புலவர் சங்கரலிங்கம்

வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சியக் கனவு மிக அவசியம்.

கனவை மட்டும் நீங்கள் கண்டு கொண்டிருந்தால் வெறும் கனவாகவே போய்விடும். கனவோடு இணைந்து பயணம் செய்கிற போதுதான் அது வெற்றியின் வாசலைத் தொடுகிறது.

‘வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி?’ என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள், கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். வெற்றி இலக்கை அடைவது என்பது பாடம் படித்துத் தெரிந்து கொள்கிற விஷயமும் அல்ல.

நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் புறப்பட வேண்டும்.
பலருக்கும் பல லட்சியங்கள் இருக்கும்; அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள்.

அமெரிக்காவில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டு அதன் புனரமைப்பின் போது நடந்த சம்பவம் இது:

அமெரிக்காவின் டென்னசி பள்ளத்தாக்குப் பகுதியில் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டன. யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நிலங்களை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அதை முழுமையாக உற்பத்திக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்தார் அமெரிக்காவின் அதிபர் எஃப்.டி ரூஸ்வெல்ட்.

ஓரிடத்தில் தங்கம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்ட ஒருவர் தனது நண்பருடன் இணைந்து அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார்.

சில நூறு அடிகளில் தகதகக்கும் தாதுப்பொருள்கள் இருப்பதை பார்க்கிறார்கள். உடனே சில இயந்திரச் சாதனங்களை ஏற்பாடு செய்து சுரங்கத்தை மேலும் தோண்டுகிறார்கள். ஆனால் தொடர்ந்து தோண்டத் தோண்டத் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் தோண்டும் பணியை நிறுத்தி விடுகிறார்கள்.

உடனே இதற்கென வாங்கிய இயந்திரத்தினைப் பழைய இரும்புக் கடையில் வந்த விலைக்கு விற்றுவிட்டுத் திரும்பி விட்டனர்.

அந்த இயந்திரத்தை வாங்கிய இரும்புக் கடைக்காரர் தாமே சென்று தங்கம் இருக்கும் இடத்தைத் தோண்டிப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வருகிறார். அவர் புதிய இடத்தைத் தேர்வு செய்யாமல் ஏற்கனவே தோண்டிய இடத்தில் இன்னும் ஆழமாகத் தோண்டிப் பார்க்கலாம் என்று முடிவு செய்து அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பிக்கிறார்.

என்ன ஆச்சரியம்?

ஏற்கனவே தோண்டிய பள்ளத்தில் இருந்து அடுத்த இரண்டு அடியில் தங்கம் பாளம் பாளமாக கிடைத்தது. பழைய இரும்புக் கடைக்காரர் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.

இந்தக் கதை நமக்கு இரண்டு நீதிகளை உணர்த்துகிறது. ஒன்று வெற்றி கிடைக்கும் வரை போராடவேண்டும், இலக்கை நோக்கிய பயணத்தில் சென்று கொண்டிருக்கும்போது சோர்வடைந்து பாதியிலேயே திரும்பி விடக்கூடாது. இன்னொன்று உங்கள் கனவை அடைய மிகச் சரியாக திட்டமிட வேண்டும். சமயோசிதமாக யோசிக்க வேண்டும். அதனால்தான் இரும்புக் கடைக்காரர் வெற்றி பெற்றார்.

உங்கள் இலட்சியக் கனவைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தும் போதுதான் ஜெயிப்பது நிஜமாகிறது, வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது.