வெள்ளோட்டம் வெல்லட்டும் – 3
இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு
வானில் பறக்கும் விமானத்தின் எஞ்சின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கடல்நீரைத்தேடி அலைந்தது ஏன்?விமான எஞ்சினுக்கும் கடலுக்கும் என்ன சம்பந்தம்?இதைப் புரிந்து கொள்ள நீங்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளின் சோதனையை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏவுகணை சோதனை
அத்துமீறி நாட்டுக்குள் நுழையும் எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. விமான எதிர்ப்பு ஏவுகணைகளைச் சோதனை செய்வதிலும், விமானிக்கு ஏவுகணையை செலுத்த பயிற்சி தருவதிலும் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு. ஏவுகணையை பறக்கும் இன்னொரு விமானத்தின் மீது செலுத்த முடியாது. அப்படிச் செய்தால் விமானத்தை இழக்க நேரிடும். விமானியும் தவறுதலாக தாக்கப்படலாம். பிறகு எப்படி விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதிப்பது? போர்க்காலம் வரை பொறுக்கவும் முடியாது. சோதிக்கப்படாத ஏவுகணையை நேரடியாக போரில் பயன்படுத்தவும் முடியாது. இதற்கு என்ன வழி?
ஆளில்லா விமானங்களை இயக்கி அவைகளின் மீது தாக்குதல் சோதனை நடத்தினால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்படும். சரிதான். ஆனால் எத்தனை விமானங்களை இப்படி இழப்பது? இதற்கும் தீர்வு உண்டு. விமானம் போன்ற இழுவை மாதிரியை (Tow Body) ஆளில்லா விமானத்திலிருந்து கயிறு கட்டிப் பறக்க விட்டு ராணுவ விஞ்ஞானிகள் சோதனை நடத்துகிறார்கள். விலை குறைந்த விமான மாதிரியை இழப்பதில் பொருளாதாரப் பாதிப்பு குறைவு. குறி தவறி ஏவுகணை, ஆளில்லா விமானத்தை தாக்கினாலும் உயிர்பலியில்லை.
இலக்காகும் ‘இலக்கு’
ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஆளில்லா இலக்கு விமானம் (Pilotless Target Aircraft) ஏவுகணை தாக்கு பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொருத்தமாக ‘இலக்கு’ (Lakshya) என்று பெயரிடப்பட்ட இந்த ஆளில்லா விமானம் தனது இரு இறக்கைகளிலும் மாதிரிகளை சுமந்து செல்லும். தரையிலிருந்து சிறிய ஏவுகலன் கொண்டு ஏவப்படும் இந்த விமானத்தை பயிற்சி முடித்தவுடன் வான்குடை (Parachute) கொண்டு கடலிறக்குகிறார்கள். வான் குடையில் மிதந்தபடி, மூக்கு கீழ் நோக்கிய நிலையில் ஆளில்லா விமானம் கடலில் இறங்கும். கடல் நீர் அதிர்வுகளைத் தாங்கிக் கொள்வதால் விமானம் சேதமடைவதில்லை.இப்படி சேதமில்லாமல் மீட்கப்படும் விமானத்தை பலமுறை பயன்படுத்தலாம்.
கடலில் மீட்கப்படுவதால், விமானத்தின் எஞ்சின் உப்பு நீரால் பாதிப்படையாத வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். எஞ்சின் அணைக்கப்பட்ட பிறகு விமானம் கடலில் இறக்கப்பட்டாலும், எஞ்சின் மிகச்சூடாக இருக்கும். இந்த வெப்பத்தோடு கடலின் உப்புநீர் பலவிதமான பாதிப்புகளை எஞ்சின் பாகங்களுக்கு ஏற்படுத்தும். கடல் நீரில் எஞ்சின் பாதிப்படைகிறதா என்பதை அறிய விஞ்ஞானிகள் சில சோதனைகளைச் செய்வார்கள். அதில் ஒன்று தான் கடல் நீர் மூழ்குசோதனை (Sea Water Dunking Test).
