசோலையையும், “சிந்தனைப் பேரொளி” என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார்.
திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரியில் 6.3.2014 அன்று “தன்னம்பிக்கைச் சுடர்” என்ற பட்டத்தை கல்லூரி நிறுவனர் திருமதி உமா அருண் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.
கல்லூரிக் கதவைக் கூட தொடாத என்னுடைய கவிதை பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியில் (தன்னாய்வுத் துறை) 2018 & -2019 கல்வியாண்டிற்கான தமிழ்ப் பாட நூலில் இடம் பெற்றுள்ளது எனக்கு பெரிய அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது.
8.4.2014 ல் “கொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேநீர்” என்கிற தலைப்பில் பாடலாசிரியர் திரு பிறைசூடன் அவர்களின் தலைமையில் பொதிகை தொலைக் காட்சியில் கவிதை வாசித்துள்ளேன்.
திருச்சி ஆல் இந்திய ரேடியோவில் 1.5.2012 அன்று எனது தனித்திறமையாக கவிதை வாசித்துள்ளேன்.
நம்பிக்கை வாசல், பொதிகை மின்னல், உரத்த சிந்தனை, இனிய நந்தவனம், உதவிக்கரம், இலக்கிய வாசல் போன்ற இதழ்களில் என் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
மாற்றுத்திறனாளி நலன் சார்ந்தவை…
மே 2015ல் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்கள் குறித்து பொதிகைத் தொலைக் காட்சியில் நேர்முகம் செய்தனர்.
நாங்கள் நடத்திவருகிற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சுய உதவிக்குழு குறித்து 12.12.2018ல் திருச்சி ஆல் இந்திய ரேடியோவில் பேசியுள்ளேன்.
தினமணி, தினத்தந்தி, தினமலர், தி இந்து தமிழ், மாலை மலர், மாலை முரசு போன்ற செய்தித் தாள்களிலும் எனது சமுதாயச் செயல்பாடுகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
இப்படியான நல்ல நல்ல அங்கீகாரங்களை எனது கவிதைகளும், சமுதாயம் சார்ந்த செயல்பாடுகளும் எனக்குத் தந்திருப்பதை நினைக்கையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், இந்தப் பாராட்டுகளும், நம்பிக்கை வார்த்தைகளும் எங்களது அடுத்தகட்ட முயற்சிகளுக்கும் ஊக்கமாக அமைகின்றன.
- சக மாற்றுத்திறனாளிகளை முன்னேறச் செய்யும் அக்கறையோடு, உங்கள் பகுதியில் “மாற்றுத்திறனாளி சுய உதவிக்குழு” நடத்தி வருகிறீர்கள். அதுபற்றி..?
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் (வி.பி.ஆர்.சி) கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் (சி.டி.எப்) உள்ளது. அந்த அமைப்பின் சார்பில் “சமுதாய மாற்றுத்திறனாளி பயிற்றுனர்” என்ற பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்விளைவாக “தமிழமுது” என்கிற சிறப்பு சுய உதவிக் குழுவை 1.1.2015ல் 12 உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பித்தோம். எங்கள் குழுவில் மாத சேமிப்பு ரூ 100 என்றும், வங்கியின் நடைமுறைச் செலவுகளுக்காக சந்தா ரூ 10 என்றும் அமைத்துக்கொண்டு வங்கியில் வரவு & செலவு செய்து வருகிறோம்.ஆரம்பத்தில், இருக்கும் வேலைகளுக்கிடையில் இது சுமையாகத் தெரிந்தது.
ஆனால், 2015ல் குழு தொடங்கிய மூன்று மாதங்களில் எங்கள் மாற்றுத்திறனாளி உறுப்பினர் திரு வே.மாதவன் என்பவர் சோப்பு வியாபாரம் செய்வதற்கு முயற்சித்தார். அவர் பெற்றோரிடம் பொருளாதார உதவி கிடைக்காததால், எங்கள் குழுவில் பணம் கேட்டார்.. அதன்படி, ரூ 5,000 கொடுத்தோம். அதன்விளைவாக இன்று அவர் 5,00,000 லட்சம் முதலீடு போடும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
மாற்றுத்திறனாளியின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு குழு எவ்வளவு நன்மை தருகின்றது என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன். இது தவிர, ஒரு மாற்றுத்திறனாளியை இணைத்தவுடன் யாரையும் எதிர்பார்க்காமல் உடனடிக் குழுவில் கடன், குறைந்த வட்டியில் வங்கிக் கடன் ஆகியவை பெற்றுப் பயன் பெறுகிறோம்.
- மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து வழி நடத்தும்போது, என்னென்ன மாதிரியான அனுபவங்களைப் பெறுகிறீர்கள்? அவற்றில் ஒரு சிலவற்றை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..?
அரசாங்கத் திட்டத்தை பற்றியும், அதற்கான செயல் முறைகளைப் பற்றியும் சொல்வதற்கு, பல சிரமங்களுக்கு இடையில் சங்கத் தலைவர்களை ஒன்றிணைத்து கூட்டம் போட்டால், “என்ன தருவார்கள்?” என்கிற கேள்வியைத்தான் என்னிடம் முதலில் கேட்பார்கள்.
“பாம்பின் கால் பாம்பறியும்” என்கிற மாதிரி அவர்களின் சிரமமறிந்து வலியப்போய் உதவினால் கூட ஒத்துழைப்பு தரமாட்டார்கள்.
எதிர்பார்ப்போடு வாழ்கின்ற அவர்களுக்காக எதையும் எதிர்பார்க்காமல் உதவுவது என்பது, மேட்டிற்கும் பள்ளத்திற்கும் இழுப்பது போலானது. அவர்களை மேட்டிற்குக் கொண்டு வருவது எளிதான காரியமல்ல.. அவர்களை சகிப்புத் தன்மையால்தான் கையாள வேண்டும். வேறு வழியில்லை.
- ஒவ்வொருவரின் வாழ்விலும் திருப்புமுனையாக சில மனிதர்கள் வாய்ப்பதுண்டு. உங்களுக்கு வாய்த்த அப்படியான மனிதர்கள் பற்றி..?
அண்ணன் ஏகலைவன் மூலமாக சென்னை மாதா ட்ரஸ்ட் நிறுவனர் வி.கிருஷ்ணமூர்த்தி அப்பா அவர்கள் அறிமுகமானார். என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வமான அவரின் அறிமுகம் என் பூர்வஜென்ம புண்ணியமாகும்.
அப்பாவின் உதவியோடும், இன்னும் சில நல்ல உள்ளங்களின் உதவியோடும் எங்கள் ஊரிலுள்ள அம்மா & அப்பா இல்லாத மூன்று பெண் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன். எனக்கும் அப்பா நிறைய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்.
செந்தமிழ்ப் பேச்சாளர் திரு. சாலமன் பாப்பையா ஐயாவின் அறிமுகம் கிடைத்தது நான் பெற்ற வரமாகும். இன்றைக்கும் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கொண்டிருக்கிறேன்.
அதேபோல சொல்வேந்தர் சுகிசிவம் ஐயா, கலைமாமணி லேனா தமிழ்வாணன் ஐயா, அமரர் நடிகர் அலெக்ஸ் ஐயா போன்ற பல பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது தமிழும், என் முயற்சிகளும் தந்த வாய்ப்புதானென்று சொல்வேன்.
- சிறு வயதிலேயே ஒரு தவழும் நிலைகொண்ட மாற்றுத்திறனாளியான பிறகும்கூட, ஓயாது முயற்சித்து கவிஞர், தையல் ஆசிரியை, மாற்றுத்திறனாளிகளின் நல விரும்பி, பிரபலங்களின் அன்புக்குரியவர், விருதுகள் பெற்ற நம்பிக்கையாளர் என வளர்ந்து நிற்கிறீர்கள்.. இந்த வளர்ச்சிக்கான முனைப்பும் நம்பிக்கையும் எப்படி வாய்த்தது..?
உன்னால் இது முடியாது.. அது முடியாது.. என்றெல்லாம் யாரேனும் சொல்லி விட்டால், முயற்சித்துப் பார்ப்போம் என்று எண்ணாமல், எப்பாடுபட்டாவது அதை முடித்துக் காட்ட வேண்டும் என்கிற கர்வம் கொள்வேன்.
நம்மால் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு எதையும் துணிந்து செய்வேன்.. உழைக்கணும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் வேறூன்றி உயிரில் கலந்த ஒன்றாகும். உலகம் என்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்று எப்போதும் நினைப்பேன்.
எந்த வேலையையும் பிறர் சொல்லி நான் செய்ததில்லை. நானே பிரியப்பட்டுதான் செய்வேன்.. அதுதான் என் வெற்றியின் ரகசியம்.. நாம் ஒரு மாற்றுத்திறனாளி என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை என்பதுவும் என் முயற்சிகளில் குறிப்பிடத்தக்கது.
