வாழ்த்துக் கட்டுரை

மதுரை.ஆர்.கணேசன்

ஒவ்வொரு மனிதர்களிடமும் இருக்கும் உச்ச பட்ச ஆளுமை “..கல்வி..” மட்டுமே! ஆரம்பப் பள்ளி முதல் எல்லையில்லா கல்வி தாண்டியும் சமூகத்தில் மாணவர்கள் சந்திக்கும் ஒவ்வொன்றையும் படிப்பினையாக எடுத்துக் கொள்ளலாம்.

எதுவாயினும் கற்றுக் கொண்டதிலிருந்து தத்தம் திறமையை வெளிக்கொணர்ந்தால் சமூகத்தின் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிகளாக உயர்த்திப் பிடிக்கும்!

இதற்கு உதாரணமாக மதுரையில் “..குடிசை வாழ் குடும்பத்தை சேர்ந்த ஆறு மாணவக்குழுக்கள் குறுகிய காலத்தில் ஆறு குறும்படங்கள்..” இயக்கி சாதனை புரிந்திருக்கிறார்கள்.

இவர்களைப் போன்ற விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி மற்றும் பல்வேறு கலைகள் கற்பிக்கும் பணியில் மதுரையில் சக்தி – விடியல் தொண்டு நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

குடிசைப் பகுதியில் வாழும் மக்களின் வளர்ச்சியை மனதிற் கொண்டு குழந்தைகளின் உரிமைகள் நிலை நிறுத்துவது, அவர்களது வளர்ச்சிக்காக எட்டு குழந்தைகள் மேம்பாட்டு மையங்களையும் நடத்தி வருகிறது. 

குழந்தைகளின் உடல், மனம், சமூகம், மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களை நிறைவேற்றும் விதமாக புதுமையான நிகழ்வுகளையும் நடத்துகின்றன.

சக்தி விடியல் தொண்டு நிறுவனம் குழந்தைகள் உரிமைகள் இயக்கத்தின் ஒருபகுதியாக சிற்றலை வட்டம், நிழல் திரையரங்கம், ஆகிய அரங்கங்களின் வாயிலாக சமூகப் பகுப்பாய்வு செய்யும் திறன் மற்றும் ஊடகக் கல்வியும் வழங்கி வருகிறது.

அத்துடன் மாணவர்களுக்கு மின்னனு ஊடகம் தொடர்பான திறன்களை வளர்ப்பதற்காக ஊடகப் பயிற்சி மையத்தை துவக்கி, ஊடகம் குறித்த பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறது.

இதன் மூலம் குறும்படங்கள் தயாரிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு  கடந்த ஆண்டு இறுதியில் “..குறும்படங்கள் தயாரித்தல்..” பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் 9 முதல் 17 வயது வரையிலான 27 மாணவர்கள் ஆறுகுழுக்களாக பிரிந்து குறும்படங்கள் இயக்க ஆயுத்தமானார்கள்.

இணையவெளிப் பாதுகாப்பு, இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகுதல்,கொரோனா காலத்தில் அடித்தட்டு குடும்பங்களின் குழந்தைகளின் கல்வி பாதிப்பு, பாலின சமத்துவமின்மை, பெண் குழந்தை பருவ சவால், முன்னேற்றம் மற்றும் குழந்தைப் பருவத்திற்கான சவால்கள் வாய்ப்புகள் கொண்ட கருத்துக்கள் குறும்படங்களின் உள்ளடக்கமாக கொண்டு குறும்படங்களுக்கான கதையை தேர்ந்தெடுத்து அதற்கான திரைக்கதையை உருவாக்கினார்கள்.   

அதில் ‘‘எச்சரிக்கை, விபரீத விளையாட்டு, தொலைந்த கனவுகள், உயரே மிக உயரே, எனக்கான பருவம், பறந்து திரியும் பருவம் என்று பெயரிட்ட  தோராயமாக ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய ஆறு குறும்படங்களை இயக்கிய பள்ளி மாணவர்கள் இதற்கு “..கருப்புக் கையெழுத்து..” என்று பெயரிட்டு தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதத்தில் இந்த ஆறு குறும்படங்களையும் “..திரைப்பட இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..” வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார் இளம் வயதிலேயே படைப்பாளராக மாறிய குழந்தைகளைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..,

“…சினிமா பற்றி எனக்கு தெரியாத பல கருத்துக்களை இந்தச் சின்ன வயதில் மாணவர்கள் அறிந்துள்ளது வியப்பளிக்கிறது. இப்படங்கள் சர்வதேச தரத்தில் உள்ளன. இதனை உலக திரைப்பட விழாவிற்கு கொண்டு செல்ல வேண்டும்..” என்றார்.

மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்த சக்தி விடியல் தொண்டு நிறுவனத்தின் மேலான் இயக்குனர் ஜிம்ஜேசுதாஸ்…,

“…எங்களது தொண்டு நிறுவனம் கடந்த 28 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு 450 மாணவ மாணவியர்களுக்கு பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி பெறுவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தருகிறோம்.

இந்த மாணவர்கள் பள்ளி படிப்பு நேரம் முடித்து எங்களது தொண்டு நிறுவனத்திற்கு வந்ததும் அவர்களுக்கு டியுசன் எடுக்கப்படுகிறது, கூடவே கலை சம்பந்தமாக விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

கல்வி தவிர நாட்டுப்புறக் கலை, வீதிநாடகக் கலை, ஊடகப் பயிற்சி, கராத்தே சிலம்பம், தற்காப்பு கலை போன்றவைகள் வார விடுமுறை நாட்களில் கற்றுத் தரப்படுகிறது அத்துடன் மாணவர்களின் ஆளுமை மேம்பட தனித்திறன் வளர்ப்பதற்கும் பயிற்சிகள் கொடுக்கின்றோம்.

படிப்பு, வாழ்க்கைத்திறன், ஆற்றலை வெளிக்கொணரப் பயிற்சியும் மற்றும் சமூக சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கற்றுக் கொடுக்கிறோம்.

குறும்படங்கள் இயக்குவதற்கு கதை, திரைக்கதை, தொழில் நுட்பங்கள் மற்றும் ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற அனைத்தும் கற்றுக் கொடுக்கின்றோம்.

முதன் முறையாக 2010 ஆண்டில் குறும்படப் பயிற்சி பட்டறை மூலமாக 30 பேர், அடுத்து 2014 ஆண்டில் 30 பேர் கடந்த 2021 ஆண்டில் 27 பேர் பயிற்சி பட்டறை மூலமாகப் பயனடைந்துள்ளனர்.

எங்களிடமிருந்து கற்றுக் கொண்ட ஆயிரக்கணக்காண மாணவ மாணவியர்கள் பள்ளி, கல்லூரி படிப்பு முடித்து விட்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

அவர்களில் பலர் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகவும் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும், மருத்துவத் துறைகளில் மருந்தாளுனர் மற்றும் செவிலியர்களாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளனர்.

சக்தி விடியல் தொண்டு நிறுவனம் முதலில் தெருவோர குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் குடிசை பகுதி குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டோம்.

சமூகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிரச்னைக்குறிய குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கப் பெற வேண்டும் என்பதே எங்களது முதன்மையான நோக்கம்.

இதில் முக்கியமாக உயிர் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சி மற்றும் முன்னேற்றதிற்கான உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் பங்கேற்பு உரிமை போன்ற நான்கு வகை உரிமைகள் குழந்தைகள் கிடைக்க பெறுவதற்கு சக்தி விடியல் தொண்டு நிறுவனம் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

அதன் பலனாக எங்களிடமிருந்து கல்வி மற்றும் பல்வேறு கலை கற்றுக் கொண்ட மாணவ மாணவியர்கள் இன்று நல்ல நிலைமையில் உயர்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது ரொம்பவும் சந்தோசமாகவும் உள்ளது.

அதிலும் எங்களது மாணவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்களாகவும், சமூக அக்கறை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பெருமையாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது…” 

மாணவச் செல்வங்களைச் சிறந்த ஊடகக் கலைஞர்களாக மாற்றும் ‘சக்தி விடியல்’ தொண்டு நிறுவனத்துக்கு ‘ஆளுமைச் சிற்பி’யின் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள். 