கடல் நீர் மூழ்குசோதனை
கடல் நீரில் என்ஜினை மூழ்க வைத்து சோதனை செய்வது ‘கடல் நீர் மூழ்கு சோதனை’. இதற்காக ஒரு தொட்டியில் கடல் நீரை நிரப்பி விமான எஞ்சினை மூழ்க வைப்பார்கள் விஞ்ஞானிகள். ஏன் தொட்டியில் நீர் நிரப்ப வேண்டும்? நேரடியாக கடலிலேயே என்ஜினை மூழ்க வைத்து சோதிக்கலாமே என உங்களுக்கு தோன்றலாம். இதிலும் சிக்கல் உண்டு. விமான எஞ்சின்அணைக்கப்பட்டாலும் அதிக வெப்பத்தோடு கடலில் இறங்கும் எனப் பார்த்தோம். விமான எஞ்சினை இயக்கி பிறகு அணைத்தால் தான் எஞ்சின் வெப்பமாக இருக்கும். இப்படி அணைத்த 90 வினாடிகளுக்குள், எஞ்சினை கடல் நீரில் இறக்க வேண்டும். இது எஞ்சின் சோதனை என்பதால், விமானத்தில் பொருத்தாமல் எஞ்சினை மட்டும் தனியே இயக்க வேண்டும். அப்படி இயக்க எஞ்சினை தாங்கிப்பிடிக்கும் சட்டங்கள், எரிபொருள் தொட்டி, கட்டுப்பாட்டு அமைப்புகள், எஞ்சின் விபத்து ஏற்பட்டால் விஞ்ஞானிகளை காக்கும் பாதுகாப்பு சுவர் என பல முன்னேற்பாடுகள் தேவை. இப்படிப்பட்ட வசதிகள் கொண்ட பிரத்யேக எஞ்சின் சோதனை படுக்கை (Engine Test Bed) பெங்களூருவிலுள்ள விமான எஞ்சின் ஆராய்ச்சி நிலையங்களில் உண்டு.இந்த சோதனை படுக்கையை கடற்கரையில் அமைக்க இயலாது. எனவே கடல் நீர் நிரப்பப்பட்ட தொட்டியை இந்த சோதனை படுக்கைக்கு அருகில் அமைத்து, எஞ்சின் சோதிக்கப்படுகிறது.
பெங்களூர் நகரம் கடற்கரைக்கு அருகில் இல்லை. எனவே, கடல் நீர் தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தொட்டியில் நிரப்பப்படும். அதில் தலைகீழாக எஞ்சின் மூழ்க வைக்கப்படும். நாம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரை விட அளவில் சற்று பெரிய இந்த எஞ்சின் நீரில் மூழ்கியிருக்கும் காட்சியை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். கடல் நீரில், மூன்று மீட்டர் ஆழத்தில் ஏறக்குறைய மூன்று மணி நேரம் மூழ்க வைக்கப்பட்ட பிறகு, எஞ்சின் வெளியே எடுக்கப்படும். சில பராமரிப்பு செயல்முறைகளுக்குப் பிறகு மறுபடியும் எஞ்சினை இயக்கி சோதிப்பார்கள் விஞ்ஞானிகள். இப்படிப்பட்ட சோதனைகளைக் கடந்த பிறகே, இலக்கு விமானத்தில் எஞ்சினைப் பொருத்த அனுமதியளிக்கப்படும். அதற்கு பின்பே, ஏவுகணை சோதனையில் விமானம் பயன்படுத்தப்படும்.
விமானம், அதிவேக ஏவுகணைகளை தாக்கி பயிற்சி பெறுவதற்காக பயிற்சி (Abhyas) என்ற பெயரிடப்பட்ட அதிவேக இலக்கு விமானம் (High-speed Expendable Aerial Target -HEAT) இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை போன்ற தியாகி விமானங்களால் தான் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டு தேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுகிறது.