- மாற்றுத்திறனாளிகள் சார்பாக இந்த சமுதாயத்திடம் உங்கள் வேண்டுகோள்கள்..?
பெரும்பாலான வீடுகளில் அரசாங்கம் வழங்கும் ஆயிரம் ரூபாயில்தான் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
உன்னால் எதுவும் முடியாதென்று அவர்களின் வாழ்க்கையை முடமாக்காமல், அவர்களின் உடற்திறன் எந்த அளவிற்குச் செயல்படுகிறதோ, அதற்கேற்ப அவர்களுக்கு வாழ்வை ஏற்படுத்திச் சமவுரிமை கொடுங்கள்.
பருவம் தரும் பாடமான அழகை ஆராதிப்பார்கள்.. அன்பை வரவேற்பார்கள்.. வாழ்க்கையென்கிற போதுதான் நழுவி விடுவார்கள்.. எனவே, எச்சரிக்கையாக இருங்கள் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கான எனது ஆலோசனையாகும்.. தங்களது உரிமைகளுக்காக ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் தனித்தனியாகப் போராடாமல், சங்கத்தில் இணைந்து அல்லது குழுவாக அமைந்து அல்லது நல்லதொரு அமைப்புகளோடு சார்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதுதான் எனது வேண்டுகோள்.
- இந்த கொரோனா காலத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்தித்திருக்கிற சிக்கல்கள் என்னென்ன? நீங்களறிந்தவற்றைச்
சொல்லுங்கள்?
வாழ்க்கையில் போராட்டம் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், போராட்டம் மட்டும்தான் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையாகவும் இருக்கிறது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
கொரோனா உலகத்தையே முடக்கி விட்டது என்றாலும், இக்காலகட்டத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே சவாலாக இருக்கும்போது, திருமணமான மாற்றுத்திறனாளி தொழில் பாதிக்கப்பட்டதால், பொருளாதாரம் இல்லாததால் குடும்பத்தை வழிநடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். உடலோடும் போராடும் நாங்கள்.. பொருளாதாரம் இல்லாமலும் போராடியதுதான் சிக்கலிலும் மிகச்சிக்கலானது.
ஏற்கனவே, வீடும், சமூகமும் பாகுபாடு காட்டிவரும் இந்த சூழ்நிலையில், அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ளமுடியாமல் தவித்தனர். குறிப்பாக, குக்கிராமங்களில் வாழ்கின்ற பெண் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திரப் பிரச்சினையின் தேவையான இன்னருக்கும், நாப்கினுக்கும் கூட கஷ்டப்படுவதுதான் மிக வேதனையான விஷயமாகும்.
ஆனால், அடிக்கடி கையைக் கழுவவும், கட்டாயம் முகக்கவசம் போட வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் என்றெல்லாம் சொன்ன அரசாங்கத்துக்கு இந்த அவஸ்தைகளெல்லாம் தெரிய வந்தால் மகிழ்ச்சி.
- இளம் வயதுக்குள் நிறைய விஷயங்களைச் சாதித்திருக்கிறீர்கள். உங்களின் எதிர்காலக் கனவுகள் பற்றி..?
நான் செய்து கொண்டிருக்கும் பணிகளை இன்னும் திறம்பட செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. இடைவெளியான என் கவிதைப் பயணத்தை மீண்டும் தொடரவேண்டும்..
என்னால் முடிந்த அளவிற்கு என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன தேவையோ, அதைச் செய்து கொண்டே இருக்கவேண்டும்.. என்னிடம் தையற்கலையைக் கற்றுக்கொண்ட மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தொழிற்பயிற்சி மையம் அமைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்வதுதான் என் எதிர்காலக் கனவாகும்.
இன்னுமொரு ஆசையிருக்கிறது.. அதையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.. ஒருமுறை கோடைப் பண்பலை நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்று, எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். செல்வி சங்கம்பட்டிச்சரசு அவர்களுடைய கனவுகளும், எண்ணங்களும் நிறைவேற ‘ஆளுமைச் சிற்பி’ மனதார வாழ்த்துகின்றது. =
இவரை வாழ்த்த,
செல்வி சங்கம்பட்டி சரசு, துறையூர்
கைபேசி எண்: 76959 04067
நேர்காணல்: கவிஞர் திரு.ஏகலைவன்