அழகுக்கலை நிபுணர் –
சின்னா மேன்பவர் கன்சல்டன்சி
இயக்குநர் திருமதி P.V.லஷ்மி அவர்களுடன் ஒரு நேர்காணல்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால், அகமே அழகாக இருந்தால், செய்யும் அனைத்திலும் வெற்றி பெறலாம் என்று ஈடுபாட்டுடனும் தன்னம்பிக்கையுடனும் உயர்ந்திருக்கிறார் அழகுக்கலை நிபுணர் திருமதி P.V.லஷ்மி.
சென்னை அம்பத்தூர் பகுதியை சார்ந்த இவர், அழகுக்கலை நிபுணர், ஆன்லைன் தொழில் முனைவோர், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இயக்குநர் என பன்முகம் கொண்ட சாதனையாளராக வலம் வருகிறார்.
“மங்கையராய்ப் பிறப்பதற்கே
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”
என்று சொன்ன பாரதியாரின் வார்த்தைகள் போல, தன் வாழ்க்கையை அர்த்தமுள்ள சாதனைப் பயணமாக அமைத்துக்கொண்ட இனிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் P.V.லஷ்மி….
உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்..?
எனது பெயர் P.V.லஷ்மி. எனது கணவர் பார்த்திபன், துபாயில் வாழும் மூத்த மகன் பிரேம்குமார், மருமகள் திருமதி ரவீணா பிரேம்குமார், பேரன் ஜியான் மற்றும் கனடாவில் கல்விபயிலும் இளைய மகன் அருண்குமார் என அழகான குடும்பம் எங்களுடையது. ராணிப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட நான், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது தந்தைதான் முதல் ஹீரோ என்பதைப்போல என் தந்தையிடமிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்ட எனக்கு, ஒரு சராசரி பெண்மணியாக வாழ்வதைத் தாண்டி, இந்த உலகத்திற்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் எனும் எண்ணம் சிறுவயது முதலே ஏற்பட்டிருந்தது.
அதன் விளைவாக, 14 வருடங்கள் அழகுக்கலை நிறுவனம் நடத்திய பின், ஆன்லைன் மூலமாக புடவை, சல்வார், ருத்ராட்சம் போன்றவை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கூடுதலாக தற்போது, சின்னா மேன்பவர் கன்சல்டன்சி எனும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இயக்குனராக செயலாற்றி வருகிறேன்.
குடும்பத்தை கவனித்துக் கொள்வதோடு, இந்த உழைப்பின் மூலமாக பெறும் வருமானத்தின் ஒருபகுதியை சமூக சேவைக்காக பயன்படுத்துவதில், மனநிறைவுடன், தன்னம்பிக்கையையும் பெறுகிறேன்..
நீங்கள் அழகுக்கலை தொழிலுக்குள் வந்தது எப்படி?
பொதுவாக ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை நம் உடையும், அலங்காரமும் தான் தெரிவிக்கும். எனவே, நம்மை நாம் எந்த அளவுக்கு வெளிப்படுத்துகிறோம் என்பது முக்கியம். அந்த வகையில் என்னை நான் அழகாக வெளிப்படுத்தி கொள்வதாக என் தோழிகள் சொல்வார்கள். அதையே நாம் ஏன் மற்றவர்களுக்கும் சொல்லித்தர கூடாது என்ற எண்ணத்தில் உதித்தது தான் “பிரேமிஸ் பியூட்டி பார்லர்” என்கிற எனது அழகுக்கலை நிறுவனம்.
எங்கள் நிறுவனத்தின் மூலமாக எண்ணற்ற பெண்களை அழகாக்கி அவர்களின் சுய மதிப்பை அதிகமாக்கியதுடன், பல ஏழ்மை நிலை கொண்ட பெண்களுக்கு சொல்லித்தந்து அவர்களையும் வளரும் தொழிலதிபர்களாக்கியிருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.
அழகுக்கலை தொழிலில் உங்கள் தனித்துவம்?
பக்கவிளைவுகள் எதுவுமில்லாத அழகுக்கலையே எனது தனித்துவம். பழகுகிற மனிதர்களிடம் பாசிட்டிவ்வான விஷயங்களை பகிர்ந்து கொண்டு நல்ல உறவை மேம்படுத்தி கொள்வதாலேயே பல ஆண்டுகளாக இந்த அழகுக்கலை தொழிலில் நிலைத்து நிற்க முடிந்தது.
சின்னா கன்சல்டன்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது?
கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த காலத்தில் எத்தனையோ பேர் வேலை இழந்ததை அறிந்து மனம் வருத்தப்பட்டேன். பெரும் தொற்று பாதிப்பால் பாதிப்படைவோர் ஒரு பக்கம், வேலையில்லாமல் தவிக்கும் மக்கள் ஒரு பக்கம் என்கிற மக்களின் நிலையை பார்த்துதான் சின்னா கன்சல்டன்சி வேலைவாய்ப்பு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
சின்னா கன்சல்டன்ஸி மூலமாக தாங்கள் செய்துவரும் பணிகள் என்னென்ன?
வேலைக்கு ஆட்களை தேடும் நிறுவனங்கள் ஒருபுறம், திறமைக்கேற்ற வேலை தேடும் இளைஞர்கள் மறுபுறம் என இந்த இருவருக்கும் இடையில் பாலமாக இருந்து இளைஞர்களுக்கான சரியான வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது தான் எங்கள் தலையாய பணி. www.chinnah.com என்ற எங்களது இணையதளத்தில் வேலை தேடுவோரும் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல வேலைக்கு ஆட்களை தேடும் நிறுவனங்களும் தங்கள் தேவைகளை பதிவு செய்துகொள்ளலாம்.
ஜாப் போர்ட்டல் என்கிற இந்த முறையின் மூலமாக, நிறுவனத்திற்கும், வேலை தேடுவோருக்கும் நேரடியான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து, பலருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிறோம்.
மிக முக்கியமான செய்தியாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், எங்களுடைய கன்சல்டன்ஸியில் வேலை தேடி பதிவு செய்யும் இளைஞர்களிடம் நாங்கள் எந்தத் தொகையும் பெறுவதில்லை. மாறாக, எங்கள் நிறுவனத்தின் மூலம் இளைஞர்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே எங்கள் பணிக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.
சின்னா கன்சல்டன்ஸியின் எதிர்காலத்திட்டம் என்ன?
எங்களுடைய நிறுவனத்தின் மூலமாக எண்ணற்ற இளைஞர்கள் இப்போது வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இந்த பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். மேலும், நல்ல சம்பளத்தில் வேலை தேவை என்றாலே வெளிநாட்டுக்குச் செல்லும் நிலைமை மாறி, திறமையிருந்தால் நம் நாட்டிலேயே நல்ல ஊதியத்தைப் பெறலாம் என்பதை நிரூபிக்கும் விதமாக எல்லோருக்கும் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பை இங்கேயே பெற்றுத்தர வேண்டும் என்பதே எங்களுடைய திட்டம்.
வேலை வழங்கும் நிறுவனங்கள் இளைஞர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
பல லட்சம் செலவுசெய்து ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதன்மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலை தரும் நிறுவனங்கள் தங்களிடம் வேலைக்கு வருவோரிடம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றன. அவையாவன –
இன்றைய இளைஞர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, அக்கறையுடன் நடந்து கொள்ளுதல்.
தன் தகுதிக்கேற்ற வேலையை எதிர்பார்க்காமல், கிடைத்த வேலையைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறும் மனநிலையைக் கொள்ளுதல்.
நேரத்தை விரயமாக்காமல் சரியாகப் பயன்படுத்தும் உணர்வை வளர்த்துக் கொள்ளுதல்.
அழகான உடையை சரியாக தேர்வு செய்து நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக உடை அணிதல்.
எந்த தடைகள் ஏற்பட்டாலும், நம்பிக்கை இழக்காமல் தனக்கான வாய்ப்பைத் தேடும் குணத்தை வளர்த்துக் கொள்ளுதல்.