சோதனை படுக்கை
விமானிகள் இயக்கும்போர் விமான எஞ்சினை வடிவமைத்து உருவாக்கிய பிறகு நேரடியாக விமானத்தில் பொருத்தி பறக்கும் சோதனை செய்ய மாட்டார்கள். எஞ்சின் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டால் விமானியின் உயிருக்கும், விமானத்துக்கும், பொது மக்களுக்கும், பொது சொத்துகளுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, முதலில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை படுக்கையில் (Ground Test Bed) விமான எஞ்சின் பல கட்டங்களாக பரிசோதிக்கப்படும். காலை, மதியம், இரவு என மாற்றமடையும் வளிமண்டல வெப்ப நிலையில் விமானம் இயங்குமல்லவா? அதைப்போலவே, விமான எஞ்சினும் காலை, மதியம், இரவு நேரங்களில் இயக்கப்பட்டு சோதிக்கப்படும்.
நீர்-பனிக்கட்டி சோதனை
விமானம் இயங்கும் போது மழை பொழிந்தால் மழை நீர் எஞ்சினுக்குள் செல்லும். மழை நீரால் எஞ்சின் பாதிப்படைகிறதா என்பதையும் சோதிப்பார்கள். சோதனை படுக்கையில் எஞ்சினைப் பொருத்தி இயக்கச்செய்து நீரை அதன் மீது பீச்சியடிப்பார்கள். இதற்கு ‘நீர் செலுத்து சோதனை’ (Water ingestion Test) என்று பெயர்.இந்த சோதனைபோர் விமானத்திலும் செய்யப்படும். மழை நீர் விமானியின் அறையில் (Cockpit) நுழைகிறதா என்பதை சோதிக்க, விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படும். அப்போது தரக்கட்டுப்பாட்டுத்துறை பொறியாளர் ஒருவர் விமானியின் இருக்கையில் அமர்ந்த படி, நீர் கசிவு இருக்கிறதா என்பதை சோதனை செய்வார். நிறுத்தப்பட்ட போர் விமானத்தில் காற்று வசதியில்லாத காக்பிட் அறையிலிருந்து இந்த சோதனையை செய்வது மிகச்சிரமமானது. விண்ணில் வட்டமடிக்கும் போர் விமானங்களின் பெருமித பறப்பில், பொறியாளர்கள் விஞ்ஞானிகளின் தியாகமும் உழைப்பும் உறைந்திருக்கின்றன!
நீர் செலுத்து சோதனை
போர் விமானம் ஏறக்குறைய 40,000 அடி உயர்த்தில் பறக்கும். அந்த உயரத்தில் வளிமண்டல வெப்பநிலை உறைநிலைக்கு கீழேயிருக்கும். இதனால் காற்றின் ஈரப்பதம் சிறு சிறு பனிக்கட்டியாக உறையும். இந்த பனிக்கட்டிகள் விமான எஞ்சினுக்குள் நுழைவதால் ஏற்படும் பாதிப்புகளை சோதிக்க வேண்டும். இதற்காக எஞ்சினை இயங்க வைத்து பனிக்கட்டிகளை அதன் மீது வீசியடிப்பார்கள். இதற்கு ‘பனிக்கட்டி செலுத்து சோதனை’(Ice Ingestion Test) என்று பெயர்.
பாலைவனப் பகுதிகளில் உள்ள விமான ஓடுபாதையில் இருக்கும் மண்துகள்கள் எஞ்சினுக்குள் நுழைவதுண்டு. மண்துகள்கள் மோதினாலும் பாதிப்படையாத எஞ்சினை உருவாக்க, (ஆம், நீங்கள் ஊகித்த படியே!) எஞ்சினை இயங்கவிட்டு மண்துகள்களை செலுத்தும் சோதனையும் (Sand Ingestion Test) செய்யப்படுவதுண்டு!
தரையில் இப்படிப் பல விதமான சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்த பிறகு எஞ்சினை விமானத்தில் பொருத்தி சோதிப்பார்கள். முதல் முறையாக விமானத்தில் பொருத்திப் பறக்கும் போது, எஞ்சினில் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்வது? ஆராய்ச்சியில் புதிதாக உருவாக்கப்படும் எஞ்சினில் தோல்விகள் ஏற்படாதா? அப்போது விமானியையும் விமானத்தையும் பொதுசொத்துகளையும் காப்பாற்றுவது எப்படி? அதற்கும் வழியிருக்கிறது. அது என்ன?
(சோதனை தொடரும்)