ஒரு வேலை என்பது தனி மனித வளர்ச்சிக்கான வாய்ப்பு என நினைக்காமல், தன் குடும்பத்தையே வளர வைப்பதற்கான வாய்ப்பு என்பதை உணர்ந்து கொள்ளுதல்.
தனக்கு கிடைத்த அல்லது கிடைக்கப்போகும் வேலையை நேசிக்கப் பழகுதல்.
முக்கியமான தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் ரெஸ்பான்ஸிபிலிட்டியை வெளிப்படுத்துதல்.
இவையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான மிக முக்கியமான தகுதிகள் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
உங்கள் முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரங்கள், விருதுகள்?
எனது தொழில் துறை முயற்சிகளுக்காக பல்வேறு அமைப்புகள் பல விருதுகள் வழங்கி கெளரவித்திருந்தாலும், எனது வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி ஒன்றையே எனக்கு கிடைக்கும் அங்கீகாரமாகவும், விருதாகவும் நினைத்து தொடர்ந்து பயணிக்கிறேன்.
ஆன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையகத்தை நடத்தி வருவதாக சொல்லியிருந்தீர்கள். அதுபற்றி..?
எல்லாமே வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யும் காலமிது. அதனால் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே பார்லருக்கு வந்து எடுத்துக் கொள்ளும் அனைத்து பியூட்டிஷியன் சர்வீஸ்களையும், வீட்டுக்கே சென்று செய்யும் ஹோம் பார்லர், ஆன்லைன் சாரி + சுடிதார் விற்பனை, ருத்ராட்சம் உள்ளிட்ட ஆன்மீகப் பொருட்கள் விற்பனை என பெண்கள் சார்ந்து இயங்கி வரும் ஆன்லைன் நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறேன்.
இந்நேரத்தில் கூடுதல் தகவலாக..
ஒரு குடும்பத்தை எப்படி சரியாக நிர்வகிக்க வேண்டும் என்று என்னை உணரச்செய்த ஆச்சரியமான பெண்மணியான எனது மாமியார் திருமதி பிரேமகுமாரி அவர்களின் நினைவாகவே எங்கள் நிறுவனங்களுக்கு “பிரேமிஸ் பியூட்டி பார்லர்” “பிரேமிஸ் ஆன்லைன் கலெக்ஷன்” என்று பெயர்கள் சூட்டியிருக்கிறேன்.
உங்கள் அடுத்தடுத்த முயற்சிகள் பற்றி..?
தொழிலில் லாபம் பார்க்கும் மனிதர்களுக்கு மத்தியில், சகமனிதர்களின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்ப்பதே எனது இலக்கு. அத்தகைய சந்தோஷத்தை பலருக்கும் தரும் வகையில் எனது தொழில்களை தொடர்ந்து நடத்தி, இதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதுடன், பெண்களால் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்க வேண்டும் என்பதே எனது அடுத்தகட்ட முயற்சி என்று சொல்லலாம்.
உங்களிடமுள்ள மற்ற தனித்திறமைகள்?
பி.காம் பட்டதாரியான நான் அக்கவுண்ட்ஸ் துறையில் வேலை பார்த்திருக்கிறேன். சிறுவயது முதலே இந்தி படித்திருப்பதால், இந்தி ஆசிரியையாகவும் பணியாற்றி இருக்கிறேன். அதனைத்தொடர்ந்து பியூட்டி பார்லர், சாரி சேல்ஸ், மேன்பவர் ஏஜென்ஸி என்று பல வகையில் தொடர்ந்து இயங்கி வந்தாலும், இல்லத்தரசி என்கிற பொறுப்பையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதில்தான் எனக்கு எப்போதும் ஆனந்தம்.
பிடித்த, ஈடுபாடுள்ள, செய்ய விரும்புகிற மற்ற விஷயங்கள்?
வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒன்று கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி நாம் கற்றதைக் கொண்டு மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட தனித்துவமான விஷயங்களை கற்றுகொள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் எப்போதுமே எனக்கு தனி ஈடுபாடு உண்டு.
சமூக நலன் சார்ந்து தாங்களும், தங்கள் நிறுவனங்களும் செய்து வரக்கூடிய பணிகள் என்னென்ன?
சிறுவயது முதலே என் அப்பா M.கோபால் அவர்கள் தன்னிடம் உதவியென்று கேட்டுவந்த பலருக்கும் உதவும் விதமாக ஒருவேளை மட்டும் உதவிசெய்யாமல், தனக்குத் தெரிந்த இடங்களில் சொல்லிவைத்து அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதையும், நாளடைவில் அவர்கள் பொருளாதார ரீதியாக வளர்ந்தபிறகு எங்கள் அருகாமைப் பகுதியிலேயே நிலம் வாங்கச் செய்து, சொந்த வீட்டில் குடியேற ஆலோசனைகள் வழங்கி, வழிகாட்டியாக இருந்து பலரை வாழ்வித்திருக்கிறார்.
என் அப்பாவின் அத்தகைய நல்ல செயல்பாடுகளுக்கு பெருந்துணையாய் இருந்தவர் என் அம்மா G.வசந்தா அவர்கள்.
இவர்கள் இருவரிடமிருந்தும் பலப்பல நல்ல விஷயங்களை கற்றுக்கொண்ட நான், என் அப்பா செய்த மகத்தான செயல்களை அவரின் இறுதி ஊர்வலத்தில் பலரும் சொல்லக்கேட்டபோதுதான், இப்படித்தான் வாழவேண்டும் என உறுதியெடுத்துக் கொண்டேன்.
மேலும், தென்காசி அமர்சேவா சங்கத்தின் தலைவர் பத்ம ராமகிருஷ்ணன் ஐயா, பாலம் கலியாண சுந்தரம் ஐயா போன்றவர்களையெல்லாம் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்களெல்லாம் பல்லாயிரம் பேருக்கு உதவுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்.
அந்த வகையில், சேலத்திலுள்ள நம்பிக்கை வாசல் டிரஸ்ட் என்கிற அமைப்பின் மூலம் எண்ணற்ற நற்பணிகளை எங்கள் நிறுவனத்தின் வாயிலாக செய்து வருகிறோம். அந்த அமைப்பின் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச பிசியோதெரபி மையம் அமையநேர்ந்தபோது, அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து பொருளாதார உதவிகளைச் செய்ததுடன், இப்போதும் அந்த அமைப்பு செய்யக்கூடிய அனைத்துப் பணிகளிலும் துணைநின்று எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.
மேலும், இதற்கு முன்பாக சென்னையில் அமைந்துள்ள “சுமைதாங்கி டிரஸ்ட்” , “ஆனந்தம்” முதியோர் இல்லம், “கருணாலயம்” முதியோர் இல்லம் ஆகிய அமைப்புகளுக்கு சென்று இயன்ற பல்வேறு உதவிகளை தனிப்பட்ட முறையிலும் செய்திருக்கிறேன்.
உங்கள் எதிர்கால லட்சியம்?
இல்லத்தரசிகளாக இருக்கும் பல பெண்கள் தங்கள் திறமைகளை மறந்து, சமையலறைக்குள்ளேயே முடங்கி விடுகிறார்கள். அதைத் தாண்டி சாதிக்க முயற்சி செய்யும் பெண்களில் சிலர் வீட்டிலிருப்போரை மறந்து விடுகிறார்கள்.
இப்படியான மனநிலைக்கு செல்லாமல் வீட்டையும் சரியாக நிர்வாகம் செய்தபடி, தொழில் துறையிலும் சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அந்த லட்சியத்தை அடைய எனது கணவரும், குடும்பத்தாரும் உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதே பெருமிதமான விஷயம்.
சேலம், ‘நம்பிக்கை வாசல் டிரஸ்ட்’ போன்ற பல தொண்டு நிறுவனங்களுக்கு உதவி வருவதுடன், இளையோர் வேலை வாய்ப்புக்கும் வழிகாட்டியாகத் திகழும், சமூக சேவகர் திருமதி. P.V. லஷ்மி அவர்களை ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழ் வாழ்த்துகிறது. இக்கட்டுரையாக்கம் தந்த கவிஞர் ச.கோபிநாத் அவர்களுக்கும், கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.